Translate

மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க டிப்ஸ்கள்

மல்லிகை/ Jasminum Sambac/Jasmine:


Sudagarkrishnanchannels
Jasmine flower 

  பூக்களைப்பிடிக்காதவர்கள் உலகில் யாருமே இருக்கமுடியாது. காய்கறிசெடிகளை வளர்க்காதவர்கள் கூட இரண்டு பூச்செடிகளை வீட்டில் வைத்து வளர்க்க ஆசைப்படுவார்கள். பூக்களின் மணமும், அழகும் பார்பவர்கள் கண்களுக்கும், மனதிற்கும் சந்தோஷத்தையும், மனநிம்மதியையும் அளிக்கக்கூடியது. கவலை மறக்கச்செய்யும் தாய்மடி, பூக்களின் புன்னகை. அழகான மல்லிகை பூக்களை பெண்களுக்கு மட்டும்தான் பிடிக்கும் என்றில்லை; எல்லோருக்குமே பிடிக்கும். மல்லிகைப்பூச் செடியை பூக்களின் அரசி என கூறுவர். மயக்கமூட்டும் மணத்தை கொண்ட பூ மல்லிகைப்பூ. தமிழ் இலக்கியங்களில் முல்லைப்பூ எனக் குறிப்பிடப்படுவது மல்லிகைப் பூக்களைதான். இலக்கியங்களிலும் மல்லிகைக்கு சிறப்பிடம் இருந்தது. நம்முடைய மதுரை மல்லிகை உலகளவில் மிகவும் பிரபலமானது. வெளிநாடுகளில் மதுரை மல்லிகைக்கென்றே சிறப்பிடம் உள்ளது. விவசாயிகள் தோட்டத்தில் மல்லிகை பூச்செடியை பயிரிடுவதால் அதிக லாபம், அதிக பணத்தை சுலபமாக ஈட்டித்தரும். மல்லிகையில் இருபத்தியாறு வகைகள் உண்டு. காட்டுமல்லி, நாக மல்லி, ஊசிமல்லி, இத்தாலி மல்லி, பிச்சி பூ குண்டுமல்லி, எருமை முல்லை, கரும் முல்லை, இருவாச்சி மல்லி, சாதிமல்லி இப்படி பல வகைகள் மல்லிகை பூச்செடியில் உண்டு. மல்லிகை பூச்செடி மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரமாகும்.  இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர், போன்ற நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. பெண்களுக்கு பால் சுரப்பு நிற்பதற்கும், மார்பு வீக்கம் குறைவதற்கும், மருத்துவ மூலிகையாக பயன்படுகிறது. மல்லிகை பூ செடி பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய தாவரமாகும். மல்லிகைப்பூச் செடியை பற்றியும், அதில் அதிக பூக்கள் பூக்க முக்கியமான சில டிப்ஸ்களை பற்றியும், பதியம் போடுதல் பற்றியும் பூவின் பயன்கள் பற்றியும், விரிவாக இன்றையப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மல்லிகை செடி வளர்ப்பு:

மல்லிகை செடிக்கு மண் கலவை:

மல்லிகை பூச்செடி களிமண்ணில் நன்றாக வளரும். களிமண் என்பது நமது தோட்டத்து மண்ணை குறிக்கும். செம்மண் நிலத்திலும் வளர்க்கலாம். மாடித்தோட்டத்தில் வளர்ப்பு பைகளில் மல்லிகைப்பூச் செடியை வளர்ப்பதற்கு தோட்டத்து மண் அல்லது செம்மண் இரண்டுமடங்கு, தொழு உரம் அல்லது மண்புழு உரம் அல்லது காய்கறி கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட உரம் ஒரு மடங்கு, மணல் அல்லது தேங்காய்நார் ஒரு மடங்கு, உயிர்உரங்கள் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி பொட்டாஷ் பாக்டீரியா இவை அனைத்தும் ஒவ்வொன்றும் ஒரு, ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளலாம். வேப்பம் புண்ணாக்கு கைப்பிடியளவு எடுத்துக்கொள்ளலாம். எல்லாவற்றையும் நன்றாக கலந்து ஏழு நாட்கள் ஈரப்பதத்தோடு வைத்திருந்து, மல்லிகை பூச்செடி வைத்து வளர்க்க ஆரம்பிக்கலாம்.  இவ்வாறு தயாரிக்கப்பட்ட மண் கலவையில் மல்லிகைப்பூச் செடியை வைத்தால் அதிக பூக்கள் பூப்பதற்கு ஏதுவாக இருக்கும். வேரில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

