Translate

துளசி செடி வளர்ப்பு மற்றும் அதன் பயன்கள்


Sudagar krishnan channels
Holy basil 


 துளசிசெடி/Ocimum tenuiflorum 

   வணக்கம். இந்தப் பதிவில் தெய்வீக மூலிகை  துளசி செடியின் மருத்துவ குணங்கள் மற்றும் நமது வீட்டுத் தோட்டத்தில் அல்லது மாடி தோட்டத்தில் எவ்வாறு சுலபமாக வளர்க்கலாம், என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீதுளசி, ராமர் துளசி, துளவம்,மாலலங்கல் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. துளசி சிறந்த மூலிகைச் செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்டிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை. துளசி செடியினை இந்துக்கள் புனிதமாக மதித்து வணங்கி வருகின்றனர். துளசி செடியை கோயில்களில் பூஜைக்காக வைத்து வணங்கி வருவது வழக்கமாக வைத்துள்ளார்கள். அனைத்து கோவில்களிலும் துளசிசெடிகள் பொதுவாக இருக்கும். இருந்தாலூம் பெருமாள் கோயில்களில், அதிகமாக பூஜை செய்து வருகின்றனர். விஷ்ணு பகவானுக்கு நிகராக துளசி செடியினை இந்துக்கள் வைத்து வழிபடுகின்றனர். துளசி செடியினை இந்து மதத்தினர் மட்டுமே வளர்க்கவில்லை. எல்லா மதத்தினரும் துளசி செடியை வளர்த்து வருகின்றனர். ஏனென்றால் துளசி செடியில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. துளசி செடியினை இந்துக்கள் வீட்டின் மாடத்தில் வைத்து வளர்க்கின்றனர். வீட்டின் மாடத்தில் வைத்து வளர்க்கப்படும் துளசி செடிகள் அந்த வீட்டினுடைய உயிராற்றலை தன்னுள் வைத்திருப்பதாக  நினைத்து இந்துக்கள் வாழ்கின்றனர். துளசி செடி வாடி போனாலோ, அல்லது காய்ந்து போனாலும் ஏதோ கெட்ட சகுனமாகவே  இந்துக்கள் நினைத்து வந்தனர். துளசி செடியை வளர்ப்பதினால்  வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். துளசி செடி வீட்டில் செழிப்பாக வளர்கிறது என்றால் அந்த வீட்டில் லட்சுமி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று ஐதீகம். துளசி செடி வீட்டில் செழிப்பாக வளர்ந்து வருவதால் அந்த வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளதாக நம்பப்படுகிறது. துளசி செடியினை முறையாக பராமரித்து வணங்கி வந்தால் ஆரோக்கியத்தோடு, கடவுளின் அனுகிரகமும் கிடைக்கும். 

துளசி செடியின் மருத்துவ பயன்கள்.


