வல்லாரைகீரை மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த கீரையாகும். ஆசியா, ஆஸ்திரேலியா பகுதிகளை சேர்ந்த கீரை வகை. நீர் நிறைந்த பகுதிகளில் தானாகவே வளரும் தாவரம். சரஸ்வதி, யோகவல்லி, நயனவல்லி, குணசாலி, அசுரசாந்தினி என்று வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சீனர்களும், மலேஷியா நாட்டை சேர்ந்தவர்களும் உணவில் அதிகம் பயன்படுத்துகின்றனர். வாய்க்கால், ஆற்றோரம், ஏரிக்கரைகளில் தரையோடு படர்ந்து வளரும் கொடி இனத்தை சார்ந்தது. வல்லாரை கீரையில் உயிர்சத்துக்கள் A,c அடங்கியுள்ளது. சுண்ணாம்புச்சத்து, இரும்புசத்து, தாதுஉப்புகளும் அதிகளவில் நிறைந்து காணப்படுகிறது. மூளைவளர்ச்சிக்கும், நினைவாற்றல் அதிகரிக்கவும் உதவுகிறது. யானைக்கால் நோய் முதல் தொழுநோய் வரை பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது. அழகிற்காகவும், முகப்பொலிவிற்கும் கூட பயன்படுத்தப்படுகிறது. இன்றைய கட்டுரையில் வல்லாரை கீரையின் வகைகள், வல்லாரை கீரை வளர்ப்பு முறைகள், உரங்கள், பூச்சிகள் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு பற்றி விரிவாக அறிந்து கொள்ளுவோம்.
வல்லாரையின் இரண்டு வகைகள்:
வல்லாரைகீரையில் இரண்டுவகைகள் உள்ளது. இரண்டு கீரைகளுமே ஒரே வளர்ப்பு முறை, தன்மைகளை கொண்டது. இரண்டு வகைகளுக்கும் விதைகளும் உள்ளது, கட்டிங்ஸ் மூலமாகவும் நீங்கள் சுலபமாக வளர்க்கலாம்.
நாட்டு வல்லாரை:
சாதரணமாக இந்த நாட்டு வல்லாரையை கடைகளில் பார்க்க முடியும். இதனுடைய இலைகள் இதய வடிவில் இருக்கும்.
Vallarai keerai valarpu
2.பிரம்மி வல்லாரை:
Vallarai keerai valarpu
பிரம்மி வல்லாரை கீரை இலைகள் வட்ட வடிவமாக, நல்ல பச்சைநிறத்தில் இருக்கும். பிரம்மி வல்லாரை சுவையில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். நாட்டு வல்லாரையை விட சுவையானது. ஆனால் இரண்டும் (ஒரே குணங்களை) ஒரே மருத்துவ பயன்களை தான் கொண்டவை .
பருவநிலை:
வல்லாரை கீரையின் காலம் மழைகாலம் மற்றும் குளிர்காலம். கோடை காலங்களிலும் வளரக்கலாம். ஆனால் இரண்டு வேளை தண்ணீர் ஊற்ற வேண்டும்.
வளர்க்கும் முறை:
சின்னதாக ஒன்றிரண்டு கிளையை பறித்து வந்தோ, அல்லது சமையலுக்காக கடைகளில் வாங்கி வந்ததிலிருந்தோ ஒருசில கிளையை எடுத்து ஊன்றி வைத்திர்களானால் படர்ந்து வளரும். பெரிய பராமரிப்பு இல்லாமல் சுலபமாக வளரக் கூடியது. இதற்கென்று விதைகளும் கடைகளில் கிடைக்கிறது. இலைகளை மட்டுமே பறித்து எடுத்து சமையலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
அதிலிருந்தே திரும்பவும் தழைத்து வளரும். இதிலிருந்து வளரும் பூக்களிலிருந்து அடுத்த சீசனுக்காக விதைகளை சேகரிக்கலாம்.
வல்லாரை கீரை பதியம் போடுவது எப்படி?
நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள , இந்த வீடியோவை பாருங்கள்.
