மூக்கிரட்டை கீரை/Boerhavia Diffusa/Spreading Hogweed
உணவுப் பொருட்களில் மிகவும் ஊட்டசத்துள்ள உணவு பொருள் எது என்று கேட்டால், கீரைகள் என்று தான் பொதுவாக பலரும் கூறுவார்கள். ஏனெனில் கீரைகளில் அதிகளவில் ஊட்டசத்துக்களும், நோய் எதிர்ப்பு காரணிகளும் உள்ளது என்பது நாமறிந்ததே. கீரைகள் என்றதுமே நம்முடைய நினைவிற்கு வருவது, அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, தண்டுகீரை... போன்றவை தான். சாரணைக்கீரை, குப்பைக்கீரை, மூக்கிரட்டை, குப்பைமேனிக்கீரை திருநீற்றுபச்சிலை, அம்மான் பச்சரிசி இப்படி பல்வேறு வகையான கீரைகள் உள்ளது. இத்தகைய கீரைகளை நாம் கேள்விபட்டதும் இல்லை; அப்படியே பெயரளவில் கேள்விபட்டிருந்தாலும், பயன்படுத்தியதில்லை. அக்காலங்களில் தெருக்களில் கலவாங்கீரை என்று கூடைகளில் வைத்து விற்றுவருவார்கள். குப்பைக்கீரை, சிறுபசலை, மூக்கிரட்டை, சாரணக்கீரை இப்படி பலகீரைகளை கலந்து கட்டாக விற்பார்கள். அந்தக்கீரைகளை சமைத்து சாப்பிடும்போது,, அந்த சுவையின் ஓரத்திற்கெல்லாம் உங்கள் பீட்சாவும், பர்கரும் வரமுடியாது. அவ்வளவு அற்புதமான, மறக்க முடியாத சுவையாக இருக்கும் கலவுக்கீரை என்பது. இந்தவகை கீரைகளை எல்லாம் நாம் அறிந்துகொண்டால் தினமும் பல சுவையில், பல்வேறுவகை உணவுகளை செய்து அசத்தலாம். விதைகளோ, பதியம் போடவோ தேவையில்லை; மழைக்காலங்களில் தானாகவே முளைக்கும். அதிக ஊட்டசத்துக்களையும், சுவையையும் கொண்டது. மாடி தோட்டங்களில் இந்தசெடிகளை பற்றி தெரியாமல் இருப்பதால், இது எதோ களைச்செடிகள் என்று பிடிங்கி எறிந்துவிடுகிறோம். அற்புதமான பயன்களைக் கொண்ட கீரைகளில் சிலவற்றையேனும் உங்களுக்கு தெளிவுபடுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில், மூக்கிரட்டை கீரையை பற்றி இந்தக்கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளேன். இந்தக் கட்டுரையை படிக்க நீங்கள் செலவு செய்யும் இரண்டு நிமிடங்கள், உங்கள் ஆரோக்கியத்திற்கான நிமிடங்கள். மூக்கிரட்டை கீரையை பற்றியும், கீரையின் வளர்ப்புமுறை, மூக்கிரட்டை மூலிகைக்கீரையின் பயன்கள், பயன்படுத்துவது எப்படி? என்பதையெல்லாம் நீங்கள் இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து கட்டுரைக்குள் பயணிப்போம்,வாருங்கள்.
