|
Cooking Utensils |
திருக்குறளின் பொருட்பாலில்- மருந்து (941-950) என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் மருந்து- என குறிப்பிடுவது உணவினை தான். அதாவது உணவே மருந்து என்று குறிப்பிடுகிறார். உணவு தான் எல்லா நோய்களுக்கும் ஆரம்பமும், முடிவும் என்றால் அது மிகையாகாது. என்னதான் ஆர்கானிக்கா விளைவித்து, சத்துள்ள காய்கறிகளை தேடிதேடி சமைத்தாலூம் நீங்கள் சமைக்கும் பாத்திரங்களை கவனிக்காவிட்டால், உணவே விஷமாக மாறிவிடும். பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மண்ட் வீக் என்கிற கதை தான். உணவின் ஆரம்பபுள்ளியே பாத்திரங்கள் தான். பாத்திரங்களை பற்றி நாம் சிந்தித்து பார்ப்பதே இல்லை. மார்க்கெட்டுகளில் அழகழகாக 1000-மாடல்களில் கிடைக்கிறது. நாமும் பார்த்த மாத்திரத்தில், பாத்திரங்களை அலங்கார பொருட்களாக நினைத்து வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம். நமது முன்னோர்களின் வாழ்கை முறையில் இடம் பெற்ற, பாத்திரங்களை அருங்காட்சியகத்தில் நம் குழந்தைகளுக்கு, காண்பித்து கற்று தருகிறோம். அந்த பாரம்பரிய பாத்திரங்களில் சமைத்த உணவானது நோய் எதிர்ப்பு சக்தியை அளித்தது. நீண்ட ஆயுளையும், நோயற்ற வாழ்வினையும் அளித்தது.
பாரம்பரிய பாத்திரங்கள்:
அது என்ன பாரம்பரிய பாத்திரங்கள்? பொன், வெள்ளீ, மண், வெண்கலம், பித்தளை, செம்பு, இரும்பு, மரம்,கல்- இவற்றினால் செய்யப்பட்ட பாத்திரங்கள். இத்தகைய உலோகங்கள் அதிக வெப்ப எதிர்ப்பு தன்மை உடையவை. இவற்றில் உணவு, மிதமான சூட்டில் சமைக்கப்படுகிறது. இதன் காரணமாக உணவில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் ஊட்டச்சத்துக்கள், கரைந்துவிடாமல் முழுமையாக கிடைக்கிறது.
சமைக்கும் பாத்திரங்கள்/cooking utensils:
உணவினை எந்த பாத்திரத்தில் சமைப்பது உடல்நலத்திற்கு நல்லது? எந்த பாத்திரத்தில் உணவினை சமைக்க வேண்டும்? எந்த பாத்திரத்தில் சமைப்பது ஆபத்து, என்று சற்றே விரிவாக அலசுவோம்.
|
cooking utensils |
பொன், வெள்ளீ பாத்திரங்கள்:
ஆயுர்வேத மருத்துவத்தில் பொன், வெள்ளீ, செம்பு - இன்றளவும் சிகிச்சை முறைகளில் பயன்படுத்தபடுகிறது. கேரளாவில் சிறு குழந்தைகளுக்கு தங்கத்தை கல்லில் உரைத்து, தேன் சேர்த்து நாக்கில் தடவிவிடுவார்கள். பொன் சுவாசக் குறைபாடுகள், இதயம், மூளை குறைபாடுகளையும் குணப்படுத்த வல்லது. அரசர்கள் காலத்தில், பிற நாட்டு மன்னர்களுக்கு பொன்னால் உருவாக்கப்பட்ட பாத்திரங்களில் உணவளிப்பது, மரியாதைக்குரிய வழக்கமாக இருந்தது. வெள்ளீ பாத்திரங்கள், செரிமான பிரச்சனைகள், தொற்றுநோய்கள், கெட்ட பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்கிறது. இதனால் தான் வெள்ளீ டம்பளரில் பால் அருந்தும் பழக்கம் உருவானது.
செம்பு மற்றும் இரும்பு பாத்திரங்கள்:
செம்பு பாத்திரங்கள் மூட்டுவலி, ரத்த அழுத்தம், போலியோ, பக்கவாதம் போன்ற நோய்களை தடுக்க வல்லது. உப்பு அதிகமிருக்கும் உணவுகளை செம்பு பாத்திரத்தில் சமைப்பதை தவிர்க்கவும். உப்பில் இருக்கும் அயோடின் தாமிரத்துடன் வினை புரிந்து அதிக செம்பு துகள்கள் வெளிப்பட வாய்ப்புள்ளது. அடுத்ததாக இரும்பு பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படும். ரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். துவர்ப்பு சுவையுடைய பொருட்களை இரும்பு பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. இரும்பு பாத்திரத்தில் சமைக்கலாமே தவிர, சமைத்த உணவை அதிக நேரம் வைக்க கூடாது.
