Translate

Onion Peel fertilizer for Plants

 வெங்காய தோல் கரைசல்


Sudagarkrishnanchannels
Onion Peel Fertilizer for Plants 

   இன்றைய காலகட்டங்களில் மாடித்தோட்டம் அமைப்பது என்பது எல்லோருடைய வாழ்விலும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஏனெனில் கடைகளில் கிடைக்கும் காய்கறி பழங்களில் பெரும்பான்மையானவை பூச்சிமருந்துகள் தெளிக்கப்பட்டு,. ஊசிகள் மூலம் செய்கை நிறங்கள் போன்ற பல்வேறு இரசாயனங்கள் கலக்கப்படுவதால் இயற்கை வாழ்வியலின் பக்கம் பயணிக்க துவங்கிவிட்டோம்.   நம்முடைய முன்னோர்கள் அனைவரும் அக்காலத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். காலம் மாற, மாற மக்கள் தொகை பெருக்கத்தாலூம், வறுமை வறட்சியாலூம் 1966 இல் பசுமைப் புரட்சி ஏற்படுத்தப்பட்டது. இதனால் அந்நிய நாடுகள் இரசாயன உரங்களையும், இரசாயன பூச்சிக்கொல்லிகளையும்  நமது நாட்டின் மீது திணித்ததால், மண் மலடாகி நுண்ணுயிர்களுக்கும் மண்புழுக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தின. பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு இரசாயனம் கலந்த பூச்சிக்கொல்லியை தெளித்து சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்,  மனிதர்களுக்கு கொடிய நோய்களும் வந்து, ஆரோக்கியமற்ற சூழ்நிலை ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துவிட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள் இயற்கை விவசாயத்தின் நன்மைகளை எடுத்துரைத்து கொஞ்சம் கொஞ்சமாக மக்களை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற ஆரம்பித்தனர்.

  இப்பொழுது இளைஞர்களிடையே பெருமளவு விழிப்புணர்வு ஏற்பட்டு இயற்கை விவசாயத்துக்கு மாறி கொண்டே வருவது மிகவும் ஆறுதலான விஷயம். இந்த இயற்கை விவசாயத்தின் ஒரு பகுதிதான் மாடித்தோட்டம். இப்போது எல்லாருடைய வீட்டிலும் சிறியதான மாடித்தோட்டம் அமைத்து அவர்களுக்கு தேவையான காய்கறிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்து வருகின்றனர். ஆனாலும் மாடித்தோட்டம் அமைத்து நல்ல அறுவடை எடுப்பது என்பது சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. ஏனென்றால் தரைதளத்தில் செடிகளை வைப்பதற்கும் மாடித்தோட்டத்தில் செடிகளை வைப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மாடித் தோட்டத்தில் செடிகளை வைத்து வளர்ப்பது என்பது ஒரு கைக்குழந்தையை வளர்ப்பதற்கு சமமாகும். தரையில் செடிகளை வைத்து வளர்ப்பது என்பது நன்றாக வளர்ந்த குழந்தையை வளர்ப்பதற்கு சமமாகும். கைக் குழந்தையை வளர்க்கும்போது குழந்தைக்கு தேவையான அனைத்தையும் நாம்தான் தெரிந்துகொண்டு புரிந்துகொண்டு கொடுக்கவேண்டும். அதுபோலதான் மாடித்தோட்டத்தில் செடிகளுக்கு தேவையான சத்துகளையும் பூச்சி விரட்டிகளை நாம்தான் தெரிந்துகொண்டு புரிந்துகொண்டு கொடுக்க வேண்டும். தரைதளத்தில் வளரும் செடிகள் தனக்குத் தேவையான சத்துக்களை தானாவே எடுத்துக்கொண்டு வளர ஆரம்பிக்கும்.

  இன்றைய பதிவில் மாடித்தோட்டத்தில் செடிகளுக்கு தேவையான உரங்களை நம்முடைய வீட்டில் தேவையில்லை என்று தூக்கி வீசி எறியும், வெங்காய தோலை வைத்து  

↠உரங்களையும்

↠↠பூச்சி விரட்டியையும், 

↠↠↠ரூட்டிங் ஹார்மோனையும்

 தயாரித்து, அதனை  செடிகளுக்கு எவ்வாறு பயன்படுத்தலாம், என்பதைப் பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

வெங்காய தோலில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி?

   வெங்காய தோலிலிருந்து சக்திவாய்ந்த உரங்களை இரண்டு எளிய முறைகளில்  தயாரிக்கலாம்.

