Translate

கொத்தமல்லி கீரை வளர்ப்பு மற்றும் பயன்கள்

கொத்தமல்லிக்கீரை/Coriander/ Coriandrum Sativum/cilantro leaves 

Sudagarkrishnanchannels
Coriander Plant 


 இன்றைய பதிவில் கொத்தமல்லி கீரையை மாடித்தோட்டத்தில் சுலபமாக எப்படி வளர்க்கலாம் மற்றும் கொத்தமல்லிக்கீரையின் மருத்துவ பயன்களைப் பற்றியும், விரிவாக தெரிந்துகொள்ளலாம். கொத்தமல்லி கீரையை மாடி தோட்டத்தில் வளர்த்து விட்டால் அவர்களை பெரிய விவசாயிகள் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் கொத்தமல்லிக்கீரையை மாடி தோட்டத்தில் வளர்ப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாகும். ஆனால்  சில வழிமுறைகளை பின்பற்றினால் கொத்தமல்லிக் கீரையை நாமும் மாடித்தோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். மாடி தோட்டம் வைத்திருப்பவர்கள் அதிகமாக என்னிடம் கேட்கும் கேள்விகள் இதுதான், கொத்தமல்லிக்கீரை முளைத்து வரவில்லை, முளைத்து வந்தாலும் சாய்ந்து போய்விடுகிறது, தண்டுகள் அழுகிப் போய்விடுகிறது, இந்த சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை சொல்லும் விதமாக இன்றைய பதிவை தயார்செய்திருக்கிறேன். இனி கொத்தமல்லி வளர்ப்பது பற்றி, நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.

கொத்தமல்லி கீரை வளர்ப்பு:

மண்கலவை:

 மாடித்தோட்டத்தில் கொத்தமல்லி கீரையை வளர்ப்பதற்கு மண் கலவை தயார் செய்வதில் அதிக கவனம் தேவை. கொத்தமல்லிக்கீரை மணல் கலந்த செம்மண்ணில் நன்றாக வளரும். நல்ல வடிகால் வசதியுடைய மண் கலவை கொத்தமல்லி கீரைக்கு தேவை. வடிகால் வசதியுடைய மண் கலவை என்றால், தண்ணீர் தேங்காமல் தயாரிக்கும் மண் கலவையை குறிக்கும். மண் கலவையில் அமில காரத் தன்மை  ஆறிலிருந்து எட்டு வரை இருந்தால் சிறப்பம்சம். செம்மண் அல்லது தோட்டத்து மண் இரண்டு மடங்கு, தொழு உரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்கறி கழிவில் இருந்து தயாரித்த உரம் இவற்றில் எதேனும்  உரமாக இருந்தாலும் ஒரு மடங்கு மணல் ஒரு மடங்கு, வேப்பம் புண்ணாக்கு ஒரு கைப்பிடியளவு, உயிர் உரங்கள் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், டிரைகோடெர்மா விரிடி, பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியா, ஒவ்வொன்றிலும் ஒரு தேக்கரண்டியளவு எடுத்து நன்றாக கலந்து வளர்ப்பு பைகளில் நிரப்பி ஈரப்பதத்தோடு ஏழு நாட்கள் வைத்திருந்து விதைக்க ஆரம்பிக்கலாம். உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா பொட்டாஸ் பாக்டீரியா முறையே நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற மூன்று சத்துக்களையும் உயிர் உரங்களில் உள்ள பாக்டீரியாக்கள் மண்ணில் இருந்து கரைத்து சுலபமாக செடிகளுக்கு கொடுக்கும். சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி, உயிர் உரங்களில் உள்ள நன்மை செய்யும் பூஞ்சைகள் வேர்களில் வரும் வேர் அழுகல் நோய், நுனி கருகல் நோய் மண்ணில் உள்ள தீமை செய்யும் பூஞ்சைகளை அழித்து செடிகள் நன்றாக வளர்வதற்கு உறுதுணையாக இருக்கிறது. வேப்பம் புண்ணாக்கு மண்ணில் உள்ள பூச்சிகள், புழுக்களை அழித்து வேர் தொடர்பான நோய்களையும் சரிசெய்து, கொத்தமல்லிக்கீரையின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.


