சிறகு அவரை வளர்ப்பு மற்றும் பயன்கள்
- winged bean (Psophocarpus tetragonolobus),
- cigarillas, goa bean,
- four-angled bean,
- four-cornered bean,
- manila bean, princess bean,
- asparagus pea,
- dragon bean
அவரையின் பாரம்பரிய ரகங்கள் பலவாகும். இப்பொழுது பயன்பாட்டில் உள்ள அவரை ரகங்கள் பெரும்பாலூம் கலப்பினங்களே ஆகும். வெள்ளை அவரை, சிறகு அவரை, மூக்குத்தி அவரை, சிகப்பு அவரை, கோழி அவரை, பட்டை அவரை, தம்பட்டை அவரை, மூக்குத்தி அவரை என அவரையில் கிட்டதட்ட 40 ரகங்கள் இருந்ததாக இயற்கை ஆர்வலர்களும், விவசாய ஆராய்ச்சியாளர்களும் குறிப்பிடுகிறார்கள். இன்றைய பதிவில் அதிக ஊட்டசத்துக்களை கொண்ட சிறகு அவரையை பற்றி அறிந்து கொள்ளலாம். சிறகு அவரையின் விதைப்பு முதல் அறுவடை வரை, ஏற்படும் நோய்கள், பூச்சிகள் கட்டுப்பாடு, அதிக அறுவடையை எடுக்க கொடுக்க வேண்டிய உரங்கள், மற்றும் சிறகு அவரையின் பயன்கள் பற்றியும் இந்த பதிவு உங்களுக்கு விளக்கங்கள் அளிக்கிறது.
சிறகு அவரை வெப்பமண்டல மூலிகை தாவரமாகும். இந்தோனேஷிய தீவுகளில் இது கெசிபிர் kecipir என்று அழைக்கப்படுகிறது. அவர்களுடைய உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறியாக விளங்குகிறது. இதன் பிறப்பிடம் நீயுகெனியாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வெப்ப மண்டலபகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.
சிறகு அவரை அதன் பல்வேறு பயன்பாடுகளாலும் நோய் எதிர்ப்பிற்காகவும், தெற்கு ஆசியாவின் விவசாயிகள் மற்றும் நுகர்வோரால் அதிகம் பயரிடப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதிக ஊட்டசத்துக்கள் கொண்டது. தாவரத்தின் அனைத்து பகுதிகளுமே உண்ணக்கூடியது, மேலும் மருத்துவ பயன்பாட்டிலும் இடம்பெறுகிறது. கீரை போன்று இலைகளை சமைக்கலாம். பூக்களை சாலட்களில் பயன்படுத்தலாம். கொட்டைகளை பச்சையாகவோ, அல்லது சமைத்தோ உண்ணலாம். சோயாபீன் பயன்படுத்துவதை போல உணவுகளில் பயன்படுத்தலாம்.
சிறகு அவரை ஓர் அறிமுகம்:
பார்ப்பதற்கு பறவையின் சிறகு போல {அவரையின் ஒரங்கள்} இருப்பதினால், சிறகு அவரை என்று பெயர் வந்தது. சிறகு அவரையில் பச்சை நிறம், ஊதா நிறம், சிவப்பு நிறம் என எனக்கு தெரிந்தவரையில் மூன்று நிறங்களை பார்த்திருக்கிறேன். பொதுவாக சிறகு அவரையின் காய்கள் இரண்டு வகைகளாக உள்ளது. ஒன்று முக்கால் அடி வரை நீளமாக வளரக்கடியது. மற்றொன்று ஒரு முழம் அளவு வளரக்கூடிய சிறகு அவரை. சிறகு அவரை ஒருமுறை பயிரிட்டால் போதும் அதனுடைய வேர்களிலிருந்து கிழங்குகள் வர ஆரம்பிக்கும்; அந்த கிழங்கிலிருந்து திருப்பி துளிர் வந்து மறுமுறை அதிலிருந்து கொடி படர்ந்து அறுவடையை சுலபமாக எடுக்கலாம். ஆனால் இதுவரை இதுபோல நான் எதுவும் முயற்சி செய்ததில்லை. விதைகள் அதிகமாக இருப்பதினால் புதிதாக விதைகளைப் போட்டு கொடிகளை படர விட்டு அறுவடையை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
சிறகு அவரை வளர்ப்பு முறை:
மண்கலவை:
சிறகு அவரை கொடிவகையைச் சார்ந்தது என்பதினால் மண்கலவையில் கவனமாக இருக்கவேண்டும். இதனுடைய வேர்களில் கிழங்குகள் வருவதால் மாடி தோட்டத்தில் வளர்ப்பு பைகளை தேர்வு செய்யும் பொழுது குறைந்தபட்சம் இரண்டு அடி ஆழம், இரண்டு அடி அகலம் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது.
