Translate

இலுப்பை பூவின் மருத்துவ குணங்கள் { Iluppai }

 Health Benefits of ILUPPAI


Sudagarkrishnanchannels
Iluppai 


Madhuca longifolia

Bassia longifolia

madhūka, madkam, mahuwa, Butter Tree, mahua, mahwa, mohulo, Iluppai or vippa chettu.



"இல்லாத ஊர்ல இலுப்பை பூ சர்க்கரை" என்றொரு பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதென்ன இலுப்பை பூ சர்க்கரை அளவிற்கு சுவையாக இருக்குமோ? என நான் யோசித்திருக்கிறேன். இலுப்பை பூ எப்படி இருக்கும்? மரமா செடியா? இலுப்பை தாவரங்கள் இப்பொழுது எங்கு உள்ளது.? என பல கேள்விகள் எனக்குள். சரி அது பற்றிய ஆராய்ச்சியில் இறங்கி விடலாம் என தோன்றியது. அப்பொழுது நண்பர் ஒருவர் கூறிய தகவலின் படி, எங்கள் கடலூர் மாவட்டத்திலே, ராமநத்தம் கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கு கிட்டதட்ட இருபது ஏக்கர் பரப்பளவில் இலுப்பை மர காடு என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு மரங்கள். கோவிலுக்கு சொந்தமான மரங்கள். ராமநந்தம் ஊர் மக்கள் அந்த மரங்களை பரம்பரை பரம்பரையாய் பாதுகாத்து தெய்வமாய் வழிபடுகின்றனர். 

ன்றைய காலகட்டங்களில் பொதுவாக இலுப்பை மரங்கள் கோவில்களிலே அதிகம் வளர்த்தார்கள். கோவிலும் இலுப்பை மரங்களும் இல்லாத ஊர்களில் குடியிருக்கவே கூடாது என மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 

லைமுறைகளை கடந்தும் இலுப்பை மரங்கள் பயன்தரக்கூடியது. இலுப்பை எண்ணெய், பூக்கள் கொட்டைகள் மரபட்டைகள் என இம்மரத்தின் ஒவ்வொரு பாகமுமே, பெறும் பயன் தரக்கூடியது.

லுப்பை பற்றிய என்னுடைய தேடுதலில் நான் கண்டதும், கேட்டதும், கற்றறிந்ததும், வியந்த கருத்துக்களை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.


இலுப்பை மரங்கள்:

   இலுப்பை மரங்கள் தமிழகத்தை தாயகமாக கொண்ட மரங்கள். இலுப்பை வெப்பமண்டல மர வகையை சார்ந்ததாகும். அதனால் கோடை காலத்தில் இலைகளை உதிர்த்து விடுகின்றது. இலுப்பை மரங்கள் - சப்போட்டா மர இனத்தை சார்ந்தது. இலைகள் சப்போட்டா மரத்தின் இலைகளை ஒத்திருக்கின்றது. பழங்கள் சப்போட்டா பழங்களை விட, மிக அதிக அளவு சுவை கொண்டது. சப்போட்டா மரத்தை விட மிக உயரமாக வளரக்கூடியது. 100 அடிக்கு மேல் வளரக்கூடியது. இலுப்பை மரங்கள் முளைத்து பத்து வருடங்களுக்கு பின்பு தான் பலன் கொடுக்கும். இதன் ஆயுட்காலம் 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். குறைந்தது ஐந்து தலை முறையினரை பார்க்கக்கூடிய மரம்..

மரத்தின் உள்பாகம் மிகவும் உறுதி உடையது. குளக்கரைகளிலும், {அதாவது நீர்பாசனம் அதிகம் உள்ள இடங்களிலும்}, தரிசு நிலங்களிலும் சுலபமாக இலுப்பை மரங்களை வளர்க்கலாம்.

தமிழகம் தவிர நேபாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் இலுப்பை மரங்கள் காணப்படுகிறது. மேலும், ஜார்க்கண்ட் குஜராத், மத்திய பிரதேசம் பீகார், ஒடிசா கேரளாவிலும் அதிக அளவில் இலுப்பை மரங்களை காணலாம்.