கொத்தமல்லி விதைகளை விதைப்பது எப்படி:

 அதிகம் பேர் செய்யும் தவறு இதுதான். கொத்தமல்லிக்கீரையை எந்த காலநிலையில் எப்படி விதைப்பது என்று தெரியாமல் விதைப்பது தான் ஆம்! கொத்தமல்லிக்கீரைக்கு வெயில் சுத்தமாக பிடிக்காது. குளிர் காலங்களில் நன்றாக வளரும். ஜூன், ஜூலை மாதம் செப்டம்பர், அக்டோபர் மாதம் இம்மாதங்களில் கொத்தமல்லியை விதைத்தால் நன்றாக வளரும். முடிந்தவரை கோடைகாலங்களில் கொத்தமல்லிக்கீரையை விதைப்பதை தவிர்ப்பதே சிறந்தது. அவசியம் வளர்க்க வேண்டும் என்றால், கண்டிப்பாக நிழல்வலை அமைத்து விதைப்பது மிகச்சிறந்தது. கொத்தமல்லி விதைகளை விதைக்கும் போது ஒரு விதையை இரண்டாகப் பிரித்து விதைக்கவேண்டும். கொத்தமல்லி விதைகளை துணியில் போட்டு விதைகளுக்கு பாதிப்பில்லாமல் இரண்டாக உடைத்து எடுக்கவேண்டும். அதிகம் அழுத்தம் கொடுத்தால் விதைகளில் பாதிப்பு ஏற்பட்டு விதைகள் முளைக்காமலேயே போய்விடும். அதிகம் பேர் செய்யும் தவறு இதுதான். விதைகளை விதைப்பதற்கு முன் கண்டிப்பாக விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்து விதைப்பதினால் முளைப்புத் திறன் அதிகமாகும். தரமான செடிகளை உற்பத்தி செய்யலாம். நோய் தாக்குதல் குறையும். விதைகளிலிருந்து வெளிவரும் நாற்றுகள் அதிக எதிர்ப்பு சக்தியோடு வருவதினால் பூச்சி தாக்குதலும் குறைகிறது. உயிர்உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம். உங்களிடம் எந்த உயிர்உரங்கள் இருக்கிறதோ அதைக் கொண்டு செய்யலாம். டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனஸ் இவ்விரண்டு உயிர்உரங்களில் விதை நேர்த்தி செய்தால் மிகவும் சிறப்பானதாக இருக்கும். சாதம் வடித்த கஞ்சியில், உயிர்உரங்களை சேறு போன்ற பதத்திற்கு  கலந்து, தயார் செய்ய வேண்டும். விதைகளை அதில் நன்றாக கலந்து, நிழலில் அரை மணி நேரம் உலர்த்தி விட்டு உடனடியாக விதைகளை விதைக்க வேண்டும். பஞ்சகாவியம், அமிர்தகரைசல் இவற்றில் ஏதேனும் ஒரு கரைசலில் விதைகளை ஊறவைத்தும் கூட விதைநேர்த்தி செய்து விதைக்கலாம். உங்களால் விதை நேர்த்தி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, தண்ணீரில் ஊறவைத்து விதைகளை விதைக்க ஆரம்பிக்கலாம். மழை நீரில் ஊறவைத்து விதைத்தால் முளைப்புத் திறன் அதிகமாகவே இருக்கும். அதிகம் பேர் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று விதைகளை ஊற வைக்காமல் விதைப்பது, விதைநேர்த்தி செய்யாமல் விதைப்பது, இக்காரணங்களால் கூட விதைகள் முளைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. விதைகளை விதைக்கும் போது எப்பொழுதுமே விதைகளின் அளவைவிட இரண்டு மடங்கு மண்ணுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விதைகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்குமாறு விதைக்க வேண்டும். அதிகம்பேர் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று. விதைகளை ஆழமாக போட்டு விடுவது, அல்லது விதைகளை மேலேயே தூவி விடுவது. விதைகளை விதைக்கும் போது கோடு போட்டு விதைப்பதினால் தண்ணீர் ஊற்றுவதற்கு மிகவும் சுலபமானதாக இருக்கும்.

