Translate

ரோஜா செடியில் அதிக பூக்களை பெற 5-டிப்ஸ்கள்

 Simple (secret) "5-Tricks" To keep the Rose Plant in Bloom continuously.


Sudagar krishnan channels
To get more flowers on the rose plant


   ரோஜா செடியை பொருத்தவரையில் ஆண் பெண் என்ற வித்தியாசமெல்லாம் இல்லாமல் அனைவருமே ரோஜா பூக்களை ஆசையோடு வளர்க்கிறார்கள். ரோஜா தாவரம் ஆசியா கண்டத்தை தாயகமாக கொண்டது. ரோஜா பூக்கள் கிட்டதட்ட 700-வகைகளுக்கும் மேல், பல நூறு அழகிய வண்ணங்களில் காணப்படுகிறது. ரோஜா என்ற சொல் தெற்கு இத்தாலியின் ஆஸ்கன் மொழியிலிருந்து பெறப்பட்ட வார்த்தையாகும். ரோஜா பூக்கள் அழகியல் சாதனங்கள் தயாரிப்பிலிருந்து ஆண்மை குறைபாடு வரை பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஜா பூக்கள் நறுமணத்திற்காகவும், வண்ணத்திற்காகவும், அழகிற்காகவும் இப்படி பல்வேறு காரணங்களுக்காக பலரால் விரும்பி வளர்க்கப்படுகிறது. நர்சரி கடைகளில் கொத்துகொத்தாக பூக்கள் பூத்திருப்பதை பார்த்து ஆசையோடு வீட்டிற்கு கொண்டு வந்தால், அதிக பட்சம் 10-நாட்களிலே இறந்துவிடும். நான் கேள்வி பட்டிருக்கிறேன்., சிலர் ரோஜா செடி வளர்க்கின்ற ஆசையே போய்விட்டது என்று வருத்தப்பட்டு கூறுவார்கள். ரோஜா தாவரங்கள் வளர்ப்பதில் சிலவற்றை மட்டும் நுணுக்கமாக கவனித்தால் போதும். ரோஜா செடிகளை அல்ல; ரோஜா தோட்டமே நீங்களும் அமைக்கலாம். நான் ரோஜா செடிகளை பற்றி கிட்டதட்ட 100-வீடியோக்களை பதிவிட்டிருக்கிறேன். உதாரணத்திற்கு சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்.

  • பராமரிப்பு இல்லாமல் அதிக பூக்கள் பூக்கும் ஐந்து ரோஜா செடிகள்.
  • ரோஜா செடியை தாக்கும் இலைபுள்ளி நோயை கட்டுபடுத்துவது எப்படி?
  • ரோஜா செடிகளை பதியம் போடுதல்.
  • ரோஜா செடிகளுக்கான செலவில்லாத 5-இயற்கை உரங்கள்.

 என்னுடைய சேனலின் ப்ளே லிஸ்டில் 👇

SUDAGAR KRISHNAN YOUTUBE CHANNEL உங்களுக்கு தேவையான வீடியோக்களை தேடிப் பார்த்து பயனடையுங்கள்.

இன்றைய கட்டுரையில் ரோஜா செடிகளில் தொடர்ச்சியாக, அதிக பூக்களைப் பெற சுலபமான, பயனுள்ள 5-டிப்ஸ்களை (டிரிக்ஸ்களை) பற்றி தெரிந்து கொள்வோமா?

Tips-1

ரோஜா செடிகளை எப்படி பார்த்து வாங்குவது ?