Sudagarkrishnanchannels
Iluppai 


இலுப்பைபூக்கள் மற்றும் காய்கள் :

  இலுப்பை மர பூக்கள், வெண்மை நிறத்தில் உருண்டை வடிவமாக அதிக இனிப்புசுவை கொண்டதாக இருக்கும். பூக்களின் உள்ளே தேன் போன்ற திரவம் கொண்டதாக, சாறு நிறைந்து காணப்படும். பழங்களை குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணுவர். இலுப்பை பழத்தின் வாசனை சப்போட்டா பழ வாசனை போலவே இருக்கும். சப்போட்டா கொட்டைகள் [விதைகள்] முளைக்கும் தன்மை அற்றவை. அதனால், இலுப்பை மர விதைகளை [கொட்டைகளை] முளைக்கச் செய்து அதனுடன் சப்போட்டா மரக்கிளையை ஒட்டுக் கட்டியே, சப்போட்டா மரங்கள் உருவாக்கப்படுகின்றது. விவசாயத்திலே வேருன்றி வளர்ந்த எனக்கே, இந்த தகவல் மிகுந்த ஆச்சரியமாக தான் உள்ளது.


 நன்கு விளைந்த ஒரு மரத்திலிருந்து வருடத்துக்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை இலுப்பை பூவை எடுக்கலாம். 200 கிலோ வரை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையில் இருந்து 300 மில்லி எண்ணெய் எடுக்கலாம். இதுவே ஒரு டன் இலுப்பை பூவிலிருந்து 700 கிலோ சர்க்கரை எடுக்கலாம். இதில் தனி பொருளாக 300 கிலோ எரிசாராயம் கிடைக்கும். இந்த எரிசாராயம் மாற்றுப் பொருளாக பயன்படுத்தலாம். ஒரு மரத்தில் கிடைக்கும் 200 கிலோ பூவில் இருந்து, 140 கிலோ சர்க்கரையும் 60 கிலோ எரிசாராயம் எடுக்கலாம்.

பழந்தமிழர்கள் இலுப்பை பூவையும், பழத்தின் சதைப் பகுதியும் நொதிக்கச் செய்து சோமபானம் தயாரித்தனர். இது உடலுக்குத் தீங்கு விளைவிக்காத மதுவாக திகழ்ந்தது. இன்றைய கால கட்டங்களிலும் பீகார், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் இந்த பானத்தை அதிகமாக தயாரித்து பயன்படுத்துகின்றனர்.  இந்தப் பகுதிகளில் இலுப்பையிலிருந்து தயாரிக்கப்படும் பானமே, பிரதான மதுவாக, இருந்து வருகிறது. அதற்காக வட இந்தியாவின், பல பகுதிகளிலும் இருந்து அவர்கள் இலுப்பை பூக்களையும் பழங்களையும் விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இலுப்பை எண்ணெய்:

  இலுப்பை கொட்டைகளிலிருந்து எடுக்கடும் இலுப்பை எண்ணெய், சற்று வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். லேசான கசப்பு சுவையை கொண்டிருக்கும். இந்த எண்ணை குளிர்காலத்தில் உறைந்துவிடும். இலுப்பை எண்ணெய்யை மற்ற எண்ணெய்களை போலவே,  சமையலுக்குப் பயன்படுத்தலாம். ஆனால் சிறிது கசப்பு சுவையாக இருக்கும். இந்த எண்ணெய் வலி நிவாரண மருந்தாகவும் பயன்படுகிறது. சவர்க்காரம் தயாரிக்கவும், கோவில்களில் விளக்கு எரிக்கவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பழம் தமிழகத்தில் மின்சாரம் கண்டுபிடிக்காத காலங்களிலும், இருளை விளக்கிய பெருமை இதற்கு உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்காத காலத்தில் கோயில், வீடுகளில் தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெய் தான் பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணையில் விளக்கு எரியும் போது மனதுக்கு இதமான ஒரு வாசனை காற்றில் பரவும். நின்று நிதானமாக எரியும் என்பதால், தீவட்டிகளிலும் இந்த எண்ணையே பயன்படுத்தப்பட்டது. பல மன்னர்கள் எண்ணெய்க்காக  இலுப்பைத் தோப்புகளை உருவாக்கி, கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தார்கள்.  அதனால் தான் இன்றும் சிவன் கோவில் உள்ள இடங்களில் இலுப்பை மரங்களை காணலாம்.


