Translate

Health Benefits of Keezhanelli { Phyllanthus niruri }

கீழாநெல்லி 


Sudagarkrishnanchannels
Health Benefits of Keezhanelli 

Gale of the wind, Stonebreaker or Seed-under-leaf


எவ்வித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே முளைக்கும் அற்புத மூலிகை கீரை தான் கீழா நெல்லி. இது வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுவதும் மருத்துவ பயன்பாடு உடையதாகும். நீர்நிலைகள், வாய்க்கால் வரப்புகள், சாலையோரங்களில் தானாகவே வளர்ந்து கிடக்கும். பார்ப்பதற்கு புளிய மரத்தின் இலைகளைப் போல இருக்கும். இதன் இலைகளுக்கு கீழே பூக்களும், காய்களும் அழகாக வரிசைகட்டி இருக்கும். 

கீழாநெல்லி கீரைகளில் பிலாந்தின் என்ற மூலப்பொருள் அதிகமாக உள்ளது. அதனால் கீரை மிகுந்த கசப்பு சுவையாக இருக்கும். அதிக பொட்டாசியம் சத்து நிறைந்த கீரை இது. 

  • கீழாநெல்லி மூலிகை கீரையின் இலைகளுக்கு கீழே, சிறிய நெல்லிக்காய் போன்ற காய்கள் இருக்கும். அதனால்தான் இதற்கு பெயர் கீழாநெல்லி. 
  • இது போலவே தோற்றமுடைய மற்றொரு கீரையும் உண்டு. அதன் இலைகளின் மேலே சிறிய நெல்லிக்காய் போன்ற காய்கள் இருக்கும். அந்த கீரையின் பெயர் "மேலா நெல்லி". இந்தக்கீரையும் கீழாநெல்லி போலவே அதிக மருத்துவப் பயன்களைக் கொண்டது.

கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்:

 
தொன்றுதொட்டே தமிழர்கள் மருத்துவத்தில் மஞ்சள் காமாலை நோய்க்கு கீழாநெல்லி மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை, இன்றும் கிராம மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலும் இருந்து, தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கீழாநெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச் சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. கீழாநெல்லியை அரைத்து அப்படியே கூட குடிக்கலாம். இதை முடக்கத்தான் கீரை, தூதுவளை கீரை போன்று தோசை மாவில் கலந்து தோசையாக வார்த்து சாப்பிடலாம். கீழாநெல்லி கீரையை உலர்த்தி பொடி செய்து, மோரில் கலந்தும் குடிக்கலாம். கீழாநெல்லி கீரை பொடி நாட்டு மருந்து கடைகளிலும், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற வலை தளங்களிலும் கூட விற்கப்படுகிறது. வேண்டுமென்றால் அந்த பொடியை கூட வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து பசும்பாலுடன் சேர்த்து அரைத்து குடிக்கலாம். கீழாநெல்லி இலையை போன்று அதன் காய்களும், வேரும் கூட மருத்துவ உலகில் அதிகம் பயன்படுகிறது. உடல் உறுப்புகளை மட்டுமல்லாமல், வெளிப்புற அழகையும் பாதுகாக்க கீழாநெல்லியை இலைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். கூந்தல் வளர்ச்சியில் நம் முன்னோர்கள் கீழாநெல்லியை பயன்படுத்தினார்கள். கீழாநெல்லி மூலிகை எந்த உறுப்புகளை எப்படியெல்லாம் பாதுகாக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்வோம். வாருங்கள். பதிவுக்குள் தொடர்ந்து பயணிப்போம்.


Sudagarkrishnanchannels
Health Benefits of Keezhanelli 


என்றும் 16 போன்ற இளமை தோற்றத்திற்கு:


  கல்லீரலின் இயக்கம் சீராக நடைபெற்றால், உடலில் அழகும் ஆரோக்கியமும், நீண்ட இளமையும் எப்பொழுதும் இருக்கும். கல்லீரல் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டால் அதாவது கல்லீரல் பாதிப்பு அடைந்து விட்டால், நமது உடலில் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இளமையிலேயே முதுமைத் தோற்றம் வந்து விடும். எனவே கல்லீரலை பலம் பெற செய்தாலே போதும். உடலில் தோன்றும் அனைத்து விதமான நோய்களின் பாதிப்புகளும், வெகு எளிதாக விலகிவிடும். 

