Vazhakkai varuval |
வாழைக்காய்/Plantain/RawBanana:
வாழைக்காய் சிறுபிள்ளைகளுக்கு பிடித்த உணவுபொருட்களில் ஒன்று. வாழைக்காயில் பல்வேறுவகை உணவுகள் தயாரிக்கப்படுகிறது. வாழைக்காய் சிப்ஸ், வாழைக்காய் பஜ்ஜி, வாழைக்காய் குழம்பு, பொரியல் வறுவல் இப்படி பல்வேறு சுவைகளில் தயாரிக்கப்பட்டு விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் குறிப்பிடதக்கது. வாழைக்காய் பெருங்குடல் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும், ஜீரண மண்டலத்திற்கு நல்லது. உடல் எடையை குறைக்கும், இரத்தசோகையை குணமாக்கி இமோகுளோபினை அதிகரிக்கும். வாழைக்காயை தொடர்ந்து பயன்படுத்துவதால், இன்சுலின் சுரப்பை அதிகரித்து, இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிக்க உதவுகிறது. வாழைக்காயில் கால்சியம் மெக்னீசியம் நிறைந்துள்ளது. எலும்புகள் வளர்ச்சியடையவும் வலுப்பெறவும் உதவுகிறது. மூட்டுவலி, ஆஸ்டியோபோராசிஸ் போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்கிறது. வாழைக்காயிலுள்ள நார்சத்து மற்றும் மாவுசத்து மலச்சிக்கல் பிரச்சனைகளை குணமாக்கவல்லது. வாழைக்காயில் உள்ள பொட்டாசியம் சத்தானது இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், இதயத்திற்கு இரத்தம் தடையின்றி சீராக சென்றுவரவும் உதவுகிறது. வாழைக்காய் சாப்பிடுவதால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. அதனால் அதிகளவு உண்ணுவது தடைபடுகிறது. அதிகளவு பசியை கட்டுபடுத்துகிறது. வாழைக்காயில் நிறைத்துள்ள வைட்டமின் ஏ சத்துக்களால், கண் பார்வை தெளிவாகவும், கண்புரை போன்ற நோய்களை கட்டுபடுத்தி, விழிப்படலத்தை பாதுகாக்கிறது. இத்தகைய அளப்பரிய நன்மைகளை கொண்ட வாழைக்காயை வாரம் இரண்டு முறையாவது உணவோடு சேர்த்து கொள்வது மிகவும் அவசியம்.
கிரிப்ஸியான வாழைக்காய் வறுவல்:
Method -1
தேவையான பொருட்கள்:
- வாழைக்காய்- 2 மீடியம் சைஸ்
- மிளகு தூள்-1ஸ்பூன்
- கறி மசால் பொடி-1ஸ்பூன்
- தனிமிளகாய் தூள்-1ஸ்பூன்
- பெருங்காயத்தூள்-1/4ஸ்பூன்
- மஞ்சள் தூள்-1சிட்டிகை
- கறிவேப்பிலை-ஒரு கொத்து
- உப்பு-தேவையான அளவு
- கடலை எண்ணெய்- ஒரு குழி கரண்டி.
