The easiest way to control
Mealy Bugs
![]() |
Mealy Bugs Control |
மாவு பூச்சிகளை அழிக்க மிக சுலபமான வழி:
மாடி தோட்டமோ, வீட்டு தோட்டமோ, விவசாய நிலங்களோ - இயற்கை விவசாயம் செய்கின்ற அனைத்து விவசாயிகளுமே சந்திக்கின்ற மிக கொடுமையான பிரச்சனை மாவு பூச்சிகள் தான் என்றால், அது மிகையாகாது. இந்த மாவு பூச்சிகள் தொந்தரவால் மாடி தோட்டத்தை கைவிட்ட பலரையும் நான் அறிவேன். மற்ற காலநிலைகளை விட, கோடைகாலத்தில் மாவு பூச்சிகள் அதிகம் பெருகி, தோட்டத்தை ஒருவழி ஆக்கிவிடும். ஏனெனில் கோடைகாலம், என்பது மாவு பூச்சிகளின் இனப்பெருக்க காலமாகும். அதனால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரவி பரவி தோட்டம் முழுவதுமே இந்த மாவு பூச்சிகளால் இலைகள், பூக்கள், காய்கறிகள் பழங்கள் என இப்படி எல்லாமே பாதிக்கபட்டு செடியையே பிடிங்கி எறிந்துவிடும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறோம். இந்த கோடைகாலத்திலும் நிறைய தோட்டங்கள் இந்த மாவு பூச்சிகளால் அதிகம் பாதிப்படைந்து, என்னென்னவோ வழிமுறைகளை கையாண்டும் அவைகளை அழிக்க முடியாமல் அவதிபட்டு கொண்டு தான் இருக்கிறது. இனி வருத்தபட தேவை இல்லை; ஏனெனில் மாவு பூச்சிகளை சுலபமான முறையில் கட்டுப்படுத்துவதற்கு அதிக செலவு இல்லாமல், வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே எப்படி கட்டுபடுத்துவது என்பதை, மிக தெளிவாக இங்கு பதிவிட்டிருக்கிறேன். நிச்சயம் மாவு பூச்சிகளால் அவுதியுறும் அனைவருக்குமே, இந்த பதிவு பயனுள்ளதாக அமையும்.
மாவு பூச்சிகளைப் பற்றி:
பூச்சிக்கொல்லி தயாரிக்கும் முறை:
பூச்சிக்கொல்லி தயாரிப்பதற்கு கடையில் காசு கொடுத்து எதுவும் வாங்க தேவை இல்லை. நம்முடைய வீட்டின் சமையலறையில் இருக்கும் பொருட்களை கொண்டே பூச்சிக்கொல்லியை தயாரிக்கலாம். இப்பூச்சிகொல்லியை தயாரிப்பது மிகவும் சுலபம்.- அரிசி மாவு அல்லது கோதுமை மாவு, அல்லது மைதா மாவு இம்மூன்றில் எதாவது ஒன்று, 5 தேக்கரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பெருங்காயத் தூள் 2 தேக்கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- காதி சோப்பு கரைசல் அல்லது துளசி சோப்பு கரைசல் அல்லது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட எதேனும் ஒரு சோப்பிலிருந்து ஒரு டம்ளர் அளவு கரைசலை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரிசி மாவில் { அல்லது கோதுமை மாவு அல்லது மைதா மாவு } கொஞ்சம் தண்ணீர் விட்டு, கட்டிகள் இல்லாதவாறு கரைத்து ஊறவைக்க வேண்டும். பெருங்காயத்தூளிலும் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாதவாறு கரைத்து ஊறவைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் 5 டம்ளர் அளவு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் ஊற வைத்திருக்கும் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விட வேண்டும். ஏறத்தாழ ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதித்த பிறகு, இறக்கி ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறிய பின்னர், இந்த கரைசலுடன், ஏற்கனவே ஊற வைத்திருக்கும் பெருங்காயத்தூள் கரைசலையையும், சோப்பு கரைசலையும், திப்பிகள் இல்லாமல் வடிகட்டி சேர்க்க வேண்டும்.
பூச்சிகொல்லி கரைசலை பயன்படுத்தும் முறை:
பொதுவாகவே பூச்சிக்கொல்லியை மாலை வேளையில்தான் தெளிக்க வேண்டும். ஆனால் இந்த பூச்சிக்கொல்லியை மதிய வேளையில், வெய்யில் அதிகமாக இருக்கும் நேரத்தில்தான், தெளிக்க வேண்டும். ஏனென்றால் இந்தக் கரைசலை பூச்சிகளின் மேல் தெளிப்பதால், இந்தக் கரைசல் மாவு பூச்சிகளின் மேல் உள்ள மெழுகில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். வெயிலில் நன்றாக காய்ந்தவுடன் பூச்சிகள் அனைத்தும் கீழே விழுந்துவிடும். அரிசி மாவு சேர்ப்பதனால் அரிசி மாவில் உள்ள பசைத்தன்மை பூச்சிகளின் மேல் ஒட்டி கீழே விழ செய்துவிடும். கூடவே பெருங்காயத்தூள் பூச்சிகளுக்கு ஒருவித எரிச்சல் தன்மையை கொடுத்து பூச்சிகளை இறக்க செய்துவிடும். தொடர்ந்து மூன்று நாட்கள் பூச்சிக்கொல்லி தெளிப்பதால் அனைத்து மாவு பூச்சிகளும் இறந்துவிடும். பூச்சிக்கொல்லி தெளித்து விட்டு சாதாரணமாக தண்ணீரை பீய்ச்சி அடித்தால் போதும். மாவுப்பூச்சிகள் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்.
அவ்வளவுதாங்க!! இனி மாவு பூச்சிகளை பார்த்தெல்லாம் பயப்படாதீங்க.. இந்த அரிசி மாவு கரைசல் போதும். மாவு பூச்சிகளை ஓட விடலாம். பயன்படுத்தி பார்த்திட்டு உங்கள் அனுபவத்தை கீழே கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்.
நன்றி!!
இயற்கை விவசாயி!!
சுதாகர்கிருஷ்ணன்.
0 Comments