மண் பாத்திரங்கள்:
சமைப்பதற்கு மிகவும் உகந்த பாத்திரம் மண் பாத்திரங்கள் தான். மண்பாத்திரங்களைப் குறித்து தனியாக ஒரு பதிவையே போடலாம். மண்பானையில் சமைத்த உணவில் இரும்பு பாஸ்பரஸ் போன்ற ஏராளமான சத்துக்கள் மேம்படுத்த படுகின்றன. மேலும் மண்பானை காரத்தன்மை கொண்டது என்பதால் மண்பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவில் உள்ள அமிலத்தன்மையை சமன்படுத்துகிறது.
அலுமினியம்:
அலுமினிய பாத்திரங்கள் விலை குறைவாக விற்படுகிறது. பயன்படுத்துவதற்கு எளிது என்பதால் அலுமினியம் ஏறத்தாழ நமது வாழ்கையோடு ஒன்றிவிட்டது. அல்சீமர் நோய் வருவதற்கு அலுமினியத்தின் சேர்கையும் காரணமாக கருதப்படுகிறது. சாயப்பட்டறைகளில் அரிகாரமாக அலுமினியத்தை பயன்படுத்துவார்கள். அலுமினியம் விரைவாக சூடேறி, அமிலதன்மை வாய்ந்த காய்கறிகளுடன் வினைபுரிந்து, உணவில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. ஆஸ்துமா, காசநோய், போன்ற சுவாச பாதிப்புகளும், அல்சர் ஏற்படவும் அலுமினிய பாத்திரங்களின் பயன்பாடு காரணமாகிறது. தொடர்ந்து பயன்படுத்தினால் மூளையிலுள்ள நீயூரான்களை அழிக்கும் ஆபத்தும் கூட ஏற்படலாம். சர்வேதேச அளவில் சீனா தான் அலுமினிய உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள்:
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் குரோமியம், நிக்கல் சிலிக்கான் கார்பன் கலந்த கலவையாகும். உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் தான். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் அமில உணவுகளுடன் வினைபுரிவதில்லை. சமைப்பதற்கு உகந்தது தான். ஆனால் நல்ல தரமான பாத்திரங்களை தேர்வு செய்து வாங்குவது அவசியம்.
நாண்ஸ்டிக் பாத்திரங்கள்:
நாண்ஸ்டிக்பாத்திரங்கள் பார்வைக்கு அழகாக இருந்தாலும், பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலூம், இதில் சமைக்கும்போது வெளிவரும் நச்சுப்பொருள் ( Perfluorinated compounds ) பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். டெப்ளான் பூசப்பட்ட நாண்ஸ்டிக் பாத்திரங்களில் புற்றுநோயை உண்டாகக்கூடிய நச்சுபொருள் அதிக அளவில் உள்ளது. எனவே நாண்ஸ்டிக் பாத்திரங்களை உபயோகிப்பதை தவிர்ப்பதே உடல் நலத்திற்கு சிறந்தது.
பீங்கான் மற்றும் ஈயப் பாத்திரங்கள்:
பீங்கான் பாத்திரங்கள் காலம்காலமாக பயன்பாட்டில் உள்ள பாத்திரங்கள் தான். சமைப்பதற்கு ஏற்றது தான், ஆனால் பாத்திரங்களின் தரத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். மலிவு விலை பீங்கான்கள் அலங்காரப் பொருட்களாக பயன்படுத்தலாம்.. சமையலுக்கு பயன்படுத்தினால் நிறைய பின்விளைவுகள், உடல்நலக்குறைபாடுகள் ஏற்படலாம்.
ஈயப் பாத்திரங்கள் சமையலுக்கு உகந்ததல்ல. வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை உருவாக்கிவிடும். இதற்கு பதிலாக வெள்ளியப் பாத்திரங்கள் மிகவும் சிறந்தது. அதில் சமைக்கப்படும் உணவு மிகுந்த சுவையுடன், வாசத்துடன் இருக்கும்.
பாத்திரங்கள் அழகாக அலமாரியை அலங்கரிப்பதை விட, ஆரோக்கியத்தை அளிப்பதாய் அமைய வேண்டும். நாளைக்கே உடனே இந்த மாற்றங்களை கொண்டுவந்துவிட முடியாது. ஆனால் முயற்சித்து பார்ப்போமே! பாரம்பரியத்திற்கு திரும்ப.நன்றி!
0 Comments