மகிழம் பூ {வகுளம்}
Mimusops elengi [ Bakula], Bulet Wood, Indian Medler
இலக்கியத்தில் இதனை "வகுளமரம்" என்று சொல்லப்படுகிறது.
"ஓடு தேர்க்கான் வகுளம்" - என சீவசிந்தாமணியும்,
"மடல் பெரிது தாழை மகிழினிது கந்தம் வக்குண்டாம்" - என ஔவையாரும்,
"நறுதண் தகரம் வகுளம் இவற்றையும்" என மணிமேகலையும் குறிப்பிடுகிறது.
சிலருக்கு "தேன்பூ" என ஏற்கனவே சிறிய வயதில் எங்கோ பார்த்த, கேட்ட ஞாபகம் இருக்கும். நானும் கூட சிறிய வயதில் , எங்கள் பள்ளி மைதானத்தில் கொட்டி கிடக்கும் மகிழம் மலர்களை , வேப்பம் குச்சியில் கோர்த்து விளையாடிய அனுபவம் இருக்கிறது. யார் அதிக பூக்களை கோர்த்து வைத்திருக்கிறோம் என எங்களுக்குள் போட்டிகளும் நடைபெறும்.
ஆதிகாலத்திலிருந்தே இந்த மரத்தை நம் முன்னோர்கள், வீட்டின் முன்பு வளர்த்து வந்தனர். இடைப்பட்ட காலத்தில் காணாமல் போய்விட்டது.!! இந்த மரம் இருக்கும் வீடுகள் கமகமவென மணக்கும். நல்லகாற்று மனதிற்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுக்கும். இதனால் தான் "மகிழமரம்" என பெயர் பெற்றது.
இந்த மரம் தான் போதிமரம் என சொல்லப்படுகிறது.
இந்த மரம் அதிக குளிர்ச்சியைத்தரும். அதனால் இந்த மரத்தை தேடி பறவைகள் வரும். புதியதாக வீடு கட்டுபவர்கள் இடம் வாங்குபவர்கள், சீக்கிரம் நல்ல குளுமையான, நிழற் தரும் மரம் வேண்டுமென்றால் மகிழமரத்தை வளர்க்கலாம். ஒரு வருடத்திற்குள்ளாகவே ஓரளவு பெரிய மரமாக வளர்ந்துவிடும். விரும்பும் வடிவத்தில், விருப்பதிற்கும் கலைத்திறனுக்கும் ஏற்ப அழகாக வெட்டி விட்டுக் கொள்ளலாம்.
ஒரு மரம் இருந்தால் போதும், சுத்தமான காற்று நம்மைத் தேடி வரும். குளிருட்டியே [AC] தேவை இல்லை. இந்தமரம் எப்போதும் பசுமையான தோற்றத்தை உடையது. மகிழம் பூக்கள் இரண்டு நாட்கள் வரையிலும் கூட வாடாமல், மிகுந்த வாசனையுடன் இருக்கும். இந்த பூக்களின் வாசனை தெய்வீக தன்மை கொண்டது. கோவிலுக்கு போனால், ஒரு வாசனை வருமே,. அதுபோல இருக்கும். பூக்கள் வெளிர் மஞ்சளும், வெள்ளையும் கலந்த நிறத்தில், வானத்து விண்மீன்களைப் போல இருக்கும். காலையில் பள்ளிக்கு சீக்கிரமாக வரும் வேளையில், மைதானம் முழுவதுமே இந்த பூக்கள், கொட்டிகிடக்கும். அதன் வழியே நடந்து போகும் போது, ஆகாயத்திலே விண்மீன்களோடு நடப்பதை போல நாங்கள் உணர்ந்தது உண்டு.. அது ஒரு அழகிய நிலாக்காலம்.. என் பள்ளிக்காலம்.
ஆண்டு முழுவதும் இலை உதிர்க்காத மரம் மகிழமரம் தான். நம்நாட்டின் புங்கன், வேப்பம் மரங்கள் கூட ஆண்டின் குறிப்பிட்ட காலங்களில் இலைகளை உதிர்த்துவிடும். ஆனால் மகிழம் ஆண்டு முழுவதுமே இலை உதிர்க்காது. மகிழ மரத்தின் அடியில் சென்று பார்த்தால் ஒரு சின்ன இடைவெளியில் கூட வானத்தை பார்க்க முடியாது. சூரிய ஒளி நுழைய முடியாத அளவிற்கு இலைகள் வளர்ந்திருக்கும். அதன் நிழலில் அழகாக படுத்து தூங்கலாம்.
