உடல் எடை குறைக்க வீட்டிலேயே தயாரிக்க கூடிய ஊட்டசத்து பானங்கள்
இன்றைய காலகட்டங்களில் உடல் எடை அதிகரிப்பிற்கு மூன்றில் ஒருவர் உள்ளாகின்றனர். முறையற்ற உணவு பழக்கவழக்கங்களும், உணவில் சேர்க்கப்படும் இரசாயன பொருட்களும், உடற்பயிற்சி இன்மையும் அதித ஊளைச்சதைக்கும், உடல்எடை அதிகரிப்பதற்கும் வழிவகுத்துவிடுகிறது. ஒருநாளைக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, அன்றைய நாளின் இயக்கத்திற்கு தேவையான கலோரிகள் போக, மீதமுள்ள கலோரிகள் எரிக்கப்படாமல் உடலில் சேர்ந்திருக்கும்பொழுது, அது கொழுப்பாக மாறுகிறது. இவ்வாறு தொடர்ந்து கொழுப்புகள் உடலில் சேரும்பொழுது, பல்வேறு உடல்நலக்கோளாறுகள், இதயநோய்கள், மாரடைப்பு, உயிரிழப்பு வரை நிகழ்கிறது. ஒருகாலத்தில் வெளிநாட்டினர் மட்டுமே அறிந்திருந்த சொல் பீரியார்ட்டிக் அறுவைசிகிச்சை, இப்பொழுது நம்முடைய நாட்டிலும் சாமானிய மக்களுமே உடல்எடையை கட்டுபடுத்த இத்தகைய உடல்எடை குறைப்பு அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இதனால் பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இல்லை. நம்முடைய தாத்தாபாட்டி காலங்களில் கைமருத்துவம் என்று வீட்டிலுள்ள பொருட்களையே பயன்படுத்தி, நோய்களை ஆரம்பத்திலேயே கட்டுபடுத்தி, ஆரோக்கியமான வாழ்கையினை வாழ்ந்தனர். உடல்எடை குறைப்பிற்கு விளம்பரங்களில் காட்டப்படும் பெல்ட் போன்ற சாதனங்கள், மாத்திரைகள், எடைகுறைப்பு அறுவைசிகிச்சைகள் இவற்றையெல்லாம் தவிர்த்து வீட்டிலேயே உடல்எடை குறைப்பிற்கென உணவுகளை தயாரித்து எடுத்துக்கொள்ளலாம். உடல்எடை குறைப்பதற்கான எளிய ஐந்து பானங்களை பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
- நெல்லிக்காய் எலுமிச்சை பழ சாறு/ lemon Amla Juice
- கொள்ளு சூப்/Horse gram soup
- வெண்பூசணிச்சாறு/White Pumkin Juice
- வாழைத்தண்டுச்சாறு/Plantain stem juice
- பார்லி சூப்/ Barley soup
Weight loss drinks |
நெல்லிக்காய் எலுமிச்சை பழ சாறு:
Iemon Amla Juice
தேவையான பொருட்கள்:
- பெரியநெல்லிக்காய்- 1
- எலுமிச்சைபழம்- 1சிறியது.
- தேன்- 1/2 ஸ்பூன்
செய்முறை:
பெரிய நெல்லிக்காய் ஒன்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் அரை கிண்ணம் அளவு இளம் சூடான தண்ணீர் கலந்து அரைத்துகொள்ளவும். ஒரு வடிகட்டியில் நெல்லிக்காய் சாறை வடிகட்டி எடுத்துகொள்ளவும். இதனுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து கொள்ளவும். ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து சேர்த்துக்கொள்ளவும். தேன் இல்லையென்றால் கல்உப்பு சிறிது சேர்த்துக்கொள்ளவும். உடல்எடை குறைப்பதில் காலம்காலமாக மிதமான சூடான தண்ணீரீல் தேனும், எலுமிச்சைசாறும் கலந்து அருந்துவது மிகவும் பரவலாக அனைவரும் அறிந்திருப்பதே. ஆனால் காலையில் வெறும்வயிற்றில் எலுமிச்சை சாறை கலந்த தண்ணீரை அருந்துவது, அவ்வளவு சரியல்ல; அதனால் நெல்லிக்காய், கறிவேப்பிலை இவற்றில் எதாவது ஒன்றை சேர்த்து கொள்வது நல்லது. வாரமிருமுறை நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவதால் முடிநரைத்தல், இரத்தசோகை, முறையற்ற மாதவிடாய், உடல்பருமன் போன்ற பல நோய்களும் குணமாகிறது. நெல்லிக்காய் அற்புத மருத்துவபயன்களை கொண்டது. ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் நெல்லிக்காயில் அதிகளவு விட்டமின் சி சத்து உள்ளது. இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அழித்து வெளியேற்றப்படுகிறது. உடல்எடையை கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. நெல்லிக்காய், எலுமிச்சைபழ சாற்றினை காலையில் வெறும்வயிற்றில் எடுத்துக்கொள்வது சிறந்தது. இதன்பின்னர் உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம்.