கல்லீரல் பாதிப்பு ஏற்படாமலிருக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ஒரு எளிய வைத்தியம்.

  • பச்சையான கீழாநெல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக மை போல அரைத்து கொள்ள வேண்டும். 
  • அரைத்த விழுதில், நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு, அதனை பசும் மோரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, கல்லீரல் பலம் பெறும். 
மற்ற உறுப்புகளும் ஆரோக்கியமாக இயங்க இது உதவி புரியும். எப்போதும் இளமை நீடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். நமது உடலில் மிக முக்கிய உறுப்புகளான கல்லீரல், இரைப்பை, சிறுநீரகம், பித்தப்பை கணையம், மண்ணீரல், கருப்பை போன்ற ராஜ உறுப்புகள் அனைத்தும் பழுது ஏற்படாமல் நல்லமுறையில் பாதுகாக்கப்படும்.

சர்க்கரைநோய் பாதிப்புகள்:

 
 சிறுநீரக பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க கீழாநெல்லி உதவுகிறது. கீழாநெல்லியை ஏதாவது ஒருவகையில் வாரம் இரண்டு முறை அல்லது மூன்று நாட்களுக்கு எடுத்து வந்தால், சிறுநீரகம் பலம் பெறும். இதன் மூலம் மண்ணீரல் பழுதடையாமல், பாதுகாக்கப்படும். நமது உடலில் மண்ணீரல் பழுதடையாமல் இருந்தால், சர்க்கரை நோய் பாதிப்புகள் உடலில் தோன்றாது.

 சர்க்கரை நோயின் பாதிப்பால் இன்சுலின் சுரப்பு குறைந்து இருந்தாலும், கீழாநெல்லியை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். கணையம் நன்கு செயல்பட துவங்கும்.

  • சர்க்கரை நோயின் பாதிப்பில் இருப்பவர்கள், கீழாநெல்லியுடன் சம அளவாக வெள்ளை கரிசலாங்கண்ணியை சேர்த்து இரண்டையும் பொடியாக செய்து கொண்டு, 
  • இதனை தினந்தோறும் காலை மாலை இருவேளையும், 3 கிராம் அளவிற்கு எடுத்து, வெந்நீரில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர, சர்க்கரை நோயின் பாதிப்புகள் அனைத்தும் நாளடைவில் முழுமையாக குணமாகிவிடும். 
  • மேலும் உடலில் மற்ற நோய்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் நமது உடலை பாதுகாக்கும்.

 ரத்த சோகை இருப்பவர்கள் இந்த மருத்துவ முறையை கடைபிடித்து வந்தால், ரத்தசோகை நீங்கும். அத்துடன் புதிய இரத்தமும் அதிகரிக்கும்.

ஆண்மை குறைபாடுகள் நீங்க,

    ஆண்மை குறைபாடுகள், விந்து பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கீழாநெல்லி ஒரு வரப்பிரசாதமாகும். கீழாநெல்லியுடன் சம அளவாக ஓரிதழ் தாமரை, விஷ்ணுகிரந்தி இரண்டையும் கலந்து, இதை மைபோல அரைத்து, ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர இளமையில் தோன்றும் முதுமை மறையும். மேலும் ஆண்மை சக்தி அதிகரிக்கும். நீர்த்த விந்து இறுகி கெட்டி படும். விந்தணுக்களின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். மேலும் ஆண்மை குறைபாடுகள் தொடர்பான நோய்கள் அனைத்திற்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது கீழாநெல்லி.

மஞ்சள்காமாலை குணமாக,

  •  கீழாநெல்லி இலை,
  • கரிசிலாங்கண்ணி இலை 
  • தும்பை இலை 
இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். இதனை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, காயவைத்து ஆறிய பசும்பாலில் கலந்து, காலை வேளையில் தொடர்ந்து 15 நாட்கள் பருகி வர, மஞ்சள் காமாலை பூரணமாக குணமாகும். இந்த மருந்தை சாப்பிடும் காலங்களில் உணவில் உப்பு, புளி, காரத்தை முழுமையாக நீக்க வேண்டும். பால்சாதம் அல்லது மோர் சாதம் சாப்பிட்டு வந்தால், இந்த மருத்துவ முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்பது உறுதி.

