Translate

கல்யாண முருங்கை மருத்துவப் பயன்கள்!!

கல்யாண முருங்கை/Erythria Indica 

Sudagarkrishnanchannels
Kalyana Murungai 

      இன்றைய பதிவில்  கல்யாண முருங்கை மரத்தைப் பற்றியும், வளர்ப்பு பற்றியும், எண்ணற்ற மருத்துவ குணங்களைப் பற்றியும், விரிவாக தெரிந்து கொள்ளலாம். கல்யாண முருங்கை மரத்தின் இலை, பட்டை, விதைகள், அனைத்தும் மருத்துவ குணங்கள் வாய்ந்தது. முருங்கை மரத்தின் இலைகள், பட்டைகள், முருங்கைகாய்கள்  அனைத்தும் மனிதர்களுக்கு பயன்படுகிறதோ அதேபோல கல்யாண முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு மருத்துவ பொருள்களாக பயன்படுகிறது. நம்முடைய மூதாதையர்கள் கல்யாண முருங்கை மரத்தை பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆண்களுக்கு முருங்கைமரம், பெண்களுக்கு கல்யாணமுருங்கை மரம், என்று நம்முடைய மூதாதையர்கள் கூறிவந்துள்ளனர்.

கல்யாண முருங்கை மரத்தை பற்றி:

    கல்யாண முருங்கை மரத்தின் இலைகள் கார சுவையும், காரத்தன்மையும் கொண்டது. தாவரம் முழுவதும் முட்களை கொண்டது. மென்மையான கட்டை உடைய மரம். தண்டு  பச்சை நிறமாக இருக்கும். பூக்கள் சிவப்பு நிறமாக இருக்கும். விதைகள் உருட்டாக சிவப்பு நிறமாக இருக்கும். கல்யாண முருங்கை மரம் சுமார் அறுபது அடியில் இருந்து எண்பது அடிவரை வளரும் தன்மை கொண்டது. ஜூலை மாதத்திலிருந்து நவம்பர் மாதத்திற்குள், வரும் மாதங்களில் பூக்கள் பூக்கும் தன்மை கொண்டது. மரத்தின் பூக்கள் சிவப்பு நிறமாக பூக்கும். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். கல்யாண முருங்கை மரத்தின் இலை, பூக்கள், விதைகள், பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் வாய்ந்தது. ஆண்களுக்கு எப்படி முருங்கை மரமோ, அதேபோல் பெண்களுக்கு என்றே தனியாக கடவுள் படைத்த மரம்  கல்யாண முருங்கை மரம் என்றால் மிகையாகாது. கல்யாணமுருங்கை மரத்திற்கு முருக்க மரம், கல்யாண முருக்கன், முள்முருக்கு, மலை முருக்கன், இப்படி பலவகையான மாற்றுப் பெயர்களும் உள்ளது. கல்யாண முருங்கை மரம் தமிழகத்தில் வேலிகளில் பரவலாக காணப்படுகிறது.
வெற்றிலை, மிளகு முதலிய பயிர்கள், வளர்வதற்கு ஆதாரமாக இம்மரம் வளர்க்கப்படுகிறது. நான் சிறிய வயதாக இருக்கும்போது எங்கள் கிராமத்தில் எங்கள் வீட்டு தோட்டத்திற்கு பின்புறம் கல்யாண முருங்கை மரம் இருந்தது. ஊரிலுள்ள அனைவரும் கல்யாண முருங்கை மரத்தின் இலைகளை பறித்துக் கொண்டு செல்வர். அப்போது என் அம்மாவிடம் இதை ஏன் அனைவரும் பறித்துக்கொண்டு செல்கின்றனர்? என்று கேட்டேன். அதற்கு, அம்மா கல்யாண முருங்கை மரத்தில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி கூறினார். இதன் பயன்களை கேட்டு ஆச்சரியப்பட்டு போனேன். பிறந்த குழந்தையிலிருந்து பெரிய மனிதர்கள் வரையிலும் கல்யாண முருங்கை மரம் அதிகமாக பயன்படுகிறது. கல்யாண முருங்கை மரத்தின் இலைகள் முயல்களுக்கு தீவனமாக போடுவார்கள். முயல்கள் விரும்பி சாப்பிடும். மரத்தின் இலைகளை முயல்கள் சாப்பிடும்போது நன்றாக வளர்ந்து அதிக குட்டிகளை ஈன்றும்.

