Translate

செம்பருத்தி செடியில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துவது எப்படி?

Mealybugs on Hibiscus

Sudagarkrishnanchannel

Mealybugs on Hibiscus


 உங்களுடைய செம்பருத்தி செடியில் மாவு பூச்சிகள் இருந்தால், இக்கட்டுரையை படித்த பின்னர், மாவு பூச்சிகளை கட்டுபடுத்துவது குறித்து, உங்களுக்கு கவலையே இருக்காது. இன்று உலக அளவில் ரோஜா பூவிற்கு அடுத்ததாக செம்பருத்திப்பூவை தான் எல்லாருமே விரும்புகிறார்கள். ஏனென்றால் செம்பருத்திப் பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், பல்வேறு அழகிய வண்ணங்களிலும் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் செம்பருத்தி அதிக மருத்துவபயன்களை கொண்ட ஒரு தாவரம். செம்பருத்தி செடி கோடைக்காலங்களில் அதிக பூக்களை தரும். மாவுப் பூச்சியானது கோடைகாலத்தில் தான் அதிக வீரியம் மிக்கதாக செயல்படும். கோடை காலத்தில் மாவுப்பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருப்பதினால் செம்பருத்தி செடியில் பூக்கும் பூக்களில் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகிறது. செம்பருத்தி செடியில் அதிக பூக்கள் பூக்க வில்லையே என்ற ஆதங்கமும், கோபமும் கண்டிப்பாக எல்லோர் மனதிலும் இருக்கும். மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு முன்பு பூச்சிகளைப் பற்றி விபரமாக  சில விஷயங்களை தெரிந்து கொண்டால், மிக சுலபமாக கட்டுப்படுத்தலாம். மாவுப்பூச்சிகளின் பலம், பலவீனம் மற்றும் மாவுப்பூச்சிகளைப் பற்றி சில தகவல்களை தெரிந்துகொண்ட பின்னர்,  மாவுப்பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ளுவோம்.

மாவு பூச்சிகளை பற்றி:

  • மாவுப்பூச்சிகள் அயல்நாட்டு பூச்சிகள் என்பதால் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. மேலும், மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த இயற்கை எதிரிகள்  குறைவாக இருப்பதினால், கட்டுப்படுத்துவது  சிரமமான காரியமாக இருக்கிறது.  
  • உடல் முழுவதும் மெழுகு போன்ற வெள்ளை நிற பொருட்கள் படிந்திருப்பதால்,  அதுவே  மாவு பூச்சிகளுக்கு  கேடயமாக விளங்குகிறது. எத்தனை இயற்கை மருந்துகள் தெளித்தாலும், மாவு பூச்சிகளின் மேல் படிந்திருக்கும் மாவு போன்ற பொருட்கள் அதை பாதுகாத்து விடுகிறது. பூச்சிகளின் மேல் படிந்திருக்கும் வெள்ளை நிற பொருட்களை முதலில் அகற்றி விட்டால்  சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம்.
  • மாவுப்பூச்சிகள் தாவரத்தின் சாரை உறிஞ்சிவிடுகிறது. மாவுப்பூச்சியில் இருந்து வெளிவரும் சர்க்கரை கழிவுகளை சாப்பிடுவதற்கு எறும்புகள் மாவுப்பூச்சிகளின் பின்னால் தொடர்ந்து கொண்டே இருக்கும். பூச்சிகள் எங்கங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் எறும்புகளின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். எறும்புகள் மாவு பூச்சிகளின் பரவலை அதிகமாக்குகிறது.
  •  மாவுப்பூச்சிகள் செடிகளின் இலைகளின் அடிப்பகுதியில் வெள்ளையாக அடை போல படர்ந்து சாறுகளை உறிஞ்சி சேதப்படுத்தும். செடிகளின் தண்டுப் பகுதியையும், செடிகளின் குருத்துப் பகுதியையும் சேதப்படுத்தும். பூச்சியில் இருந்து வெளிவரும் கழிவுகள் சூட்டிமோன் என்ற பூஞ்சான்களை உருவாக்குகிறது. சூட்டிமோன் பூஞ்சான்களால் செடிகளில் ஒளிச்சேர்க்கை நடைபெறுவது தடைபட்டு செடிகளின் வளர்ச்சி மிகவும் பாதிக்கும்.
  • மாவுப்பூச்சிகள்  வருடத்தில் பத்திலிருந்து பதினைந்து முறை வரை இனப்பெருக்கம் செய்கிறது. அதிக முட்டையிடும் திறன் கொண்டவை. தோராயமாக ஒரு மாவுப்பூச்சி 400 முதல் 600 முட்டைகள் வரை  வருடத்திற்கு இடும். பூச்சிகளின் எண்ணிக்கை அதிக அளவில் பெருகுவதற்கு இதுதான் முக்கிய காரணமாக விளங்குகிறது. 
  • காற்று, விலங்குகள் மனிதர்கள், தண்ணீர் மூலம் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக பரவும் ஆற்றல் கொண்டது. 
  • மாவுப்பூச்சிகள் களைச் செடிகளை அதிகமாகவே பாதிக்கும். எனவே மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு முதலில், களைச்செடிகளை அகற்றுவது சிறந்தது. 
  • மாவு பூச்சிகள் தன்னுடைய உடல் எடையை விட எழுபது மடங்கு சாறு உறிஞ்சும் தன்மை கொண்டது. மாவுப் பூச்சியின் முட்டை, வட்டவடிவில் இருக்கும். 
  • மாவுப்பூச்சிகள் பதினெழு நாட்கள் வரை உயிர்வாழும். இனச்சேர்க்கை நடைபெறாமலே முட்டையிடும் திறன் பெற்றவை. மாவுப்பூச்சிகள் இனச்சேர்க்கை நடைபெறும்போது பெண் முட்டைகளை இடுகிறது. மாவுப்பூச்சிகள் இனச்சேர்க்கை நடைபெறாமல் முட்டைகளை இடும்போது ஆண் முட்டைகள் இடுகிறது.
  • எப்போதுமே கூட்டம் கூட்டமாகவே வாழும். மாவுப்பூச்சிகளில் ஆண் பூச்சிகள் பறக்கும் தன்மை வாய்ந்தது. ஆண் பூச்சிகள் ஈக்கள் போலவே இறக்கைகளுடன் காணப்படும். ஆண் பூச்சிகள் எந்த சேதமும் ஏற்படுத்தாமல் இனப்பெருக்கம் முடிந்தவுடன் நான்கு நாட்களுக்குள் இறந்துவிடும்.
  • மாவு பூச்சிகளின் குட்டிகள் இருபத்தைந்து நாட்களுக்குள் வளர்ந்து பெரிய பூச்சிகளாக மாறிவிடும். மாவு பூச்சிகளுக்கு செம்பருத்தி செடிகள் மிகவும் பிடிக்கும். செம்பருத்தி செடிகளில் மாவுப்பூச்சிகள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.

செம்பருத்தி செடியில் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?

👉தண்ணீர்: மாவுப்பூச்சிகளுக்கு தண்ணீர் என்றால் சுத்தமாக பிடிக்காது. உங்கள் செம்பருத்தி செடியில் மாவுப்பூச்சிகள் வந்துவிட்டால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! தண்ணீரை  செம்பருத்தி செடியில் மாவுப்பூச்சிகள் தாக்கப்பட்ட இடத்தில் அதிக உந்து சக்தியோடு தெளிக்க வேண்டும். இவ்வாறு தண்ணீரை அதிக உந்து சக்தியோடு தெளிப்பதால், மாவு பூச்சிகள் கீழே விழுந்துவிடும். மாவு பூச்சிகளின் மேல் உள்ள மாவு போன்ற பொருட்கள் தண்ணீரில் கரைந்துவிடும். ஒருமுறை மாவுப்பூச்சிகள் கீழே விழுந்தால் மறுபடியும் செடிகளின் மேல் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படும். குளிர்ந்த நீர் மாவு பூச்சிகள் மேல் அதிக உந்துசக்தியோடு தெளிப்பதினால் மாவுப்பூச்சிகள் விரைவில் கட்டுப்படும். அதன் பின்னர் வேப்பெண்ணெய் தெளித்து விட வேண்டும். 


