Translate

Tuberose {Rajnigandha}

   சம்பங்கி பூ வளர்ப்பு மற்றும் பயன்கள்

Sudagarkrishnanchannels
Tuberose 

Polianthes tuberosa, Agave amica
    
 சம்பங்கி பூக்கள் பூஜைக்கு ஏற்றது. சம்பங்கி பூக்களை தலையில் சூடிகொள்வதால் மனதிற்கு அமைதியையும், இதமான மனநிலையையும் கொடுக்கிறது. சம்பங்கி பூக்கள் அவ்வளவு சீக்கிரம் வாடாது. இதன் சாறு நறுமண பொருட்கள் தயாரிப்பதில் பயன்படுகிறது. 

மருத்துவ சிகிச்சை முறைகளில் எண்ணற்ற முறைகள் உள்ளது. இதில் மலர்களை பயன்படுத்தும் அரோமாதெரபி மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறது. அரோமா தெரபியில் இடம்பெறும் மலர்களில், நறுமணமிக்க சம்பங்கி தான் முதன்மையான இடத்தை பெறுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆயிரம் ஹெக்டேருக்கு அதிகமாகவே, சம்பங்கி பயிரிடப்படுகிறது.  விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரும் பயிர் தான் சம்பங்கி வளர்ப்பு. சம்பங்கி அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


சம்பங்கி வகைகள்:

      சம்பங்கியில் பல வகைகள் உள்ளது. 
 • நிலச்சம்பங்கி
 • அகச்சம்பங்கி
 • காட்டுசம்பங்கி
 • கொடிசம்பங்கி
 • நாக சம்பங்கி
 • சிறு சம்பங்கி
இவற்றுள் அதிக மருத்துவ பயன்களை கொண்டது நில சம்பங்கி தான். அதனால்தான் நில சம்பங்கி அதிகமாக பயிரிடப்படுவதும், எளிதில் கிடைக்கக்கூடியதுமாக உள்ளது. நிலசம்பங்கி ஆங்கிலத்தில் Mexican Tuberose என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இரவு ராணி என்ற பெயரும் உண்டு. "இரவில் மலர்ந்து மணம் தரும் மலர்" என்பதால் "ரஜனிகந்தா" என வடமொழியில் குறிப்பிடப்படுகிறது.
  

சம்பங்கி வளர்ப்பு:

      சம்பங்கி நீண்டகாலப் பயிர். இதற்கு அதிக ஊட்டச் சத்துக்கள் தேவைப்படும்.  இயற்கை முறையில் பயிரிடும் பொழுது, ஏக்கருக்கு 10 டன் தொழு உரம், 50 கிலோ வேப்பம் புண்ணாக்கும், வயலில் அடி உரமாக இட வேண்டும். மண்புழு உரம் இடுவதால், தேவையான சத்துக்கள் வயலில் கணிசமாக அதிகரிக்கும். நடவு செய்யும் பொழுது வரிசைக்கு வரிசை குறைந்தபட்சம் இரண்டடி முதல், அதிகபட்சம் இரண்டரை அடி அளவு இடைவெளி விட்டு, நடவு செய்ய வேண்டும். சிலர் இருவரிசை முறையிலும் நடவு செய்கிறார்கள். 

  நன்கு பூத்த அல்லது குறைந்தபட்சம் மூன்று வருடம் ஆன தோட்டத்திலிருந்து எடுத்த கிழங்குகளை, எடுத்து நடவு செய்ய வேண்டும். இதனால் வளமான செடிகளை பெறலாம். ஏக்கருக்கு  44,850 கிழங்குகள் தேவைப்படும். 25 முதல் 30 கிராம் எடையுள்ள கிழங்குகள் நடவுக்கு ஏற்றவை.

 சிரிங்கர், பிரிஜ்வால், அர்வா நிரந்தர், போளே ரஜினி ஆகியவை ஓரடுக்கு மலர் வகையை சார்ந்தது. இதில் பிரிஜ் வால், அர்கா நிரந்தர் ஆகிய ரகங்கள் உயர் விளைச்சலை தரக்கூடியவை. சுவாசினி, வைபவ் ஆகியவை ஈரடுக்கு பூவிதழ் கொண்ட இரகங்கள்.