கல்யாண முருங்கை வளர்ப்பு:

கல்யாண முருங்கை மரத்தை நம்முடைய வீட்டுத் தோட்டம், அல்லது மாடித்தோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். மரத்தின் விதைகளை எடுத்து வந்து சாதாரணமாக மண்ணில் ஊன்றி வைத்தாலே முளைத்து வந்துவிடும். ஆனால் விதைகளை விட பதியம் போட்டு வளர்ப்பது மிகவும் சிறந்த முறையாகும். கல்யாண முருங்கை மரத்தின் கிளைகளை சாதாரணமாக ஒடித்து வைத்து விட்டாலே துளிர் விட்டு நன்றாக வளர்ந்துவிடும். மாடி தோட்டத்தில் வளர்ப்பது மிகவும் சுலபமானது. ஐம்பது லிட்டர் கேனில் மண் கலவை தயார் செய்து பதியம் போட்டு வளர்க்கலாம். மாடி தோட்டத்தில் வைக்கும்போது மண் கலவையில் தேங்காய்நார் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. எல்லா மண்ணிலும் சுலபமாக வளரக்கூடியது. தோட்டத்து மண் இரண்டுமடங்கு, மணல் அல்லது தேங்காய் நார் ஒரு மடங்கு, தொழுஉரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்கறிக் கழிவுகள் அல்லது மக்கிய இலை சருகுகள், உயிர் உரங்கள் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, பொட்டாஷ் பாக்டீரியா, கைப்பிடியளவு வேப்பம் புண்ணாக்கு, இவைகள் அனைத்தையும் நன்றாக கலந்து மண் கலவை தயார் செய்து ஏழுநாட்கள் ஈரப்பதத்துடன் வைத்திருந்து கல்யாண முருங்கை மரத்தின் தண்டுகளை பதியம் போட்டு வளர்க்கலாம். அல்லது  மரத்தின் விதைகளை ஊன்றி, விதையிலிருந்து கூட வளர்க்கலாம். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மாடி தோட்டத்தில் வளர்க்கும் போது அடிக்கடி கவாத்து செய்து விடுவது நல்லது. அதிக உயரம் போகாமல் வளரவளர வெட்டிவிட்டு சுலபமாக வளர்க்கலாம். கல்யாண முருங்கை மரத்தின் இலைகள் மிகவும் மிருதுவாக இருப்பதால் பூச்சிகள் தொல்லை அதிகமாகவே இருக்கும். முக்கியமாக மழைக்காலங்களில் பச்சைபுழுக்கள் அதிகமாகவே இருக்கும். பூச்சிகள், புழுக்கள் வராமல் இருக்க வேப்ப எண்ணெய் இரண்டு மில்லி லிட்டர் அளவில் எடுத்துகொண்டு, ஒருலிட்டர் தண்ணீரில் ஒட்டு திரவத்தோடு சேர்த்து வாரம் ஒருமுறை பூச்சிகள் வந்தாலும் வராவிட்டாலும் இலைகள் மீது தெளித்து வருவது மிகவும் அவசியமானதாகும்.

Sudagarkrishnanchannels
Kalyana Murungai 

கல்யாண முருங்கை மரத்தின் மருத்துவ பயன்கள்:

பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு உதவுகிறது. நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண்மணிகள் கல்யாண முருங்கை மரத்தின் பூ ஒன்றை எடுத்து நான்கு மிளகு சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி குணமாக, கல்யாண முருங்கை இலை சாற்றை முப்பது மில்லி லிட்டர் காலையில் வெறும் வயிற்றில் பத்து நாட்கள் குடித்து வந்தால், வயிற்று வலி குணமாகும். அல்லது இலையை சூப் செய்தும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் பால் சுரப்பு அதிகமாக ஆங்கிலம் மருத்துவத்தை உபயோகப்படுத்துவார்கள். இதனால் உடலுக்கு அதிக தீங்கு ஏற்படும். பால்சுரப்பு தொடர்பான பிரச்சனைக்கு கல்யாண முருங்கை இலையை தேங்காய் எண்ணெயுடன் சமைத்து சாப்பிட்டு வந்தால், பால் சுரப்பு அதிகமாகும். பெண்களுக்கு நாற்பது வயதாகும் போது, இடுப்பில் தேவையற்ற கொழுப்புகள் உண்டாகி இடுப்பு பெருத்து போகும். அவர்கள் முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக்கொண்டால், இடுப்பில் உள்ள கொழுப்புகள் நீங்கி இடை மெலியும். மூட்டு வலி இருந்தால், கல்யாண முருங்கை இலைகளை வதக்கி ஒத்தடம் கொடுத்து வர மூட்டுவலி நீங்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல் இவற்றை குணமாக்கிட கல்யாண முருங்கை இலைகளை சாறு எடுத்து கல்உப்பு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி, இருமல் அனைத்தும் குணமாகும். மலம் கழிக்கும்போது கிருமிகள், சளி இவைகள் வெளியேறிவிடும்.