கொள்ளு சூப்/Horse gram soup:
தேவையான பொருட்கள்:
- கொள்ளு- கால் கப்
- குடம்புளி-1
- கல்உப்பு- சிறிதளவு
- மிளகுத்தூள்- ஒரு சிட்டிகை
- சீரகத்தூள்- ஒரு சிட்டிகை
செய்முறை:
கொள்ளு பருப்பை நன்றாக சுத்தம் செய்து முதல்நாள் இரவே நல்ல தண்ணீரில் ஊறவைத்து விட வேண்டும். அதனுடன் குடம்புளியையும் இரண்டு மூன்றாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும். குடம்புளி என்பது கேரளாபுளி. தமிழ்மருந்து கடைகளிலும், இயற்கை பேரங்காடி கடைகளிலும் இப்பொழுது சூப்பர் மார்கெட்களிலும் கிடைக்கிறது. சாதாரணபுளியை விட விலை சற்றே அதிகம். ஆனால் அதைவிட ஆரோக்கியம் ரொம்பரொம்ப அதிகம். குடம்புளியில் எங்கள் ஊரில் மீன்குழம்பு செய்வார்கள் அற்புதமான சுவையாக இருக்கும். கன்னியாகுமரி பக்கங்களில் இந்தமீன் குழம்பு மிகவும் பிரசித்தம் பெற்றது. இரவு முழுவதும் ஊறிய கொள்ளு தண்ணீரை அப்படியே, காலையில் வெறும்வயிற்றில் அருந்தலாம். அல்லது வேகவைத்தும் சூப்போல செய்து பயன்படுத்தலாம். இரவு முழுவதும் ஊறவைத்த தண்ணீரோடு சேர்த்து கொள்ளு வேக வைக்கவேண்டும். கொள்ளுபருப்பு நன்றாக வெந்தபின்னர், தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். அதனுடன் மிளகு மற்றும் சீரகத்தூள், தேவையான உப்பு கலந்து மிதமான சூட்டில் அருந்தலாம். சிலர் வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து சூப் தயாரிப்பார்கள். ஆனால் இந்தசுவையே நன்றாகதான் இருக்கும். டயட்டில் இருப்பவர்களுக்கு தேவையான ஆற்றலை அளித்து, சரியான முறையில் உடல்எடையை குறைக்க உதவுகிறது
கொழுத்தவனுக்கு கொள்ளு; எளைத்தவனுக்கு எள் என்றொரு பழமொழி கிராமப்புறங்களில் உள்ளது. உடல்எடை குறைப்பில் கொள்ளு பருப்பின் பங்கினை பற்றி இதற்குமேல் நான் விளக்கம் தர தேவையே இல்லை, ஏனெனில் இந்தபழமொழி ஒன்றே போதும். அந்தளவிற்கு உடல்எடை குறைப்பில் கொள்ளு பருப்பின் பங்கு இன்றியமையாதது. அதிலும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது, ஒரே மாதத்திலே நீங்கள் பலனை உணர்வீர்கள். இடுப்பை சுற்றி சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, தட்டையான வயிற்றை கொடுக்கிறது. ஊளைச்சதையை கரைக்கிறது. அதனால் உடல்எடை குறைக்க விரும்புபவர்கள் கொள்ளை சுண்டல் போலவோ, கொள்ளு பொடி, கொள்ளுரசம், கொள்ளுசூப் இப்படி எதாவது ஒருவகையில் வாரம் இரண்டுமுறை எடுத்து கொள்ளலாம்.
