ரோசுமேரி வளர்ப்பு மற்றும் பயன்கள்
Salvia rosmarinus
ரோஸ்மேரி என்பது நறுமணமிக்க மூலிகை தாவரமாகும். ஊசி போன்ற இலைகளை கொண்ட, பசுமைமாறா தாவரமாகும். மத்திய தரைக்கடல் பகுதியை தாயகமாகக் கொண்டது.
இது ஈயெச்சக்கீரையின் குடும்பமான லாமியேசியைச் சார்ந்து. என்னங்க புரியலையா? ரொம்பல்லாம் யோசிக்காதீங்க. நம்ம புதினாகீரை குடும்பத்தை சார்ந்தது தான் ரோஸ்மேரியும்.
இதன் தண்டுகள் மேல்நோக்கியோ அல்லது சாய்வாகவோ வளரும். தண்டுகள் ஐந்தடி முதல் 6.7 அடி அளவிற்கு வளரும்.
இதன் பூக்கள் வெண்மை, ஊதா, நீலம், இளஞ்சிவப்பு நிறங்களில் இருக்கும். வடபகுதிகளில் கோடைகாலத்திலும், குளிர் நிலவும் பகுதிகளில் எப்பொழுதும் பூக்கள் பூத்துக்கொண்டே இருக்கும்.
ரோஸ்மேரியின் வகைகள்:
ரோஸ்மேரியில் பல வகைகள் உள்ளது. அவை பூக்கள் இலைகள் தண்டுகளில் சிறுசிறு வேறுபாடுகள் கொண்டது. ஆனால் பயன்களில் இவையாவும் ஒன்றாகவே உள்ளது.
- ஆல்பஸ் - வெள்ளைநிற பூக்கள் கொண்டது.
- ஆர்ப் - இலைகள் இளம் பச்சை நிறமுடையவை. எலுமிச்சை மணம் கொண்டது.
- ஒளரியஸ் - மஞ்சள் புள்ளிகள் உடையது.
- பெனெடென் ப்ளு - நேரான அடர் பச்சை இலைகள்.
- ப்ளுபாய் -குள்ளமான சிறு இலைகள். கிளைகள் கொண்டது.
- கோல்டன் ரெயின் - மஞ்சள் வரிகளுடன் கூடிய பச்சை இலைகள்.
- கோல்ட் டஸ்ட் - கோல்டன் ரெயினை விட, அடர்த்தியான மஞ்சள் வரிகளுடன் கூடிய அடர்பச்சை இலைகளை கொண்டது.
- ஐரின் வகை - தளர்வானது.
- பிங்கீ - இளஞ்சிவப்பு நிற, மலர்கள் கொண்டது.
- ப்ராஸ்ட்ரேட்டஸ் -
- மிஸ்ஜெஸ்சோப்ஸ் அப்ரைட் - தடிமனானது, உயரமாக வளரக்கூடியது.
- ரோசியஸ் - இளஞ்சிவப்பு நிற மலர்கள்
- சலேஞம் - இள நீல நிற மலர்கள்
- செவெர்ன் சீ - மலர்கள் ஆழ்ந்த ஊதா நிறம் உடையது. நன்றாக படர்ந்து வளரக்கூடியது
- டஸ்கன் ப்ளூ -நேராக வளரும். மஞ்சள் இலைகள் கொண்டது.
மாடிதோட்டத்தில் ரோஸ்மேரி வளர்ப்பு:
ரோஸ்மேரி தாவரத்தை விதையிலிருந்து, தண்டுகளை பதியம் போட்டு நடவு செய்வதன் மூலமாகவும் வளர்க்கலாம். விதையிலிருந்து வளர்வதற்கு இரண்டு மூன்று வாரங்கள் வரை கூடுதலாக ஆகும். தண்டுகளை நடவு செய்வது மிகவும் சுலபமான வழிமுறையாகும்.
👉 தண்டுகளை நடவு செய்யும் பொழுது அடி தண்டிலிருந்து, வளர்ந்து வந்திருக்கும், தண்டுகளை எடுத்து பதியம் போட வேண்டும்.
👉 ரோஸ்மேரி வளர வசந்தகாலம் சிறந்த காலமாகும். ரோஸ்மேரி வளர்க்க நன்கு உலர்ந்த சத்தான மண்ணை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
👉 அதனுடன் காய்கறி கழிவு உரம், மண்புழு உரம், தொழு உரம் இதில் ஏதாவது ஒரு உரத்தை கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் வேப்பம்புண்ணாக்கு ஒரு கைப்பிடி அளவு. உயிர் உரங்கள் அனைத்தும் - ஒரு ஒரு ஸ்பூன் கலந்து, மண்ணை தயார் செய்து விதைக்க அல்லது நடவு செய்யவும் ஆரம்பிக்கலாம்.