 👉வேப்பெண்ணெய் கரைசல்: வேப்பெண்ணெய் ஐந்து மில்லி லிட்டர், ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து, ஓட்டு திரவத்தையும் சேர்த்து செம்பருத்தி செடியில் தெளிப்பதால் மாவு பூச்சிகள் எளிதில் கட்டுப்படும். பூச்சிகளின் மேல் வேப்பெண்ணைய் கரைசல் தண்ணீரை அதிக உந்து சக்தியோடு தெளிப்பதால் (மாவு போன்ற மேல்பகுதி கரைக்கப்பட்டு) மாவுப்பூச்சிகளின் பாதுகாப்பு கேடயம் எடுக்கப்படுகிறது. மாவு பூச்சிகளின் கேடயம் இல்லாமல் இருக்கும்போது சுலபமாக அழித்து விடலாம். வேப்பெண்ணையை வாரமொருமுறை தொடர்ந்து தெளித்து வருவது சிறந்தது.

👉பொறிவண்டுகள்: மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்த மாவு பூச்சிகளின் இயற்கை எதிரிகளான பொறி வண்டுகள் கிரிப்டோலிமஸ் அல்லது ஸ்கிம்னஸ் போன்ற பொறி வண்டுகளை தாக்கப்பட்ட செடிகளில் விட்டு மாவு பூச்சிகளை அழிக்கலாம். இயற்கை முறையில் பூச்சி மருந்துகளை பயன்படுத்தி வந்தாலே, தானாகவே பொறிவண்டுகள் தோட்டத்திற்கு, மாவுபூச்சிகளை அழிப்பதற்கு (உண்ணுவதற்கு) வரும். ரசாயனம் கலந்த பூச்சி மருந்துகளை தெளிக்கும்போது பொறி வண்டுகள் வருவதில்லை.

👉வெர்டிசீலியம் லெகார்னி:     மாவுப்பூச்சியை அழிப்பதற்கு உயிரியல் காரணிகளான வெர்டிசீலியம் லெகார்னி என்ற உயிரியியல் பூச்சிக் கொல்லியை ஒரு லிட்டருக்கு ஐந்தில் இருந்து ஆறு கிராம் விகிதத்தில் ஓட்டு திரவத்தையும் சேர்த்து தெளிப்பதால் மாவுப்பூச்சியை எளிதில் கட்டுப்படுத்தலாம். பூஞ்சான்களை மாலை வேளையில் தெளிக்கவேண்டும். பூஞ்சான்கள் மாவு பூச்சிகளின் மேல் படிந்து மாவு பூச்சிகளை எளிதாக அழிக்கிறது. பொதுவாக பூச்சிகள், உடம்பின் மேலுள்ள சிறு, சிறு துளைகள் வழியாக சுவாசிக்கும். முதலில் இந்தப் பூஞ்சைகள் மாவு பூச்சிகளின் மேல் படலமாக படிந்து, சுவாசிப்பதை தடுத்து நிறுத்துகிறது. பின்னர் மாவு பூச்சிகளை பட்டினி போட்டு கொஞ்சம் கொஞ்சமாக  அழிக்கிறது. ஒரேயொரு முறை இந்தப் பூஞ்சைகளை தெளித்து விட்டால் மாவுப்பூச்சிகள் மேல் படிந்து பிறகு காற்றின் மூலம் தோட்டம் முமுவதும்  பரவி அனைத்து பூச்சிகளையும் அழிக்கிறது. இத்தகைய பூஞ்சைகள் மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. இந்தப் பூஞ்சைகள் நம்முடைய தோட்டத்தில் தானாகவே வரும். குளிர்காலங்களில் மாவு பூச்சிகள் இருக்கும் இடத்தில் மாவு பூச்சிகளின் மேல் கருப்பாக படலம்போல் படிந்திருப்பதை பார்க்கலாம். பொதுவாக பூஞ்சைகள் கோடை காலத்தில் தானாகவே வருவதில்லை. குளிர் காலத்தில் மட்டுமே தானாக வருகிறது.

