அரைக்கீரை கடையல்/Arai keerai kadayal /Amaranth Recipes
Arai keerai kadayal |
தேவையான பொருட்கள்:
- அரைகீரை- ஒரு கட்டு
- பச்சைமிளகாய்-3
- வெங்காயம்-1 (சிறியதாக)
- தக்காளி- 4
- மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
- பூண்டு- 5பல்
- புளி தண்ணீர்- 2ஸ்பூன்
தாளிக்க:
- கடுகு-1/2 ஸ்பூன்
- சீரகம்-1ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு-1/2ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்/மோர் மிளகாய்- 4
- கடலை எண்ணெய்- 2ஸ்பூன்
செய்முறை:
மண் சட்டியில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் வெங்காயம் ஒன்று, பூண்டு நான்கு பற்கள், பழுத்த தக்காளி நான்கு, (ஐந்தாறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்). பச்சை மிளகாய் மூன்று அல்லது நான்கு, உங்கள் காரத்திற்கு ஏற்றால் போல எடுத்துக் கொள்ளவும். சிறிது மஞ்சள்தூள், இவை அனைத்தையும் கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மூடிஇட்டு வேகவிடவும். அரை டம்பளர் அளவு தண்ணீர் போதுமானதாக இருக்கும். தக்காளிப்பழம், வெங்காயம் எல்லாம் ஒரளவு வெந்ததும், அரைக்கீரையை உப்பும் மஞ்சள் தூளும் கலந்த தண்ணீரில் நன்றாக அலசி, ஆய்ந்து சேர்த்துக் கொள்ளவும். கீரை சீக்கிரமாக வெந்துவிடும். வெங்காயம்,தக்காளி 3/4-பாகம் வெந்ததும் அரைகீரையை சேர்த்தால் போதும். தண்ணீர் அதிகம் சேர்க்க தேவையில்லை. கீரையில் இருக்கும் தண்ணீரே போதுமானது. கீரை நன்றாக வெந்த பிறகு, அடுப்பை நிறுத்தி, சிறிது நேரம் ஆறவிடவும். மத்து கொண்டு கீரையை நன்றாக கடைய வேண்டும். உப்பு போதுமான அளவு இருக்கிறதா என்று, சுவைத்து பார்த்து கொள்ளவும். இந்த சுவையே நன்றாக இருக்கும். உங்களுக்கு விருப்பம் என்றால், இரண்டு ஸ்பூன் புளித்தண்ணீர் சேர்த்து கொள்ளவும். குழி கரண்டியோ அல்லது சிறிய வாணெலியோ அடுப்பில் வைத்து, கடலை எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம் பருப்பு, சீரகம்(கொஞ்சம் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். வரமிளகாய் கிள்ளி போட்டு, தாளித்து கீரையில் கொட்டி, கலந்து கொள்ளவும். சுவையான அரைகீரை கடையல் தயார். மண் பாத்திரத்தில் கீரையை சமைக்கும் போது சுவையும் அதிகமாக இருக்கும். பச்சை நிறத்தில் கீரை பார்வைக்கும் அழகாக இருக்கும். குக்கரிலோ பாத்திரத்திலோ செய்யும் போதும் நிறம் மங்கிபோய் இருக்கும். மண்பாத்திரங்களில் உணவு நீண்டநேரம் சூடாகவே இருக்கும். முடிந்தவரை கீரைகளை மண்பாத்திரங்களில் சமைப்பது ஆரோக்கியத்திற்கும், ஊட்டசத்துக்கள் முழுமையாக கிடைக்கவும் வழிவகுக்கும். குக்கர் போன்ற பாத்திரங்களில் கீரையை அதிகஅளவு அழுத்தத்திற்கு உட்படுத்தும் போது, ஊட்டச்சத்துக்கள் எல்லாம் அழிந்துவிடும். பிறகு கீரை சமைத்தும் பயனில்லை. அரைக்கீரை கடையலுக்கு சுட்ட அப்பளம், வறுவல் வகைகள் காமினேஷன் சூப்பராக இருக்கும். இந்த கடையல் முறையை பயன்படுத்தி முளைகீரை/தண்டுகீரையையும் கூட செய்யலாம். முடிந்த அளவு கீரைகளை வீட்டிலேயே வளர்த்து பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. ஏனெனில் கடைகளில் கிடைக்கும் கீரைகளில் அதிக அளவில் பூச்சி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. கீரைகள் வளர்ப்பு குறித்து நிறைய கட்டுரைகளை பதிவிட்டிருக்கிறேன். படித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். கீரைகள் வளர்க்க இடவசதி இல்லாதவர்கள், கடைகளில் இருந்து வாங்கி வந்த கீரைகளை பூச்சி புழுக்கள் இன்றி சுத்தம் செய்து, மஞ்சளும் உப்பும் கலந்த மிதமான சூடான தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து, அலசி எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். பூச்சி மருந்துக்களின் தாக்கம் ஓரளவு குறையும்.