இலுப்பை எண்ணெயில் ஈசனுக்கு விளக்கு ஏற்றி வழிபட திருமணத் தடைகள், குழந்தை இன்மை, காரிய தடைகள் நீங்கும். நினைத்த காரியம் வெற்றி அடையும், என புராணங்களில் குறிப்புகள் உள்ளது.


Sudagarkrishnanchannels
Iluppai 


   


அழிவின் விளிம்பில் இலுப்பை மரங்கள்

 
தமிழக பழங்குடி மக்களின் தாகத்தை தீர்த்து வந்த இலுப்பை பூக்கள் இப்பொழுது அழிவின் விளிம்பில் உள்ளது. 1950 - ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 30,000 மரங்கள் இருந்தன. ஆனால் 2015 - ஆம் ஆண்டில் கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 10,000 - ற்க்கும் குறைவான மரங்களே உள்ளது.




இலுப்பை மரத்தின் பயன்கள்:


   இலுப்பை தாவரத்தின் இலை, பூ, விதை பட்டை அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்டது. சங்க காலம் முதல் இன்றுவரை மருத்துவத்திறகாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாம்புக்கடி, வாத நோய், சர்க்கரை வியாதி, சளி இருமல், வயிற்றுப்புண், மூலநோய்கள் சுவாசக்கோளாறு, காயங்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலுப்பை பூ ஊறு காய், காசநோய்க்கு அரிய மருந்தாகும்.  மலச்சிக்கலுக்கு மருந்தாக இலுப்பை பூக்கள் பயன்படுகிறது. நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும். பசி உண்டாக்கும். சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். தும்மல் உண்டாக்கும்.

இலுப்பை புண்ணாக்கு உடல் முழுவதும் பூசி குளித்து வர தோல் நோய்கள், அரிப்பு, உடல் உஷ்ணம் இவை அனைத்தும் நீங்கும். வியர்வை மணமும் நீங்கும்.

இலுப்பை மரத்தின் அடியில் தார்ப்பாய் விரித்து, அதன் மீது கொட்டும் பூக்களை சேகரித்து, அந்த பூக்களை 3 நாள் வெயிலில் காய வைத்து, நன்றாக அடித்து உடைத்து, பொடி செய்து, காற்று புகாத வண்ணம் மண் பானையில் சேகரித்து கொள்ள வேண்டும்.
  • இந்தப் பொடியை தேனுடன் கலந்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வரும்பொழுது நினைவுத்திறன் அதிகரிக்கும்.
  • தாய்ப்பால் இல்லாத தாய்மார்களுக்கு தேனில் கலந்து கொடுக்க தாய்ப்பால் அதிகரிக்கும்
  • அவல் பொரியுடன் சாப்பிட்டு வர, கை கால் நடுக்கம் நீங்கி, உடல் வலிமை பெறும். எலும்புகளும் நரம்புகளும் நல்ல பலம் பெறும்.
இலுப்பை மரத்தின் வேர்களை இடித்து, தண்ணீருடன் கலந்து கொதிக்க வைத்து, குடிநீராக்கி குடித்து வந்தால், உடல் பலம் பெறும், நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