பருவம்

● சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன் ஜூலை மாதங்கள் ஆகும்.

● கொடி சம்பங்கி மார்ச் முதல் மே வரையிலும்  சிலசமயங்களில் ஜூலை முதல் அக்டோபர் வரையிலும் மலரும்.




சம்பங்கி வளர்க்க சிறந்த மண்:

     
  அனைத்து வகை மண்ணிலும் சம்பங்கி வளரும். சரளை, செம்மண்ணில் நன்றாக வளரும். மேலும், நல்லவடிகால் வசதியுடைய வண்டல்மண் 6.5 முதல் 7.5 காரதன்மை அமிலதன்மை ஏற்றது.

உரமேலாண்மை:

    உயிர் உரங்கள் அதிகம் பயன்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைக்கும், ஹூமிக் அமிலம் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். இவையெல்லாம் மாதம் ஒருமுறை பயன்படுத்தினால் போதுமானது.

வாரம் ஒருமுறை மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலும், மீன் அமிலமும் பாசன கால்வாயில் கலந்துவிட வேண்டும். செடிகளின் மீது தேங்காய் பால் மோர்கரைசல் {தேமோர்கரைசல்} , அமிர்த கரைசலும் பத்து நாட்களுக்கு ஒருமுறை தெளித்து விட வேண்டும். தேவைபட்டால் ஜிப்ரலிக் அமிலம் பயன்படுத்தலாம்.




அதிகாலையில் மலர்களைப் பறிப்பது சிறந்தது. ஊட்டமான மலர்களை பெற முடியும். பூத்து முடித்த மலர் காம்புகளை உடனே அறுத்து எடுத்து, வரிசையின் இடையே மூடாக்காக இடலாம்.

பூச்சிகள் கட்டுப்பாடு:

 
     சம்பங்கியை அதிகமாக இரண்டு வகையான பூச்சிகள் தாக்கும். 
 • மொட்டு துளைப்பான் மற்றும்
 • சாறுவகையான பூச்சிகள்

    இவற்றை கற்புரகரைசல் தெளிப்பதன் மூலம் முழுமையாக கட்டுபடுத்தலாம். ஐந்து நாட்கள் இடைவெளியில், தொடர்ச்சியாக கற்புரக்கரைசலை, கொடுத்து வரும் பொழுது, பூச்சிகளை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

இலைப்பேன் : இலைப்பேனால் தாவரம் பாதிக்கப்படும்போது, இலைகள் சுருண்டும் சுருங்கியும் காணப்படும். இதனால் பூக்கள் உற்பத்தியும் பாதிக்கப்படும்.  இதற்கு, தண்ணீரை நன்றாக பீய்ச்சி அடித்தால் போதும். தண்ணீரை பீய்ச்சி அடித்தவுடன், வேப்ப எண்ணெய்யுடன் காதி சோப்பு  கலந்து, மாலை வேளையில் தெளித்து விட்டால் இலைப்பேன்கள் கீழே உதிர்ந்து விடும். வேர்பகுதியிலும் வேப்பம் புண்ணாக்கு கரைசல் கொடுப்பதால், இலைப்பேன்கள் கீழே கொட்டிவிடும்.

மாவுப்பூச்சி:


  சம்பங்கி செடியில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில் முதலிடத்தில் இருப்பது இந்த மாவு பூச்சிகள். வேர்ப்பகுதியில் அடை அடையாக ஒட்டிக் கொண்டு சாறுகளை உறிஞ்சும். செடியின் வளர்ச்சியை பாதித்து இறுதியில் செடி காய்ந்துவிடும். மாவு பூச்சி தாக்கப்பட்ட இடத்தில் எறும்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த எறும்புகள் தான் மாவுப்பூச்சியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரப்பி விடுவது. முதலில் தாக்கப்பட்ட இலைகளை எடுத்து அழித்துவிடவண்டும். பிறகு நன்றாக தண்ணீரை வேகமாக அடித்து
 மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி லிட்டர் வேப்ப எண்ணெய் 1 மில்லி லிட்டர் காதி சோப்பு கரைசல் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தெளித்து மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.