செய்முறை:
வாழைக்காயின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, சதைப்பகுதியை வட்டவடிவமாக மெல்லியதாக வெட்டி கொள்ளவும். உங்களுக்கு விருப்பமின வடிவங்களில் சதுரமாக அல்லது முக்கோணவடிவில் வெட்டிக்கொள்ளலாம். மேற் குறிபிட்டுள்ள அனைத்து பொடிகளையும் தனிமிளகாய் தூள் ஒருஸ்பூன், மிளகுதூள் ஒரு ஸ்பூன், சீரக தூள் ஒரு ஸ்பூன், உப்பு ஒரு ஸ்பூன், கறி மசாலாத்தூள் அரை ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் அரை ஸ்பூன் வெட்டி வைத்த வாழைக்காயுடன் கலந்து கொள்ளவும். மசால்பொடிகளுடன் இஞ்சி,பூண்டு விழுது-1ஸ்பூன் கூட சேர்த்து கொள்ளலாம். சுவை அலாதியாக இருக்கும். கலந்த மசாலாக்களின் சாரம் வாழைக்காயுடன் சேர்வதற்கு பத்து, பதினைந்து நிமிடங்கள் அப்படியே மூடி வைத்து விடவும். உப்பு சுவைத்து பார்த்து கொள்ளவும். மசாலாக்கள் நன்றாக ஊறியபின்னர், இரும்பு தோசைகல்லிலோ அல்லது தவாவிலோ குழி கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் வாழைக்காய்களை பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும். அடுப்பை சிம்மில் வைக்க வேண்டாம். அதிக தனலில்வேகவிடும் போது தான் கிறிப்ஸியான வறுவல் கிடைக்கும். வாழைக்காய் சீக்கிரம் வெந்துவிடும். அதனால் கலர் மாறின உடனே எடுத்து விடவும். மஞ்சள்பொடி தனியாக சேர்ப்பதால், கலர் மாறி பார்வைக்கு வறுவல் அழகாக இருக்கும். இந்த முறையினை பயன்படுத்தி, உருளை கிழங்கு, கர்ணைகிழங்கு, சேப்பங்கிழங்கு இவற்றையும் கூட செய்யலாம். மீன், நெத்திலி கருவாடு இவற்றையும் கூட செய்யலாம். சாம்பார், தயிர்சாதம், ரசத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும். கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக குழிகரண்டிஅளவு எண்ணெய்யில் வறுத்து சேர்த்துக்கொள்ளவும்.
வாழைக்காய் வறுவல்:
Method -2
தேவையான பொருட்கள்:
- வாழைக்காய்- இரண்டு
- தனிமிளகாய்தூள்-1ஸ்பூன்
- கறிவேப்பிலை-1கொத்து
- உப்பு- தேவையான அளவு
- சோம்பு-1ஸ்பூன்
- பூண்டு- 4 பல்
- கடுகு-1/2ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு-1ஸ்பூன்
- நல்லெண்ணெய்-1குழிகரண்டி
செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி எடுத்துவிட்டு, சதைப்பகுதியினை, நீளவாக்கில் செவ்வகமாக, அல்லது சதுரமாக நறுக்கிக் கொள்ளவும். பொடிப்பொடியாக நறுக்க வேண்டாம். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அதனுடன் சிட்டிகை மஞ்சள்தூள் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வாழைக்காயை முக்கால்பாகம் மூடிஇட்டு வேக வைத்துக் கொள்ளவும். சோம்பு மற்றும் பூண்டுபற்களை சிறிய மிக்ஸிஜாரில் மழமழவென்று அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரம் அல்லது வாணலியை அடுப்பில் வைத்து, குழிகரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும். அரைத்த சோம்பு, இஞ்சி விழுதினை சேர்த்து இரண்டுநிமிடம் அடிபிடிக்காமல் வதக்கி கொள்ளவும். பின்னர் தனி மிளகாய் தூள், உப்புத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். மசால் வாசனை நீங்கிய பிறகு முக்கால் பாகம் வேக வைத்த வாழைக்காய்களை சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கிக்கொள்ளவும். வாழைகாய்களின் அனைத்து பகுதியிலும் மசாலாக்கள் சேரும்வண்ணம் நன்றாக கிளறி விடவும். மிகுந்த சுவையான வாழைக்காய் வறுவல் தயாராகிவிட்டது. செட்டிநாடு காரைக்குடி ஹோட்டல்களில் இவ்வகை வாழைக்காய் வறுவல் செய்வார்கள். சூப்பர் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டிலும் வாழைக்காய் வறுவலை செய்து பாருங்கள். நன்றி!
கோ.இந்திரா பிரியதர்ஷினி.Msc MEd MBA
0 Comments