வெள்ளைபடுதல் நீங்க,

வெள்ளைப்படுதல் நோய் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் அரிப்பும், துர்நாற்றமும் பெண்களை படாய்படுத்தும். இதற்கு கீழாநெல்லி நல்ல மருந்தாக பயன்படுகிறது. கையளவு கீழாநெல்லி மூலிகை இலைகளை எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்து, அதனை மூன்று டம்ளர் நீரில் சேர்த்து, ஒரு டம்ளர் நீராக வற்றி வரும் வரை நன்றாகக் காய்ச்ச வேண்டும். இந்த கீழாநெல்லி தேநீரை, காலை மாலை என இருவேளைகளிலும் குடித்து வர, வெள்ளைப்படுதல் நோய் விரைவில் குணமடையும்.

நீர்த்தாரை ரணம் குணமாக:

 கீழாநெல்லி, ஓரிதழ்தாமரை, யானை நெருஞ்சில் இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக அரைத்து கொள்ளவேண்டும். இதிலிருந்து,  ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொண்டு, இதனை எருமைத் தயிரில் கலந்து 10 நாட்கள் காலையில் சாப்பிட்டு வர, நீர்த்தாரை ரணம் குணமாகும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் நீங்கும். இந்த மருத்துவ முறையை கடைபிடிக்கும் போது அதிக காரமும்  மிகுந்த சூடும் இல்லாமல் உணவை சாப்பிடவேண்டும். அசைவ உணவுகளையும் தவிர்த்து விடுவது நல்லது.

Sudagarkrishnanchannels
Health Benefits of Keezhanelli 

சொரி சிரங்கு குணமாக,

 கீழாநெல்லி இலையுடன் மஞ்சளும் உப்பும் சேர்த்து அரைத்து தினமும், உடலுக்குத் தேய்த்து குளித்து வந்தால், சொறி சிரங்கு போன்ற நோய்கள் குணமாகும்.


பார்வை திறன் அதிகரிக்க:

    கீழாநெல்லி இலைகள், மூக்கிரட்டை கீரை, பொன்னாங்கண்ணி இலைகள் -  இவைகளை சம அளவாக எடுத்து, காயவைத்து பொடி செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதிலிருந்து மூன்று கிராம் எடுத்து, இருநூறு மில்லி பசு மோரில் கலந்து, இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர, மாலைக்கண்நோய், பார்வை மங்கல், வெள்ளெழுத்து போன்ற பார்வை குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். மேலும் கண்ணில் பார்வை திறனும் அதிகரிக்கும்.

தீராத தலைவலி நீங்க:


  கீழாநெல்லி இலை சாறு, உத்தாமணி இலைச்சாறு, குப்பைமேனி இலை சாறு இவைகளை சமஅளவாக எடுத்துக்கொண்டு, இதற்கு சமமாக நல்லெண்ணெய் சேர்த்து இதை தைல பதமாக காய்ச்சி வடித்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த தைலத்தை பயன்படுத்தி வந்தால், தலைபாரம், நீங்காத தலைவலி நீங்கும். மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பீனிச நோய் குணமாகி மூக்கடைப்பு நீங்கும். அதிக மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும்போது, இதிலிருந்து 2 சொட்டு எடுத்து இரண்டு மூக்கிலும் விட்டு வர மூக்கடைப்பு உடனே குணமாகும்.
கீழாநெல்லி வேர், சீரகம் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்த சாற்றை பருகி வந்தால் தலைவலி  விரைவில் சரியாகிவிடும்.