Weight loss drinks |
வெண்பூசணிச்சாறு:
White Pumkin Juice
தேவையானபொருட்கள்:
- வெள்ளைபூசணி/சாம்பல் பூசணி- 150 கிராம்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வெள்ளை பூசணியின் மேல் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிடவும். பூசணிக்காயின் சதைப்பகுதியை மட்டும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒருமிக்ஸி ஜாரில் நறுக்கிய துண்டுகளை போட்டு, அதனுடன் அரை கப் தண்ணீர் மற்றும், அரைஸ்பூன் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். ஒரு வடிகட்டி வைத்து பூசணிக்காயின் சாறை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ளவும். இந்த ஜூஸ் உடன் வேறொன்றுமே சேர்க்கத்தேவையில்லை. மிகவும் சுவையாக, வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும். காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள சிறந்த பானமாகும். வாரம் மூன்றுமுறை இந்த ஜூஸ் நீங்கள் உடல்எடை குறைப்பிற்கென்று எடுத்து கொள்ளலாம். குறைவான கலோரிகளை கொண்டது. வைட்டமின் சி, இ, ஏ போன்ற விட்டமின்கள் அதிகமாய் உள்ளது. கண்பார்வையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. எலுமிச்சாறு போன்று உடல் எடை குறைப்பிற்காக காலை வெறும் வயிற்றில் எடுத்து கொள்வது அல்சர் போன்ற நோய்களை கூட ஏற்படுத்திவிடும். ஏனெனில் எலுமிச்சை சாறு சிட்ரிக் அமிலம் கொண்டது. ஆனால் வெண்பூசணி அவ்வாறில்லை. அல்சர் போன்ற நோய்களை குணமாக்கும் அருமருந்து. உடல்எடை குறைவதோடு உடலில் உள்ள, கெட்ட நீரை வெளியேற்றிவிடுகிறது. வெண்பூசணி திருஷ்டி சுற்றி, சாலைகளில் உடைப்பதை விட, சாம்பாராகவோ, கூட்டாகவோ உணவாக எடுத்துக்கொள்ளும்போது, நல்ல ஆரோக்கியத்தோடு நீண்டநாள் வாழமுடியும்.
வாழைத்தண்டுச்சாறு
Plantain stem juice:
தேவையானபொருட்கள்:
- வாழைதண்டு- 5 சென்டிமீட்டர் அளவு அல்லது பொடியாக நறுக்கியது, ஒருகைப்பிடி அளவு.
- உப்பு- தேவையான அளவு
செய்முறை:
வாழைதண்டிலிருந்து நாரினை நீக்கிய பின்னர் மோரில் சிறிதுநேரம் ஊறவைத்து கொள்ளவும். வாழைதண்டோடு, சிறிது உப்புத்தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, ஒரு மிக்ஸிஜாரில் அரைத்து கொள்ளவும். வடிகட்டி ஒன்றில் வாழைதண்டின் சாறினை மட்டும் வடித்து எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது எளிமையான வாழைதண்டு ஜூஸ் தயாராகிவிட்டது. வாழைதண்டு ஜூஸூடன் இஞ்சி சாறு எலுமிச்சைசாறும் கலந்து அருந்தலாம். வாழைதண்டை தேர்ந்தெடுக்கும் பொழுது இளம் குருத்தாகவோ, நடுபாகமாகவோ இல்லாமல், அடிதண்டாக தேர்வு செய்ய வேண்டும். அத்தகைய வாழைதண்டுதான் சிறந்தது. சிறுநீரகக்கல், சிறுநீரகம் தொடர்பான நோய்களை குணமாக்கவல்ல சிறந்த ஸ்பெஷலிஸ்ட் வாழைதண்டு. அதுமிட்டுமில்லாமல் தொடர்ச்சியானஇருமல், கர்ப்பப்பை நோய்கள், காதுவலியையும் குணமாக்குகிறது. உடலில் சேரும் நச்சுக்களை அகற்றி உடலை தூய்மையாக்குவதோடல்லாமல், உடல் எடை குறைப்பில் மிகமுக்கிய பங்காற்றுகிறது. வாழைத்தண்டில் உள்ள நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உடலில் உடலில் உள்ள அதிகப்படியான தசைகளை அகற்றி உடல் இளைக்க உதவும். வாரம் இரண்டுமுறை காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சிறந்த பலனை தரும்.
