Translate

Neem Cake Fertilizer

வேப்பம் புண்ணாக்கு உரமா?பூச்சிவிரட்டியா? வேப்புண்ணாக்கு பயன்படுத்தினால் மண்புழு பாதிக்கபடுமா?

Sudagar Krishnan channels
Neem Cake Fertilizer 

வேப்பம் புண்ணாக்கை பற்றி:


    இயற்கை விவசாயத்தில் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் பொருட்களில் வேப்பம்புண்ணாக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வேப்பம் புண்ணாக்கு சிறந்த பூச்சிவிரட்டியாகவும், சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. வேப்பமரத்தில் இருந்து கிடைக்கும் வேப்பம் கொட்டைகளை செக்கில் அரைத்தால் வேப்ப எண்ணை கிடைக்கும். வேப்ப எண்ணெயை தனியாகப் பிரித்து எடுத்து விட்டு மீதம் இருக்கும் சக்கைகள்தான் வேப்பம்புண்ணாக்கு என்கிறோம். வேப்பம் புண்ணாக்கில் செடிகளுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் உள்ளன. பூச்சிகளை விரட்டும் தன்மையும், செடிகளில் வரும் நோய்களை சரிசெய்யும் ஆற்றலும் வேப்பம்புண்ணாக்கு உண்டு. இதைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாக அலசலாம்.


வேப்பம் புண்ணாக்கில் உள்ள சத்துக்கள்:


     செடி கொடிகளின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்கும் முதன்மை சத்துக்களான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், இம் மூன்று சத்துக்களும் வேப்பம்புண்ணாக்கில் ஏராளமாக உள்ளது. 

வேப்பம் புண்ணாக்கில்,

●தழைச்சத்து (நைட்ரஜன்) 5.20 சதவீதமும்,

 ●பாஸ்பரஸ் (மணிச்சத்து) 1.90 சதவீதமும்,

●பொட்டாசியம் (சாம்பல்சத்து) 1.50 சதவீதமும் உள்ளது.

  வேப்பம் புண்ணாக்கை தொடர்ந்து செடிகளுக்கு கொடுத்து வருவதினால் செடிகொடிகள் நன்றாக வளர்ந்து காய்கறிகளை அதிகமாக தருகிறது. வேப்பம் புண்ணாக்கில் உள்ள தழைச்சத்து செடி கொடிகளின் இலைகள், தண்டுகள், வேர்கள், வளர்ச்சி அடைவதற்கும், நோயில் இருந்து பாதுகாக்கவும் பெரிதும் உதவி செய்கிறது. பாஸ்பரஸ் சத்து செடி கொடிகளில் அதிக காய்கறிகள் காய்ப்பதற்கும், பூக்கள் விழாமல், அனைத்துப் பூக்களும் காயாக மாறுவதற்கும் உதவிசெய்கிறது. சாம்பல்சத்து வேர் வளர்ச்சிக்கும், காய்கறிகள் தரமான காய்கறிகளை வருவதற்கும், வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் உதவுகிறது.


வேப்பம் புண்ணாக்கை உரமாக உபயோகப்படுத்துவது எப்படி?


       வேப்பம் புண்ணாக்கை செடிகளுக்கு அடி உரமாக பயன்படுத்தலாம். மண் கலவை தயார் செய்யும் போது, வேப்பம் புண்ணாக்கை மண் கலவையோடு கலந்து, செடிகள் வைத்தால் செடிகள் நன்றாக வளர ஆரம்பிக்கும். மாடித்தோட்டத்தில் வேப்பம் புண்ணாக்கை பயன்படுத்தும்போது, ஒரு பைக்கு ஒரு கைப்பிடி அளவு தோராயமாக, 100 கிராம் அளவு வேப்பம் புண்ணாக்கை மண் கலவையில் கலந்து உபயோகிக்கலாம். வேப்பம் புண்ணாக்கில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், சத்துக்கள் இருப்பதினால் செடிகள் நன்றாக வளர்ந்து, அதிக காய்களை காய்க்க ஆரம்பிக்கும். செடிகள் நன்றாக வளர்ந்து பூக்கும் தருணத்தில், வேப்பம் புண்ணாக்கை மண் கலவையில் சேர்ப்பதனால், பூக்கள் உதிராமல் காய்கறிகள் பெரியதாக காய்ப்பதற்கு உதவுகிறது. வேப்பம் புண்ணாக்கை செடிகளுக்கு தண்ணீரில் கரைத்தும் ஊற்றலாம். ஒரு லிட்டருக்கு 100 கிராம் அளவு வேப்பம் புண்ணாக்கை நன்றாக கரைத்து செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்றி வரலாம்.

