Velde Grape/Cissus Guadrangularis/பிரண்டை
இன்றைய பதிவில் பிரண்டையை பற்றியும், பிரண்டையின் வளர்ப்பு, மற்றும் மருத்துவ பயன்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம். பிரண்டை கொடியினத்தைச் சார்ந்தது. பிரண்டையில் பல வகைகள் உண்டு. அவற்றில் சாதாரண பிரண்டை நான்கு பட்டைகள் கொண்டது. இதுதான் சமையலில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. பிரண்டை வகைகளில் சாதாரண பிரண்டை சிவப்பு பிரண்டை உருண்டைப் பிரண்டை களிப்பிரண்டை தீம் பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப் பிரண்டை, என பல வகைகள் உள்ளன. பிரண்டை வெப்பமண்டல பகுதியினைச் சார்ந்த தாவரயினமாகும். இந்தியா இலங்கையில் அதிகம் காணப்படுகிறது. பிரண்டையின் பூக்கள் வெண்மை நிறத்திலும், பழங்கள் கருப்பு நிறத்திலும் காணப்படும். பிரண்டை மருத்துவ பயன்பாடு உடையது. மனித நடமாட்டம் குறைவாக உள்ள காடுகளில் வேலிகளில் படர்ந்து இருக்கும். பிரண்டையின் சாறு உடலில் பட்டால் அரிப்பை ஏற்படுத்தும். பிரண்டையின் வேர் மற்றும் தண்டுப்பகுதி மருத்துவ குணங்களை உடையது.
பிரண்டையின் வளர்ப்பு முறை:
பிரண்டையை வளர்ப்பது ரொம்ப ரொம்ப சுலபமான விஷயம். கடையிலிருந்து வாங்கி வரும் பிரண்டையின் தண்டை எடுத்து சாதாரணமாக மண்ணில் ஊன்றி வைத்தால் வளர்ந்துவிடும். விதைகளிலிருந்தும் வளர்க்கலாம். பிரண்டையை மாடித் தோட்டம் அல்லது வீட்டுத் தோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். பிரண்டை செடி வறட்சியை தாங்கி வளரக்கூடிய செடியாகும். வளர்ப்பது மிக மிக எளிதான விஷயம். பிரண்டை செடியை ஆடு மாடுகள் சாப்பிடாது. மேலும் வேலியில் தானாகவே படர்ந்து வளரக்கூடிய கொடியாகும். பிரண்டைக்கொடி தண்ணீர் இல்லாமலும் வளரும். தண்ணீர் இல்லாமல் வாடி இருக்கும் போது, திரும்பவும் தண்ணீர் ஊற்றும் போது தானாகவே உயிர்த்தெழுந்து வளரக்கூடிய கொடியாகும். பிரண்டையில் வரும் பூச்சிகள் என்ன என்பதை பார்த்தோமானால், பச்சை புழுக்கள் அதிகமாக வரும். பச்சை புழுக்களை கட்டுப்படுத்திட வாரமொருமுறை வேப்பம் எண்ணெய்யை ஒரு லிட்டர், தண்ணீருக்கு இரண்டு மில்லிலிட்டர் கலந்து, ஒட்டு திரவத்தோடு சேர்த்து தெளித்து வந்தால் பச்சை புழுக்களின் பிரச்சினைகளிலிருந்து பிரண்டையை காப்பாற்றலாம். மற்றபடி வேறு எந்த பூச்சிகள் பிரச்சனையும், பிரண்டையில் வருவதில்லை. மண் கலவையில் கொடுக்கும் சத்துக்களை கொடுத்தாலே போதுமானது. தனியாக வேறெந்த உரங்களும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் கிடைக்கும் அரிசி கழுவிய தண்ணீர், சாப்பாடு வடித்த கஞ்சி, காய்கறி கழுவிய தண்ணீர் பருப்புகள் கழுவிய தண்ணீர், இவற்றுடன் தண்ணீர் கலந்து பிரண்டைக்கொடிக்கு ஊற்றி வந்தாலே போதும். நன்கு வளர்ந்து பலனை கொடுக்கும். ஒருமுறை நாம் பிரண்டை கொடியை வைத்துவிட்டால் போதும். வாழ்நாள் முழுவதும் அதிலிருந்து பிரண்டையை பறித்துக் கொள்ளலாம். பிரண்டை வளர்ந்ததும் அடிக்கடி கத்தரித்து உணவிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பின்னர், கவாத்து செய்ததில் இருந்து பிரண்டை துளிர்விட்டு தானாக வளர ஆரம்பிக்கும். இப்படியே அடிக்கடி கவாத்து செய்து பிரண்டையை வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
