Translate

Shenbaga Poo { Michelia champaca}

 செண்பகப் பூ வளர்ப்பு


Sudagarkrishnanchannels
Shenbaga Poo "சௌபாக்ய விருட்சம்" என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படும் அழகான செண்பக மலரை பற்றி இன்றைய கட்டுரையில் அறிந்து கொள்வோம்.

செண்பக மரம்:


 செண்பக மலர் தாவரம் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் அதிகமாக வளர்ந்து காணப்படுகிறது. இதனுடைய தாயகம் இந்தியா. பின் மற்ற நாடுகளான இந்தோனேசியா, மியான்மார், கலிஃபோர்னியா, மலேசியா நேபாளம், இலங்கை, தாய்லாந்து வியட்நாம் ஆகிய நாடுகளுக்குப் பரவிற்று. 

இதனுடைய இலைகள் மேல் நோக்கி குவிந்தவண்ணம் காணப்படும். செண்பக மரங்களின் கீழ்பாகம் அகலமாகவும், மேல் பாகம் சிறுத்தும்,  காணப்படும். இந்த மரங்கள் வறட்சியை தாங்காது. இதன் இலைகள் எப்போதும் பச்சையாக, அடுக்கு வரிசையில் மிக நீண்டு வளரும். இலைகளின் மேற் பகுதி பசுமையாகவும் இலைகளின் அடியில் உரோமங்கள் அதிகமாக காணப்படும். சாதாரணமாக செண்பக மரங்கள் முப்பது அடிக்கும் உயர்வாக வளரக்கூடியது. காய்கள் கொத்துக் கொத்தாக இருக்கும். பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்களை பறவைகள் விரும்பி சாப்பிடும். 

 செண்பக மரம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பெரும் பாங்காற்றுகிறது. காற்றில் உள்ள மாசுகளை அகற்றுவதோடு, பூவின் வாசனை காற்றோடு கலந்து ஒரு ரம்மியமான சூழலை உருவாக்குகிறது. அதனை சுவாசிப்பதன் மூலம் நம்மை மெய்மறக்கச் செய்கிறது.

செண்பகமரம் வளர்ப்பு:

  மணல் பாங்கான இடங்களில் செண்பக மரம் நன்றாக வளரும். இந்த செடி, விதைகளிலிருந்தும், ஒட்டு கட்டுதல் மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் விதைகளை சேகரித்து, இரண்டு வாரத்திற்குள் விதைக்க வேண்டும். வளர்ந்த செடிகளை வேண்டிய இடங்களில் முறைப்படி நடவு செய்ய வேண்டும்.

மாடி தோட்டத்தில் வளர்க்க,

 • விதைகளிலிருந்து வளர்ப்பது சற்று கடினம். அதனால் கடைகளில் ஒட்டுகட்டிய செடிகளை வாங்கி வந்து மாடிதோட்டத்தில் வளர்க்கலாம்.
 • செடிகளைத் தேர்வு செய்யும் பொழுது நன்கு பசுமையான, வளர்ந்து பூ பூத்திருக்கும் செடிகளாக தேர்வு செய்ய வேண்டும். 
 • வறட்சியை தாங்கி வளராத செடி என்பதால் மண்கலவை தயாரிக்கும் போது, கவனமுடன் தயார் செய்ய வேண்டும். மண்கலவையில் மணலும், தேங்காய்நார் கழிவும் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
 • பட்டுபுழுக்கள் தாக்குதல் அதிகமாக ஏற்படுவதால் வேப்பம் புண்ணாக்கு மண்கலவையில் அவசியம் கலக்க வேண்டும். 
 • உயிர் உரங்கள், மற்றும் சத்தான உரங்களான தொழு உரம், மண்புழு உரம், காய்கறிகழிவு உரம் இவற்றில் ஏதேனும் ஒன்றினை கலந்து மண்கலவை தயாரிக்க வேண்டும்.
 • வருடத்தின் இரண்டுமுறை கவாத்து செய்து விட வேண்டும். பூக்கள் பூக்கும் தருணங்களில் அடி உரமாக தொழு உரத்தை கைபிடி அளவு கொடுக்கலாம்.
 • எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம்.