|
Mokkirattai |
மூக்கிரட்டை அறிமுகம்:
சாரணைக்கீரை வகையில் மேல்நோக்கி வளரும் கீரை இதுதான். தரிசுநிலங்களிலும், சாலையோரங்களிலும், வாய்க்கால், வரப்புகளில் அடர்ந்து, படர்ந்து வளரும் செடிவகையை சார்ந்தது. இரண்டு நிறங்களில் பூக்களை கொண்ட, இரண்டுவகையான செடிகள் உள்ளது. ஆனால் பயன்கள் ஒன்றுதான். வெண்மை நிறத்திலும், ஊதா நிறத்திலும் பூக்களை கொண்டது. பூக்கள் பார்வைக்கு அழகாக, கொத்தாக பூத்திருக்கும். மேலேயுள்ள படத்தில் இருப்பதைப்போன்று பூக்கள் அழகாக இருக்கும். மூக்கிரட்டையின் இலைகள் தடிமனாகவும், இலையின் மேல் பகுதி அடர் பச்சை நிறத்திலும், இலையின் கீழ்பகுதி சாம்பல் கலந்த நிறத்திலும் காணப்படும். மூக்கிரட்டை கீரை காரம் கலந்த ஒருவித கசப்பு சுவையை கொண்டது. வெப்பதன்மை நிறைந்தது. மூக்கிரட்டையின் வேர் தமிழ்மருந்து கடைகளில் விற்கப்படுகிறது. அதிகளவில் மருந்துவ குணங்களை கொண்டது. தடிமனான கிழங்கு போல வேர்பகுதி காணப்படும். மழை இல்லாத வறட்சி காலங்களிலும் மூக்கிரட்டை வளரும். இரத்தபுட்கா, புணர்நவா, மூக்குறட்டை, புட்பகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. வெள்ளைச்சாரணை என்பது வேறு; மூக்கிரட்டை என்பது வேறு. பலர் இந்த இரண்டு கீரைகளை குழப்பிக் கொள்வார்கள். வெள்ளைச்சாரணை வட்டவடிவ இலைகளை கொண்டது. வெள்ளை சாரணை குறித்து, சுதாகர்கிருஷ்ணன் யூடியூப் சேனலில் சில காணொளிகளை பதிவிட்டிருக்கிறேன். நேரமிருந்தால் காணொளியை பாருங்கள், பயனுள்ளதாக இருக்கும்.
மூக்கிரட்டை கீரை வளர்ப்பு:
மூக்கிரட்டையை மாடி தோட்டத்தில் வளர்ப்பது மிகமிக சுலபமானது. எவ்வித பாராமரிப்பும் இன்றி சுலபமாக வளர்க்க கூடிய தாவரமாகும். சாலையோரங்களிலோ அல்லது நண்பர்களின் வீட்டிலோ காணப்படும் செடியினை வேருடனோ அல்லது தடிமனான தண்டு பகுதியை உடைத்து வந்து ஊன்றி வைத்தாலே வளர்ந்து விடும். சாதாரண தோட்டத்து மண் போதுமானது. மழை காலங்களில் தானாகவே முளைத்து நிற்கும். உரமிட வேண்டுமென்று விரும்பினால், நைட்ரஜன் சத்துக்கள் நிறைந்த உரங்களை கொடுத்து வர வேண்டும். சாதம் வடித்த கஞ்சி தண்ணீர், அரிசி, பருப்புகள், காய்கறிகள் கழுவிய தண்ணீர் இவற்றை அடிஉரமாக கொடுத்து வரலாம். பூச்சிக்கள், புழுக்கள் தாக்குதல் அதிகம் இருக்காது. அப்படி இருந்தால் வேப்பெண்ணெய் வாரமிருமுறை தெளித்து வரலாம்.
|
Mokkirattai |
மூக்கிரட்டைகீரையின் நன்மைகள்:
மூக்கிரட்டை கீரையை குறிப்பிட்ட அளவில் சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் கல்லீரல் பிரச்சனைகள் கண்பார்வைக் கோளாறுகள், நீரிழிவு நோய், இதயம் தொடர்பான பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் போன்ற பலவித நோய்களுக்கு மருந்தாகிறது. மூக்கிரட்டையில் அடங்கியுள்ள ஊட்டச் சத்துக்களைப் பற்றியும், மூக்கிரட்டை கீரையின் பயன்களைப் பற்றியும் பயன்படுத்தும் விதத்தை பற்றியும் சற்று விரிவாக பார்க்கலாம்.
மூக்கிரட்டைக்கீரையில் அடங்கியுள்ள ஊட்டசத்துக்கள் விவரம் |
நூறுகிராம் கீரையில் அடங்கியுள்ள ஊட்டசத்துக்களின் அளவு |
வைட்டமின்-சி |
44.8 மி.கி |
புரோட்டின் |
227 மி.கி |
கால்சியம் |
142 மி.கி |
கொழுப்பு |
1.6 மி.கி
|
சோடியம் |
162 மி.கி |
இரும்புச்சத்து |
0.012 மி.கி |
மூக்கிரட்டையினிலை முறையுண வாதநோ
யாக்கிறையிற் பெட்டியாரவென வடங்குமே என்ற தேரன்வெண்பா பாடலின் மூலம் அறிந்து கொள்வது யாதெனில், மூக்கிரட்டை கீரையை உணவில் எடுத்து கொள்வதன் மூலம், வாதத்தின் காரணமாய் ஏற்படும் நோய்கள் அனைத்துமே பொட்டியில் பாம்பாய் அடங்கி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கல்லீரலின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி, கழிவுகளை அகற்றி வேகமாக மற்றும் விரைவாகவும் செயல்பட உதவுகிறது. பலநச்சுக் காரணங்களினால் பாதிக்கபடும் கல்லீரல் நச்சுகளை அகற்றுவதாக Hepato Protective ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு நம்முடைய உடலுக்கு தேவையான புரத ஊட்டச்சத்து தேவையில் மூன்று சதவிகிதம் புரதச்சத்து மூக்கிரட்டை கீரையில் அடங்கியுள்ளது.