தண்ணீர் ஊற்றும் முறை :
உரங்கள், பூச்சி மருந்துகள் என்று தலைப்புகள் கொடுப்பதற்கு முன்பாக, தண்ணீர் ஊற்றும் முறை என்று, ஒரு தனி தலைப்பு கொடுப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் ரோஸ்மேரிக்கு தண்ணீர் ஊற்றுவதில், மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும். இல்லையெனில் செடியே இறந்துவிடும். ரோஸ்மேரி செடிக்கு, தண்ணீர் தேங்கி விடாத அளவிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் கொடுத்தாலும் கூட போதும். ஏனெனில் ரோஸ்மேரி செடி ஆனது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை கொண்டு வளரக்கூடிய தன்மை உடையது. பொதுவாக வெளிநாடுகளில் கடல் ஓரங்களில் உள்ள பரப்புகளில் ரோஸ்மேரி வளர்க்கிறார்கள்.
ரோஸ்மேரி என்ற பெயரின் பொருளே கடல் துளி என்பதாகும். Marinus- என்றால் கடல், ros -என்றால் துளி. அதாவது காற்றின் ஈரப்பதத்தில் உயிர்வாழும் செடி என்பது, இந்த பெயர் வர காரணம் ஆகும்.
மழைக்காலங்களில் செடியில் அதிக தண்ணீர் படாத படியும், தண்ணீர் தேங்காத படியும், ஒரு இடத்தில் பாதுகாப்பாக செடியை வைத்து விட வேண்டும்.
தாவரங்கள் பூத்து முடித்த பிறகு செடியை கவாத்து செய்து, உரமிட வேண்டும்.
Rose Mary
Rose Mary
பூச்சிகள் மேலாண்மை:
- ரோஸ்மேரி தாவரத்தின் இலைகளின் அடிப்பாகத்தில் ஒருவித மஞ்சள் நிற செதில்கள் போல காணப்படும். இத்தகைய பூச்சிகளால் தண்டுகள், இலைகள் பாதிக்கப்படும்போது அந்த இலைகளை கத்தரித்து எடுப்பதே சிறந்தது.
- அடுத்ததாக "ஓவல் வண்டுகளால்" ரோஸ்மேரி செடி அதிகம் பாதிக்கப்படும். இந்த வண்டுகள் உலோக பச்சை அல்லது ஊதா நிற கோடுகள் கொண்ட சிறிய வண்டுகள், ரோஸ்மேரி தாவரத்தில் காணப்படும். இதற்கு வேப்ப எண்ணையை தெளித்து வந்தாலே போதும்.
- சில நேரங்களில் மாவு பூச்சிகளாலும் பாதிக்கப்படும். மாவு பூச்சிகளை அழிப்பதற்கு நம்முடைய வலைத்தளத்திலும், சேனலிலும் நிறைய பதிவுகளை பதிவிட்டு இருக்கிறேன். அதனைப் பார்த்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ரோஸ்மேரியின் பயன்கள்:
ரோஸ்மேரி மூலிகையில் இரும்பு கால்சியம், மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இதை நீங்கள் உலர்ந்த நிலையிலும், அல்லது அதன் சாற்றையோ பயன்படுத்தி வரலாம்.
ரோஸ்மேரியில் காணப்படும் கார்னோசிக் அமிலமானது, அல்கெய்மர், லு கெரிக் போன்ற மூளை சம்பந்தப்பட்ட நரம்பியல் நோய்களைத் தடுக்கக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ரோஸ்மேரி இலையிலிருந்து தயாரிக்கப்படும் பொடியானது புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. இது எலிக்கு கொடுத்து சோதித்து நிரூபிக்கப்பட்டுள்ளது.
ரோஸ்மேரி இலை பொடி, ரோஸ்மேரினிக் அமிலம் போன்ற எதிர் ஆக்சிஜனேற்றிகளையும் கொண்டுள்ளது. மேலும் இதில் கற்பூரமும் {உலர் இலைகளில் 20% வரை } கேஃபேயிக் அமிலம், உர்சாயிக் அமிலம்,பிட்யூலினிக் அமிலம், ரோசுமாரிடிஃபீனால், ரோஸ் மனால் போன்றவையும் உள்ளது.
இதனால் ரோஸ்மேரி இலைகள் கற்பூர தயாரிப்பிலும், ஊதுவத்தி வாசனை திரவியங்கள், செனட் தயாரிப்பிலும் சோப்புகள் தயாரிப்பிலும், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிலும், பயன்படுகிறது.
- ரோஸ்மேரி இலைகளை உணவில் பயன்படுத்தும் பொழுது அவை பசியின்மையை நீக்கி, நன்றாக பசி எடுக்க வைக்கிறது. அஜீரண கோளாறுகளை அறவே அகற்றுகிறது. வயிறு தொடர்பான பிரச்சினைகள் நீக்குகிறது.
தொழில் முறைகளில் ரோஸ்மேரி வளர்ப்பு நிறைந்த லாபத்தையே கொடுக்கிறது. வாசனை சோப்புகள், தைலங்கள், குளிர்பானங்கள், மது ரசங்கள் முதலான பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
தோல்நோய்களுக்கு,
தோல் அரிப்பு, உலர்ந்த தேகம் { DrySkin} கொண்டவர்களும், ரோஸ்மேரி இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து, அந்த தண்ணீரை பயன்படுத்தி குளிக்கலாம். அல்லது இலைகளை பாசிப்பருப்புடன் அரைத்து உடம்பு முழுவதும் பூசி குளித்து வரும்போது, தோல் நோய்களும், சரும பிரச்சனைகளும் குணமாவதுடன், சருமம் நல்ல நிறத்தையும் பொலிவையும் பெறகிறது .