மகிழமரத்தின் மருத்துவ பயன்கள்:
மகிழமரத்தின் மருத்துவ பயன்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை பற்றி மட்டுமே இங்கே குறிபிட்டிருக்கிறேன்..
தூக்கம் வர,
மகிழ மரத்தின் பூக்களை நிழலில் உலர்த்தி டீ போல, தயாரித்து பருகி வர தூக்கமின்மை பிரச்சனைகள் குணமாகி, இரவில் படுத்ததும் நல்ல உறக்கம் வரும். ஆழ்ந்த உறக்கம் வரும். மன அழுத்தம் குறையும். ஞாபசக்தியும் அதிகரிக்கும்.
தலைவலி ,
சிலருக்கு ஒற்றைதலைவலி, தீராத தலைவலி பிரச்சனைகள் படாய்படுத்தும். அவர்களெல்லாம் மகிழம்பூக்களை முகர்ந்தால், தலைவலி உடனே குறையும். நாளடையில் முழுமையாக தலைவலி பிரச்சனைகள் குணமடையும். சின்னசின்ன தலைவலிக்கெல்லாம், மருந்தகங்களில் மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல், இதுபோல எளிய பாட்டி வைத்தியத்தில் குணம் பெறலாம். அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் சளி, இருமல் குணமடையும்.
மகிழ மர இலைகளை, நல்ல சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி, ஆற வைத்து, அரைத்து புண்கள் மீது போட ஆறாத ரணங்கள் விரைவில் ஆறும்.
ஆண்மை குறைபாடுகள் நீங்க,
மகிழம் பூக்களை பாலில் போட்டு காய்ச்சி, பனைவெல்லம் சேர்த்து அருந்தி வர, ஆண், பெண் மலட்டுதன்மை நீங்கி உடல் வலுவடையும். தாது விருத்தியாகும். ஆண்மை அதிகரிக்கும்.
ஆண் பெண் உறவில் ஈடுபாடு {காம உணர்வு} அதிகரிக்கும் இருபாலருக்கும்!!
இதன் பழங்களை சாப்பிடலாம். புளிப்பு கலந்த தேன் சுவையில் இருக்கும். இதன் பழங்களை சாப்பிடுவதால் தலைவலி நீங்கும்.
பல், ஈறு பிரச்சனைகளுக்கு,
மகிழம் பூ விதைகளை தீயிலிட்டு சுட்டு, கரியாக்கி, நாம் பயன்படுத்தும் இரசாயண பற்பசைக்கு நல்ல மாற்றாக பயன்படுத்தலாம். இதனால் பல் கூச்சம், பல்வலி, ஈறு பிரச்சனைகள், வாய் துர்நாற்றம் போன்ற பல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாகும்.
மகிழமர இலைகளை மஞ்சள் சேர்த்து அரைத்து வேனல் கட்டிகளுக்கு பயன்படுத்தலாம். விரைவில் குணமடையலாம்
முக அழகு அதிகரிக்க,
மகிழம் பூக்கள் பார்ப்பதற்கு எப்படி அழகாக இருக்கிறதோ, அதுபோலவே மகிழம் பூக்கள் பயன்படுத்தினால் நல்ல வசீகரமும், அழகான தோற்றமும் கொடுக்கும். அக்காலங்களில் அரசபெண்கள் மகிழம் பூக்களையே தங்கள் அழகிற்கும் இளமையான தோற்றத்திற்கும் பயன்படுத்தினார்களாம். இதன் பூக்களை தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, அந்த எண்ணெய்யை உடலுக்கும் முகத்திற்கும் பூசி வந்தால் உடல் சுருக்கம் இன்றி, தோல் பளபளப்பாக, நல்ல நிறத்துடன் இருக்கும்.
- மகிழம் பூ
- செண்பகப்பூ
- ரோஜா பூ
மகிழமரங்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மனநோய்க்கு மருந்தாகிறது.
magilam flower |
சிவனுக்கு உகந்த மகிழம் பூ:
மகிழமரம் சிவபெருமானுக்கு உகந்தது. இதனை 'சிவமல்லி' என்றே அழைக்கிறார்கள். பல துறவிகளும், முனிவர்களும் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தான், தவம் புரிந்ததாக சொல்லப்படுகிறது. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலஸ்வரர் கோவிலின் தலவிருட்சமாக உள்ள மரம் மகிழ மரம் தான். திருவெற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோவிலிலூம் தலவிருட்சமாக உள்ளது. இன்னும் பல கோவில்களில் தல விருட்சமாக வழிபட படுகிறது. இந்த மரம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரியது. அவர்கள் குல தெய்வ கோவில்களில், சிவன் கோவில்களில் நட்டு வளர்க்கலாம். அல்லது சிவன் கோவில்களில் உள்ள மரங்களை வழிபாடு செய்யலாம். இதனால் அவர்கள் வாழ்கை சிறப்பாக இருக்கும்.
