Translate

Lucky Plants அதிர்ஷ்டம் தரும் செடிகள்

 Which Plant is Good For Home 


Sudagarkrishnanchannels
Lucky Plants 

  செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்ய ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான பல செடி வகைகள் உள்ளன. அவையெல்லாம் அந்தந்த நாட்டிற்கு அதிர்ஷ்டம் தரக் கூடியதாக அமையலாம். ஆனால் நம்முடைய நாட்டிற்கு எந்த அளவிற்கு பொருந்தி வரும் என தெரியவில்லை. நம்முடைய நாட்டின் திசைகள் காலநிலைக்கு ஏற்றவாறு அதிர்ஷ்டம் தரும் செடிகள் என சில குறிபிட்ட செடிகள் உள்ளது. அவற்றை நம்முடைய வீடுகள் அலுவலங்களில் வளர்க்கும் போது, அது நமக்கு மகிழ்ச்சியையும், செல்வ வளத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.
நமது நாட்டைப் பொறுத்தவரை, எல்லா தெய்வத்திற்கும் வாசனை மிகுந்த மலர்களால் பூஜை செய்து வருகிறோம். வாசனை இல்லாத மலர்கள் வெறும் தோஷ நிவர்த்திக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தவிர வாசனை அற்ற மலர்கள் நல்ல அதிர்வலைகளை உருவாக்குவதில்லை. எல்லா செடி வகைகளும் நமக்கு சுத்தமான காற்றை தான் கொடுக்கின்றது. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் வாஸ்து, சோதிடம் என்று வந்து விட்டால், அதற்குரிய வகுக்கப்பட்ட சாஸ்திரங்களை கடைபிடித்தால் தான் நமக்கு அதிர்ஷ்டம் வரும். வாஸ்துவில் திசைகள் என்பது மிகவும் முக்கியமானது. அது போலவே சோதிடத்திலும் திசைகளுக்கு முக்கியத்துவம் உண்டு.  இந்த விஷயங்களின் அடிப்படையில் நம் பெரியோர்களும், சாஸ்திரங்களிலும் குறிபிடப்பட்டுள்ள அதிர்ஷ்டம் தரும் செடி வகைகளை பற்றி இந்த பதிவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த செடிகளை ஏன் வளர்க்க வேண்டும். இதனால் என்ன பயன்? எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும்? என்பதையும் இந்த பதிவில் நீங்கள் வாசிக்கலாம். 


துளசி:

Holy Basil [Ocimum tenuiflorum]

  முதலாவதாக நாம் பார்க்கப்போகும் செடி பெருமாளுக்கு உகந்த தெய்வீக துளசி செடி. துளசி செடி இல்லாத வீடு கோபுரம் இல்லாத கோவில் போன்றதாகும்.

விடியற்காலையில் பிரம்மமுகூர்த்தத்தில் துளசி செடியை சுற்றி வருவதால் தூய்மையான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. இதன் மூலமாக பல விதமான நோய்கள் குணமாகிறது. அதனால் தான் அதிகாலையில் நீராடி, பெண்கள் துளசி செடியை வழிபடும் வழக்கம் உருவானது. துளசி செடி வீட்டில் செழிப்பாக வளர்கிறது என்றால் அந்த வீட்டில் லட்சுமி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது ஐதீகம். 

துளசி செடி வாடி போனாலும், அல்லது காய்ந்து போனாலும் ஏதோ கெட்ட சகுனத்தின் அறிகுறியாகும். 

துளசி செடி வீட்டில், செழிப்பாக வளர்ந்திருந்தால், அந்த வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. துளசி செடியினை முறையாக பராமரித்து வணங்கி வந்தால், ஆரோக்கியத்தோடு, கடவுளின் அனுகிரகமும் கிடைக்கும். துளசி செடியை வீட்டின் முன்பக்கம், பால்கனி, வீட்டின் முற்றம், வீட்டின் பின்புறம் என எந்த பகுதியிலும் வளர்க்கலாம். நல்ல சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் வைக்க வேண்டும். 


துளசிசெடியை மாடிதோட்டத்தில் செழிப்பாக வளர்க்க 5- டிப்ஸ்கள்


செண்பக பூ செடி:

Michelia champaca 

         அதிர்ஷ்டம் உள்ளவர்களால் மட்டுமே இந்த பூ செடியை வீட்டில் வளர்க்க முடியும். அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இந்த பூ கைகளில் கிடைக்கும். நல்லநேரம் வரப்போகிறது என்றாலே, அதனை உணர்த்தும் வகையில் சில நல்ல விஷயங்கள் நம் வாழ்கையில் நடக்க துவங்கும். அந்த வரிசையில் இந்த பூ உங்கள் கைக்கு கிடைக்கிறது என்றால், நல்லநேரம், வெற்றிகள், மகிழ்ச்சியான நிகழ்வுகள் , எதிர்பாரத யோகம் உங்களுக்கு வரப்போகிறது என அர்த்தம். வெறும் யோகம் இல்லைங்க. சுக்கிர யோகம் உங்களுக்கு அடிக்கப்போகிறது என அர்த்தம். செண்பக பூக்களை மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்வதால் செல்வ வளம் அதிகரிக்கும்.