புற்றுநோய் காரணிகளை எதிர்த்து அழிக்கிறது. இளமையுடன் இருக்ககூடிய திசுக்களின் ஆற்றலை அதிகரித்து, முதுமையை விரட்டுகிறது. மூக்கிரட்டை கீரைகளின் இலைகளை தண்ணீரில் இட்டு, வேக வைத்து, அந்த தண்ணீரை எடுத்துவருவதன் மூலம் இரத்தசோகை நோய் குணமாகிறது. மூலம் நோயையும் கட்டுபடுத்துகிறது. ஆஸ்துமா நோய்க்கான மருந்தாகவும் பயன்படுகிறது.
யூரினரி இன்பெக்ஷன் எனப்படும் சிறுநீர்பாதை தொற்று நோய்கள் பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களில் ஒன்று. இதனால் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், தொற்றுகள் பெரும்பாடாய் படுத்திவிடும். இத்தகைய சிறுநீர் தொற்று நோய்களை மூக்கிரட்டை கீரை உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் குணமாக்கலாம். கோடைகாலத்தில் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சிறுநீர் கடுப்பு இதனால் சிறுநீர் கழிப்பதில் சிரமங்கள் ஏற்படும், சிறுநீர் கழிப்பதில் உடல் சீராக இயங்குவதில் கழிவுகள் வெளியேற்றப்படுவதிலும் பாதிப்புகள் ஏற்படும். இத்தகைய பாதிப்புகளை குணமாக்கி சுலபமாக சிறுநீர் வெளியேற உதவுகிறது.
மூக்கிரட்டை கீரை வாரம் இருமுறை எடுத்துக் கொள்வதன் மூலம் மாலைக்கண் நோயை கூட குணமாக்கும். மேலும் தெளிவான கண்பார்வை, விழிபடலம் பாதிப்பு, கண் தொடர்பான நோய்களையும் குணமாக்குகிறது.
உடல் எடையை குறைப்பதில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. உடல் எடை குறைப்பிற்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் மூக்கிரட்டை இடம்பெறுகிறது. அதனால் உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மூக்கிரட்டை கீரையை பயன்படுத்தி வரவேண்டும்.
மூக்கிரட்டை கீரை நீரிழிவு நோயாளிகள் சிறந்த நன்மைகளை தருகிறது. ரத்தத்தில் காணப்படுகின்ற குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி, பிளாஸ்மா அளவினை அதிகரித்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
வயிற்றுப் பூச்சிகள், செரிமானக் கோளாறுகள், வயிறு தொடர்பான பிரச்சினைகளை குணமாக்க வல்லது. இதய கோளாறுகளையும் குணமாக்குகிறது.
மூக்கிரட்டை கீரையை எப்படி பயன்படுத்துவது?
- மூக்கடைப்பு, மற்றும் மூக்கு தொடர்பான நோய்களினால் பாதிக்கபட்டு, அவதிப்படுபவர்கள் மூக்கிரட்டைகீரையை ஏதேனும் ஒரு வடிவில் உணவாக எடுத்து கொண்டால், நாள்பட்ட நோய்களும் குணமடையும்.
- மூக்கிரட்டைகீரை கிழங்கின் பொடியை மலச்சிக்கல் உள்ளவர்கள் மாதமொரு முறை எடுத்து வந்தால், சிறந்தபலன்கிடைக்கும்.
- கீரையின் வேரினை விளக்கெண்ணையில் காய்ச்சி இரவு படுக்க போகும் முன்னர், அருந்திவர சொறி, சிரங்கு, படை, எரிச்சல் இவையெல்லாம் குணமடையும்.