இதுதவிர இலுப்பை மரங்கள் விறகாகவும் பயன்படுத்தப்படுகிறது. மர சாமான்கள், சமையல் பாத்திரங்கள், மாட்டு வண்டி, குதிரை வண்டிச் சக்கரங்கள், மரப் பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் இலுப்பை மரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உப்பு நீரை அதிகமாக தாங்குவதால் படகுகள் செய்யவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இலுப்பை மரத்தில் உள்ள காய்கள் பழங்களாக பழுக்க தொடங்கும் பொழுதே, பறவைகளும் வண்டினங்களும், என பல உயிர்களும் தோட்டத்திற்கு படையெடுத்து வரும். குறிப்பாக வௌவ்வால்களுக்கு மிகவும் பிடித்த பழம் இலுப்பை பழங்கள். இப்பொழுதெல்லாம் வௌவ்வால்களை காணவே முடியவில்லை. இலுப்பை மரங்களின் அழிவு, வௌவ்வால் இனங்களின் அழிவிற்கு ஒரு காரணமாக இருக்கலாம். விவசாயத்திற்கு இலுப்பை மரங்கள் சிறந்த நண்பன் என்று கூறலாம். ஏனெனில் விவசாய நிலங்களில், இலுப்பை மரங்களை ஆங்காங்கே நட்டு வைத்தால் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியும்.



தலவிருட்சம்

  •  திருஇரும்பைமாகாளம்,
  • பழமண்ணிப்படிக்கரை,
  • திருக்கொடிமாடச் செங்குன்றூர் {திருச்செங்கோடு}. 
  • திருவனந்தபுரம் 
முதலிய திருக்கோயில்களில், இலுப்பை மரம் தலமரமாக உள்ளது. திரு பழமண்ணிப்படிக்கரை என்ற ஊரின் - தலமரத்தால், இலுப்பைப்பட்டு என்றே, தற்போது அந்த ஊர் அழைக்கப்பட்டு வருகிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி ஆலய வளாகத்தில், திருவள்ளுவருக்கு எழுப்பப்பட்டுள்ள கோவிலின் தலமரமாக விளங்குவது இலுப்பை மரம் தான்.







இலுப்பை


Sudagarkrishnanchannels
Iluppai 


 லகில் மிகவும் மதிக்கப்பட வேண்டியது மரங்கள் தான்.  ஏனெனில் மனிதர்கள் தரும் அனைத்து இடர்பாடுகளையும் தாங்கிக் கொண்டு மழையை கொண்டுவரும்  அற்புத படைப்பு அவைகள் தான். ஆனால் அலட்சியத்தால் அவற்றை நாம் கண்டும் காணாமல் விட்டு விட்டோம். இதனால் எண்ணற்ற பாரம்பரிய மரங்கள் காணாமல் போய்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பரிய மரமான இலுப்பை மரங்களும் அழிவின் விளிம்பில் உள்ளது என்பது வேதனையான உண்மையாகும்.  
 தமிழர்களின் வாழ்வியலில் பிரிக்கமுடியாத அங்கமாக இருந்தவை இலுப்பை மரங்கள். இலுப்பை விவசாயத்தினால், இயற்கை எண்ணெய் தயாரிப்பு, மதுபான ஆலைகள் என பல தொழில்களை உருவாக்க முடியும். இவை எல்லாவற்றையும்விட மழையையும் ஈர்க்க முடியும்.

 பொருளாதார ரீதியில்
 இம்மரமானது ஏக்கருக்கு சுமார் 150 முதல் 180 மரங்கள் வரை நட்டு வளர்க்கலாம். ஆண்டொன்றுக்கு எண்ணெய் எடுப்பது, பூ பட்டை, சர்க்கரை, புண்ணாக்கு, சிகைக்காய் என அனைத்துமே பணம் தான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மரமானது, ஒரு கன அடி ஆயிரம் ரூபாய் வரை விலை கொண்டது. 60 ஆண்டுகள் கழித்து, ஒரு மரத்தின் விலை 2 லட்சத்துக்கும் மேல் விலை போகும். இலுப்பை மரங்கள், ஒரு பணம் காய்க்கும் மரம் என்று அடித்துச் சொல்லலாம். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இலுப்பை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை. நன்றி!!





இயற்கைவிவசாயி,
திரு.சுதாகர் கிருஷ்ணன்.

Post a Comment

0 Comments