நூற்புழு தாக்குதல்:


சம்பங்கி பூச்செடியில் நூற்புழு தாக்குதல் இருக்கும். நூற்புழு தாக்கப்பட்ட செடியின் வேர்ப்பகுதியில் கருப்பு நிற சிறு முடிச்சுகள் இருக்கும். இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும். தண்ணீரை அதிகமாக பாய்ச்சுவதினால் இந்த நூற்புழு தாக்குதல் பிரச்சனை ஏற்படும்.
 தண்ணீரை அளவாக பாய்ச்சவேண்டும். நூற்புழு தாக்குதல் தென்பட்டால் வேப்பம் புண்ணாக்கு கரைசல் கொடுப்பதினால் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். அல்லது சம்பங்கி பூச்செடி பக்கத்திலேயே செண்டுமல்லி பூச்செடியை வைப்பதினால், செண்டு மல்லி பூ செடியின் வேர்களில் இருந்து சுரக்கும் ஒருவிதமான திரவமானது நூற்புழு கட்டுப்படுத்துகிறது.


நோய்கள்:


கிழங்கு அழுகல் நோய்:


சம்மங்கி பூச்செடியில் நூற்புழு தாக்குதல் இருப்பதினால், கிழங்கு அழுகல் நோய் பெரும்பாலும் அதிகமாக வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி உயிர் உரத்தை ஒரு கிலோவிற்கு, நன்கு மக்கிய 10 கிலோ எருவில் கலந்து, வேர் பகுதியில் போட்டு கட்டுப்படுத்தலாம். வேப்பம் புண்ணாக்கு கரைசலை கொடுத்தும் கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.


இலைப்புள்ளி நோய்:


இலைப்புள்ளி நோய் பெரும்பாலும் குளிர்காலத்தில் வரும் நோயாகும். செடியில் இலைப்புள்ளி நோய் தென்பட்டால் பாதிக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி பூக்கள் அதிகம் பிடிக்காமல், பெரும் சேதத்தை ஏற்படுத்தும். இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த ஏழு நாட்கள் புளிக்க வைத்த மோரை ஒரு லிட்டர் எடுத்துக்கொண்டு 9 லிட்டர் தண்ணீர் கலந்து செடி முழுவதும் நனையும்படி தெளித்து விடலாம். அல்லது சூடோமோனாஸ் உயிர் உரத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் அளவு நன்றாக கலந்து இலைகள் மேலேயும், வேர்ப்பகுதியிலும் தெளித்து கட்டுப்படுத்தலாம்.     

Sudagarkrishnanchannels
Tuberose 


சம்பங்கியின்  மருத்துவ பயன்கள்:

      சம்பங்கி பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் விதை, இலை, பூக்கள் என அனைத்து பாகங்களிலும் அதிக மருத்துவ தன்மைகள் நிறைந்து கிடக்கின்றது. மன அழுத்தம், தலைவலியை போக்கக் கூடியது. முடி உதிர்வையும், பொடுகு தொல்லையையும் கட்டுபடுத்துகிறது. புண்கள், பருக்கள், தோல் நோய்களையும் குணமாக்க உதவுகிறது. நறுமணமிக்க மலர் என்பதால் பாலியல் விருப்பத்தை தூண்டக்கூடிய குணம் கொண்டதாகவும், பெண்களின் குழந்தை இன்மைக்கான, தீர்வாகவும் உள்ளது.

நிலச் சம்பங்கி எண்ணெய், பாலியல் சார்ந்த சிகிச்சைகளுக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. 

பூக்களை தேனீர் குடிப்பதால் வயிற்றுவலி, மலச்சிக்கல், பால்வினை, காய்ச்சல், தலைவலி  குணமாகுகிறது.