பார்லி சூப்/ Barley soup:
தேவையான பொருட்கள்:
- பார்லி- ஒரு கப்
- கேரட்- சிறிய துண்டு
- பீன்ஸ்- சிறிய துண்டு
- பச்சை சோளம்- சிறிதளவு
- காலிபிளவர்- 50 கிராம் அல்லது
- ப்ராகோலி-50கிராம்
- கொத்தமல்லி தழை- சிறிதளவு
- புதினா தழை- சிறிதளவு
செய்முறை:
பார்லியை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும். காலையில் ஊறவைத்த தண்ணீரை கீழே கொட்டிவிடவும். பார்லியை நன்றாக கழுவி கொள்ளவும். அதன் பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அதனுடன் பொடியாக நறுக்கிய கேரட் துண்டுகள், பீன்ஸ் , காலிபிளவர் ,சோளம் அனைத்தையும் சேர்த்துகொள்ளவும். சிறிய குக்கர் ஒன்றில் பார்லி மற்றும் காய்கறிகள் கலவையை சேர்த்து இரண்டு விசில் வைத்து கொள்ளவும். காலிஃப்ளவர்க்கு பதிலாக ப்ராக்கோலியையும், உங்களுக்கு விருப்பமான பிற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு விசில் முடிந்து, பிரஷர் நீங்கிய பின்னர், காய்கறிகள் கலவையை வடிகட்டி எடுத்து கொள்ளவும். அதனுடன் சிறிது புதினா, கொத்தமல்லிதழை மிளகுதூள், உப்புத்தூள், சீரகத்தூள் சேர்த்து காலை அல்லது மாலை வேளைகளில் எடுத்துக்கொள்ளலாம். அல்லது தண்ணீரை வடிகட்டாமல் காலை உணவாக நீரிழிவு நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
பார்லி அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் இரத்தகொழுப்பை குறைக்கிறது. செரிமானத்தை சீர்படுத்தி உடல்எடையை குறைக்கிறது. பார்லியில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. காய்ச்சல் சளி இருமல் இதனை குணமாக்கவல்லது. பார்லியை வாரம் மூன்றுமுறை உணவாக எடுத்துவந்தால் பித்தப்பைகற்கள் உருவாகாமல் பாதுகாக்கிறது. பார்லி சூப் மிகுந்த சுவை கொண்டது. பொதுவாக உடல் எடை குறைப்பில் ஈடுபடுபவர்கள் சுவையான உணவுகளையும் விருப்பமான உணவுகளையும் தவிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆனால் பார்லி கஞ்சி மிகவும் சுவையுடையது. ஒருமுறை உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது திரும்பத் திரும்ப சுவைக்கத் தோன்றும். தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
உடல் எடை குறைப்பில் கவனிக்கவேண்டியவை:
- உடல் எடை குறைப்பில் ஈடுபடும்பொழுது முதலில், ஒருவாரத்தில், ஒரு நாளில், ஒரு மாதத்தில் உடல்எடையை குறைத்துவிடலாம் என்ற விளம்பரங்களை தவிர்த்துவிடுங்கள். ஒருவாரத்தில் ஏழுகிலோ குறைப்பது என்பதெல்லாம் மிகவும் தவறான காரியம். உடல் எடையை மிகவும் மெதுவாகதான் குறைக்க வேண்டும். அப்பொழுதுதான் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.
