Translate

பாசிபருப்பு புடலங்காய் சாம்பார்

சாம்பார் தமிழர்களின் உணவுவகைகளில் மிகமுக்கியமான இடத்தை வகிக்கிறது. சாம்பரில் சேர்க்கப்படும் பருப்புகளில் அதிகளவில் புரசத்துக்களும் நார்சத்துக்களும் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்புகாரணிகளை கொண்டுள்ளது. உடலில் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தண்ணியான சாம்பாராக இல்லாமல், திக்கான பருப்புகடையலை ஒருகிண்ணம் அளவில் உணவில் தினமும் சேர்த்துக்கொள்வது சிறந்தது. வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு தேவைப்படும் அதிகளவு ஊட்டசத்து தேவையை நிறைவுசெய்கிறது. அதனால் இட்லி,தோசை சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு சாம்பாரை துணைஉணவாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கான வழியாகும். மற்றபருப்புக்களை காட்டிலும் பாசிபருப்பு அதிக ஊட்டசத்துக்களை கொண்டது. வாயு பிரச்சனை உள்ளவர்கள், பெருங்காயத்தூளை உணவோடு சேர்த்துக்கொள்ளலாம். அதற்காக சாம்பாரை தவிர்க்கவேண்டியதில்லை.

பாசிபருப்பு புடலங்காய் சாம்பார்:

Sudagarkrishnanchannel
Pasi Paruppu sambhar 

தேவையான பொருட்கள்:

  1. பாசிபருப்பு-100கிராம்
  2. தக்காளி-4(சிறியது)
  3. பூண்டு-4பல்
  4. வெங்காயம்-1 சிறியது.
  5. மஞ்சள் தூள்-1சிட்டிகை
  6. புடலங்காய்-1
  7. பெருங்காயத்தூள்-1சிட்டிகை
  8. மிளகாய் தூள்-1ஸ்பூன்

தாளிக்க:

  1. கடலை எண்ணெய்-1குழி கரண்டி.
  2. கடுகு-1/2 ஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு-1/2ஸ்பூன்
  4. சீரகம்- 1/4ஸ்பூன்
  5. வரமிளகாய்-,2
  6. கறிவேப்பிலை-1கொத்து.

செய்முறை:


குக்கரில் ஐந்தாறு துண்டுகளாய் நறுக்கிய வெங்காயம், தக்காளிகளை சேர்க்கவும். பின்னர் புடலங்காய் பூண்டு இவற்றையும் பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும். மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், பாசிபருப்பு ஒருகப் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.ஒரு கப் பாசிபருப்பிற்கு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். குக்கரை மூடியிட்டு, வெயிட் போடவும். மூன்று அல்லது நான்கு விசில் வரை வந்தால் போதும். பிரஷர் நீங்கிய பிறகு குக்கரை திறந்து, கரண்டியால் கொஞ்சமாக மசித்து விடுங்கள். மிளகாய் தூள், உப்புத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.  உப்பின் அளவினையும், காரத்தினையும் சுவைத்துப் பார்த்துக் கொள்ளவும். சிறிய வாணெலியோ, அல்லது குழம்பு கரண்டியோ அடுப்பில் வைத்து கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் கிள்ளி போட்டு தாளித்து, குழம்பில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்பொழுது சாம்பார் கலவையை அடுப்பில் வைத்து, ஒரு கொதி கொதிக்கவிடவும் சாதரணமாக சமையல்களில் தாளித்த பிறகு சமையல் முடிந்துவிடும். சாம்பாரும் தயாராகிவிடும். ஆனால் இந்த பாசிபருப்பு புடலங்காய் சாம்பாரில், தாளித்த பிறகு மிளகாய்த்தூள் வாசம் போக கொதிக்க விட வேண்டும். குறைந்தது மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். தாளித்த மிளகாய், கறிவேப்பிலை சாரம் குழம்பில் இறங்கி, குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். அடுப்பை நிறுத்திய பின்னர், கொத்தமல்லி தழை தூவிவிடவும். இப்பொழுது மிகவும் சுலபமான, சுவையோடு கூடிய பாசிபருப்பு, புடலங்காய் சேர்த்த சாம்பார் தயாராகிவிட்டது. இதனுடன் சாப்பிட உருளைகிழங்கு பொரியல் அருமையாக இருக்கும், அசைவத்தில் மட்டன், சிக்கன் வறுவல் மிகப்பொருத்தமானதாக இருக்கும். இது ஒரு Instant சாம்பார். நீங்கள் பேச்சிலர்ஸா வெளியிடங்களில் தங்கி  இருந்து சமைக்கும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நானும் MBA படிக்கும் போது நண்பர்களிடம் கற்றது தான். மிகவும் சுவையுடையதாக, எளிமையானதாக இருக்கும். 