மல்லிகை செடிக்கு உரங்கள் மற்றும் பூச்சிகள் கட்டுப்பாடு:

உயிர்உரங்கள்: 

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயிர்உரங்கள் சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, அசோஸ்பைரில்லம், ஒவ்வொன்றும் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்க வேண்டும். உயிர்உரங்கள் கொடுப்பதால் மல்லிகைப்பூ செடியை பூஞ்சைகள் பாதிக்காத வண்ணம் பாதுகாத்தும், மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகவும் உதவுகிறது.

புளித்தமோர் கரைசல்: 

பூக்கள் அதிகம் பூப்பதற்கு புளித்த மோர் அல்லது தேமோர் கரைசல் வாரம் ஒரு முறை தெளித்து விடலாம். புளித்த மோர் கரைசல் தயாரிப்பது மிகவும் சுலபமானது. மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் புளிக்க வைத்த மோரை எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்கொண்ட புளித்த மோரோடு ஒன்பது மடங்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு லிட்டர் புளித்த மோர் இருந்தால், அந்தப்புளித்த மோரோடு ஒன்பது லிட்டர் தண்ணீர் கலந்து, பூக்கள் பூக்கும் தருணத்தில் வாரத்தில் இரண்டு முறை இலைகள் மேல் தெளித்து வரலாம். இதனால் புளித்த மோரில் இருக்கும் அமிலத்தன்மை மல்லிகை பூச்செடியில் மொட்டுக்கள் வருவதற்கு தூண்டுகோலாக அமையும். 

தேமோர் கரைசல்:  

தேங்காய்பால் மற்றும் மோரும் சேர்ந்த கரைசல் என்பதே தேமோர் கரைசல் ஆகும். தயாரிப்பது மிகவும் சுலபமானது. மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் புளிக்க வைத்த மோருடன், தேங்காய்பால் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். ஏழுநாட்கள் நிழற்பாங்கான இடத்தில் வைத்து தினமும் கலக்கிக் கொண்டே வர வேண்டும். ஏழு நாட்களுக்குப் பின்னர், தேமோர் கரைசல் தயாராகிவிடும். தயாரான கரைசலோடு ஒன்பது மடங்கு தண்ணீர் கலந்து, மல்லிகை பூ செடியின் இலைகள் மேல் தெளித்து வரலாம். மல்லிகை பூச்செடியின் மீது தெளிப்பதனால் பூச்செடியின் ஒவ்வொரு கிளைகளிலும் மொட்டுக்கள் வந்து அதிக பூக்கள் பூக்கும். மல்லிகை பூச்செடி என்றில்லை; அனைத்து வகையான பூச்செடி காய்கறி செடிகளுக்கும் தேமோர்கரைசல் பயன்படுத்தலாம்.

மீன்அமினோஅமிலம்:

பதினைந்து நாட்கள் இடைவெளியில் மீன் அமினோ அமிலம் வேர் பகுதிக்கு கொடுக்கலாம். இலைகள் மேலும் தெளித்து விடலாம். மீன் அமிலம் இலைகளின் மேல் தெளிப்பதற்கு ஒரு லிட்டர் தண்ணீருடன் ஐந்து மில்லி லிட்டர்  மீன் அமினோ அமிலம் கலந்து தெளிக்கலாம். வேர் பகுதியில் ஊற்றுவதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு எட்டு மில்லி லிட்டர் கலந்து ஊற்றி விடலாம்.