வல்லாரை கீரை மாடி தோட்டத்தில் வளர்ப்பது எப்படி?
மண் கலவை:
வல்லாரை கீரை களிமண்ணில் நன்றாக வளரும். உங்களிடம் எந்தவகை மண் உள்ளதோ, அதை எடுத்து கொள்ளுங்கள்.
தோட்டத்துமண்/செம்மண் - 2 பங்கு
தேங்காய்நார்(cocopet)- 1 மடங்கு அல்லது மணல்.
தொழுஉரம்/மண்புழு உரம்/காய்கறி கழிவு உரம்- 1 மடங்கு
(இவற்றில் உங்களிடம் எந்தவகையான உரம் இருப்பு இருக்கிறதோ, அதனை எடுத்து கொள்ளுங்கள்)
4.வேப்பம் புண்ணாக்கு -ஒரு கைப்பிடி.
5.உயிர்-உரங்கள்- சூடோமோனஸ், ட்ரைக்கோட்ரமாவிரிடி, அசோஸ்பெயரில்லம், ஒரு ஸ்பூன் அளவில் கலந்து கொள்ளுங்கள்.
சரியான மண் கலவை தயார் செய்தாலே நாம் பாதி வெற்றி அடைந்துவிடுவோம். மண் கலவை செடியின் உயிர் நாடி. அதனை தயாரிப்பதில் மிகவும் கவனம் கொள்ள வேண்டும்.
மண் கலவை தயாரித்த பின்னர் 7-நாட்கள் வரை நிழற்பாங்கான இடத்தில் வைத்து விட வேண்டும். காலை மாலை என இரண்டு வேளையும், தயார் செய்த மண் கலவையின் மீது, தண்ணீர் தெளித்து வர வேண்டும். மண் கலவையில் நுண்ணுயிர்கள் பெருகுவதற்காக இவ்வாறு ஏழு நாட்கள் நிழற்பாங்கான இடங்களில் வைப்பது அவசியம். மண் கலவை தயாரான பின்னர், மாலை நேரத்தில் விதைகளை விதைப்பது நல்லது. வல்லாரை கீரை விதைகள், சிறிய விதைகள் என்பதால், மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். விதைகள் விதைத்த பின்னர், தண்ணீரை தெளித்துவிட வேண்டும். தண்ணீரை ஊற்றக்கூடாது. 3-முதல் 5-நாட்களுக்குள் விதைகள் முளைக்க ஆரம்பித்துவிடும். விதைகள் முளைக்க ஆரம்பித்ததும் ஒரு ஜான் வரை கீரைகள் வளரும் வரை, தண்ணீர் பூவாளி பயன்படுத்தி ஊற்றலாம். வல்லாரை கீரை மட்டுமல்ல; அனைத்து வகையான கீரைகளுக்கும் ஆரம்பத்தில் பூவாளியை பயன்படுத்தி, தண்ணீர் ஊற்றுவது சிறந்தது.
பூச்சிகள்/புழுக்கள்/பாதிக்கும் நோய்கள்:
இதனை நாம் தெரிந்து வைத்திருந்தால் தான் ஆரோக்கியமான, கீரைகளை அதிக அளவில் அறுவடை செய்ய முடியும். விதை விதைத்து, எதோ ஒரு உரத்தை போட்டுவிட்டால் கடமை முடிந்ததென்று நினைத்துவிடக் கூடாது. பூச்சிகளிடமிருந்து செடிகளை பாதுகாப்பது மிகவும் அவசியமானது அல்லவா?.
இலைப்பேன் அல்லது செம்பேன்:
வல்லாரைக் கீரைகளை அதிகம் பாதிப்பது, இலைகளின் அடியில் காணப்படும் "இலைப்பேன் அல்லது செம்பேன்" இதற்கு வேப்ப புண்ணாக்கு ஒரு கைப்பிடி வேர் பகுதியில் மண்ணுடன் கலந்துவிடுங்கள்.