Sudagarkrishnanchannels
Shenbaga Poo 


செண்பக மரத்தின் மருத்துவ பயன்கள்:

 செண்பக மரத்தின் இலை, பூ காய், பட்டை வேர் முதலிய பாகங்கள் பயன்தரக்கூடியவை. பூக்களிலிருந்து பன்னீர் மற்றும் நறுமண எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. மேலும் பூக்கள் வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. மரம் மிகவும் மென்மையாக இருப்பதால் பிளைவுட் செய்யவும், பெட்டிகள் செய்யவும் பயன்படுகிறது. மேலும் இதனை சில கைவினைப் பொருட்கள் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.
சுமார் 100 கிலோ அளவுள்ள பூக்களிலிருந்து 150 முதல் 200 கிராம் வரையிலான அத்தர் எடுக்கப்படுகிறது. இதன் பூக்கள் தலை நீர்க்கோவை, வயிற்று உப்புசத்திற்கு , தொண்டை வீக்கங்களை குணப்படுத்த பயன்படுகிறது.  இளம் தளிரை அரைத்து தண்ணீரில் கலந்து கண்களில் இடுவதன் மூலம், பார்வை நன்றாக தெரியும். நல்ல வலி நிவாரணியாக செயல்படுகிறது. இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை கொண்டு வயிற்று வலி, பாத வெடிப்புகள் அஜீரணம், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகின்றன.

மாதவிலக்கு, வயிற்றுவலி பிரச்சனைகள்:

     
 செண்பக மரத்தின் இலைகளை தேநீராக்கி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்று வலி மாதவிடாய் பிரச்சனைகள், பசியின்மை ஆகியவற்றை போக்குகிறது.
முதலில் செண்பக மர இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு இன்ச் அளவிற்கு, லவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி ஆறவைத்து, அதனுடன் தேன் சேர்த்து பருகி வர, வயிற்று வலி வயிற்றுப் பொருமல், அஜீரணக் கோளாறுகள், வாய்வு பிரச்சனைகள் இவை அனைத்தும் தீர்க்க இது ஒரு எளிய மருந்தாக விளங்குகிறது.

தூக்கமின்மை பிரச்சனைகள்:


       மேலே குறிப்பிட்டபடி செண்பகப் பூக்களின் மணம் மனதிற்கு அமைதியை கொடுத்து மன அழுத்தத்தை குறைக்கிறது. தூக்கமின்மை மற்றும் மன உளைச்சலால் அவதிப்படுபவர்களுக்கு செண்பகப் பூக்கள் ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது. நான்கைந்து செண்பகப் பூக்களுடன், தேவையான அளவு கசகசா, பனங்கற்கண்டு சேர்த்து மைய அரைத்து, இந்த பொடியை, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் பால் கலந்து குடித்து வந்தால் ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் கிடைக்கிறது. மேலும் இதை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம்
 • வயிற்றுப்புண்களை குணப்படுத்துகிறது
 • சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது. 
 • புற்று நோயும் வராமல் தடுக்கிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

Sudagarkrishnanchannels
Shenbaga Poo 

சிறந்த வலி நிவாரணி:

    செண்பகப் பூக்கள் உடலில் ஏற்படும் பல வலிகளுக்கு சிறந்த வலி நிவாரணியாக விளங்குகிறது. செண்பகப் பூக்களை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, பசையாக்கி ஓரளவு சூடு ஆறியதும், வலி வீக்கம் உள்ள இடங்களில் மேற்பூச்சாக தடவி வந்தால் விரைவில் வலியும் வீக்கமும் குறையும். மேலும் கைகால் எரிச்சல், உடல் எரிச்சல் முழங்கால் வலி, மூட்டுவலி, தலைவலி போன்ற வலிகளுக்கு இது சிறந்த பலனை கொடுக்கும்.

கண்நோய்கள்:

     செண்பகப் பூக்கள் கண் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும் ஒரு அற்புத மருந்தாக திகழ்கிறது. செண்பகப்பூக்களுடன் அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து தண்ணீர் விட்டு மைய அரைத்து, கண்களை சுற்றி பற்றுப் போட்டு, சுமார் ஒரு மணி நேரம் கழித்து சுத்தமான குளிர்ந்த நீரினால் முகம் கழுவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும். கண்நோய்களுக்கு, செண்பகப் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து, சில மணி நேரங்கள் கழித்து, அந்த தண்ணீரால் கண்களை கழுவி வரலாம். இந்த தண்ணீருடன் திரிபலா சூரணத்தை கலந்து கண்களை கழுவலாம்., இவ்வாறு செய்வதால் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் மட்டுமின்றி, கண் சிவத்தல் கண்களில் இருந்து நீர் வடிதல் போன்ற கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். கண்களுக்கு ஒரு சிறந்த பொலிவையும் கொடுக்கும்.

நரம்பு தளர்ச்சி, மயக்கம், தலைசுற்றல்:

   செண்பகப் பூக்களை கஷாயம் வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நீங்கும். செண்பகப் பூக்களை நிழலில் உலர்த்தி, அரைத்து பொடியாக செய்து, அந்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடல் நல்ல வலிமை பெறும். மேலும் இது பித்தத்தை குறைப்பதுடன், பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, மயக்கம் மற்றும் தலைசுற்றல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.