சம்பங்கி எண்ணெய்:

   சம்பங்கியை நேரடியாக மருத்துவ சிகிச்சைமுறைகளில், பயன்படுத்துவதை விட, அதன் எண்ணெயை பயன்படுத்தும் வழக்கம் தான், அதிகம் உள்ளது. இந்த எண்ணெயை நுகர்வதாலும் உடலில் தேய்த்துக் கொள்வதாலும் பல மருத்துவ மாற்றங்களை உணர முடியும். 
சிகிச்சைக்காக பயன்படுத்தும் அளவிற்கு சம்பங்கி எண்ணெயில் அப்படி என்ன உள்ளது! என்ற ஆவல் உங்களுக்கு எழலாம். 
Benzyl ஆல்கஹால்,  butric acid, Eugenol, farnesol, Menthyl benzoate, Menthyl anthranite,  Nerol போன்ற எண்ணற்ற மருத்துவ வேதிப்பொருட்கள் சம்பங்கியில் உள்ளது. இது தான் அதன் மருத்துவ ரகசியமாகும்.

சரும சிகிச்சைகள்:

  கோடை வெயிலால் ஏற்படும் தோல் சிவப்பு, தோல் அரிப்பு, வேரக்குரு போன்ற நோய்களுக்கு சம்பங்கி தைலம் சிறந்த மருந்தாக உள்ளது.
     
அரை லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெயில் 50 கிராம் சம்பங்கி மலர்களை போட்டு காய்ச்சி அந்த தைலத்தை உடல் முழுவதும், உச்சி முதல் பாதம் வரை தடவி வந்தால், தோல் நோய்கள் வேர்க்குரு போன்றவை குணமடையும். மேலும் உடல் குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

தீராத தலைவலி:

   நாலைந்து சம்பங்கி பூவுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து அரைத்துக்கொள்ளுங்கள். இந்த விழுதை சூடு பறக்க நெற்றி பகுதியில் தடவினால் தாங்க முடியாத தலை வலியும் சட்டென குணமாகும்.
மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி, தூக்கமின்மை இவற்றை போக்க சம்பங்கி பூக்களை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். ஒருமுறை தேனீர் தயாரிக்க 5 பூக்கள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். பூக்களை தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அது பாதியாக வற்ற, அதனை வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வரலாம். சளி இருமல் இருப்பவர்கள் இந்த தேநீருடன் இஞ்சியும் சேர்த்துக் கொள்ளலாம்.


மலச்சிக்கல், அஜீரணம்:


  ஒரு டம்ளர் தண்ணீரில் 5 சம்பங்கி பூக்களை போட்டு காய்ச்சி, பாதியாக வற்றி குறைந்ததும், வடிகட்டி கொள்ளுங்கள். இந்த தண்ணீரை காலை மாலை குடித்து வர மலச்சிக்கல் மிரண்டு ஓடும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும். வெயிலால் வந்த ஜுரம் குணமாகும்.


 ● சம்பங்கி பூவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அந்த விழுதை கண்களை சுற்றி பூசி துணியால் கட்டி பத்து நிமிடத்துக்கு பிறகு கழுவுங்கள். கண் நோய் சம்பந்தப்பட்ட வலி, எரிச்சல், நீர் வடிதல், வறட்சி இவையெல்லாம் போக்கி குளிர்ச்சியைத் தந்து, கண்களை பளீரென பிரகாசிக்க வைக்கும். 

● காய்ச்சிய பாலில்  இரண்டு சம்பங்கி பூவை போட்டு ஆற வையுங்கள். இதில் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் வீதம் 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வர உடல் தெம்பும், பலமும் பெறும்.

பொடுகு தொல்லைக்கு அருமருந்து:


  தலையில் பொடுகு தொல்லையால் அவதிபட்டவர்களுக்கு தான் தெரியும் அந்த கஷ்டம். பொடுகு தொல்லைக்கு, எதாவது மருந்துகள் பயன்படுத்தினால், பொடுகுகள் கொஞ்சநாளுக்கு இல்லாமல், இருக்கும்., மறுபடியும், திரும்பதிரும்ப வந்து தொல்லை கொடுக்கும். ஆனால் சம்பங்கி இலைகள் தலையில், பொடுகை போக்குவதோடு, தலை முடிக்கும் நல்ல பாதுகாப்பை கொடுக்கிறது.