எருக்கம் இலை கரைசல்

மல்லிகை பூக்களில் சிவப்பு நிறமாக வருவதை குறைக்க, தெருக்களில் சுலபமாக வளர்ந்துகிடக்கும் எருக்கம் இலைகளை கரைசலாக பயன்படுத்தி, இந்தக் குறைபாட்டை மாற்றலாம். நான்கைந்து எருக்கம் இலைகளை அம்மியில் அல்லது ஆட்டுரலில் நன்றாக அரைத்து , தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் ஊற்றிவிட வேண்டும். எருக்கம் இலைகளை மக்க வைத்து வேர்ப்பகுதியில் கொடுக்கலாம். அல்லது மண்கலவை தயாரிக்கும்போதே காய்ந்த எருக்கம் சருகுகளை கலந்து தயாரிக்கலாம். எருக்கம் இலை கரைசலால் பூக்கள் பெரியதாக பூக்கும். ஏனென்றால் போரான் சத்துக்கள் அதிக அளவில் எருக்கம் இலைகளில் இருக்கிறது. 

கடலைபுண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு கரைசல்: 

மூன்று மாதத்துக்கு ஒருமுறை கடலைப் புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு கரைசல், அல்லது தொழு உரம், அல்லது மண்புழு உரம் அல்லது இலை மக்கு உரம் அல்லது காய்கறி கழிவு உரம் இதில் எந்த உரம் கிடைக்கிறதோ அதை கொடுக்கலாம்.


மல்லிகைப்பூ செடியை பாதிக்கும் பூச்சிகள், புழுக்கள் மற்றும் பாதிக்கும் நோய்கள்:

மல்லிகைச் செடியில் இலைபேன்கள் தொல்லை அதிகமாக இருக்கும். இலைப்பேன் தொல்லைகளுக்கு வேப்பம்புண்ணாக்கு  கைப்பிடியளவு எடுத்து வேர்ப் பகுதியில் கலந்து, தண்ணீர்  ஊற்றிவந்தாலே எல்லா இலைப்பேன்களும் கீழே விழுந்துவிடும். அடுத்ததாக பச்சைப்புழுக்கள்., இவைகள் மல்லிகைச் செடியில் உள்ள இலைகளை சாப்பிடும். முடிந்த வரை பச்சைப்புழுக்களை கண்ணால் பார்த்து எடுத்து அழிப்பது சிறந்தது. அல்லது வேப்பங்கொட்டை கரைசல், வேப்ப எண்ணெய் கரைசல் தெளித்தால் பச்சை புழுக்கள் கட்டுப்படும். மல்லிகை பூச்செடியில் மொட்டுப்புழுக்கள் மொட்டுக்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும் ஆபத்தான புழுயினமாகும். மொட்டு புழுக்களை கட்டுப்படுத்துவதற்கு வேப்ப எண்ணெய் ஐந்து மில்லி லிட்டர் எடுத்துக்கொண்டு, அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, ஒட்டு திரவம் இரண்டு மில்லி லிட்டர் சேர்த்து வாரம் ஒரு முறை செடிகளின் இலைகள் மற்றும் மொட்டுகள் மீது நனையும்படி, தெளித்து வந்தால் மொட்டு புழுக்கள் கட்டுப்படும். மல்லிகைச் செடியில் நோய்கள் என்று பார்த்தால் இலை சுருட்டு நோய் அதிகம் பாதிக்கும். இலை சுருட்டு நோயை கட்டுப்படுத்த புளித்த மோர் லிட்டருக்கு ஒன்பது லிட்டர் தண்ணீர் கலந்து, வாரம் இரண்டு முறை இலைகள் நனையும்படி தெளித்து விடலாம், அல்லது மீன் அமிலம் லிட்டருக்கு ஐந்து மில்லி லிட்டர் கலந்து வாரம் இருமுறை தெளித்து விடலாம். வேர்களில் அதிக ஈரப்பதம் இருந்தால் வேர் அழுகல் நோய்கள் வரும். மல்லிகைச் செடிக்கு தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.


Sudagarkrishnanchannels
Jasmine flower 


மல்லிகைசெடியில் தாறுமாறாக பூக்கள் பூக்க டிப்ஸ்கள்:

வெங்காய தோல் கரைசல்

மல்லிகைச் செடியில் அதிக பூக்கள் பூக்க சுலபமானதொரு கரைசல் வெங்காயத்தோல்  கரைசல் ஆகும். வெங்காயத்தில் கரைசல் தயாரிப்பது மிகவும் சுலபமானது. சமையலுக்கு பயன்படுத்துகிற வெங்காயத்தின் தோலை கீழே தூக்கிப் போடாமல், மூடியுள்ள பாட்டிலில் போட்டு, அந்தத் தோலை  இரண்டு நாட்கள் ஊறவைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இந்தக் கரைசலை கலக்கி விட வேண்டும். இரண்டு நாட்களுக்குப் பின்னர், கரைசலை செடிகளுக்கு பயன்படுத்தலாம். கரைசலோடு இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து மல்லிகை பூ செடியின் வேர்ப்பகுதியில் ஊற்றி வரலாம். வெங்காயத்தோல் கரைசலில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு, காப்பர் மற்றும் இதர பொருட்கள் உள்ளன. கால்சியம்  பூக்கள் கொட்டாமல் மொட்டுக்கள் அதிகமாக வர உதவுகிறது. பொட்டாசியம்  பெரிய பெரிய பூக்கள் மல்லிகை செடியை அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மெக்னீசியம் சத்தானது அதிக பூக்கள் பூப்பதற்கு உதவுகிறது. இரும்புச்சத்து மல்லிகை செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறாமல் தடுக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் இலைகள் மஞ்சளாக மாறும். அப்பொழுது மண்புழு உரம் அல்லது தொழு உரத்தை வேர்ப்பகுதியில் போட்டு விட்டால் நாளடைவில் இலைகள் பச்சை நிறத்திற்கு மாறிவிடும்.

வாழைபழதோல் கரைசல்:

சாப்பிட்ட பின்னர் தூக்கி எறியும் வாழைப்பழத் தோலை தண்ணீரில் ஊறவைத்து, செடிகளுக்கு கொடுத்தால் பெரிய பூக்கள் பூக்கும். வாழைப்பழத் தோலில் பொட்டாசியம், பாஸ்பேட், சல்பர் ,கால்சியம், சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழத் தோலில் இருக்கும் பொட்டாசியம் சத்தானது பூக்கள் பூப்பதற்கு உதவுகிறது. வாழைப்பழத்தோலிற்கு மாற்றாக சாம்பல் தண்ணீரில் கரைத்து வேருக்கு ஊற்றி வரலாம். சாம்பலில் கால்சியம் கார்பனேட் மெக்னீசியம் பாஸ்பரஸ் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன.

காவாத்து/Pruning :

மல்லிகை செடியை பொறுத்தவரையில் காவாத்து செய்வது மிகவும் அவசியமானதாகும். அப்பொழுதுதான் செடி நிறைய பக்க கிளைகள் வைத்து, அடர்த்தியாகி நிறைய பூக்கள் பூக்கும். ஆண்டிற்கு இரண்டு முறை கவாத்து செய்வது அவசியம். மல்லிகை செடியானது பதினைந்து ஆண்டுகள் வரை வளர்ந்து பூக்கள் கொடுக்கும் தன்மை உடையது. மல்லிகை பூச்செடி மாசியில் இருந்து பங்குனி வரை, சித்திரையில் இருந்து ஆவணி வரை நல்ல பூக்கள் கொடுக்கும். கார்த்திகையில் இருந்து மார்கழி வரை தையிலிருந்து  மாசி வரை குறைவான பூக்கள் கொடுக்கும். மல்லிகைச் செடியில் மேல் நோக்கி வளரும் கிளைகளை வெட்டிவிட வேண்டும். மல்லிகைப்பூச் செடியை மாடித்தோட்டத்தில் வளர்க்கும் போது கண்டிப்பாக வெயில் படும்படியான இடத்தில் தான் வைக்க வேண்டும் அப்போதுதான் நிறைய பூக்கள் பூக்கும்.

மல்லிகை பூ செடி பதியம் போடுவது எப்படி?