Method -1

  பாத்திரம் ஒன்றில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்துகொள்ளவும். வெங்காயத் தோலை  கைப்பிடி அளவு அதில் போட்டு, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அல்லது நீங்கள் எடுத்துக்கொள்ளும் வெங்காயத்தோல் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடலாம். கொதிக்க வைக்கும் போது அதிக வெப்பத்தில் இல்லாமல் குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும். வெங்காயத் தோல் நன்றாக கொதித்து,  சாறு அனைத்தும் தண்ணீரில் இறங்கியவுடன் தீயை அணைத்துவிட்டு ஆறவைத்து  வடிகட்டி அதிலிருந்து கிடைக்கும் வெங்காய தண்ணீரோடு சம அளவு தண்ணீர் கலந்து செடிகளின் வேருக்கு ஊற்றி வரலாம். அதாவது வெங்காய தண்ணீர் ஒரு மடங்கு, அதனுடன் தண்ணீர் ஒரு மடங்கு கலந்து செடிகளுக்கு கொடுக்கலாம். இதனை செடிகளுக்கு 15 நாட்கள் இடைவெளியில் கொடுக்கலாம். இத்தகைய செய்முறையில் தயார் செய்யப்படும்  வெங்காயத் தோல் கரைசலை ஒரு மாதம் வரை சேமித்து வைத்திருந்து உபயோகப்படுத்தலாம். கரைசலை நன்றாக மூடி வைத்து உபயோகப்படுத்த வேண்டும் இல்லை என்றால் புழுக்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

Sudagarkrishnanchannels
Onion Peel Fertilizer for Plants 

Method -2

  கைப்பிடி அளவு அல்லது தேவையான அளவு வெங்காய தோலை  எடுத்துக் கொள்ளவும். மூடியுடன் கூடிய ஒரு பாட்டிலில், எடுத்து வைத்திருக்கும் வெங்காயத் தோலை போட்டு, அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து, 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். (வெங்காயத்தோல் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்)  ஊற வைக்கும்போது காலையும் மாலையும் கலக்கி விடுவது நல்லது. மேலும் நிழற்பாங்கான இடத்தில் வைப்பது சிறந்தது. வெங்காய தோலை ஊற வைக்கும்போது மூடியுள்ள பாத்திரத்தில் ஊறவைத்தால் புழுக்கள் பூச்சிகள் வராமல் இருக்கும். 24 மணி நேரம் கழித்து பார்த்தால் வெங்காயத்தில் உள்ள அனைத்து சாறுகளும் தண்ணீரில் இறங்கியிருக்கும். இந்த கரைசலை வடிகட்டி செடிகளுக்கு உபயோகிக்கலாம். செடிகளுக்கு கொடுக்கும்போது வெங்காய கரைசல் ஒரு மடங்கு தண்ணீர் ஒரு மடங்கு கலந்து செடிகளுக்கு கொடுத்து வரலாம்.


வெங்காயத்திலிருந்து பூச்சி விரட்டி தயாரிப்பது எப்படி?

         வெங்காயத்திலிருந்து பூச்சி விரட்டி தயாரிப்பது மிகவும் சுலபமானது. இந்த பூச்சிவிரட்டிக்கு அனைத்துவகையான பூச்சிகளையும் கட்டுபடுத்தும் தன்மை உள்ளது. செலவில்லாத இயற்கை பூச்சிகொல்லி.

  • வெங்காயம்- ஒன்று தோல் நீக்கியது
  •  பல் பூண்டு-4 தோல் நீக்கியது.
  • மிளகாய்த்தூள்- இரண்டு தேக்கரண்டி
  • பட்டை பொடி- ஒரு தேக்கரண்டி

    தோல் நீக்கப்பட்ட வெங்காயம், பூண்டு இவற்றை நான்கைந்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் பட்டைப்பொடி, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது மிகவும் சக்திவாய்ந்த பூச்சிவிரட்டி தயார். இதில் இருந்து வரும் கரைசலை ஒரு லிட்டருக்கு ஐந்து மடங்கு தண்ணீர் கலந்து ஒட்டு திரவமாக காதி சோப் கரைசலை கலந்து தோட்டத்தில் செடிகள் கொடிகள் மேல் வாரம் ஒரு முறை தெளித்து விடலாம். இந்தக் கரைசல் மிகச் சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. பொதுவாகவே பூச்சிவிரட்டிகள், பூச்சிகள் வந்தாலும் வராவிட்டாலும் வாரம் ஒருமுறை தெளிப்பது சிறந்த முறையாகும். இந்தப் பூச்சிவிரட்டியை தெளிப்பதால் அஸ்வினி பூச்சிகள், மாவு பூச்சிகள், தத்துப் பூச்சிகள், எறும்புகள், கம்பளி பூச்சிகள் இவை அனைத்தும் கட்டுப்படும்.

வெங்காயத்தில் இருந்து ரூட்டிங் ஹார்மோன் தயாரிப்பது எப்படி?