துளசி செடி  மூலிகைகளின் ராணியாக மதிக்கப்படுகிறது. ஏனென்றால் இதனுடைய பூக்கள், இலைகள் அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தது. ஒருவர் வீட்டில் துளசி செடி வளர்ப்பதினால் அந்த வீட்டில் உள்ள அனைவருமே ஆரோக்கியமாக இருக்கலாம். ஏனென்றால் துளசிச்செடி காற்றை சுத்தப்படுத்தி, சுத்தமான காற்றை வீடுகளுக்கு கொடுக்கிறது. காய்ச்சல் வரும் போது மாத்திரைகளை போடாமல் இரண்டு துளசி இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், விரைவில் காய்ச்சல் குணமாகும். துளசி செடி கண்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு தரக்கூடியது. கண்களில் புண் இருந்தால் துளசி செடியின் சாற்றினை கண்களில் ஊற்றினால் கண்களில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும். வாய்களில் துர்நாற்றம் ஏற்படும் போது இரண்டு துளசி இலைகளை வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் துர்நாற்றம், ஈறுகளில் உள்ள பிரச்சினைகள், வாய்களில் உள்ள புண்கள் அனைத்துமே சரியாகும். தினமும் வெறும் வயிற்றில் இரண்டு துளசி இலைகளை மென்று சாப்பிடுவதனால் ரத்த ஓட்டம் சீராக மாறி, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. கடுமையான காய்ச்சல் சளி, இருமல் அவதிப்பட்டால் துளசி செடியின் இலைகளை மென்று சாப்பிட்டு, இலைகளின் சாற்றை உட்கொண்டால் இருமல், காய்ச்சல், சளி தொல்லைகள் நீங்கும். துளசி செடியின் இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் சம்பந்தமான பிரச்சனைகள், வயிறு பிரச்சினைகள், வாய் தொடர்பான பிரச்சினைகள், செரிமான சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து ஆரோக்கியமாக இருக்கலாம். துளசி இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து  குடித்து வருவதினால் சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றுக்கள், சிறுநீரககோளாறுகள் இவைகள் எல்லாம் சரியாகும். கோடை காலத்தில் உடம்பில் வரும், வியர்வை துர்நாற்றத்தை தவிர்க்க துளசி இலையை தண்ணீரில் போட்டு குளிப்பதனால், துர்நாற்றம் நீங்கும். துளசி இலை சாறை  உடம்பில் வரும், சொறி, சிரங்கு, படை காயங்கள் இவற்றின் மேல் தடவினால் அனைத்தும் குணமாகும். சுத்தமான செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியை போட்டு, எட்டு மணிநேரம் மூடி வைத்து, பின்பு அந்த நீரை வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகி வந்தால் எந்த நோயும் அண்டாது. தினமும் காலையில்  பத்து துளசி இலையை மென்று தின்பதால், இரத்தம் சுத்தமடையும். மார்பு வலி தொண்டை வலி, வயிற்று வலி, ஆகிய கோளாறுகள் நீங்கும். இதுவரை துளசியின் பயன்கள் அதன் மருத்துவ குணங்களை பற்றி விரிவாகப் அறிந்து கொண்டோம். துளசி செடியினை வீட்டிலேயே எப்படி சுலபமாக வளர்க்கலாம். இதோ சில சுலபமான வழிகள்!

துளசி செடி நன்றாக வளர சுலபமான வழிகள்:

  •  துளசி செடிக்கு நேரடியான சூரிய ஒளி அறவே பிடிக்காது. அதனால் நிழற்பாங்கான இடத்தில் வைத்து வளர்ப்பது நல்லது. இந்தக் காரணத்திற்காகவே நமது முன்னோர்கள் துளசி செடியை மாடங்களில் வைத்து வளர்த்து வந்தனர். துளசி செடியின் இலைகள் மிகவும் மிருதுவானது. எனவே அதிக சூரிய வெளிச்சத்தைப் அதனால் ஏற்றுக்கொள்ள முடியாது. துளசி செடியை செழிப்பாக வளர வேண்டுமென்றால் உச்சி வெயில் படாதவாறு துளசி செடியை வைத்து வளர்ப்பது நல்லது. துளசி செடியின் வேர்கள் அதிக ஈரப்பதத்தை விரும்பும். எனவே கோடை காலத்தில் தினமும் மூன்று வேளை தண்ணீர் ஊற்றவேண்டும். குளிர் காலத்தில் தினமும் இரண்டு வேளை தண்ணீர் ஊற்றவேண்டும்.
  • துளசி செடிக்கு மண் கலவை தயார் செய்யும் போது தேங்காய் நாரை சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் தேங்காய் நார் ஈரத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உடையது இல்லை என்றால் ஆற்று மணலை சேர்த்துக் கொள்ளலாம். துளசி செடி களிமண்ணில் நன்றாக வளரும். உங்களுக்கு களிமண் கிடைக்கவில்லை என்றால், தோட்டத்து மண் இரண்டு மடங்கு தேங்காய்நார் அல்லது மணல் ஒரு மடங்கு   மண்புழு உரம், அல்லது தொழு உரம் ஒரு மடங்கு உயிர் உரங்கள் சூடோமோனஸ் அசோஸ்பைரில்லம் டிரைகோடெர்மா விரிடி பாஸ்போபாக்டீரியா மற்றும் வேப்பம் புண்ணாக்கு சேர்த்து  மண் கலவை தயார் செய்து வைத்தால் நன்றாக வளரும்.
  • துளசி செடியில் வரும் பூக்களை நாம் அடிக்கடி வெட்டிவிட வேண்டும். இதனால் பக்க கிளைகள்  அதிகமாக வளர்ந்து சத்துக்கள் வீணாகாமல் ஆரோக்கியமான துளசி இலைகள் நமக்கு கிடைக்கும். துளசிச்செடியின் இலைகளை கத்தரித்து விடுவதற்கு முன்னர், துளசி செடி நோய் தாக்குதல் இல்லாமல் பூச்சி தாக்குதல் இல்லாமல் இருக்கும்போது மட்டுமே கிளைகளை வெட்டிவிட வேண்டும். ஏனென்றால் நோய் தாக்குதல் அல்லது பூச்சி தாக்குதல் இருக்கும் போது, கவாத்து செய்வதால் துளசி செடி இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. துளசி செடியில் இருந்து வரும் பூக்கள் விதைகளாக மாறும்போது அந்த விதைகளில் பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும் எனவே துளசி செடியில் பூக்கள் வரும்பொழுது அதை கவாத்து செய்வது விடுவதினால் பூச்சித் தொல்லையிலிருந்து துளசி செடியை காப்பாற்றலாம்.  செடியின் சத்துக்கள் வீணாகாமல் இலைகளுக்கு அதிகம் கிடைத்து, இலைகள் செழிப்பாக வளரும். துளசி செடியில் அதிக இலைகளும்  கிடைக்கும். 
  • துளசி செடிக்கு மண்புழு உரம் மிகவும் பிடிக்கும். எனவே மாதம் ஒரு முறை ஒரு கைப்பிடி மண் புழு உரம், துளசி செடிக்கு கொடுப்பதினால் துளசி செடியின் வேர்கள் குளிர்விக்கப்பட்டு துளசி செடி செழிப்பாக வளரும். சமையலுக்குப் பயன்படுத்திய பின்னர், தூக்கியெறியும் வெங்காயதோலை தண்ணீரில் ஊறவைத்து, வெங்காயத்தண்ணீரை துளசி செடிக்கு கொடுப்பதினால், துளசி செடி செழிப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். வெங்காய தோல் கரைசலை இலைகள் மேல் தெளித்தால் பூச்சித் தாக்குதலும் குறையும். 
  • துளசி செடிக்கு  நைட்ரஜன் சத்துக்கள் அதிகம் தேவைப்படும். எனவே நைட்ரஜன் சத்துக்கள் நிறைந்த உரங்களை கொடுக்க வேண்டும். அரிசி கழுவிய தண்ணீர், சாப்பாடு வடித்த கஞ்சி காய்கறி கழுவிய தண்ணீர் இவைகளோடு சரிபாதி தண்ணீர் சேர்த்து துளசி செடியின் வேர்களுக்கு கொடுத்துவந்தால் துளசி செடியை செழிப்பாக வளரும். இலைகள் அடர்த்தியாக, பெரிய பெரிய இலைகளாக கிடைக்கும்.
  • துளசி செடிகளில் மாவுப்பூச்சிகள், பச்சைப் புழு தாக்குதல் இருக்கும். இதற்கு வாரம் ஒரு முறை இஞ்சி, பூண்டு மிளகாய் கரைசல் அல்லது வேப்பெண்ணெய் கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம். துளசி செடியில் வரும் பூச்சிகளை கட்டுப்படுத்த பூச்சிகள் வந்தாலும் வராவிட்டாலும் வாரம் ஒருமுறை பூச்சிவிரட்டி தெளிப்பது நல்லது. வேப்பெண்ணெய் தெளிக்கும்போது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2-மில்லிலிட்டர் வேப்பெண்ணெய் சோப்பு கரைசல் 3 சொட்டு கலந்து,வேப்ப எண்ணெய் கரைசல் தயார் செய்து வாரம் ஒருமுறை துளசி செடியின் இலைகளின் மேல் தெளித்து வருவதினால், பூச்சிகள் வராமல் தடுக்கலாம். துளசி செடியில் மாவு பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருக்கும்போது குளிர்ந்த நீரை சாதாரணமாக பீய்ச்சி அடிக்க வேண்டும் அப்படி பீய்ச்சி அடிப்பதனால் மாவு பூச்சிகளின் தொல்லைகள் குறையும். அசுவினி பூச்சிகளின் தொல்லைகள் இருக்கும்போது, இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தெளிப்பதால் பூச்சிகள் தொல்லையிலிருந்து துளசி செடியை சுலபமாக காப்பாற்றலாம். துளசி செடியில் பச்சை புழுக்கள் தென்படும்போது கண்ணால் பார்த்து அதை எடுத்து அழித்து விடுவது மிகவும் சாலச்சிறந்தது. துளசி செடி வளர்ப்பில் இன்னும் வேறு ஏதேனும் உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள். அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும்.நன்றி!


Post a Comment

0 Comments