     ரோஜா செடியை தேர்ந்தெடுத்து வாங்குவதில் தான், அதிகம் பேர் தவறு செய்கின்றார்கள். தொடர்ந்து ரோஜா செடியில் இருந்து பூக்கள் பெறுவதற்கு நம்முடைய காலநிலைக்கு உகந்தது போல, நம்முடைய காலநிலையில், வளரக்கூடிய ரோஜா செடிகளாக பார்த்து வாங்க வேண்டும். உதாரணமாக நாட்டு ரோஜா, பன்னீர் ரோஜா, பட்டன் ரோஸ் என்றழைக்கப்படும் மினியேச்சர் ரோஜா வகைகள் இவைகளெல்லாம் நல்ல வெயிலை தாங்கி வளரக்கூடிய ரோஜா செடிகள். காஷ்மீர் ரோஜா, செவன்டேஸ் ரோஜா - இவையும் வெயிலில் நன்றாகவே பூக்கக்கூடிய ரோஜா செடிகள். ரோஜாச் செடியை வாங்கும் போது அதிக கிளைகள், தண்டுகள், பெரிய தொட்டியில் இருக்கும் ரோஜா செடிகளை பார்த்து வாங்க வேண்டும். குறைந்த விலைக்கு விற்கிறார்கள் என்று ரோஜா செடியை வாங்கி வந்து வீட்டில் நடவு செய்தால், அந்த ரோஜா செடி வேர் பிடித்து வளர்வதற்கு மிகவும் சிரமப்படும்.  சில சமயங்களில் இறந்து போவதும் உண்டு. நர்சரி கடையில் ரோஜா செடியை வாங்கும்போது, ரோஜா செடி இலைகளில் நோய் தாக்குதல், பூச்சித் தாக்குதல் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, புதிய துளிர்கள் அதிகம் காணப்படும் ஆரோக்கியமான செடிகளாக வாங்க வேண்டும்.

Tips-2

ரோஜா செடிக்கு மண் கலவை தயார் செய்தல்:

    காய்கறி செடிகளோ, பிற செடிகள் போல இல்லாமல் ரோஜா செடிகளுக்கென்றே, பிரித்தியேகமாக மண் கலவை தயார் செய்ய வேண்டும். ரோஜா செடிகள் பெரும்பாலும் செம்மண்ணில் தான் நன்றாக வளர்ந்து நிறைய பூக்களை பூக்கும். முடிந்தவரை செம்மண்ணில் மண் கலவை தயார் செய்ய வேண்டும். செம்மண்ணோடு மண்புழு உரமும் சேர்த்தால், இன்னும் நிறைய பூக்களை பெறலாம். வெயில் காலத்தில் மண்புழு உரங்கள் ரோஜா செடிகளுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. செம்மண்ணில் சரிவிகித சத்துக்கள் அடங்கியுள்ளது. செடிகளுக்கு தேவையான பலவிதமான நுண்ணூட்டச் சத்துக்களும் செம்மண்ணில் இருக்கின்றது. மேலும் மண்புழு உரத்தில் செடிகொடிகளை வெயில் காலத்தில் இருந்து பாதுகாக்க கூடிய நுண்ணூட்ட சத்துக்கள் ஏராளமாக உள்ளன. ரோஜா செடிக்கு மண் கலவை தயார் செய்யும் போது செம்மண், மண்புழு உரம் கலந்த கலவையில் தயார் செய்து செடிகளை வைத்தால் நிறைய பூக்களை சுலபமாக பெறலாம்.

Tips-3

ரோஜா செடியை நடவு செய்வது எப்படி?

   ரோஜா செடியை நர்சரி கடையிலிருந்து வாங்கி வந்த பிறகு உடனடியாக நடவு செய்யக் கூடாது. ஏனெனில், நர்சரியில் ஒரு காலநிலையில் ரோஜா செடிகள் இருக்கும். நம்முடைய வீட்டிற்கு எடுத்து வந்த பின்னர், கால நிலை மாறுவதால் செடிக்கு அதிக அழுத்தம்{Stress} ஏற்பட்டு இறக்க நேரிடும். ரோஜா செடியை வாங்கி வந்து, மூன்று நாட்கள் நம்முடைய வீட்டின் நிழற்பாங்கான இடத்தில் வைத்திருந்து, பின்னர், நடவு செய்ய வேண்டும். ரோஜா செடியை செழிப்புடன் வளர்ப்பதற்கு மிகச் சரியான தொட்டி எதுவென்றால் மண்தொட்டிதான். முடிந்தவரை மண் தொட்டியில் செடிகளை வைத்தால் இன்னும் அதிக பூக்களை பெற முடியும். மண் தொட்டி இல்லை என்றால், பிளாஸ்டிக் தொட்டியில் வைக்கலாம். பிளாஸ்டிக் தொட்டியில் வைக்கும்போது வர்ணம் பூசி வைப்பது சிறந்தது. இல்லையென்றால் கோடை காலங்களில், தொட்டியில் பாசி பிடித்து ரோஜா செடிகளின் வேர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். செடியை நடவு செய்வதற்கு முன், வேர்ப்பகுதியை கொஞ்சம் அழுத்தம் கொடுத்து வேருக்கு பாதிப்பில்லாமல் நடவு செய்ய வேண்டும். முடிந்தவரை மாலை வேளையில் ரோஜா செடிகளை நடவு செய்வதது சிறந்தது.