அரைக்கீரையில் அடங்கியுள்ள ஊட்டசத்துக்கள்:
உடலின் ஆரோக்கிய செயல்பாடுகளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அரைக்கீரையில் நிறைவாக நிறைந்துள்ளது. தாதுப்புக்கள் இரும்புச்சத்து கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-சி போன்ற சத்துக்கள் அரைக்கீரையில் உள்ளது. அரைக்கீரையை பெரியவர்கள் சிறியவர்கள் முதியவர்கள் கருவுற்றவர்கள் என அனைத்து வயதினரும் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். சித்த மருத்துவத்தில் குளிர்சன்னி, காய்ச்சல், கப நோய்களுக்கு மருந்தாக அரைக்கீரை பயன்படுத்தப்படுகிறது. அரைக்கீரை சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது. கிருமிநாசினியாக செயல்பட்டு உடலில் உள்ள நச்சுகளை அகற்றி, உடலில் நோய் எதிர்ப்பு காரணிகளை உருவாக்குகிறது. வயிற்றுப் புண்களையும், குடல் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்கிறது. சிறந்த மலமிளக்கியாக விளங்குகிறது. நல்ல செரிமானம் அளிக்கிறது. ஜுரம் காய்ச்சலால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்கள் உடலில் வளத்தையும், நீர்ச்சத்தையும் இழந்து உடல் பலவீனமாக காணப்படுவார்கள். இவர்கள் மீண்டும் இழந்த பலத்தை பெற அரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது சிறந்த பயனை அளிக்கும். ரத்தசோகையை நோயினை கட்டுப்படுத்தி ஹீமோகுளோபினை அதிகரிக்கச்செய்கிறது. கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹீமோகுளோபின் பிரச்சனைகளை சரிசெய்ய உணவாக எடுத்துக்கொள்ளலாம். கல்லீரல் பாதிப்பை குணமாக்க வல்லது. மஞ்சள்காமாலை, ஹெப்படைட்டஸ் போன்ற நோய்களை வரும் முன்னே தடுப்பதற்கு அரைக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வருவது சிறந்தது. சிறுநீரை பெருக்கி, சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் அரைக்கீரையை எடுத்துக்கொள்வது நல்லது. கருப்பை பலம் பெறவும், கருப்பையில் உள்ள தேவையில்லாத நச்சுக்கள் வெளியேற்றப்படும், கரு தங்குவதற்கும் அரைக்கீரையை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். பலவகை புற்றுநோய்களில் வயிற்றில் ஏற்படும் புற்று நோயும் கொடுமையானது. வயிற்றுப் புற்று நோய்களை அழிக்கும் காரணிகளை அரைக்கீரை கொண்டுள்ளது. எனவே அரைக்கீரையை ஏதாவது ஒரு வகையில் சாப்பிட்டு வருவது நல்லது. ஆண் இனப்பெருக்க உறுப்புகளை பாதிக்கும் நோய்களை கட்டுப்படுத்துகிறது. ஆண்மை குறைவு மலட்டுத்தன்மை இதனையும் குணமாக்க வல்லது. விஷப் பூச்சிகளின் விஷத்தன்மையை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அரைக்கீரை தினமும் பயன்படுத்தும் கீரைகளில் ஒன்று அரைக்கீரையில் பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்கப்படுகிறது. அரைக்கீரை கடையல் அரைக்கீரை மசியல், அரைக்கீரை பருப்பு அடை, அரைக்கீரை வடை, அரைக்கீரை காரக்குழம்பு இவ்வாறு பல்வேறு சுவையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
0 Comments