வேப்பம் புண்ணாக்கு பூச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது:


    வேப்பம் புண்ணாக்கு செடிகளுக்கு உரமாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல், செடிகளில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது. வேப்பம் புண்ணாக்கு 200 வகையான பூச்சிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. இதில் உள்ள அசாடிராக்டின் என்ற வேதிப்பொருள் பயிர்களில் பூச்சிகளை உண்ண விடாமல் தடுக்கிறது. பூச்சிகளுக்கே தெரியாமல், தோலுரிக்கும் தன்மையை கொடுத்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. பெண் பூச்சிகள் முட்டை இடாமல் மலடாக்குகிறது. இலைப்பேன், அந்துப்பூச்சி, வெள்ளை தத்துப்பூச்சி, பச்சை பூச்சி, வெட்டுக்கிளி, புழுக்கள், புகையான், பழ ஈக்கள், நூற்புழுக்கள், கம்பளிப் புழுக்கள், காய் துளைப்பான், இலை சுருட்டுப் புழு, குருத்துப் புழு, நத்தைகள், எறும்புகள், படைப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், என 200 வகையான பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. பொதுவாகவே வேப்பம் புண்ணாக்கை உபயோகப்படுத்தினால் நன்மை செய்யும் பூச்சிகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. தேனீக்கள், சிலந்திகள், குளவிகள், போன்ற நன்மை செய்யும் பூச்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. வேப்பம் புண்ணாக்கை உபயோகப்படுத்துவதினால்,  மண் புழுக்களின் வளர்ச்சி 25 விழுக்காடு அதிகரிக்கிறது.

Sudagar krishnan channels
Neem Cake Fertilizer 


வேப்பம் புண்ணாக்கை பூச்சி விரட்டியாக உபயோகப்படுத்துவது எப்படி?


    வேப்பம் புண்ணாக்கை பூச்சி விரட்டியாக உபயோகப்படுத்துவதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் அளவு எடுத்து நன்றாக கலந்து இலையில் மேல் தெளிக்க வேண்டும். தோட்டத்தில் பூச்சிகள் வந்தாலும், வராவிட்டாலும் வாரத்திற்கு ஒருமுறை வேப்பம் புண்ணாக்கு கரைசலை தெளிப்பதால், பூச்சிகள் வராமல் பாதுகாக்கலாம். உபயோகப்படுத்தும் போது அதிக அளவு உபயோகப்படுத்தக் கூடாது. அதிகமாக உபயோகப்படுத்தினால் இலைகள் கருகி செடிகள் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. வேப்பம் புண்ணாக்கை பூச்சி விரட்டியாக உபயோகப்படுத்தும் போது, கரைசலை தயார் செய்து சேமித்து வைக்காமல் உடனுக்குடன் உபயோகப்படுத்தினால் வேப்பம் புண்ணாக்கின் தன்மை மாறாமல் பூச்சிகளை கட்டுப்படுத்தும்.

   செடி கொடிகளின் வேர் பகுதியில் தாக்குதலை ஏற்படுத்தும் நூற்புழுக்கள், நத்தைகள், எறும்புகள், போன்ற பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு வேப்பம் புண்ணாக்கை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் அளவு கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்றி கட்டுப்படுத்தலாம்.