பச்சை புழுக்கள் :
பச்சை புழுக்கள் மாலை வேளையில் இலைகளை தின்று கொண்டிருக்கும். இதனை நீங்கள் நேராக பார்த்து அகற்றுவதே சிறந்தது. இப்படி என் நண்பர் ஒருவரிடம் கூறும்பொழுது அவர் என்னை கிண்டல் செய்து சிரிப்பர். எல்லா கீரைகளையும் எப்படி டார்ச்லைட் அடித்து பார்ப்பது என்று!, ஆரம்பத்திலே கவனியுங்கள். இது சுலபமாக தான் இருக்கும். 1- லிட்டர் தண்ணீருக்கு 2-மில்லிலிட்டர் வேப்ப எண்ணெய் மற்றும் 0.5-மில்லிலிட்டர் சோப்பு கரைசலுடன் கலந்து கீரையில் இரண்டு இலைகள் வரும்பொழுதே தெளித்து வாருங்கள். ஆரம்பத்திலிருந்து வேப்ப எண்ணெய் தெளிப்பது, பச்சை புழுக்களை மட்டுமல்ல, எல்லா பூச்சிகளையும் கட்டுபடுத்தும்.
அசுஉனி பூச்சிகள்:
அசுஉனி பூச்சிகள் வல்லாரைகீரையை அதிகம் பாதிக்கும். இதற்கும் வேப்ப எண்ணெய் சிறந்த பலனை தரும். சாம்பலை கூட நீங்கள் பயன்படுத்தலாம். பழைய சோற்றினை ஊற வைத்த தண்ணீரை பீய்ச்சி அடித்தாலும் கூட, போதும். அசுஉனி பூச்சிகளை கட்டுபடுத்த, நிறைய பதிவுகளை எழுதி இருக்கிறேன். படித்து பயன்படுத்தி பாருங்கள். சாம்பலை ஊற வைத்து தயாரிக்கும் கரைசலையும் பயன்படுத்தலாம்.
உரங்கள்:
வல்லாரைகீரை பூக்கள் பூத்து காய்கறிகள் தருகின்ற தாவரம் அல்ல. கீரைகளின் இலைகள் மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த போகிறோம். அதனால் நைட்ரஜன் சத்துக்களை உள்ளடக்கிய உரங்களை அளிக்க வேண்டும்.
👉சாதம் வடித்த கஞ்சி தண்ணீர். இவற்றுடன் தண்ணீர் கலந்து கீரைகளுக்கு உரமாக கொடுத்து வரலாம். இவையனைத்தும் வீட்டிலேயே கிடைக்கும் சுலபமான, செலவில்லாத இயற்கை உரங்கள்.
இலைகளின் ஓரங்கள் காய்ந்து போதல்:
கீரைகளின் இலைகளில் ஓரங்கள் காய்ந்து விடுகிறது., என்ன செய்து சரிசெய்ய வேண்டுமென்று? பரவலாக எல்லோரும் என்னிடம் கேட்கின்ற கேள்வி. இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டால், வாழைப்பழதோல், அல்லது சாம்பல் தண்ணீரில் ஊறவைத்து, ஊறவைத்த வாழைப்பழதோல் தண்ணீரை செடிகளுக்கு கொடுக்க வேண்டும். வல்லாரைகீரையை 20-லிருந்து 30-நாட்களுக்குள் அறுவடை செய்யலாம்.
தன்வந்தரிசித்தர்- தன்னுடைய சீடர்களின் அறிவுக்கூர்மைக்கும், புத்திசாலிதனத்திற்கும் வல்லாரை கீரையை கொடுத்துவந்ததாய் பண்டைய சித்தர் நூல்கள் கூறுகின்றன.
வல்லாரை கீரை வளர்ப்பது மிகவும் சுலபமானது. உங்கள் மாடி தோட்டத்திலும் முயற்சி செய்து பாருங்கள்.
எங்கள் வலைதளத்தில், வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள், வல்லாரை கீரையினை பயன்படுத்தி தயாரிக்கக் கூடிய உணவுகள் பற்றிய கட்டுரை பதிவிடபட்டுள்ளது. நேரமிருந்தால் வாசியுங்கள்.
1 Comments
நாட்டு வல்லாரை seeds எங்கு கிடைக்கும்
ReplyDelete