தண்ணீர் ஊற்றும் போது கவனிக்க வேண்டியவை:

  கொத்தமல்லிக் கீரையின் விதைகள் விதைத்த பிறகு மண்ணின் தரத்தை பொறுத்தும், விதைகளின் முளைப்புத் திறனை பொறுத்தும், எட்டு நாட்களில் இருந்து பத்து நாட்களுக்குள் முளைப்பு வர ஆரம்பிக்கும். விதைகள் முளைத்து வரும் போது தண்ணீர் ஊற்றுவதில் மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டும். தண்ணீரை அதிக உந்துசக்தியோடு ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தால் தெளிப்பான் மூலம் தண்ணீரை தெளித்து விடலாம். ஏனென்றால் கொத்தமல்லிக்கீரையின் தண்டுகள் மிகவும் சிறியதாக இருக்கும் தண்ணீரை அதிக அழுத்தத்தில் ஊற்றுவதால் தண்டுகள் சாய்ந்து அழுகிப் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. முடிந்தவரை கொத்தமல்லி கீரைகளுக்கு உப்பு கலந்த நீரை ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். மழை பெய்யும் போது மழைநீரை  பிடித்து வைத்துக்கொண்டு மழைநீரை கொத்தமல்லிக்கீரை வேருக்கு ஊற்றுவதனால் கீரைகள் செழிப்பாக வளர ஆரம்பிக்கும். ஏனென்றால் மழைநீரில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தண்ணீர் ஊற்றும்போது மண்ணில் அதிக ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது அவசியமாகும். அதிக ஈரப்பதம் இருப்பதினால் கொத்தமல்லிக் கீரையின் தண்டு அழுகி சாய்ந்து விடுவதற்கு வாய்ப்புண்டு. வளர்ப்பு பைகளில் தண்ணீர் ஊற்றும்போது  உபரி நீர் வெளியேருகிறதா என்று அடிக்கடி கவனிக்க வேண்டும். அதிக அடை மழை வரும்போது கொத்தமல்லிக்கீரையை மூடி வைப்பது சிறந்தது. இல்லையெனில் அடை மழையின் போது தண்டுகள் சாய்ந்து அழுகி கீரைகள் வீணாவதற்கு வாய்ப்புகள் உண்டு. கொத்தமல்லிக்கீரையின்  விதைத்ததில் இருந்து முப்பது நாட்களில் நன்றாக வளர்ந்து நிற்கும் நாற்பத்தைந்து நாட்களில் அறுவடை செய்து கீரைகளை சமையலுக்கு உபயோகப் படுத்திக் கொள்ளலாம். கொத்தமல்லி விதைகளை சேகரிக்க விரும்பினால், 90 நாட்கள் கழித்து விதைகள் வரும் போது அறுவடை செய்து எடுத்துக்கொள்ளலாம்.

கொத்தமல்லிக்கீரையில் வரும் புழுக்கள் பூச்சிகள், நோய்கள்:

  1. இலைபேன்கள்: கொத்தமல்லி கீரைகளில் முதன்முதலில் வரும் பூச்சிகள் என்னவென்று பார்த்தோமானால் இலைப்பேன்களின் தொல்லை இருக்கும். இலைகளுக்கு அடியில் இருந்துகொண்டு இலைகளின் சாறை உறிஞ்சி பாதிப்பை ஏற்படுத்தும். தாக்கப்பட்ட இலைகள் வெளிர் தன்மையோடு காணப்படும். இலைப்பேன்களை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு தண்ணீரில் கரைத்து ஊற்றலாம். அல்லது வேப்ப எண்ணெய் இரண்டு மில்லிலிட்டர் ஒருலிட்டர் தண்ணீரில் கலந்து ஒட்டு திரவத்தோடு சேர்த்து தெளித்து விடலாம். 
  2. அசுஉனிபூச்சிகள், மாவுபூச்சிகள்: இலைபேன்களுக்கு அடுத்ததாக மாவு பூச்சிகள், அசுஉனி பூச்சிகள் தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவற்றை இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம். 
  3. கொத்தமல்லி கீரைகளுக்கு இயற்கை முறையில் வேப்ப எண்ணெய் அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தெளிக்கும்போது அதிக வீரியத்தோடு தெளிக்காமல் குறைந்த வீரியத்தோடு தெளிப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால் கொத்தமல்லிக்கீரைகள் மிகவும் மிருதுவாக இருக்கும். 
  4. பச்சைபுழுக்கள்: கொத்தமல்லி கீரையில் பச்சை புழுக்களின் தொல்லைகள் அதிகமாக இருக்கும். கொத்தமல்லிக்கீரைகள் முளைத்து வரும்போது இரண்டு இலையிலிருந்து வேப்ப எண்ணையை தெளித்து வருவதினால் புழுக்களின் தாய்ப் பூச்சிகள் முட்டை இடாமலேயே போய்விடும். இதனால் பச்சை புழுக்களின் தொல்லை குறையும். முடிந்தவரை கொத்தமல்லிக்கீரையில் இருக்கும் புழுக்களை கண்ணால் பார்த்து எடுத்து அழித்து விடுவதே சிறந்தது. மாலை வேளையில் கொத்தமல்லி கீரையை போய் பார்த்தோமானால் பச்சை புழுக்கள் இலைகளை சாப்பிட்டு கொண்டிருக்கும், முடிந்த வரை அந்தப் பூச்சிகளை எடுத்து அழித்துவிடுவது நல்லது.
  5. பாதிக்கும் நோய்கள்: கொத்தமல்லி கீரையில் வரும் நோய்கள் என்னவென்று பார்த்தோமானால், வெள்ளை ஈக்கள் வைரஸ் நோயை உண்டுபண்ணும். மஞ்சள் அட்டை வைத்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வைரஸ் நோய் வராமல் தடுக்கலாம். 
  6. கொத்தமல்லி வேர்களில் அதிக ஈரப்பதம் இருந்தால் வேர் அழுகல் நோய் வரும். வேர் அழுகல் நோயை சரிசெய்ய கொத்தமல்லிக்கீரைக்கு  தண்ணீர் சரியான அளவு சரியான நேரத்தில் ஊற்றி வருவது மிகவும் சிறந்தது.


கொத்தமல்லி கீரையின் மருத்துவ பயன்கள்:

  கொத்தமல்லி கீரையில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளது. இக்கீரையில் வைட்டமின் ஏ விட்டமின் சி அதிகமாக உள்ளது. விட்டமின் ஏ கண் பார்வை சம்பந்தமான நோய்களை குணமாக்குகிறது. வைட்டமின் சி சொறி, சிரங்கு, அரிப்பு, தோல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணமளிக்கவல்லது. கொத்தமல்லிகீரையில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதால் இரத்தசோகை உள்ளவர்கள் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை தீரும். உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எலும்புகள் வலுப்பெறும். நம்முடைய உடம்பில் இருக்கும் அதிக சூடு தணிய கொத்தமல்லி கீரையை நன்றாகக் கழுவி கைப்பிடியளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள சூடு தணிந்து குறைய ஆரம்பிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பம் தரித்த நாளிலிருந்து கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு வருவதனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை மிக ஆரோக்கியமாக பிறக்கும். குழந்தைகளின் எலும்புகள் பற்கள் நன்றாக வளர்ந்து உறுதியடையும். பொதுவாகவே கொத்தமல்லிக்கீரை சாப்பிடுவதனால் செரிமானத்தை தூண்டும் சக்தியை அதிகரிக்கும். வாந்தி, விக்கல் இவைகளை நீக்கும். வயிறு உப்புசம் நீண்ட நாள் பசியின்மை இவற்றை போக்கும்.

 சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லிக்கீரையை அளவோடு உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரையின் அளவு குறையும். கொத்தமல்லி விதைகளை நாள் முழுவதும் ஊறவைத்து மறுநாள் ஊறவைத்த தண்ணீரை குடித்து வருவதினால் சர்க்கரையின் அளவு குறைந்து சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். பொதுவாகவே பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை மிகுந்த மன அழுத்தத்தை கொடுக்கும். வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாக கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து வாரம் இருமுறை குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும். கொத்தமல்லி கீரைகளை  உணவில் எடுத்துக் கொள்வதினால் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. நீரிழிவு நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
இன்றைய கட்டுரையில் கொத்தமல்லிக்கீரையை நம்முடைய மாடி தோட்டத்திலேயே சுலபமாக வளர்ப்பதை பற்றியும், கீரையின் மருத்துவ குணங்களைப் பற்றியும் விரிவாக குறிப்பிட்டுள்ளேன். கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். கொத்தமல்லிக்கீரை வளர்ப்பதில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள வீடியோ பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். நன்றி.



Post a Comment

1 Comments