சிறகு அவரை எல்லாவித மண்களிலும் நன்றாக வளரக்கூடியது.
- செம்மண், அல்லது தோட்டத்து மண்
- நன்கு மக்கிய மாட்டு சாணம், அல்லது மண்புழு உரம், அல்லது காய்கறி கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட உரம்,
- தேங்காய் நார், அல்லது மணல்
- உயிர் உரங்கள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி, பொட்டாஷ பாக்டீரியா,
இந்த அடிப்படையில் மண் கலவை தயார் செய்து விதைக்க ஆரம்பிக்கலாம்.
விளைநிலங்களிலும் இவ்வாறே, நிலத்தை தயார் செய்து விதைக்கலாம்.
சிறகு அவரை விதைத்து, ஐந்திலிருந்து ஏழு நாட்களுக்குள் முளைக்க ஆரம்பித்துவிடும். ஆரம்பத்தில் மெதுவாகத்தான் வளர ஆரம்பிக்கும். போக போக நன்கு கொடிகள் படர்ந்து பூக்கள் வைத்து, காய்கள் வர, ஆரம்பித்து விடும். பூக்கள் ஊதா நிறங்களில் அவரை பூக்களைப்போலவே இருக்கும். ஒரு கொடியில் குறைந்தது இரண்டுகிலோ காய்களையாவது அறுவடை செய்து விடலாம். அதிகபட்சம் ஒரே கொடியில் ஐந்துகிலோ வரை காய்கள் காய்க்கும். சிறகு அவரைக்கு நல்ல பந்தல் அமைப்பது சிறந்தது. மாடி தோட்டத்தில் பந்தல் அமைத்து பயிரிட்டு வளர்க்கலாம். நிலத்தில் பயிர் வைக்கும் போது கொட்டார பந்தல் அல்லது தட்டார பந்தல் அல்லது மரத்தின் மேல் ஏற்றிவிட்டு, தென்னை மரத்தில் கூட ஏற்றிவிட்டு சிறகு அவரையை வளர்த்து நல்ல அறுவடையை சுலபமாக எடுக்கலாம்.
சிறகு அவரைக்கு ஏற்ற பருவம்:
பொதுவாக அவரை இனங்களுக்கு ஆடிப்பட்டம் சிறந்தது. ஆனால் என்னுடைய அனுபவத்தில் சிறகு அவரை ஆடி பட்டத்தை விட, ஆடிப்பட்டம் கழித்து கார்த்திகை மாதம் பயிரிட்டால், சரியாக தை மாதத்தில் நல்ல விளைச்சலைக் கொடுக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய அனுபவத்தில் ஆடி பட்டத்தை விட தைப்பட்டம் சிறந்தது என்றே கூறுவேன்.
பூச்சிகள் மேலாண்மை:
சிறகு அவரையில் பூச்சிகள் தொல்லை பெரிதும் இருக்காது. பொதுவாகவே அவரை என்றாலே அஸ்வினி பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். ஆனால் சிறகு அவரையில் அஸ்வினி பூச்சிகளின் தொல்லை சிறிது குறைவாக தான் இருக்கின்றது. பூச்சிகள் வந்தாலும் வராவிட்டாலும் வாரம் ஒரு முறை வேப்ப எண்ணையை தெளித்து வந்தால் பூச்சிகள் தொல்லையிலிருந்து விடுபடலாம். அடுப்பு சாம்பலை எடுத்து பணி ஈரத்தில் கொடிகளின் இலைகள் மேலே தூவி விட்டால் அசுவினி பூச்சி மாவுப்பூச்சிகளின் தொல்லை குறையும். மற்றபடி பனிக்காலங்களில் புழுக்களின் தொல்லை கொஞ்சம் அதிகமாக இருக்கும். இனக்கவர்ச்சிப் பொறி, அல்லது விளக்குப் பொறி வைத்து தாய் பூச்சிகளை கவர்ந்து இழுத்து புழுக்களின் தொல்லையை குறைக்கலாம்.
உரமேலாண்மை:
சிறகு அவரைக்கு உரங்கள் என்று பெரிதும் கொடுக்கும்படி எதுவும் தேவைப்படாது. ஏனெனில் தனக்கு தேவையான ஊட்டசத்துக்களை வேரில் வாழும் பாக்டிரியாக்களின் உதவியுடன் தானே தயாரித்துக்கொள்ளும்.