  தோல் உரித்த வெங்காயம் கால் பங்கு அளவு, அதனோடு சோற்றுக் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன், பட்டை பொடி அரை தேக்கரண்டி அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது சிறந்த ரூட்டிங் ஹார்மோன் தயாராகிவிட்டது. செடிகளை பதியம் போடும் போது இந்த கரைசலில் ஊறவைத்து பதியம் போட்டால் வேர்பிடித்து வெகு விரைவாகவே துளிர் வர ஆரம்பிக்கும். ரோஜா செடி, செம்பருத்தி செடி, மல்லிகை செடி, முருங்கை இப்படி அனைத்தையும் இந்த கரைசலில் ஊறவைத்து பதியம் போடலாம். 100% ரிசல்ட்டை தரும். இதை எனது சொந்த அனுபவத்தில் செய்து பார்த்து வெற்றியும் கண்டிருக்கிறேன். நாற்றுகளை மாற்றி நடும்போது விரைவில் வேர்பிடித்து வளர்வதற்கு இந்தக் கரைசலை உபயோகப்படுத்தலாம். வேரில் இருக்கும் பூஞ்சைகள், பூச்சிகள் இவற்றை அழித்து வேர் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. புதிதாக விதைகள் போடும்போது போட்ட விதைகள் அனைத்தும் முளைத்து வர இந்த கரைசலை கொடுத்து வரலாம்.


வெங்காயத்தோலில் உள்ள சத்துக்கள், பயன்கள்:

  வெங்காயத் தோலில் செடிகளுக்கு தேவையான அனைத்து விதமான சத்துகளும் இயற்கையாவே இருக்கின்றன. வெங்காயத்தில் சல்பர், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், அயோடின், விட்டமின், கால்சியம், மெக்னீசியம், இப்படி செடிகொடிகளுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும், பேரூட்ட சத்துக்களும் தாராளமாகவே இருக்கின்றன.

வெங்காயத் தோலில் உள்ள கால்சியம் சத்துக்கள் காய்கறி செடிகளிலும் பூச்செடிகளிலும் மொட்டுக்கள் உதிராமல் மொட்டுக்களின் காம்புகளை உறுதிபடுத்தி அனைத்துமே பூக்களாகவும் காய்கறிகளாகவும் மாறுவதற்கு உதவி செய்கிறது.

வெங்காய தோல் கரைசலிலுள்ள பொட்டாசியம் சத்து, செடிகொடிகளை வெயிலில் இருந்து பாதுகாக்கிறது. வேர் வளர்ச்சிக்கும் உதவுகிறது. காய்கறிகள் பூக்கள் அனைத்துமே பெரியதாக பூப்பதற்க்கும் காய்ப்பதற்கு உதவி செய்கிறது.

வெங்காயத்தாளில் உள்ள மெக்னீசியம் சத்துக்கள், பூச்செடிகளில் அதிக பூக்களை பூப்பதற்கு உதவி செய்கிறது. ரோஜா, மல்லிகை, செம்பருத்தி இப்படி பூச்செடிகள் அனைத்திற்கும் வெங்காயத் தோல் கரைசலை ஊற்றி வந்தால் இதில் உள்ள மெக்னீசியம் சத்துக்கள் அதிக பூக்கள் பூப்பதற்கு உதவுகிறது.

வெங்காயத் தோலில் உள்ள இரும்பு சத்துக்கள் செடி கொடிகளில் இலைகள் மஞ்சளாக மாறாமல் ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது. பொதுவாகவே ஒரு செடியில் இரும்பு சத்து குறைவாக இருந்தால் அந்த செடி எந்தவித சத்துக்களையும் தானாகவே எடுத்துக்கொள்வதில்லை. அதனால் இரும்பு சத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

வெங்காய தோலில் உள்ள பாஸ்பரஸ் சத்துக்கள் செடி கொடிகளில் அதிக பூக்களையும், காய்களையும் கய்ப்பதற்கும் பெரிய பெரிய காய்களை காய்ப்பதற்கும் உதவி செய்கிறது.

இந்த பதிவை படித்த பின்னர், வெங்காயத் தோல் கரைசலில், இவ்வளவு சத்துக்களா! என்று ஆச்சரியப்பட்டு இருப்பீர்கள். பயன்படுத்தி பார்த்த பிறகு, உங்கள் செடிகளின் வளர்ச்சியை கண்டு பிரமித்து போவீர்கள். இதுபோல பல்வேறு உரங்களும், பூச்சி மருந்துகளும் சுலபமாக தயாரிப்பது குறித்து  இந்த வலைதளத்தில் நிறைய பதிவுகள் உள்ளது. நேரமிருந்தால் வாசித்து பயனடையுங்கள். நன்றி!! மாடிதோட்டம் தொடர்பான பதிவுகளை தொடர்ந்து அறிந்து கொள்ள எங்கள் வலைதளத்துடன் இணைப்பில் இருங்கள்.





Also Read:


👉தேமோர் கரைசல் தயாரிப்பது எப்படி?

👉 மாவு பூச்சிகளை கட்டுபடுத்துவது எப்படி?

👉வெட்டுகிளிகளை கட்டுபடுத்த, நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய வழிமுறைகள் என்ன?

Post a Comment

1 Comments