விக்கல், ஏப்பம், வயிறு தொந்தரவுகள்:


கீழாநெல்லியை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து இதற்கு சமமாக மிளகு வெள்ளைப் பூண்டு சேர்த்து மை போல அரைத்து சிறு சிறு மாத்திரைகளாக செய்து நல்ல வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் இதில் இரண்டு மாத்திரை வீதம் சாப்பிட்டுவர சாதரண காய்ச்சல், முதல் குளிர்காய்ச்சல், நாள்பட்ட காய்ச்சல் வரை குணமாகும். சீதபேதி வயிற்று மந்தம் முதலியவையும் குணமாகும். மேலும் விக்கல், ஏப்பம் ஏற்படும் சமயம் இந்த மாத்திரைகளில் ஒன்றை மென்று சாப்பிட்டு வர வாய்வு தொந்தரவால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் முழுமையாக நீங்கி விடும்.

கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நன்றாக அரைத்து, மோரோடு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப்புண் அல்சர் மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.


தலைமுடி உதிர்வு பிரச்சனைகள்:

   கூந்தல் பராமரிப்பிலும் கீழாநெல்லிக்கு தனி இடம் உண்டு. தலை உஷ்ணத்தால் முடி உதிர்வு பிரச்சினை அதிகமாக இருப்பவர்கள் கீழாநெல்லி இலையை அரைத்து தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வந்தால், தலைமுடி உதிர்வு சட்டென்று நிற்கும். மேலும் புதிய முடிகளும் உற்பத்தியாகும். தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

கீழாநெல்லி பொடி: 


  கீழாநெல்லி செடியை வேருடன் பிடுங்கி, சுத்தம் செய்து, மர நிழலில் காயவைத்து பொடி செய்து, ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். தற்போது நாட்டு மருந்து கடைகளிலும் கீழாநெல்லி பொடி கிடைக்கிறது. அதனையும் வாங்கி பயன்படுத்தலாம். இந்த பொடியில் ஏராளமான மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளது.
  •  கீழாநெல்லி பொடியில் 3 கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து காலை வேளைகளில் தொடர்ந்து பருகிவர இரைப்பையில் ஏற்படும் புண்கள் மற்றும் சிறுநீரகம் நல்ல முறையில் சீராக இயங்கும்.
  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினம்தோறும் கீழாநெல்லி பச்சையாகவோ, அல்லது பொடியாகவோ செய்துகொண்டு இதை பசு மோருடன் கலந்து தொடர்ந்து காலை வளையில் தினந்தோறும் சாப்பிட்டு வர, நீரிழிவு நோய் குணமாகும்.
மேகம் சம்பந்தமான வெள்ளை வெட்டை போன்ற நோய்களையும் கீழாநெல்லி பொடி குணப்படுத்தும். மஞ்சள் காமாலை வருவதை தடுக்கும். கல்லீரல் பாதிப்பை கட்டுப்படுத்தும். இளமையும் அழகும் பொலிவும் எப்பொழுதும் இருக்கும்.



"சீதமதி பித்த விடன் செவ்விழியி நோய்க் கூட்டம் 
பூதமொடு பேயிரத்தப் போக்குகளும் பூதலத்துட்
டாழ்வாய்ப் பணிந்தேகுந் தப்பாது நற்புலத்துக்
 கீழ்வாய் யெனு நெல்லிக்கே!"

கீழாநெல்லியின் அற்புத பயன்களை இவ்வாறாக அகத்தியர்குணபாடம் குறிப்பிடுகிறது.
 மருத்துவ தாவரங்களில் முதலிடத்தை கீழாநெல்லிக்கு தரலாம். அப்படி ஒரு அற்புத சக்தி கீழாநெல்லி மூலிகைக்கு உண்டு. நோய்கள் இன்றி வாழ கீழாநெல்லி ஒன்றே போதும்.

இயற்கை நமக்கு அளித்திருக்கும் அற்புத மூலிகைகளை சரியான முறையில் பயன்படுத்தினால் தீராத நோய்களே இல்லை எனலாம்.


நன்றி!!


இயற்கை விவசாயி,
திரு.சுதாகர் கிருஷ்ணன்.




Post a Comment

1 Comments

  1. கீழாநெல்லி பற்றி இவ்வளவு விஷயங்கள் இது வரை நான் கேள்வி பட்ட தில்லை. உபயோகமான பதிவு. நன்றி சுதாகர் சார்.

    ReplyDelete