மகிழமரத்தின் அருமையை தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள், மக்கள் அதிகம் கூடும் அரசு பொது இடங்களில், இந்த மரங்களை வளர்க்க உத்தரவிட்டார்கள். இப்பொழுதும் கூட நீங்கள் பார்க்கலாம்.. பெரிய அரசு அலுவலகங்களில் மகிழ மரங்கள் நிறைந்திருப்பதை.!! பழைய ஆர்.டி.ஓ அலுவலகம், ரயில் நிலையங்கள், நீதிமன்ற காவல் நிலையங்கள் இன்றும் மகிழ மரங்கள் பிரம்மாண்ட அளவில் வளர்ந்திருக்கின்றது.
கல்வி தடை படுகிறதா?
ஆதி காலங்களில் இந்த மரத்தடியில்தான் குருகுல கல்வி நடந்துள்ளது. மகிழ மரத்தின் அடியில் மரத்தடி பள்ளிக்கூடங்களும் நடைபெற்றிருக்கிறது. ஏனெனில் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து மாணவர்கள் கல்வி பயிலும் போது அறிவாற்றல், கல்வியில் சிறந்தும் விளங்கினார்கள். இது நம்பிக்கை இல்லை. உண்மை. நான் கட்டுரையின் ஆரம்பத்திலே கூறியது போல, எங்கள் பள்ளியிலும் பெரிய மகிழ மரம் இருந்தது. அதன் நிழலில் அமர்ந்து தான் மதிய வகுப்புகள் நடைபெறும். மதிய உணவும் அருந்துவோம். எங்கள் தமிழ் அய்யா கூட , இந்த தகவலை கூறி, நான் கேட்டிருக்கிறேன். அதனால் உங்கள் வீட்டருகே மகிழ மரங்கள் இருந்தால், அந்த மரத்தின் நிழலில் அமர்ந்து படித்து பாருங்கள். புரியாத பாடமும் புரியும். விளங்காத விளக்கங்களும் விளங்கும்!!
முக்கியமான வேலை விஷயமாக செல்பவர்கள் இந்த மரத்தை வணங்கி, இதன் பூக்களை தன்னுடன் கொண்டு சென்றால் , சென்ற காரியம் வெற்றி அடையும்.
மகிழமரம் வளர்ப்பு:
மகிழமரம் சப்போட்டா குடும்பத்தை சேர்ந்த பசுமை மாறா தாவரமாகும். இலைகள், பூக்கள் சப்போட்டாவை ஒத்திருக்கும். பழங்கள் மஞ்சளாக ஒட்டும் தன்மையுடன் இருக்கும். பழங்களை சாப்பிடலாம். இந்தியா, பசுபிக் ஆஸ்திரேலியா நாடுகளில் இயல்பாக வளரக்கூடியது. எண்ணெய் போன்ற வாசனை நறுமணப்பொருட்களை தருகிறது. இந்த மரம் ரொம்ப உறுதியானது, கடினமானது. அதன் காரணமாகத்தான் ஆங்கிலத்தில் புல்லட் உட் என பெயர் வந்தது. இந்த மரத்திற்கு பாலிஷ் போட்டால் அடர் சிவப்பாக இருக்கும்.
மகிழமரம் எல்லாவகையான நிலப்பரப்புகளிலும் வளரக்கூடியது. அதிக ஈரப்பதம் இல்லாத, வறண்ட நிலங்களிலும் கூட சுலபமாக வளர்க்கலாம்.
மகிழமரம் பூக்கள் விட குறைந்தது மூன்று வருடங்கள் ஆகும். மகிழமரத்தை வளர்க்க இடமில்லாதவர்கள் 50 லிட்டர் 100 லிட்டர் கேனில் வளர்க்கலாம். நர்சரியில் கிடைக்கிறது. சிறிய செடியாக வாங்கி வளர்க்காமல், ஒட்டுரக மரங்களை வாங்கி வளர்க்கலாம்.
மரம் வளர்ப்பதை தவம் போலச் செய்ய வேண்டும்!!
நன்றி!!
இயற்கைவிவசாயி,
திரு.சுதாகர்கிருஷ்ணன்.
இந்த செடியில் இவ்வளவு நன்மைகளா? 👇
ALSO Read:
0 Comments