Translate

காரகுழம்பு

காரகுழம்பு

காரக்குழம்புகளில் பலவகைகள் உள்ளது. காரைக்குடி செட்டிநாடு காரக்குழம்பு, கல்யாண வீட்டு காரக்குழம்பு, புளிக்காரக்குழம்பு. புளிக்காரக்குழம்பானது கிராமங்களில் செய்யப்படுகின்ற சமையல்முறை. காரைக்குடி செட்டிநாடு காரக்குழம்பில் தேங்காய்பால் சேர்க்கப்படும். தேங்காய்பால் சேர்ப்பது தனி சுவையை கொடுக்கும். தேங்காய் சேர்ப்பதால் குழம்பு  விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. கிராமங்களில் செய்யப்படுகின்ற புளிக்காரக்குழம்பு வைத்திருந்து பயன்படுத்தலாம். எல்லாவகை உணவுகளுக்கும் இட்லி, தோசை, சாதம், உப்புமா வகைகள், கேழ்வரகு களி, கூழ் இப்படி எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கும். காரக்குழம்பு செயல் முறைகளில் பல்வேறு ஊர்களில் பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றது. நான் இங்கு கூறி இருப்பது, எளிமையான வழிமுறையாகும். மிகுந்த சுவையுடையதாகவும், மணமுடையதாகவும் இருக்கும். ஒருமுறை இவ்வாறு சமைத்து பார்த்தால் நீங்கள் காரக்குழம்பின் ருசியால் மிகவும் கவரப்படுவீர்கள். குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு புளிக்காரக்குழம்பின் சுவை மிகவும் பிடிக்கும். தேங்காய் சேர்க்கப்படும் காரக்குழம்புகளை நீரிழவு நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. ஆனால்  கிராமத்து காரக்குழம்பு அவ்வாறு இல்லை. அனைவரும் சாப்பிட உகந்தது.

கத்திரிக்காய் முருங்கைகாய் காரகுழம்பு:

SudagarKrishnanChannels
KaraKuzhambu 
             

தேவையான பொருட்கள்:

  • கத்திரிக்காய்-150 கிராம்
  • முருங்கைகாய்-3
  • வெங்காயம்-1 பெரியது
  • தக்காளி-4
  • பூண்டு-10பல்
  • புளி- 50 கிராம்
  • குழம்பு மிளகாய் தூள்-2ஸ்பூன்
  • உப்பு- தேவைக்கேற்ப

தாளிக்க:

  • நல்லெண்ணெய்-ஒரு குழி கரண்டி
  • கடுகு-1/2ஸ்பூன்
  • சீரகம்-1/2ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு-1/2 ஸ்பூன்
  • வெந்தயம்-1/2-ஸ்பூன்
  • கறிவேப்பிலை-1கொத்து

செய்முறை:

 அடி கனமான பாத்திரம் அல்லது மண்சட்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு  சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி பழத்தை போட்டு தொக்கு பதத்திற்கு வதக்கி கொள்ளவும். தக்காளி வதங்கிட சிறிது உப்பு தூளை தூவி நன்றாக வதக்கி கொள்ளவும். பாத்திரத்தை மூடி இட்டு, பச்சை வாசனை போகும் வரை வதங்கிட விடவும். தக்காளி நன்றாக வதங்கிய பிறகு, நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய்கள் மற்றும் முருங்கை காய்கறிகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும். நீங்கள் எந்த காய்கறிகளை வேண்டுமானாலூம், உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளலாம். புளியை ஊற வைத்த புளிதண்ணீர்,  (புளிதண்ணீர் திக்காக இருக்க வேண்டும், புளி பழைய புளியாக இருப்பது மிகச்சிறந்தது) உப்பு, மிளகாய் தூள் சேர்க்கவும். உப்பின் அளவினையும் காரத்தின் அளவினையும் சுவைத்து பார்த்து கொள்ளவும். காய்கறிகள் வேகவும், புளி தண்ணீர் நன்றாக கொதிக்கவும் பத்து நிமிடங்கள் நல்ல தணலில் குழம்பை கொதிக்க விட வேண்டும்.  தக்காளி, புளி, மிளகாய்தூள் இவற்றின் வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். அதன்பிறகு ஐந்து நிமிடங்கள் சிம்மில் வைத்து, குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அடுப்பை நிறுத்தி விடவும். இப்பொழுது கறிவேப்பிலை, இலைகளை உருவாமல், கொத்தாகவே குழம்பில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி இட்டு வைத்து விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, குழம்பின் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பறிமாறவும். நல்ல வாசனையுடன், சுவையாக இருக்கும். இந்த குழம்பு விரைவில் கெட்டு போகாது. மண் பாத்திரத்தில் செய்கின்றபோது மிகுந்த சுவையுடையதாய் இருக்கும்.