மண் கலவையிலேயே சரியான முறையில் உரங்களை கொடுத்து விட்டாலே போதும். மற்றபடி காய்கறிகள் வரும்போது காய்கறிகள் கருகி போவதற்கான வாய்ப்புகள் இருக்கும். போரான் சத்து குறைபாடு இருந்தால் இதுபோல ஏற்படும். எருக்க இலைகளை எடுத்து நன்றாக அரைத்து அதை தண்ணீரில் கலந்து பூ பூக்கும் தருணத்தில் வேர்ப்பகுதியில் ஊற்றி விடலாம். இலைகள் மேலும் தெளித்து விடலாம். இப்படி தெளித்துக் கொண்டு வந்தால் காய்கள் வரும்போது காய்ந்து போகாமல் நன்கு திரட்சியான காய்கறிகள் கிடைக்கும்.
பூக்களின் எண்ணிக்கை அதிகமாகி காய்கறிகள் பெரியதாக வருவதற்கு, பூ பூக்கும் தருணத்தில் தேமோர் கரைசல், அல்லது மீன் அமிலம், அல்லது புளித்த மோர் கரைசல் தெளித்து விடலாம். பூ பூக்கும் தருணத்தில் மண்புழு உரத்தை கைப்பிடி அளவு கொடுக்கலாம். வேர்ப்பகுதியில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வது நல்லது.
சிறகு அவரையில் உள்ள ஊட்டசத்துக்கள்:
உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டசத்துக்களையும் சரியான அளவில் கொண்டது சிறகு அவரை. வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், மற்றும் இரும்பு சத்து கொண்டது. மற்ற கொடி காய்கறிகளை விட, இருபது சதவிகித அதிக புரதம் கொண்ட காய்கறி சிறகு அவரையாகும். இலைகள் மற்றும் பூக்களில் 15% புரதம் உள்ளது. விதைகளில் 35% புரதமும் 18% கொழுப்பு சத்தும் உள்ளது. கருவுறும் தாய்மார்களுக்கு தேவையான போலிக் அமிலம் சிறகு அவரையில் அதிகம் உள்ளது. அதனால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சிறந்த காய்கறியாகும். புரோட்டின் சத்து குறைபாடுள்ள ஏழை எளிய மக்களுக்கு, சிறகு அவரை சிறந்த வரபிரசாதமாகும். அதிகளவில் புரோட்டின் சத்துக்கள் சிறகு அவரையில் உள்ளது. சிறகு அவரையின் இலைகளை கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். நல்ல ஊட்டசத்து கொண்ட உணவாக இது திகழ்கிறது.
சிறகு அவரையிலுள்ள ஊட்டசத்துக்கள் விவரம்.
Winged beans, mature seeds, rawNutritional value per 100 g (3.5 oz)
- Energy - 1,711 kJ (409 kcal)
- Carbohydrates - 41.7 g
Fat - 16.3 g
- Saturated - 2.3 g
- Monounsaturated - 6 g
- Polyunsaturated - 4.3 g
Protein - 29.65 g
Vitamins
- Thiamine (B1) - 1.03 mg
- Riboflavin (B2) - 0.45 mg
- Niacin (B3) -3.09 mg
- Pantothenic acid (B5) -0.795 mg
- Vitamin B6 -0.175 mg
- Folate (B9) - 45 μg
Minerals
- Calcium - 440 mg
- Iron - 13.44 mg
- Magnesium -179 mg
- Manganese - 3.721 mg
- Phosphorus - 451 mg
- Potassium - 977 mg
- Sodium - 38 mg
- Zinc - 4.48 mg
சிறகு அவரை சமையல்:
சிறகு அவரை இலைகளை கீரையை போல பயன்படுத்தலாம். விதைகளை வேகவைத்து உலர்த்தி சாப்பிடலாம். வறுத்தோ, அரைத்து பொடி செய்தும் கூட பயன்படுத்தலாம். சிறகு அவரை விதைகளை வறுத்து தயாரிக்கப்படும் தேநீர் உடலுக்கு நல்ல ஊட்டசத்து மிக்க பானமாகும். வேர்களின் கிழங்குகளையும் சமையலுக்கு பயன்படுத்தலாம். சிறகு அவரை ஒருவித துவர்ப்பு சுவையுடன் இருக்கும். {கொத்தவரங்காய் சுவையைபோல இருக்கும்} அதனால் சிறுகுழந்தைகள் இந்த காய்கறியை அதிகம் ஒதுக்கிவிட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் அசைவ உணவுகளில் இந்த அவரையை சேர்த்து சமைக்கலாம். அல்லது அசைவ உணவுகளை சமைக்கும் விதத்தில் சமைக்கலாம். சமையலுக்கு பிஞ்சாக இருக்கும் காய்கறிகளையே பயன்படுத்த வேண்டும். முற்றிய காய்கறிகளில் விதைகள் வந்துவிடும். அதைவிட, முற்றிய காய்கறிகளில் நார் வந்துவிடும். அதை உரித்து எடுத்து சமையல் செய்வது கடினமானதாகிவிடும். சமையலும் ருசிக்காது.