- கடுமையான மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் மூக்கிரட்டை கீரையை அரைத்து இரண்டு மூட்டுகளின் மேலும் பற்றுப்போட மூட்டு வலி குறைந்து நாளடைவில் மூட்டு வலி குணமாகிவிடும்.
- மூக்கிரட்டை இலைகள், பொன்னாங்கண்ணி இலைகள் கீழாநெல்லி இலைகள் இவற்றையெல்லாம் சம அளவில் எடுத்து அரைத்து, அந்தச் சாறுடன் மோர் கலந்து சாப்பிட்டு வரும்பொழுது கண் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகிறது.
- மூக்கிரட்டை கீரையின் இலைகளை காயவைத்து, பொடியாக்கி சாப்பிட்டு வர, பல்வேறு உடல்சார்ந்த பிரச்சனைகள் குணமடையும்.
- மூக்கிரட்டையின் வேருடன், சோம்பு சேர்த்து காய்ச்சி பருகிவர சிறுநீரகங்களின் சிறந்த செயல்பாட்டிற்கு உதவுவதோடு, சீறுநீரகக் கற்களையும் கரைக்கிறது. மூக்கிரட்டையின் வேர், தமிழ்மருந்து கடைகளில் கிடைக்கிறது. தகுந்த ஆலோசனையோடு பயன்படுத்த வேண்டும்.
- மூக்கிரட்டை கீரையுடன் பருப்பு, சிறிது மிளகு, தக்காளி, பெருங்காயத்துடன் சேர்த்து, கடையலாக எடுத்துக்கொள்ளலாம். இரத்தசிவப்பணுக்கள் அதிகரித்து, இரத்தசோகை குணமடையும்.
மூக்கிரட்டை கீரை சமையல்:
மூக்கிரட்டை கீரையின் இலைகளை, பிற கீரைகளை சமையலுக்கு எவ்வாறு பயன்படுத்தி சமைக்கிறோமோ, அதுபோலவே பயன்படுத்தலாம். காரக்குழம்பு வகைகள், கடையல், மசியல், கூட்டு , காய்கறி சூப்பிலும் கூட சேர்த்து கொள்ளலாம். மூக்கிரட்டை கீரையை பயன்படுத்தி எங்கள் ஊர் பக்கங்களில் செய்யப்படும் சமையலை நீங்கள் அறிந்து கொள்ள பதிவிடுகிறேன். கட்டுரையின் துவக்கத்தில் கூறியது போல இது களவாங்கீரை கடையல், கூட்டு இப்படி சொல்லாம்.
களவாங்கீரை கடையல்/மசியல்:
தேவையான பொருட்கள்:
- களவாங்கீரை- இரண்டு கைப்பிடிஅளவு
- பூண்டு- 4பல்
- சிறுபருப்பு- 1கப்
- தக்காளி பழம்- 3
- வெங்காயம்- 1 சிறிய அளவு
- மஞ்சள்பொடி- 1/2 ஸ்பூன்
- பெருங்காயப்பொடி- 1/2ஸ்பூன்
- பச்சை மிளகாய்-3
தாளிக்க:
- கடலை எண்ணெய்- குழிகரண்டியளவு
- கடுகு-1/2ஸ்பூன்
- சீரகம்-1/2ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்
- வர மிளகாய்-4
செய்முறை:
மண் சட்டியில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் வெங்காயம் ஒன்று, பூண்டு நான்கு பற்கள், பழுத்த தக்காளி நான்கு, (ஐந்தாறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்). பச்சை மிளகாய் மூன்று அல்லது நான்கு, உங்கள் காரத்திற்கு ஏற்றால் போல எடுத்துக் கொள்ளவும். சிறிது மஞ்சள்தூள், ஒருகப் சிறுபருப்பு இவை அனைத்தையும் கலந்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். மூடிஇட்டு வேகவிடவும். அரை டம்பளர் அளவு தண்ணீர் போதுமானதாக இருக்கும். தக்காளிப்பழம், வெங்காயம் எல்லாம் ஒரளவு வெந்ததும், களவாங்கீரைகளை உப்பும் மஞ்சள் தூளும் கலந்த தண்ணீரில் நன்றாக அலசி, ஆய்ந்து சேர்த்துக் கொள்ளவும். கீரை சீக்கிரமாக வெந்துவிடும். பாசிபருப்பு, வெங்காயம்,தக்காளி 3/4-பாகம் வெந்ததும் அரைகீரையை சேர்த்தால் போதும். தண்ணீர் அதிகம் சேர்க்க