குறிப்பாக, வெள்ளிகிழமை வருகின்ற சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி மற்றும் சுக்கிரபகவானை நினைத்து, நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். காலை ஆறு மணிமுதல் ஏழு மணிக்குள் பூஜை செய்து வந்தால், வீட்டில் வறுமை நீங்கி செல்வ வளம் பெருகும். செண்பக மலரின் அருமைகளை பற்றி திருவிளையாடற் புராணத்திலும் குறிப்புகள் உள்ளது. 


தொட்டாற் சுருங்கி:

Shame Plant [ Mimosa pudica ]


Sudagarkrishnanchannels
Lucky Plants 

    இந்த செடியை வீட்டில் வளர்த்தால் பணவரவு அதிகரிக்கும் என்ற காரணத்தால் பலர் இதனை வீட்டில் ஏற்கனவே வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. விடியற்காலை நேரத்தில் தொட்டாச்சிணுங்கி இலைகளை நம் பத்து விரல்களால் தொடும் பொழுது, நமது காந்த ஆற்றல் அதிகரிக்குமாம்.
 இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் கிழக்கு கடற்கரை [ஈசிஆர்] சாலையில் உள்ள ஒரு நர்சரிக்கு, என் யூடியுபிற்காக வீடியோ ஒன்றினை எடுக்க சென்றிருந்தேன். அங்கு இந்த தொட்டாச்சிணுங்கி செடிகள் ஒரு வரிசை முழுவதுமே அதிகளவில் வைக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய விலை கொண்ட தாவரங்கள் லட்சகணக்கில் அங்கு  வியாபாரம் செய்யப்படுகின்றது. இந்த தொட்டசிணுங்கி செடிகளை பார்த்ததும் நான் கடைஓனரிடம் கேட்டேன். ஏன் இவ்வளவு செடிகள். விற்பனைக்கா? என்று. அவர் என்னிடம் கூறினார். என்ன சுதாகர் சார், இப்படி கேட்டு விட்டீர்கள். இப்பொழுதெல்லாம் இந்த செடியை அதிகம் பேர் வாங்கிச் செல்கின்றனர். செடி வந்ததும், காலி ஆகிவிடுகிறது. கேட்டு வாங்கிச் செல்கின்றனர் என்று. எனக்கு உண்மையிலேயே ஆச்சரியம் கலந்த வியப்பாய் இருந்தது. என்னடா, சாதாரணமாக கிராமங்களில், ரோட்டோரங்களில் வளர்ந்து கிடக்கும். இந்தசெடியா இங்கு விற்பனைக்கு போட்டிபோட்டு வாங்கி செல்கிறார்கள் என்று. ஆமாம் அதிர்ஷடமும், பணவரவும் தரும் செடி ஆயிற்றே!! நாமும் ஒன்று வாங்கிச் செல்வோம் என என் நண்பர் கூற, நாங்களும் தொட்டாச்சிணுங்கி செடியை வாங்கி வந்தோம். இன்று காலை கூட , அதனுடைய ஊதாநிற அழகிய பூக்களை ஒருநிமிடம் ரசித்துவிட்டு தான் பதிவை எழுத கணிணி முன் அமர்ந்தேன்.


முல்லைப்பூ செடி:

[Jasminum Auriculatum ]

     முல்லைபூ செடி குருவின் அம்சமாக சோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி" என்ற வரிகளால், இலக்கியங்களில் முல்லையின் மதிப்பையும், சிறப்பையும் நாம் அறிந்துகொள்ள  முடிகிறது. மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த முல்லை செடியினை வீட்டின் வடக்கு திசையில் வளர்ப்பது நல்லது. காடு போல வளர்க்காமல், தேவையில்லாத கிளைகளை கத்தரித்து பார்ப்பதற்கு அம்சமாக வளர்க்க வேண்டும். இதனால் குருவின் பார்வை கிட்டும். குருவின் பார்வை கிடைப்பதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


செம்பருத்தி:

Shoeblackplant [ Hibiscus rosa-sinensis ]

  புதியதாக வீடு கட்டினாலோ அல்லது திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தாலோ செம்பருத்தி செடி ஒன்றினை நடுவார்களாம். மங்களகரமான நிகழ்வு தங்குதடை இன்றி, சிறப்பான முறையில் நடைபெறுவதற்காக இவ்வாறு நடப்படுவதாக கூறப்படுகிறது. செவ்வாய்தோஷம் இருப்பவர்கள் தங்கள் வீட்டுதோட்டத்தில் செம்பருத்தி செடியினை வளர்த்து வரும் போது, செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறைவதாக கூறப்படுகிறது.