- உடற்பயிற்சி இல்லாமல் உணவின் மூலமே உடல்எடையை குறைத்துவிடலாம் என்றெண்ணி சிலர் பட்டினி கிடப்பார்கள். இதனால் உடலின் சக்தி குறைந்து, அல்சர் வயிற்றுபுண், அனீமியா போன்ற நோய்கள் தான் ஏற்படும். உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடை குறைப்பது என்பது சாத்தியமற்றது. அவ்வாறு ஆரம்பத்தில் குறைத்தாலூம், பின்னர் இரண்டுமடங்காக அதிகரித்துவிடும். பிள்ளையார் பிடிக்கபோய் குரங்காக மாறிவிடும் கதைதான். அதனால் உடற்பயிற்சி இல்லாமல் உணவின் மூலம் உடல்எடையை குறைக்க முடியும் என்ற கருத்தை நிராகரித்துவிடுங்கள்.
- நடைபயிற்சியை போல ஒரு சுலபமான, மிகவும் பயன்தரக்கூடிய உடற்பயிற்சி ஒன்றுமே இல்லை எனலாம். கடினமான உடற் பயிற்சியை மேற்கொள்ள இயலாதவர்கள் நடைபயிற்சியை தாராளமாக மேற்கொள்ளலாம். அதிலும் எட்டு வடிவ நடைபயிற்சி மிகவும் பயனளிக்கும்.
- முதலில் காலையில் பத்துநிமிடங்கள் உடற்பயிற்சி என ஆரம்பித்து, உடற்பயிற்சி நேரத்தை அதிகரித்து கொள்ளுங்கள். மாலைவேளையிலும் அளவோடு உடற்பயிற்சியில் ஈடுபடலாம். முதல் நாளிலோ, முதல்வாரத்திலோ அதிகநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டாம். பின்னர் உடற்பயிற்சி நேரத்தை அதிகரித்துகொண்டே செல்லலாம்.
- டயட் இருக்க ஆரம்பித்துவிட்டால், உடல் எடை குறைப்பில் இறங்கிவிட்டால் ஓரேடியாக பிடித்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று அர்த்தமில்லை. வாரம் ஒருமுறை உடற்பயிற்சிக்கு விடுமுறை அளித்து, பிடித்த உணவுகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
- அதிகவிலை கொண்ட உடற்பயிற்சி சாதனங்கள், ஜூம்மிற்கு சென்று சிறந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலில் தான் உடல்எடை குறைக்க வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே மாடிபடிக்கட்டுகள் ஏறி இறங்குதல், நடைபயிற்சி, நீச்சல், ஸ்க்கிப்பிங், ஜாக்கிங் போன்ற பயிற்சிகளும் சிறந்த பலனைக் கொடுக்கும்.
- உடல்எடை குறைக்கும் மருந்து, மாத்திரைகள், லேகியம், சிகிச்சை முறைகள் இவற்றையெல்லாம் தவிர்த்து கொள்ளு, எலுமிச்சை, தேன் போன்ற வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டே உடல்எடையை கட்டுபடுத்தலாம்.
- முதலில் உங்களுக்கு மன உறுதி வேண்டும். என்னால் முடியும், என்ற நம்பிக்கை வேண்டும். எவ்வளோ முயற்சிகள் செய்து பார்த்துவிட்டேன். ஆனால் உடல் எடையை குறைக்கவே முடியவில்லையே, என்று மனவருத்தம் கொள்ளாமல் உடற்பயிற்சி முறைகளில் நீங்கள் செய்யும் தவறு என்ன, என்பதை யோசித்து பாருங்கள்.
- குழந்தை பிறந்தபின்னர், பெண்களுக்கு நேரமே கிடைப்பதில்லை. குழந்தை பராமரிப்பு, குடும்ப பொறுப்புகள் என்று மிகவும் பிஸியாகி உடல்எடை எக்கச்சக்கமாக அதிகரித்துவிடுகின்றனர். திருமணத்திற்கு முன்னர் ஸ்லிம்மாக அழகாக இருந்தேன்; இப்பொழுது இருபதுகிலோ அதிகரித்துவிட்டேன். உடல் எடையை குறைக்க முடியவில்லை, என் அழகே போய்விட்டது, என்று என்னிடம் புலம்புபவர்கள் அதிகம். உடல்எடை அழகோடு தொடர்புடையது என்பதை விட, ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. எனவே நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
Also Read :
0 Comments