மல்லிகைப்பூச் செடியை பதியம் போடுவது மிக  சுலபமானது. ஒருமுறை மல்லிகை பூச்செடி வாங்கி வீட்டில் வைத்து விட்டால் அதிலிருந்து நமக்குத் தேவையான  பூச்செடிகளை பதியம் போட்டு உருவாக்கலாம். பொதுவாகவே மல்லிகை பூச்செடி சாதாரணமாக கிளைகளை ஒடித்து மண்ணில் ஊன்றி வைத்து விட்டாலே துளிர்விட்டு வளர்ந்துவிடும். மல்லிகை பூ செடி பதியம் போடுவதற்கு அக்டோபர், நவம்பர் மாதங்கள் மிகவும் சிறப்பான மாதங்களாகும். மழை பெய்யும் போது பதியம் போட்டால் வெகுவிரைவில் துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும். மல்லிகை பூ செடி பதியம் போடும் போது தடிமனான கிளையாக பார்த்து, கத்தரித்து  பதியம் போடுவது சிறப்பான முறையாகும். கிளைகளை வெட்டி எடுக்கும் போது கிளைகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாதவாறு வெட்டி எடுப்பது நல்லது. கிளைகளை மண்ணில் ஊன்றும் போது நேராக வைக்காமல் 45டிகிரி சாய்வாக வைக்க வேண்டும். அப்போதுதான் தண்டுகளில் இருந்து ஏராளமான துளிர்கள் சுலபமாக வரும். மல்லிகை பூச்செடி பதியம் போடுவதற்கு  சில வழிமுறைகளை பின்பற்றி பதியம் போட்டால் நூறு விழுக்காடு அனைத்து கிளைகளும் துளிர்விட ஆரம்பிக்கும்.
  • பட்டைப்பொடி: பட்டைத்தூளில், தண்டுகளின் அடிப்பாகத்தை நனைத்து, பதியம் போட்டால் சுலபமாக  வேர்விட்டு துளிர்விட ஆரம்பிக்கும். 
  • சோற்று கற்றாழை:  சிறந்த வேர் வளர்ச்சி காரணியாக செயல்படுகிறது. மல்லிகை பூச்செடி தண்டுகளை சோற்று கற்றாழை ஜெல்லில் தடவி பதியம் போட்டால், சீக்கிரமாக வேறு வந்து துளிர்விட ஆரம்பிக்கும். தேன் ஒரு சிறந்த வேர் வளர்ச்சி ஊக்கியாகும். தேனை பயன்படுத்தியும் மல்லிகைப்பூ செடி பதியம் போடலாம்.
  • சின்னவெங்காயம்: கால்பாகம் சின்னவெங்காயம் எடுத்துக்கொண்டு அதனோடு, சோற்றுக்கற்றாழை ஜெல்லையும் சேர்த்து சிறிது பட்டை தூளை சேர்த்து அரைத்து, அதனுள் மல்லிகை  செடியின் தண்டுகளை நனைத்து, பதியம் போட்டால் சுலபமாக வேர்விட்டு துளிர்விட ஆரம்பிக்கும். இந்த கரைசலில் எங்கள் தோட்டத்தில் பதியம் போட்ட அனைத்து செடிகளும் வெகுவிரைவிலேயே துளிர்விட்டு வந்துவிட்டது. நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள். நூறு விழுக்காடு உங்களுக்கும் பயனளிக்கும்.
  • பதியம் போடுதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது: மல்லிகை பூ செடியின் தண்டுகளை பதியம் போடும் போது தண்டுகளின் மேலுள்ள பாகத்தை சூரிய வெளிச்சம் படாதவாறு மூடி வைப்பது நல்லது. அல்லது மாட்டு சாணத்தை தண்டுகளின் மேல் தடவி விட்டால் வெகு விரைவாக துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும். அல்லது பாலிதீன் கவர் கொண்டு மேல்பாகத்தை மூடி நிழலில் வைக்கலாம்.பதியம் போடும் போது ஒரு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். பதியம் போட்டு கண்டிப்பாக நிழலில் வைக்க வேண்டும் பதியம் போட்ட தண்டுகளில் அதிக ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பதியம் போட்ட பிறகு நன்றாக  துளிர்கள் வளர்ந்த பிறகுதான் எடுத்து மாற்றி வைக்க வேண்டும். பாலிதீன் கவரில் பதியம் போட்டால்  தொட்டிக்கு மாற்றி வைப்பது மிகவும் சுலபமாக இருக்கும். செம்மண்னோடு தேங்காய் நார் சேர்த்து பதியம் போடுவதால் வெகுவிரைவாக வேர்விட்டு துளிர் வர ஆரம்பிக்கும். வளர்ச்சி நன்றாக இருக்கும். சிறந்த வழிமுறையாகும்

மல்லிகை பூவின் பயன்கள்:

நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூவை ஒன்றிரண்டை உட்கொண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்க, மல்லிகைப்பூ நான்கு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரை குடித்து வர பூச்சிகள் எல்லாம் அழிந்து விடும். மல்லிகைப் பூக்களை கொதிக்கவைத்து அதை குடித்து வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பிரச்சினைகள் தீரும். மல்லிகைப் பூக்களை பெண்கள் தலையில் சூடுவதால் மன அழுத்தம், தலைவலி போன்ற பிரச்சினைகள் குறைந்துவிடும். அடிப்பட்ட வீக்கம், சுளுக்கு, நாள்பட்ட வீக்கம் இருந்தால் மல்லிகை பூவை அரைத்து வீக்கம் உள்ள இடத்தில் பூசி வந்தால் வீக்கங்கள் குணமடையும். மல்லிகைப்பூவை தேநீராக செய்து  எடுத்துக்கொள்வதால் புற்று நோய் குணமாகும். உடலில் உள்ள கொழுப்புகள் குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். பல் சொத்தையை குணமாக்கும். மல்லிகை பூக்களிலிருந்து தேனீர் தயாரிப்பது  மிகவும் சுலபமானது. மல்லிகைப் பூக்களை வெண்ணீரில் பத்து நிமிடங்கள், மூடியிட்டு ஊற வைத்தால் மல்லிகைப் பூ தேநீர் தயாராகிவிடும். மல்லிகைப்பூ தேநீரை, சாதாரண தேநீர்  அருந்துவது போல அருந்தலாம். மல்லிகையின் மொட்டுக்கள், குடல்புண், கட்டிகள், தோல் சம்பந்தமான நோய்கள், கண் சம்பந்தமான நோய்கள், எல்லாவற்றையும்  குணமாக்குகிறது. மல்லிகை பூக்கள் மஞ்சள் காமாலை, பாலியல் சம்பந்தமான நோய்கள் இவைகளை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 
தலைவலி அதிகமாக இருக்கும்போது மல்லிகைப் பூக்களால் ஒத்தடம் கொடுத்து வந்தால் தலைவலி நீங்கும். மல்லிகை பூக்களின் வேர்கள் படர்தாமரைக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. மல்லிகைப் பூக்கள் தாய்ப்பால் சுரப்பதை நிறுத்த உதவுகிறது. தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பாலை நிறுத்துவதற்கு ஊசி போட்டுக் கொள்வார்கள். ஆனால் இயற்கையாகவே தாய்ப்பால் சுரப்பதை நிறுத்த மல்லிகை மொட்டுக்களை நூறு கிராம் அளவு எடுத்து மார்பகங்களில் கட்டிக்கொண்டு இரவு வேலை முடிந்ததும், காலையில் எடுத்துவிடவேண்டும். மூன்று நாட்கள் செய்து வந்தால் தாய்ப்பால் சுரப்பதை நிறுத்தலாம். மல்லிகை பூச்செடியின் இலைகள் பல்வலியை போக்க பயன்படுகிறது. முக்கியமாக கருமுல்லை பூச்செடியின் இலைகள் சிறந்தது. பூச்செடியின் பூக்கள் மூல வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது தீராத தலைவலி இருக்கும் நபர்கள் மல்லிகைப் பூக்களில் ஒத்தடம் கொடுத்தால் தலைவலி நீங்கும். மல்லிகைப்பூ சாறு எடுத்து கால் ஆணி ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் கால் ஆணி குணமாகும். இந்தப் பதிவில் மல்லிகை பூச்செடி பற்றியும், வளர்ப்பு பற்றியும், பயன்களைப் பற்றியும் விரிவாக வாசித்து இருப்பீர்கள். மல்லிகை பூ செடியில் அதிக பூக்கள் பூக்க, சில டிப்ஸ்களையும், ஒருசில டிரிக்ஸ்களையும் இந்த காணொளியில் விளக்கமாக தெரிவித்திருக்கிறேன்.  கீழே உள்ள வீடியோ நிச்சயமாக உங்களுக்கு பயனளிக்கும். காணொளியை பாருங்கள். நன்றி!


Medicinal uses of herbs- Read this too and it will be useful for you.👇



Post a Comment

0 Comments