      

நித்தியகல்யாணி: 

Madagascar Periwinkle [Catharanthus roseus ]

        

Sudagarkrishnanchannels
Lucky Plants 

தற்போது ஏராளமான வீடுகளில் நித்தியக்கல்யாணி செடி விரும்பி வளர்க்கப்படுகிறது. இந்த செடியை வீட்டில் வளர்க்கும் பொழுது தூய்மையான காற்று நமக்கு கிடைக்கிறது. அதுமட்டுமில்லாமல் நித்திய கல்யாணி பூக்களிலிருந்து வீசும் மணமானது, காற்றோடு கலந்து, அந்த காற்றை நாம் சுவாசிப்பதால் பல நோய்கள் குணமடைகின்றன.
  நீரின்றி அமையாது உலகு என்பதைப்போல பூவின்றி ஒருநாளும் இருக்காது நித்தியக்கல்யாணி என்பார்கள். இரவில் ஒரு பூ உதிர்ந்தால் கூட, அதற்கு ஈடாக  மற்றொரு பூ காலைக்குள் பூத்து விடும். அதனால் தான் நித்தியமும் { தினமும்} பூத்துவிடும் கல்யாணி {மணப்பெண்} என பெயர் பெற்றது. 
நூற்றுக்கும் மேலான மருத்துவ வேதிப்பொருட்களை உள்ளடக்கியது நித்தியமல்லி பூக்கள். நித்தியமல்லி பூக்களை கொதிக்க வைத்து, தேனோடு சேர்த்து தயாரிக்கப்படும் தேநீர் எவ்வித புற்றுநோயையும் குணபடுத்திவிடும். இதனை ஒவ்வொரு இல்லங்களிலும் வைத்திருந்தால் பெரும்பாலூம் மருத்துவமனையே நமக்கு தேவைபடாது. 


வெற்றிலை:

Piper betle
 
வெற்றிலை வீட்டில் வளர்ப்பதால் குடும்பம் செழித்தோங்கும். வெற்றிலையின் நுனிபகுதியில் லட்சுமியும், நடுபகுதியில் சரஸ்வதியும், காம்புபகுதியில் பார்வதிதேவியும் குடியிருப்பதாக கருதப்படுகிறது. இறைவனுக்கு எத்தனை பொருட்களில் பூஜை செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால், அந்தப்பூஜை முழுமை பெறுவதில்லை. திருமண சுபகாரியங்கள், பூஜைகள் சுபமாக நடைபெறுவதற்காக வெற்றிலை  படைக்கப்படுகிறது. வெற்றிலையும் பாக்கும், மகாலட்சுமியின் அம்சங்களாகும். வெற்றிலையை வாடவிடுவது குடும்பத்திற்கு ஆகாது
 விருட்ச சாஸ்திரப்படி வெற்றிலை ஆண் செடியாக கருதப்படுகிறது. அதனால் வெற்றிலை செடியை வீட்டில் தனியாக வளர்க்க கூடாது. அதனுடன் இரண்டு மூன்று செடிகளை வளர்க்க வேண்டும். குறைந்தது ஒரு செடியாவது வளர்க்க வேண்டும். வெற்றிலை கொடியை தனியாக வளர்த்தால் தம்பதியர் இடையே ஒற்றுமை குறைபாடு, புத்திர தோஷம் ஏற்படும். வெற்றிலை செடியை வீட்டின் பின்புறம் வளர்க்க வேண்டும்.வல்லாரை :

Centella asiatica

   இதனை சுலபமாக வீடுகளில் வளர்க்கலாம்.. அடர்ந்து படர்ந்து வளரக்கூடியது. ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் நல்ல செழிப்புடன் வளரும். வல்லாரையை வீடுகளில் வளர்க்கும் பொழுது மனக் குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவுறும் என நம்பப்படுகிறது. வல்லாரையின் இரண்டு மூன்று கிளைகளை உடைத்து தண்ணீரில் வைத்தும் வளர்க்கலாம். வேலை செய்யும் இடங்கள், அலுவலங்களிலும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க மேசைகளின் மீது ஒரு குடுவையில் வைக்கலாம். வல்லாரை அதிக மருத்துவ பயன்களை கொண்டது. மூளைவளர்ச்சி, ஞாபகத்திறனை கொடுக்க கூடியது.