தேவையில்லை. கீரையில் இருக்கும் தண்ணீரே போதுமானது. கீரை நன்றாக வெந்த பிறகு, அடுப்பை நிறுத்தி, சிறிது நேரம் ஆறவிடவும். மத்து கொண்டு கீரையை நன்றாக கடைய வேண்டும். உப்பு போதுமான அளவு இருக்கிறதா என்று, சுவைத்து பார்த்து கொள்ளவும். குழி கரண்டியோ அல்லது சிறிய வாணெலியோ அடுப்பில் வைத்து, கடலை எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம் பருப்பு, சீரகம்(கொஞ்சம் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும். வரமிளகாய் கிள்ளி போட்டு, தாளித்து கீரையில் கொட்டி, கலந்து கொள்ளவும். சுவையான களவாங்கீரை கடையல் தயார். மண் பாத்திரத்தில் கீரையை சமைக்கும் போது சுவையும் அதிகமாக இருக்கும். பச்சை நிறத்தில் கீரை பார்வைக்கும் அழகாக இருக்கும். குக்கரிலோ பாத்திரத்திலோ செய்யும் போதும் நிறம் மங்கிபோய் இருக்கும். மண்பாத்திரங்களில் உணவு நீண்டநேரம் சூடாகவே இருக்கும். முடிந்தவரை கீரைகளை மண்பாத்திரங்களில் சமைப்பது ஆரோக்கியத்திற்கும், ஊட்டசத்துக்கள் முழுமையாக கிடைக்கவும் வழிவகுக்கும். குக்கர் போன்ற பாத்திரங்களில் கீரையை அதிகஅளவு அழுத்தத்திற்கு உட்படுத்தும் போது, ஊட்டச்சத்துக்கள் எல்லாம் அழிந்துவிடும். பிறகு கீரை சமைத்தும் பயனில்லை. களவாங்கீரை கடையலுக்கு சுட்ட அப்பளம், வறுவல் வகைகள் காமினேஷன் சூப்பராக இருக்கும். இந்த கடையல் முறையை பயன்படுத்தி பிற கீரைகளையும் தனித்தனியாக செய்யலாம். முடிந்த அளவு கீரைகளை வீட்டிலேயே வளர்த்து பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. ஏனெனில் கடைகளில் கிடைக்கும் கீரைகளில் அதிக அளவில் பூச்சி மருந்துகள் தெளிக்கப்படுகிறது. கீரைகள் வளர்ப்பு குறித்து நிறைய கட்டுரைகளை பதிவிட்டிருக்கிறேன். படித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். கீரைகள் வளர்க்க இடவசதி இல்லாதவர்கள், கடைகளில் இருந்து வாங்கி வந்த கீரைகளை பூச்சி புழுக்கள் இன்றி சுத்தம் செய்து, மஞ்சளும் உப்பும் கலந்த மிதமான சூடான தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து, அலசி எடுத்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். பூச்சி மருந்துக்களின் தாக்கம் ஓரளவு குறையும். களவாங்கீரை என்பது விதைகள் எதுவுமே போடாமல் தானாகவே முளைக்கும் கீரைகள் தான். இந்தவகை கீரைகள் கிடைக்கவில்லையெனில் அரைக்கீரை/சிறுகீரை போன்ற கீரைகளோடு சேர்த்தும் மூக்கிரட்டைகீரையை சமைக்கலாம். முழுபயன்களும் கிடைக்கும். நன்றி! எதுவுமே அளவோடு பயன்படுத்துவது சிறந்ததது. அந்த வகையில் மூக்கிரட்டைகீரையிலும் சில பக்கவிளைவுகள் உள்ளது. அதிகமாகவோ அல்லது சரியான முறையில் பயன்படுத்தாவிடில் வாந்தி, மயக்கம், பேதி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள், சிறிய குழந்தைகள், அலர்ஜி நோய் இருப்பவர்கள் தவிர்ப்பது சிறந்தது.
2 Comments
Very Useful. Clear explanation.
ReplyDeleteGood one, esp difference between vellai saranai and mookarattai, not explained in other sites
ReplyDelete