 ●சம்பங்கி இலை, வெந்தயத் தூள் - இரண்டு ஸ்பூன். இவை இரண்டையும் சேர்த்து அம்மியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு பேக் போடுங்கள். அரைமணிநேரம் கழித்து அலசி வர, அரிப்பு, பொடுகு அத்தனையும் நீங்கி கூந்தல் வாசம் வீசும். தலைமுடி வளர்ச்சிக்கும், அடர்த்தியான தலை முடிக்கும் உதவுகிறது.

பாதவலி, பாதவெடிப்பு:

   உடலைத் தாங்கி நிற்கும் பாதங்களில் ஏற்படும் பாத வலி, பாத வெடிப்பு இவற்றை போக்குகிறது சம்பங்கி. இதன் இலையை நன்றாக மைய்ய அரைத்து பாதங்களில் தடவி வர, பாத வலி ஓடிவிடும். 200 கிராம் நல்லெண்ணெயுடன், 50 கிராம் சம்பங்கி பூக்களை போட்டு காய்ச்சி இதனுடன், சிறிது விளக்கெண்ணெய் கலந்து கணுக்கால் பாதங்களில் தடவிவர, சொரசொரப்பு,  வெடிப்பு இவையெல்லாம் காணாமல் போய்விடும். 

இந்தத் தைலத்தில் விளக்கெண்ணெய் சேர்க்காமல் எலுமிச்சை பழ சாறு சிறிது  கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். இந்தத் தைலத்தை தினமும் இரவு பாதங்களில் தடவி வர பாதங்கள் பட்டுப் போன்று மென்மையாகவும் அழகாகவும் மாறிவிடும்.


இயற்கை தரும் இளமை வரம்- சம்பங்கி அழகு குறிப்புகள்

சம்பங்கி குளியல் பவுடர்:

 •  சம்பங்கி -100 கிராம்
 • வெள்ளரிவிதை -20 கிராம்
 • பயத்தம்பருப்பு -200 கிராம்

  இவற்றை பொடியாக அரைத்து வைத்துக்கொண்டு சோப்பிற்கு பதிலாக, உடலில் தேய்த்து குளித்து வர, உடலுக்கு நல்லகுளிர்ச்சியும், தோல் நல்ல மினுமினுப்பும், பொலிவும் பெறும்.

தேவையற்ற ரோமங்களை நீக்க:

       
      உடலில் தேவையற்ற ரோமங்களை நீக்க சம்பங்கி உதவுகிறது.
 சம்பங்கி விதை 100 கிராம், கோரைக்கிழங்கு 200 கிராம், பூலாங்கிழங்கு 100 கிராம், சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த பவுடரை ஒரு நாள் விட்டு, ஒரு நாள் பூசி வர, தேவையற்ற முடி வலுவிழந்து, உதிர தொடங்கும்.

சம்பங்கி பேஸ்பேக்:

 முகத்திற்கு வசீகர அழகையும், நல்ல நிறத்தையும் கொடுக்கிறது சம்பங்கி போஸ்பேக்.
 சம்பங்கி பூ- 2, தேங்காய் பால் - 2 ஸ்பூன் இரண்டையும் கலந்து அரைத்து
முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக ஜொலிக்கும்.

பருக்கள் நீங்க:

 சிலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றி முக அழகை கெடுத்துவிடும். இதற்கு சம்பங்கி விதை 50 கிராம் சம்பங்கி பூக்கள் 50 கிராம் துளசி 20 கிராம் லவங்கம் 5 கிராம் வேப்பிலை 10 கிராம் இவற்றை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை வெந்நீரில் குழைத்து, பருக்கள் மீது தடவி வர, பருக்கள் குறையும்.

 ஒரு கைப்பிடி சம்பங்கி பூவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு வாரம் இருமுறை ஆவி பிடித்து வர முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.


--------------------------------------------------------------------



மாடிதோட்டத்தில் சம்பங்கி வளர்க்க, A to z அனைத்து தகவல்களையும் இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
        👇👇








நன்றி!!

இயற்கைவிவசாயி.

திரு.சுதாகர்கிருஷ்ணன்.

Post a Comment

0 Comments