தேங்காய் காரக்குழம்பு:

தேவையான பொருட்கள்:

  • கருணைக்கிழங்கு-200 கிராம்
  • வெங்காயம்-1 பெரியது
  • தக்காளி-4
  • தேங்காய்-2 பத்தை
  • பூண்டு-10பல்
  • புளி தண்ணீர்- 2 ஸ்பூன்
  • குழம்பு மிளகாய் தூள்-2ஸ்பூன்
  • உப்பு- தேவைக்கேற்ப

தாளிக்க:

  • நல்லெண்ணெய்-ஒரு குழி கரண்டி
  • கடுகு-1/2ஸ்பூன்
  • சீரகம்-1/2ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு-1/2 ஸ்பூன்
  • வெந்தயம்-1/2-ஸ்பூன்
  • கறிவேப்பிலை-1கொத்து

செய்முறை:

 அடி கனமான பாத்திரம் அல்லது மண்சட்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு  சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். தேங்காய் பத்தைகளையும், தக்காளிகளையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரிலோ அல்லது அம்மி ஒன்றிலோ போதுமானளவு தண்ணீரை சேர்த்து மழமழவென்று அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பின்னர், அரைத்து வைத்த தேங்காய், தக்காளி கலவையை சேர்த்துவிடவும். உப்பும், குழம்புமிளகாய் தூளும் சேர்க்கவும். உப்பின் அளவினையும் காரத்தின் அளவினையும் சுவைத்து பார்த்து கொள்ளவும். குழம்பிற்கு தேவையான தண்ணீரை சேர்த்து கொள்ளவும். பாத்திரத்தை மூடி இட்டு, பச்சை வாசனை போகும் வரை, பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். பச்சை வாசனை போனபிறகு,  தயார்செய்து வைத்திருக்கும் கருணைகிழங்கு காய்கறிகளை சேர்க்கவும்.  (கருணைகிழங்குடன் கல்உப்பு,  சிட்டிகை மஞ்சள் தூள், புளித்தண்ணீர்- இரண்டு ஸ்பூன் சேர்த்து 3/4-பாகம் வேகவைத்து எடுத்து கொள்ளவும். கிழங்கு வேக வைத்த நீரை கீழே ஊற்றி விடவும்)  நீங்கள் எந்த காய்கறிகளை வேண்டுமானாலூம், உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளலாம்.  புளித்தண்ணீர்,  2-ஸ்பூன் மட்டும் போதுமானது, குழம்பில் சேர்த்து கொள்ளவும். காய்கறிகள் வேகவும், புளி தண்ணீர் நன்றாக கொதிக்கவும் மறுபடியும் ஐந்து நிமிடங்கள் நல்ல தணலில் குழம்பை கொதிக்க விட வேண்டும்.  அதன்பிறகு ஐந்து நிமிடங்கள் சிம்மில் வைத்து, குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அடுப்பை நிறுத்தி விடவும். இப்பொழுது கறிவேப்பிலை, இலைகளை உருவாமல், கொத்தாகவே குழம்பில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி இட்டு வைத்து விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, குழம்பின் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பறிமாறவும். நல்ல வாசனையுடன், சுவையாக இருக்கும். இட்லி,தோசை, பூரி, சப்பாத்திக்கு ஏற்றாக இருக்கும்.




Post a Comment

0 Comments