ஆண்மைகுறைவு:

 செண்பகப் பூக்களை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால், ஆண்மை குறைவு நீங்குகிறது. உடல் பலம் பெறுகிறது. காய்ச்சலும் குணமாகும். இந்த கஷாயத்தை தொடர்ந்து அருந்தி வந்தால் சிறுநீர் கடுப்பு, நீர் எரிச்சல் போன்றவையும் குணமாகிறது.


தலைமுடிவளர்ச்சி:

 செண்பகப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் சமபங்கு அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் குறைகிறது. தலைவலி கண்நோய்கள் இவையும் குணமாகும். முடிக்கு நல்ல ஒரு வலிமையை கொடுத்து, கேசம் பளபளப்பாக திகழ உதவிசெய்கிறது.


சிவன் கோவிலின் தலவிருட்சம்:

 செண்பக மரத்தை வீட்டில் வளர்த்து, செவ்வாய்க் கிழமைகளில் அதனை பூஜித்து வழிபட்டு வந்தால் அனைத்து செல்வமும் சேரும் என்பது நம்பிக்கை. செண்பக மரம் சிவனுக்கு உகந்த மரம். சிவபெருமானுக்கு இந்த பூக்களை, 11 வாரங்கள் வைத்து பூஜை செய்து வந்தால் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இதை அடிப்படையாக கொண்டே, சிவன் கோவில்கள் பலவற்றில் செண்பக மரம் தல விருட்சமாக உள்ளது. 

 • திருதென்குடிதிட்டை 
 • திருஇன்னம்பர் 
 • திருச்சிவபுரம் 
 • திருநாகேஸ்வரம் 
 • திருப்பெண்ணாகடம் போன்ற சிவன் கோவில்களிலும்,
 •  திருச்சேறை 
 • திருநந்திபுர விண்ணகரம் - போன்ற பெருமாள் கோவில்களிலும் செண்பக மரம் தல விருட்சமாக உள்ளது.


பொதுவாக மஞ்சள் நிற செண்பக பூ மரங்களை தான் கோவில்களிலும் வீடுகளிலும் நாம் அதிகம் பார்த்திரும்போம். வெள்ளை நிற பூக்களை கொண்ட, செண்பக மரங்களை அதிகம் பார்க்க முடிவதில்லை.
 "மைக்கோலியா நீலகிரிக்கா" என்ற பெயரைக் கொண்ட வெள்ளை வண்ண மலர்களை கொண்ட காட்டு செண்பக மரங்கள் அழியும் தறுவாயில் உள்ளதென 2011 இல் இந்திய வனத்துறை அறிவித்துள்ளது. இந்த அரிய பூக்களை பாதுகாக்கவும் வளர்க்கவும் நாம் ஆவண செய்ய வேண்டும். 

செல்வ வளத்தை பெருக்கும் செண்பக பூ வழிபாடு:

  நாள்தோறும் செண்பகப் பூக்களை மகாலட்சுமிக்கு பூஜை செய்து வழிபட்டு வந்தால் வீட்டில் வறுமை நிரந்தரமாக அகலும். செலவவளமும் அதிகரிக்கும். வராத கடனும், தீராத கடன் சுமையும் முழுவதுமாக சரியாகிவிடும்.செண்பகப் பூவானது, சுக்கிரனுக்கு மிகவும் விருப்பமான பூவாகும். சுக்கிர பகவானை நினைத்து இந்த பூவை மகாலட்சுமிக்கு வைத்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக, வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை நினைத்து பூஜை அறையில் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்யவேண்டும். எப்படிப்பட்ட தீர்க்க முடியாத துன்பங்களை தீர்த்து வைக்கும் இந்த பூவை குறிப்பிட்ட இந்த வெள்ளிக்கிழமை அன்று, முருகனுக்கு சூட்டி வேண்டினால் விரைவாகவே உங்களது எல்லா துன்பங்களும் ஓடிவிடும்.

இரண்டு செண்பக பூ மரங்களை நட்டு வைத்தவன் சொர்கத்திற்கு செல்வான் என்று பிரம்மன் வரம் கொடுத்ததாக இன்றளவும் நம்பப்படுகிறது. திரிகூடராசப்ப கவிராயர் தன்னுடைய பாடல் ஒன்றில் "கொங்கலர் செண்பக சோலை குறும்பலா ஈசர்" என்று எழுதியிருக்கிறார். அதாவது செண்பக வனத்துறையில் வீற்றிருந்து குறும்பல ஈசன் அருள்பாலித்து வருகிறார் என்பதாக அந்த பாடல் வரிகள், ஈசன் வசிக்கும் இடமாக செண்பக மலரை குறிபிடுகின்றன. தெய்வாம்சமும், அனுகிரகமும் நிறையப் பெற செண்பக மலரை வீட்டில் வளர்க்க தவறாதீர்கள்.

நன்றி!!
இயற்கை விவசாயி
திரு.சுதாகர்கிருஷ்ணன்

Post a Comment

0 Comments