 குழந்தைகள் பெரியவர்களுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். ஆங்கில மருந்து மாத்திரைகளை உண்பதால் பூச்சிகளை மட்டுமே அழிக்கும், பூச்சிகள் முட்டைகள் பொரித்து திரும்பவும் பூச்சிகள் உருவாகும். ஆனால் கல்யாண முருங்கை இலைகளின் சாற்றை உட்கொள்வதால் வயிற்றிலுள்ள பூச்சிகள் முட்டைகள் அனைத்தும் அழிந்துவிடும். வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்க, கல்யாண முருங்கை இலைச்சாறு எடுத்து  தேக்கரண்டியளவு தேன் கலந்து சாப்பிட்டால், பூச்சிகள் தொல்லை நீங்கும். கல்யாண முருங்கை இலையை சாறு எடுத்து மோரில் கலந்து சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் நீங்கும். மனிதர்களுக்கு ஏற்படும் புண்கள், தோல் நோய்கள் குணமாக, இதன் பட்டையை நசுக்கி வெந்நீரில் கொதிக்க வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர அனைத்தும் குணமாகும். கல்யாண முருங்கை இலைச்சாற்றை அருந்தி வந்தால் உடல் எடை குறையும். கல்யாண முருங்கை மரத்தின் பட்டைகள் பாம்புக்கடிக்கு நல்ல மருந்தாக செயல்படுகிறது. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை மிகவும் தொல்லையாகவே இருக்கும். வெள்ளைப்படுதலை கவனிக்காமல் விட்டுவிட்டால் அதுவே கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. வெள்ளைப்படுதலை குணமாக்கிட  கல்யாண முருங்கை இலைகளை நன்றாக கழுவி அரைத்து தோசை மாவில் கலந்து சிறிது உப்பு சேர்த்து தாளித்து தோசை போன்று செய்து சாப்பிடலாம். மாதம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை பலமாக வெள்ளைப்படுதல் சரியாகும். பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் கர்ப்பப்பையில் அழுக்குகள் படிந்து இருக்கும். பிரசவ அழுக்குகளை வெளியேற்றாமல் விட்டால் அதுவே கர்ப்பப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும் கர்ப்பப்பை அழுக்குகளை வெளியேற்ற கல்யாண முருங்கை இலையுடன் மிளகு, பூண்டு சேர்த்து கொஞ்சமாக மஞ்சள் சேர்த்து கொதிக்கவைத்து, நன்றாக கொதித்த பின்னர் வடிகட்டி முப்பது நாட்கள் தினமும் குடித்துவர கர்ப்பப்பையில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும். கல்யாண முருங்கை மரத்தின் பட்டைகள் இலைகள் மிகவும் மருத்துவ குணங்கள் வாய்ந்தது. மரணத்தை போக்கக்கூடியது. பூச்சிகளை அகற்றும் ஆற்றல் கொண்டது. பாம்பு கடிக்கு மருந்தாக செயல்படுகிறது. மனிதர்களுக்கு பல்வேறு நோய்களை குணமாக்கும்  மருந்தாக விளங்குகிறது. கல்யாண முருங்கை மரத்தின் மரப்பட்டையை பத்து கிராம் அரைத்து எடுத்துக்கொண்டு நூறு மில்லி லிட்டர் பாலில், ஒரு மணி நேரம் ஊறவைத்து, இருபது மில்லி லிட்டர் வீதம் சாப்பிட்டுவர நிரந்தர வயிற்றுக் கடுப்பு குணமாகும். இன்றைய பதிவில் கல்யாண முருங்கை மரத்தை பற்றியும், வளர்ப்பு பற்றியும், மருத்துவ குணங்கள் பற்றியும் ஒரளவு கருத்துக்களை பார்த்தோம். ஏனெனில் இதனுடைய பயன்கள் இன்னும் அதிகம். இந்த மூலிகைகளை நம்முடைய மாடிதோட்டத்தில் வளர்க்கலாம். குறைந்தது எதாவது பத்து மூலிகை செடியையாவது வளர்க்கவும், பயன்படுத்தவும்  முயற்சிக்க வேண்டும். இதில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே இருக்கும் காணொளியை பாருங்கள். நன்றி!



Post a Comment

0 Comments