Sudagarkrishnanchannel
Pasi Paruppu sambar 

பாசிபருப்பு மற்றும் புடலங்காயில் உள்ள ஊட்டசத்துக்கள்:

பாசிபருப்பு: 

வைட்டமின் பி1, பி5, பி6, பி2 மற்றும் வைட்டமின் சி,ஏ போன்ற ஊட்டசத்துக்கள் பாசிப்பருப்பில் அடங்கியுள்ளது.  செம்புச்சத்து, இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளது. கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், புரதச்சத்து, நார்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவையும் உள்ளது. கண்கள் , சருமம் கல்லீரல், நகங்கள் அனைத்தின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது. இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. செரிமான மண்டலத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மற்ற பருப்புக்களை விட பாசிப்பயறு விரைவில் செரிமானமடைந்துவிடும். பாசிப்பருப்பில் காணப்படுகின்ற பொட்டாசியம், மெக்னீஷியம் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. எனவே பாசிப்பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். பாசிப் பருப்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ரத்த கொழுப்பு உடலில் சேராமல் பாதுகாக்கிறது. பாசிப்பருப்பில் சின்னமிக் அமிலம், பினாலிக் அமிலம், போன்ற ஆன்டிஆக்ஸிடண்ட்கள் பிரீரேடிக்களின் செயல்பாட்டு தன்மையை கட்டுபடுத்துகின்றன. பிரீரேடிக்கள் என்பது புற்றுநோய், சர்க்கரை நோய், இதயநோய் ஏற்பட காரணமான செல்கள். இதனை கட்டுபடுத்தி, இத்தகைய கொடியநோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஆரோக்கியமாக இயற்கை முறையில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள்  தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சருமம் பளபளப்பிற்கும், மேம்பாட்டிற்க்கும் தேவையான ஊட்டசத்துக்களை கொண்டுள்ளது.  மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான இரத்த ஒட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் தேவையான நார்சத்து, புரதச்சத்து இவையாவும் பாசிபருப்பில் அடங்கியுள்ளது. இந்த ஊட்டசத்துக்கள் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது. பாசிபருப்புகள் பொங்கல்  கூட்டு, பொரியல் போன்ற பலவகை உணவு வகைகளில் பயன்படுத்தபடுகிறது. உங்களுக்கு பிடித்த முறையில் சமைத்து, எதாவது ஒருவகையில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

புடலங்காய்:

உடல் மெலிந்து காணப்படுகிறவர்களை ஓட்டடைக்குச்சி என்று கிண்டல் செய்வார்கள். இவர்களெல்லாம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க புடலங்காயை உணவில் சேர்த்து வரலாம். அஜிரணக்கோளாறு நீங்கி பசியைத் தூண்டும்.  குடல்புண்கள், வயிற்றுப்புண்கள், தொண்டைபுண்கள் உள்ளவர்கள் தொடர்ந்து எடுத்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும். மலச்சிக்கலை போக்கி, மூல நோயை குணமாக்கவல்லது. மூல நோயால் அவதிப்படுபவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.  கர்பப்பை கோளாறுகள், மற்றும் வெள்ளைபடுத்தல் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு புடலங்காய் உணவுகளை தவறாமல் கொடுத்து வருவது நல்லது.  ஆண்மை குறைபாட்டை நீக்கி, விந்தணுக்கள் அதிகரிக்கவும் உதவுகிறது.  கண்பார்வை தெளிவடைய உதவுகிறது. உடலில் சேர்ந்துள்ள தேவையற்றநீரை வெளியேற்ற உதவுகிறது. புடலங்காயில் பிஞ்சாகவோ அல்லது நடுத்தரமானதாகவோ தேர்ந்தெடுத்து சமைத்து சாப்பிடவேண்டும்.முற்றிய காய்கறிகளை சாப்பிட்டால் பல்வேறு உடல்உபாதைகள் ஏற்பட்டுவிடும். நன்றி!
உணவில் காய்கறிகளை தினமும் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானதாகும்.

Post a Comment

0 Comments