பிரண்டையை அறுவடை செய்யும்போது இளம் பிரண்டையை அறுவடை செய்து துவையல் அரைப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால் பிரண்டை முற்றி விட்டால், நார்கள் அதிகமாக இருக்கும். முற்றிய பிரண்டையை பயன்படுத்தினால், வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். கடையிலிருந்து வாங்கி வரும் பிரண்டையை ஊன்றி வளர்க்கும் போது முக்கியமாக பிரண்டையின் தண்டுகளில் எது அடிபாகம், எது மேல் பாகம்? என்பதை தெரிந்து கொண்டு அடிப்பாகத்தை மட்டுமே மண்ணில் ஊன்றி வைக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் மேல் பாகத்தை ஊன்றி வைத்தால் அது துளிர்விட்டு வராது. பிரண்டை வளர்ப்பதற்கு மண் கலவை என்று எடுத்துக் கொண்டோமானால், எல்லா மண்ணிலும் சுலபமாக வளரக்கூடியது. உங்களிடம் தோட்டத்து மண், அல்லது மரத்திற்கு கீழ் இருக்கும் மண் இரண்டு மடங்கு எடுத்துக்கொண்டு, மணல் ஒரு மடங்கு அல்லது தேங்காய் நார் ஒரு மடங்கு. தொழு உரம் அல்லது மண்புழு உரம் ஒரு மடங்கு. உயிர்உரங்கள் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம் டிரைகோடெர்மா விரிடி பாஸ்போபாக்டீரியா இவற்றையும் கலந்து, கைப்பிடியளவு வேப்பம் புண்ணாக்கு சேர்த்து மண் கலவை தயார் செய்து பிரண்டையை நடவு செய்ய ஆரம்பிக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மண்கலவையில் பிரண்டையை நட்டு வைத்தால் பிரண்டை நன்றாக வளரும். ஒருமுறை மண்கலவையில் கொடுக்கும் சத்துக்களே போதும், பிரண்டை நன்றாக வளர்ந்து பலன் தரும். பிரண்டையின் வளர்ப்பு முறைகளை தெரிந்து கொண்டிருப்பீர்கள். இப்பொழுது பிரண்டையின் மருத்துவ பயன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
பிரண்டையின் மருத்துவ பயன்கள்:
பிரண்டை எலும்பு வளர்ச்சி, பசியின்மை, சுளுக்கு, செரிமானம், வயிறு உப்பிசம், முதுகு வலி, கழுத்து வலி, வாந்தி, பேதி, வாய்ப்புண், வயிற்றுப்புண், உடல் பருமன், பசியின்மை, மலச்சிக்கல், போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது. துவையல் செய்து சாப்பிடுவதால், அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வாயுப் பிடிப்பு, தீராத வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக செயல்படுகிறது. மேலும் உடல் சுறுசுறுப்பை அதிகரித்து ஞாபக சக்தியை பெருகச் செய்கிறது. மற்றும் மூளை நரம்புகளை பலப்படுத்தும், எலும்புகளுக்கு அதிக சக்தி தருகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துகிறது. வாயு சம்பந்தமான நோய்கள் இருந்தால், வயிறு செரிமான சக்தியை இழந்துவிடும். அச்சூழலில் பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியைத் தூண்டி, அஜீரணக் கோளாறைப் போக்குகிறது. மேலும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் கொழுப்பைக் கரைத்து, இரத்த ஓட்டத்தை சீராக செயல்பட வைக்கிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படுகின்ற இடுப்பு வலி, முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் பிரண்டை துவையல் சாப்பிட்டுவந்தால் நல்ல பலன் தரும். பொதுவாக மனிதர்களுக்கு எலும்பு சந்திக்கும் இடத்தில் நரம்பு முடிச்சில் வாயு சீற்றத்தினால், தேவையற்ற நீர் தேங்கிவிடும். இதன்காரணமாக முதுகு வலி, கழுத்து வலி வரும், மேலும் இந்த நீர் முதுகுத் தண்டு வழியாக இறங்கி பசையாக மாறி, முதுகுத்தண்டு மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக இறங்கி இறுகி முறுக்கிக் கொள்ளும். தலையை அசைக்க முடியாது. அவர்கள் இத்தகைய பாதிப்பிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையின் இளந்தண்டை அரைத்து பற்றுப் போட்டால் எலும்பு முறிவு, அடிப்பட்ட வீக்கம், வலி நிவாரணம் கிடைக்கும். பிரண்டையை பறித்து காயவைத்து அம்மியில் வைத்து அரைத்து, தூள் செய்து நீர்விட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள பகுதியில் தினமும் பூசி வர, எலும்பு முறிவு சரியாகி எலும்புகள் கூடி வலுப்பெறும்.
