Translate

ragi murungai keerai adai

 கேழ்வரகு முருங்கை கீரை அடை


   இன்றைய பதிவில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, நம்முடைய பாரம்பரிய உணவான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை எவ்வாறு சமைக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.  அரிசி உணவுகள் அதிசயமாய் இருந்த காலகட்டத்தில் கேழ்வரகில் சமைக்கப்பட்ட உணவுகள் தான், உழைப்பாளிகளின் வயிற்றை நிறைத்து ஆரோக்கியத்தை அளித்தது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த காலைநேர உணவு. விலையும் மலிவானதுதான். இப்பொழுது நட்சத்திர ஒட்டல்களிலும் கூட கேழ்வரகு உணவுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. கேழ்வரகில் மாலைநேர சிற்றுண்டிகளும், பல்வேறு வகை உணவுகளும் தயாரிக்கப்படுகிறது. கேழ்வரகு சிறிய தானியம் என்பதால் அதை பாலிஷ்செய்வதும், தோலை நீக்கவும் முடியாது. அதனால் ஊட்டசத்துக்கள் அனைத்தும் முழுவதுமாய் கிடைக்கிறது. கேழ்வரகில் கால்சியம்சத்தும், நார்சத்தும் அதிகளவில் உள்ளது. 100-கிராம் கேழ்வரகில், 344-மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. கேழ்வரகு தோலில் பால்ஃபெனால்சு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முதல் இணை உணவு கேழ்வரகுதான். தாய்பாலுக்கு அடுத்தபடியாக அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. கேழ்வரகில் இருக்கின்ற நார்சத்து உடல்எடையை கட்டுபாட்டிற்குள் வைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. தூக்கமின்மை, மனச்சோர்வு, படபடப்பு, மனழுத்தம் போன்றவற்றையும் குணமாக்கவல்லது.  இரத்தசோகை குறைபாட்டை போக்கி, இமோகுளோபின் அளவினையும் அதிகரிக்கிறது. கேழ்வரகினோடு, பனைவல்லம் சேர்த்து புட்டு, அடையாக செய்து சாப்பிடுவது விரைவில் இமோகுளோபின் அதிகரிக்க எளிய வழியாகும்.


Sudagarkrishnanchannels
ragi murungai keerai adai


தேவையான பொருட்கள்:

  • முருங்கை கீரை- ஒரு கப்
  • கேழ்வரகு மாவு- ஒரு கப்
  • வெங்காயம்-1
  • பச்சைமிளகாய்- 3
  • உப்பு- தேவையான அளவு
  • கடலை எண்ணெய்- குழிகரண்டியளவு

செய்முறை:

  முதலில் முருங்கை இலைகளை ஆய்ந்து, மஞ்சள் இலைகள், பூச்சிகள் புழுக்களால் பாதிக்கப்பட்ட இலைகளை நீக்கி, சுத்தம் செய்து, தண்ணீரில் இரண்டுமுறை நன்றாக அலசி எடுத்துகொள்ளவும். அடிகனமான பாத்திரம் அல்லது கடாயில் குழி கரண்டியளவு கடலை எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து பாதியளவு வதக்கி கொள்ளவும்.  ஏனெனில் கேழ்வரகு மாவுடன் கலந்து திரும்பவும் வேக வைக்க வேண்டும். அதனால் பொன்னிறமாக வதக்க தேவையில்லை. வெங்காயம் ஒரளவு வதங்கிய பின்னர்,  முருங்கை கீரையை சிறிது சிறிதாக சேர்த்து வதக்கி கொள்ளவும். சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். முருங்கை கீரை சுருண்டு வதங்கி வந்தபிறகு, இப்பொழுது அடுப்பை அணைத்து, சிறிதுநேரம் முருங்கை கீரை, வெங்காயம்  இவற்றை ஆறவிடவும். நன்றாக ஆறியதும் கேழ்வரகு மாவினை கீரையுடன் சேர்த்து சப்பாத்தி மாவினை போல பிசைந்து கொள்ளவும். உப்பு சுவைத்து பார்த்து போதுமான அளவு சேர்த்து கொள்ளவும். முருங்கை கீரை என்றில்லை; உங்களுக்கு விருப்பமான எந்தவகை கீரைகளையும் அரைகீரை, தண்டுகீரை, சிறுகீரை போன்ற விருப்பமான கீரைகளை சேர்த்துக்கொள்ளலாம். சப்பாத்தியுடன் வெந்தயக்கீரை சேர்த்து சமைப்பது போல, வெந்தயக்கீரையை கூட நீங்கள் சேர்த்து கேழ்வரகு அடை செய்யலாம். 

Sudagarkrishnanchannels
ragi murungai keerai adai


பிசைந்த கேழ்வரகு மாவினை சாப்பாத்திக்கு உருட்டுகிற உருண்டைகளை போல் அல்லாமல், கைப்பிடி அளவில் கொஞ்சம், பெரிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். மாவினை தயார் செய்த பிறகு, ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்து விடவும். பின்னர் இரும்பு தோசைகல்லை அடுப்பில் வைத்து, கேழ்வரகு உருண்டையை கைகளாலே மெதுவாக அழுத்திவிடவும். உங்களுக்கு பிடித்த வடிவங்களில் தயாரித்து கொள்ளலாம். கேழ்வரகு அடையை சுற்றி ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய்க்கு பதிலாக நெய்கூட பயன்படுத்தி கொள்ளலாம். மூடியிட்டு வேகவிடவும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு, ஐந்து ஐந்து நிமிடங்கள், குறைந்த தணலில் வேகவிடவும்.  கேழ்வரகு அடை வெந்த பிறகு, நல்ல மணமும், நிறம் மாறி, பிரவுன் நிறமாக மாறிவிடும். இப்பொழுது அடை தயாராகிவிட்டது. காரசட்னி, பொட்டுகலை சட்னி அல்லது மீன் குழம்பு, கருவாட்டு குழம்புடன் சாப்பிட சுவை தாறுமாறாக இருக்கும். ஒருசிலர் கேழ்வரகு மாவினை தனியாக வாணெலியில் வறுத்து முருங்கை கீரையுடன் சேர்த்து கொள்வார்கள். அவ்வாறு செய்வது அவசியமற்றது. நீங்கள் கேழ்வரகு மாவினை பச்சையாக சேர்த்து கொள்வதே சிறந்த பலனைத் தரும். ஆனால் முளைகட்டிய கேழ்வரகு மாவினை பயன்படுத்தும் பொழுது வறுத்துதான் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் வயிற்று உபாதைகள் ஏற்படும். முளைகட்டிய கேழ்வரகு மாவில் நீங்கள் எந்த உணவு செய்தாலுமே, வறுத்துதான் செய்ய வேண்டும். கோதுமை உணவுகள் தைராய்டு நோய் பாதிப்பு உள்ளவர்கள் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆனால் கேழ்வரகு உணவுகளை அனைத்து தரப்பினரும் தாராளமாக சாப்பிடலாம். பக்கவிளைவுகளோ, வேறெந்த தீங்கும் விளைவிக்காத சிறுதானியம் கேழ்வரகு. 

கோ.இந்திராபிரியதர்ஷினி Msc.MEd.MBA 



ALSO READ 


   

 

Post a Comment

0 Comments