Rosemary Oil ரோஸ்மேரி எண்ணெய் :
மனம் மிகுந்த ரோஸ்மேரி பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் ரோஸ்மேரி ஆயில் இளமை அழகையும் முக அழகையும் மேம்படுத்துவதில் அத்தியாவசியமாக பயன்படுகிறது. ரோஸ்மேரி எண்ணெய் ஒரு நிம்மதியான உணர்வைத் தருகிறது. மேலும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. முக அழகை மேம்படுத்த சாதாரணமாகவே குளிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு முகத்தில் ரோஸ்மேரி ஆயிலை தேய்த்து மசாஜ் செய்யலாம், அல்லது பாதாம் ஆயில் உடன் கலந்தும் பயன்படுத்தலாம்.
ரோஸ்மேரி எண்ணெயை டபுள் பாய்லிங் முறையில் சூடுபடுத்தி, உடம்பு முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து குளிக்கும்பொழுது, உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. குழந்தைகளுக்கும் மாதத்திற்கு இரண்டு முறை இந்த எண்ணெயால் மசாஜ் செய்து குளிக்க வைக்கலாம். மேலும் மூட்டுகளில் வலி இருப்பவர்களும் எண்ணெயை சூடாக்கி வலி உள்ள இடங்களில் தேய்த்து வர நல்ல குணம் கிடைக்கும்
ரோஸ்மேரி ஆயில், உணவுகளில் ஒரு ரிச் டேஸ்ட் கொடுப்பதற்காக வெளிநாட்டு உணவகளில், குறிப்பாக ஐரோப்பிய , சீன உணவுவகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
நம்ம ஊர்களில் பொதுவாக ரோஸ்மேரி இலைகளை பிரியாணி, புலாவ், ப்ஃரைட் ரைஸ் போன்ற உணவுகளில் பயன்படுத்துவார்கள்.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது:
கூந்தலை பராமரிப்பதில், வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் ரோஸ்மேரி எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து ரோஸ்மேரி எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் பொடுகுத் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. ஆலோபீஸியா என்ற தலை வழுக்கை உள்ளவர்களுக்கும், முடி வளர வைக்க ரோஸ்மேரி பயன்படுத்தப்படுகிறது.
ரோஸ்மேரி இலை தேநீர்:
ரோஸ்மேரி இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை தொடர்ந்து பருகுவதால் நோய் எதிர்ப்பு திறன் மேம்படுகிறது. தலைவலி ஜலதோஷம் இவற்றுக்கும் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.
ரோஸ்மேரி தேநீர் தயாரிப்பது எப்படி?
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் அளவு ரோஸ்மேரி இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு, நான்கு புதினா இலைகளை அதனுடன் சேர்த்து 5 நிமிடம் அப்படியே ஆற விட வேண்டும். பிறகு இந்த ரோஸ்மேரி இலை தேநீரை வடிகட்டி, இதனுடன் எலுமிச்சம் பழமும் தேனும் கலந்து பருகலாம்.
சுவைக்கேற்ப நாட்டுச்சக்கரை பனங்கற்கண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் அடிக்கடி கவலையில் முழ்கும் நபராக இருந்தால் ரோஸ்மேரி தேநீரை பருகி வாருங்கள். ஏனெனில் மனச் சோர்வு, உடல் அசதி பிரச்சனைகளை, இந்த தேநீர் நீக்குகிறது. நினைவாற்றலை அதிகரிக்கும் பண்புகள் ரோஸ்மேரி தேநீரில் கூடுதலாக உள்ளது. மனச்சோர்வினால் நிறைய பேர் தூக்கமின்மை பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள் இதை சரிசெய்ய அவர்கள் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உண்டு. ஆனால் அப்படி செய்யாமல் இயற்கையான முறையில் உங்கள் மன சோர்வை போக்கி நல்ல தூக்கத்தை பெற, இந்த மூலிகை தேநீர் உங்களுக்கு உதவி செய்யும்.
ரோஸ்மேரி தேநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
மூலிகைகளில் இல்லாத மருத்துவமே இல்லை. மூலிகைகளால் தீர்க்க முடியாத நோய்களும் இல்லை. எனவே மூலிகைகளை அதிகம் அறிந்து கொள்ளுவோம். நடைமுறை வாழ்கையில் பயன்படுத்தவும் கற்றுகொள்ளுவோம்.
நன்றி!!
இயற்கைவிவசாயி!!
திரு.சுதாகர்கிருஷ்ணன்.
Magical Pesticide |மாவுபூச்சிகள் எல்லாமே காலி ஒரே நாளில் | திரும்பவும் வராது | One Handful of Rice is Enough to kill the "Mealy Bugs" in one Day 👇
0 Comments