பாகற்காய் கசப்பாய் இருந்தாலும் , அதில் உள்ள ஊட்டசத்துக்கள் மிகமிக அதிகம். அதுபோல தான் சிறிய கசப்பும், துவர்ப்பும் கலந்த சுவைக்காக சிறகு அவரையை ஒதுக்கிவிட கூடாது. மேலும் சாதாரண அவரையை போல விரைவில் இந்த காய்கறி வேகாது. காய்கறி வேக சிறிது, நேரம் அதிகமாக எடுக்கும். சிறகு அவரை காய்கறியை சமைக்கும் பொழுது லேசாக தண்ணீர் விடும். தண்ணீர் ஊற்றி வதக்காமல், தண்ணிர் தெளித்து குறைந்த தீயில் வைத்து வதக்க வேண்டும்.
சிறகு அவரையில் பொரியல், கூட்டு, கார குழம்பு, சாம்பார் இப்படி அனைத்துவகையான சமையலும் செய்யலாம். சிறகு அவரை சமையல் முறைகளில் அதிகமாக எங்கள் வீட்டில் சமைக்கும் சமையல் குறிப்பு ஒன்றை மட்டும் உங்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்.
சிறகு அவரை கிரேவி:
தேவையான பொருட்கள்:
- சிறகு அவரை -1/4 கிலோ
- தேங்காய்பால் - அரைகப்
- வெங்காயம் - 1 {பெரியது}
- தக்காளி - 3
- மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
அரைக்க:
- மிளகு - ஒரு ஸ்பூன்
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- இஞ்சி - 2 இஞ்ச்
- பூண்டு - 5 பல்
தாளிக்க:
- பட்டை - 1 இன்ச்
- இலவங்கப்பூ -2
- பிரியாணி இலை - சிறியதாக ஒன்று
- கடலை எண்ணெய் -ஒரு குழிகரண்டி
செய்முறை:
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ளவற்றை பட்டை, லவங்கம் பிரியாணி இலை இவற்றை போட்டு தாளித்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பெரிய அளவு வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக, வதக்கி கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும், அதனுடன் பொடியாக நறுக்கிய, மூன்று தக்காளிகளை சேர்த்து தொக்கு பதத்திற்கு வதக்கிக்கொள்ளவும்.
தக்காளி நன்றாக வதங்கிய பின், மிளகு சீரகம், இஞ்சி, பூண்டு இவற்றை நன்றாக மைய அரைத்து அதனை, இந்த சமயத்தில் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்துள்ள சிறகு அவரை காய்களை சேர்த்து, தேவையான அளவு உப்புமும், மிளகாய்தூளும் சேர்த்து கொள்ளவும். சிறகு அவரை வேக நேரமெடுக்கும். அதனால் தண்ணீர் தெளித்து, இரண்டு முன்று முறை கிளறிவிட்டு வேக விடவும்.
சிறகு அவரை முக்கால் பாகம் வெந்ததும், சிறிதளவு தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு அடுப்பை நிறுத்திவிடலாம். அவ்வளவுதான்! சூப்பரான சிறகு அவரை கிரேவி தயார். சாதம், சப்பாத்தி இட்லி தோசைக்கும் ஏற்ற சிறந்த சைட்டிஷ்.
தேங்காய் பால் சேர்ப்பதற்கு பதிலாக, இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி சேர்த்து கொள்ளலாம். சுவை அலாதியாக இருக்கும்.
நன்றி!!
இயற்கை விவசாயி,
திரு.சுதாகர் கிருஷ்ணன்.
சமையல் குறிப்பு,
திருமதி.இந்திரா பிரியதர்ஷினி.MSc.MEd.MBA
2 Comments
இந்த காய் எனக்கும் தெரியும் எங்க ஊரில் சதுர அவரை என்று சொல்லவர்கள்.நன்றி
ReplyDeleteஒவ்வொரு காய்கறிகள் பற்றியும் நீங்கள் தரும் விளக்கங்கள் மிகவும் அருமை. இது போன்ற பதிவுகள் எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. சிறகு அவரை விதைகள் எடுத்தால் எனக்கு தரும்படி உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களிடமிருந்து தான் இந்த விதைகளைப் பற்றி தெரிந்து கொள்கிறேன். மிக்க நன்றி நண்பரே.
ReplyDelete