பிரண்டையை பறித்து துவையலாக அரைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வர குழந்தைகளின், எலும்புகள் வளர்ச்சி பெறும். பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வர உடலில் சுறுசுறுப்பு அதிகமாகும். ஞாபக சக்தி அதிகமாகும். பிரண்டையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அந்த சாற்றை ஒரு தேக்கரண்டியுடன், ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் கலந்து தினமும் காலை வேளையில் ஏழு நாட்கள் சாப்பிட்டு வர பெண்களுக்கு வரும் மாதவிடாய் பிரச்சனை சரியாகி ஒழுங்காக மாதவிடாய் ஏற்படக்கூடும். பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள, பூச்சிகள் அழியும். . பசியைத் உண்டு பண்ணும். வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் நீங்குவதற்கு மருந்தாக சிறந்து விளங்குகிறது. பிரண்டை, சுளுக்கிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. நாம் வேலை செய்கின்ற பொழுது அல்லது நடக்கும்போது கால்களில் சுளுக்கு ஏற்படும். அந்த சுளுக்கை குணமாக்கிட பிரண்டை சாற்றை மஞ்சள் உப்போடு சேர்த்து கடாயில் சூடுபடுத்தி சுளுக்கு ஏற்பட்ட பகுதியில் தடவி வந்தால் சுளுக்கு குணமடையும். பிரண்டைத் துவையலை அன்றாட உணவோடு சேர்த்துக் கொண்டால் மூளை நரம்புகள் வலுப்பெறும். பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, மோரில் சிறிது உப்புத்தூள் சேர்த்து ஊறவைத்து, காயவைத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை, நாக்கில் சுவையின்மை போன்ற பிரச்சனைகள் குணமாகும். பிரண்டைத் துவையல் வயிற்றுப்புண், வாய்ப்புண், ஊளைச்சதை இவற்றைத் குணமாக்குகிறது. பிரண்டைத் துவையலை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்துகள் நீங்கும். பொதுவாக உடலில் அதிக கொழுப்பு சத்துக்கள் இருந்தால், இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து, இரத்த ஓட்டத்தை குறைக்கும்; இதனால் இதயத்திற்கு தேவையான இரத்தம் செல்வது தடைபடுகிறது, அப்படி தடைபடும்பொழுது, இதய வால்வுகள் பாதிப்படைகின்றன. இப்பிரச்சனைகள் வராமல் இருக்க பிரண்டைத் துவையலை அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொண்டால் ரத்த ஓட்டம் சீராகும். பிரண்டைத் துவையல் உடலில் தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை வாய்ந்தது. மேலும் புற்று நோய்க்கு கொடுக்கும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கிறது. கழுத்து வலி, இடுப்பு பகுதியில் வலி வந்து, மிகவும் அவதிப்படுபவர்கள், இளம் பிரண்டையை நிழலில் உலர்த்தி அதை பொடி செய்து, அதனோடு வெந்நீர் கலந்து பசைபோல் ஆக்கி, கழுத்துப் பகுதி அல்லது முதுகு பகுதி எந்த இடத்தில் வலி இருக்கிறதோ, அவ்விடத்தில் தடவி வந்தால் கழுத்துவலி முதுகுவலி பிரச்சினைகள் உடனடியாக சரியாகும். பிரண்டையை தீயில் வதக்கி அதனுடைய சாறை எடுத்து காது வலியால் அவதிப்படுபவர்களுக்கு, காதில் சாற்றை விட்டால், காது வலி சரியாகும். காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகளும் விரைவில் குணமாகிவிடும். இந்தப் பதிவில் பிரண்டையை பற்றியும், பிரண்டையின் வகைகளைப் பற்றியும், பிரண்டையின் மருத்துவ குணங்களைப் பற்றியும், விரிவாகப் பார்த்தோம். வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே இருக்கும் வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். அதனை பார்த்து கூட நீங்கள் பயன்பெறலாம். நன்றி!
0 Comments