மணிபிளாண்ட்:

Devil's ivy [ Epipremnum aureum ]

Sudagarkrishnanchannels
Lucky Plants 

          இந்த செடியை வீட்டில் வளர்த்தால் பணவரவு அதிகரிக்கும் என்கின்ற நம்பிக்கையில், பலர் வீடுகளில் இந்த செடி தவறாமல் வளர்க்கப்படுகிறது. நமது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், குளிர்ச்சியை தரவும் மணிபிளாண்ட் பயன்படுகிறது. மணிபிளாண்டை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும். தென்கிழக்கு திசையில் தான் பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாக கிடைப்பதாகவும்,. இந்த திசையில் செடியை வைத்து வளர்ப்பதால் செடியும் செழிப்பாக வளர்ந்து, அதன் வேகமான வளர்ச்சியைப் போல, வீட்டில் பணபுழக்கமும் அதிகரிக்கும் என்பது வாஸ்து நிபுணர்களின் கருத்து.. மணிபிளாண்ட் திசையை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் வைக்ககூடாது. ஏனெனில் இந்த திசை எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் திசை என்பதால் நம் வீட்டில் நஷ்டங்களும் வீண் விரயங்களும் அதிகரிக்கும்.


கற்றாழை:

Aloe vera 

    கண்திருஷ்டி, வாஸ்து பிரச்சனைகள் தீர கற்றாழை வீட்டில் வளர்ப்பது சிறந்தது. வீட்டின் வாசலிலே கருப்பு கயிறு, படிகாரகற்கள், பாசிமணிகள் இவற்றோடு கற்றாழை கொத்தும், சேர்த்து கட்டப்படுவது நாம் அனைவரும் அறிந்தது தான். ஏனெனில் வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள், பலரின் ஏக்கப் பெருமூச்சுகள், கெட்ட ஆவிகள் இவற்றை எல்லாம் கற்றாழை தாவரம் தடுத்துவிடுகிறது. கற்றாழையை வீட்டின் முன்புறம் வளர்க்க வேண்டும். வீட்டின் உள்ளும், அழகு தாவரமாக வளர்க்கலாம். கற்றாழை காற்றை சுத்தபடுத்தி நல்ல தூய்மையான ஆக்ஸிசனை நமக்கு கொடுக்கிறது. வீட்டின் வாசலிலே கற்றாழை கட்டப்படுவது, காலம்காலமாக பெரியோர்களால் நம்பபட்டு வருகிறது. கற்றாழையை வடக்கு திசையில் வைத்து வளர்ப்பது மேலும் சிறந்த பலனைத் தரும்.


கோழிக்கொண்டை:

Cockscomb 


  இந்த தாவரம், வாஸ்து ரீதியாக இருக்கும் பல பிரச்சனைகளை தீர்ப்பதாக நம்பப்படுகிறது. பொதுவாக வாடாமல் இருக்கும் பூச்செடிகளை வீட்டில் வளர்ப்பது நன்மை தரும் என்பதால், கோழிகொண்டையில் இருக்கும் வாடாத பூக்கள் அழகோடு நமக்கு அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்குகிறது. 
      

வாடாமல்லி:

Globe amaranth [Gomphrena globosa]

வாடாமல்லி செடியை வீட்டுதோட்டத்தில் மிக சுலபமாக வளர்க்கலாம். பெரிய பராமரிப்பு, உரங்கள் எதுவுமே தேவையில்லை. வறட்சியான இடங்களில் கூட, திரட்சியாக வளர்ந்து கிடக்கும். எப்பொழுதுமே வாடாமல்லி வாடாதது போல, வீட்டில் உள்ளவர்களையும் வாட விடாதாம் என, ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
வாஸ்து ஜோதிடர்களே, தீராத வாஸ்து பிரச்சனைகளுக்கு , வாடாமல்லி செடிகளை வீட்டில் வளர்க்க பரிந்துரைக்கிறார்கள். இப்பொழுது, நர்சரியில் வாடமல்லி பூ செடியில் அழகழகான, பல்வேறு நிறங்களில் பூச்செடிகள் கிடைக்கிறது. எப்பொழுதுமே வாடாத அழகான பூக்களை பார்ப்பது கண்களுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.வீட்டின் அமைப்பு எப்படி இருந்தாலும், எந்த திசையில் இருந்தாலும் பரவாயில்லை. செடிகளை மட்டும் சரியான  திசைகளில் வைத்துப் பாருங்கள் .. உங்கள் துயரங்கள் எல்லாம் காணாமல் போய் செல்வ வளமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

விருட்சங்கள் வளர்த்தால் வீடு விருத்தியம்சத்துடன் வளரும் என்பது நம்பிக்கை. நன்றி!!🙏🙏

இயற்கை விவசாயி

திரு.சுதாகர்கிருஷ்ணன்.

Post a Comment

3 Comments

  1. Aarumaiyana thagaval🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thanks anna

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரியும் முத்துமுத்தாக உள்ளது. சிறிது நேரத்திற்கு இந்த கட்டுரையில் என்னையே மறந்துவிட்டேன். . மொத்தத்தில் சூப்பரான பதிவு.

    ReplyDelete