வேப்பம் புண்ணாக்கு நோய்களையும் கட்டுப்படுத்துகிறது:


     வேப்பம் புண்ணாக்கு செடி கொடிகளில் வரும் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. முக்கியமாக,

 இலை சுருட்டு நோய், 
காளான் பூஞ்சை நோய், 
வைரஸ் நோய், 
தேமல் நோய், 
செம்புள்ளி நோய், 
தண்டு அழுகல் நோய், 
வாடல் நோய், 
வேர் அழுகல் நோய், 
இலைக்கருகல் நோய், 

     போன்ற பல்வேறு வகையான நோய்களை கட்டுப்படுத்தும் தன்மை வேப்பம்புண்ணாக்கு உண்டு. முக்கியமாக மிளகாய்ச் செடியில் வரும் இலை சுருட்டு நோய், தக்காளி செடி, பப்பாளி, கத்தரி செடிகளில் வரும் வைரஸ் நோய், வெண்டை செடி, பூசணி போன்ற கொடிவகைக் அதில் வரும் பூஞ்சை நோய், பனிக்காலம் மழைக்காலங்களில் வரும் இலைப்புள்ளி நோய் போன்ற எல்லா நோய்களையும் வேப்பம்புண்ணாக்கு கட்டுப்படுத்துகிறது.

வேர்அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு:


   பொதுவாகவே வேரழுகல் நோய் அதிகம் மேக்ரோபோமினா பேசியோலினா என்ற ஒருவகை பூஞ்சாணத்தால் பரவுகிறது. விதை விதைத்த 30 நாளில் இருந்து 50 நாட்கள் வரை நோய்களின் தாக்குதல் காணப்படும். நோய்க்கிருமிகள் மண்ணில் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு சுலபமாக பரவும். வெப்பநிலை அதிகமாகும்போது,  வேரழுகல் நோய்களின் தாக்குதல் அதிகமாகவே இருக்கும். இந்த வேர் அழுகல் நோய் நன்றாக வளர்ந்த செடிகளை கூட சுலபமாக தாக்கி அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இப்படி அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நோயை சரிசெய்ய வேப்பம் புண்ணாக்கை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் அளவு கலந்து வேர்ப்பகுதியில் ஊற்றி வேர் அழுகல் நோயை தடுக்கலாம்.

செடி கொடிகளில் வரும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை பயன்படுத்துவது எப்படி?


செடி கொடிகளில் வரும் வைரஸ் நோய், வாடல் நோய், இலைக்கருகல் நோய், இலைப்புள்ளி நோய், தேமல் நோய், போன்ற இலைகளின் மேல் வரும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட செடிகள் இருக்கும் இலைகளை முதலில் நீக்கிவிட்டு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 கிராம் அளவு வேப்பம் புண்ணாக்கை நன்றாக கலந்து வடிகட்டி இலைகள், தண்டுகள், இவற்றின் மேல் முழுவதுமாக நனையுமாறு வாரத்திற்கு இரண்டு முறை தெளிப்பது நல்ல பலனளிக்கும்.

வேர் பகுதியில் வரும் வாடல் நோய், வேர் அழுகல் நோய், நுனி கருகல் நோய் இவைகளை கட்டுப்படுத்துவதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் அளவு வேப்பம் புண்ணாக்கை எடுத்து நன்றாக கலந்து செடிகளின் வேர்ப்பகுதியில் ஊற்றி வரலாம்.




இயற்கை முறையில் பயிர் செய்தல் என்றால், பூச்சி மருந்துகளோ, உரங்களோ பயன்படுத்தாமல் விவசாயம் செய்வது என்பதல்ல; இயற்கை விவசாயம் என்பது உரங்களும் பூச்சி மருந்துகளும், எவ்வித ரசாயனங்களும் கலக்காமல், இயற்கையான முறையில் தயாரித்து பயன்படுத்துவது என்பதே சரியான பொருளாகும். எனவே இயற்கை உரங்களையும், பூச்சி விரட்டிகளையும் நிறைய அறிந்துகொள்ளுவோம். ஆர்கானிக் முறையில் பயிர்செய்து, வரும் தலைமுறையினருக்கு ஆரோக்கியமான புதிய வாழ்விற்கு பாதை வகுப்போம்.

மேலும் பல பயனுள்ள ஆர்கானிக் விவசாயத்தை பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள எங்கள் சேனலோடு இணைப்பில் இருங்கள். நன்றி!!

ஆசிரியர்.
திரு.சுதாகர்கிருஷ்ணன்.
இயற்கை விவசாயி.







Click here..👇

Also Read:












Post a Comment

2 Comments