Sudagar krishnan channels

To get more flowers on the rose plant

Tips-4

ரோஜா செடியில் பூக்களை எப்படி பறிக்க வேண்டும்?

  இந்த தலைப்பை பார்த்ததும், பூ பறிப்பதற்கும், பூக்கள் அதிகம் பூப்பதற்கும் என்னடா சம்பந்தம் இருக்கிறது!? ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஜீவா ஓடும்?? என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.
ஒரு பூவை நீங்கள் கத்தரிக்கும் தண்டிலிருந்து தான் அடுத்தடுத்த பூக்களுக்கான தண்டுகள் உருவாகிறது என்பது மறுப்பதற்கில்லை அல்லவா?
  ரோஜா செடியில் இருந்து பூக்களை கவனமாகப் பறிக்க வேண்டும். ரோஜா பூக்கள் பூத்திருக்கும் தண்டுகளில் கீழ்ப்பகுதியில் இரண்டு இலை, மூன்று இலை, நான்கு இலை, என இருக்கும். அதில் நான்கு இலை எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடத்தில் ரோஜா பூக்களை கத்தரித்து பறிக்கவேண்டும். இப்படி ரோஜா பூக்களை பறிப்பதினால் அந்த தண்டுகளில் இருந்து நிறைய துளிர்கள் வந்து ஒவ்வொரு துளிர்களிலும் மொட்டுக்கள் அதிகம் வந்து, நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். பூக்களை பறித்த இடத்தில் மஞ்சள் தண்ணீரில் குழைத்து வைப்பதினால் தண்டுகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் துளிர்கள் சுலபமாக வர ஆரம்பிக்கும். ரோஜா செடிகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை எப்சம் சால்ட் ஒரு தேக்கரண்டி வீதம் வேர்ப்பகுதியில் போட்டு கிளறி விட்டு தண்ணீர் ஊற்றி வந்தால் அதிக பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். எப்சம் சால்ட்டில் உள்ள மக்னீசியம் சத்து நிறைய பூக்கள் பூப்பதற்கு உதவி செய்கிறது.

Tips-5

ரோஜா செடியை எந்த இடத்தில் வைப்பது?

   ரோஜா செடியை வைக்கும் இடத்தை சரியான இடமாக பார்த்து தேர்வு செய்ய வேண்டும். அதிக வெயில் படும்படியான இடத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும். ரோஜா செடி காலைவெயிலும் மாலைவெயிலும் இருந்தாலே போதுமானது. குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது வெயில் படும்படியான இடத்தில் வைத்தால் அதிக பூக்கள் பூக்கும். மழைக்காலங்களில் ரோஜா செடியை உச்சி வெயிலில் வைத்தால் இன்னும் அதிக பூக்களை பெறலாம். ரோஜா செடிக்கு வெயில் மிகவும் பிடிக்கும். ஆனால் அதிக வெயில் பிடிக்காது. எனவே குறைந்த வெயில் இருக்கும்படியான இடத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது. 
ரோஜா தாவரங்களை வளர்ப்பதில் முக்கியமான பல தகவல்களை இந்த பதிவில் நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்திருக்கும் என எண்ணுகிறேன். இது போல சிறப்பான இன்னொரு பதிவில் உங்களை சந்திக்கிறேன். நன்றி!!


ஆசிரியர்:

திரு.சுதாகர்கிருஷ்ணன்

இயற்கை விவசாயி






Also Read:







Post a Comment

0 Comments