👉வெண்சோறுகரைசல்: மாவுப்பூச்சிளை அழிப்பதற்கு செலவே இல்லாமல் ஒரு கரைசலை நம்முடைய வீட்டிலேயே தயாரிக்கலாம். வீட்டில் இருக்கும் பழைய சாப்பாட்டை ஒரு மூடியுள்ள பாட்டிலில்  போட்டு மூடி வைக்க வேண்டும். ஏழுநாட்கள் கழித்து அந்த பாட்டிலில் உள்ள கரைசலை வடிகட்டி அதனோடு ஐந்து மடங்கு தண்ணீர் கலந்து மாவு பூச்சிகள் மேல் தெளிக்கலாம். இப்படி தெளிப்பதால் பூச்சிகள் சுலபமாக அழிந்துவிடுகிறது.

👉கத்தரித்துவிடுதல்: ஆரம்பநிலையில் உங்கள் செடியில் காணப்படும் மாவுப்பூச்சிகளை அழிப்பதற்கு சுலபமான முறை இதுதான். முதலில் மாவுப்பூச்சிகள் செம்பருத்தி செடியில் எந்த கிளைகளில், இலைகளில் பாதிக்கப்பட்டு இருக்கிறதோ அந்த கிளைகள், இலைகளை தனியாக அகற்றி விடுவது மிகவும் சிறந்த செயலாகும்.

👉மைதாமாவுகரைசல்:      மாவு பூச்சிகளை மைதாமாவுகரைசலை வைத்து சுலபமாக கட்டுப்படுத்தலாம். நூறு கிராம் மைதாமாவினை ஒரு லிட்டர் தண்ணீரில் நன்றாக கலந்து வடிகட்டிகொள்ளவும். அந்தக் கரைசலை செம்பருத்தி செடியில், மாவுப்பூச்சிகள் தாக்கப்பட்ட இடத்தில் பகல்பொழுது வெயில் நேரத்தில் தெளித்து விட வேண்டும். மைதா மாவு கரைசல், மாவு பூச்சிகளில் மேல் படிந்து வெயிலில் காயும் போது மாவு பூச்சிகளின் மேல் பசைபோல ஒட்டிக் கொள்வதினால், மாவு பூச்சிகள் அனைத்தும் இருந்து கீழே விழுந்து இறந்து விடுகிறது.

👉இஞ்சி,பூண்டு, மிளகாய் கரைசல்:    மாவுப்பூச்சிகளை இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசல் தெளித்துகூட சுலபமாக கட்டுப்படுத்தலாம். அதற்கு இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய் சம அளவில் எடுத்து கொள்ளவும். அதனை நன்றாக இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும். வடிகட்டிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சாறுடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து மாவு பூச்சிகள் என்றில்லை; பிற பூச்சிகளை அழிப்பதற்கும் பயன்படுத்தலாம். உங்கள் செடியின் பாதிக்கப்பட்ட அளவினை பொருத்து, இக்கரைசலை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பயன்படுத்திக்கொள்ளலாம். 
 மாவுப்பூச்சிகள் அதிகம் பரவுவதற்கு காரணமான எறும்புகளை முதலில் கட்டுப்படுத்துவது அவசியம். எறும்புகளுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி லிட்டர் வினிகர் கரைசல் சேர்த்து தெளிப்பதால் சுலபமாக எறும்புகள் கட்டுப்படும். இந்தக் கட்டுரையில் மாவு பூச்சிகளை பற்றியும், செம்பருத்தி செடியில் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பதை பற்றியும் விரிவாக வாசித்திருப்பீர்கள். செம்பருத்தி செடியில் மாவு பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள காணொளியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். நன்றி!



Post a Comment

4 Comments

  1. அடுத்தது அசுவினி பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக பதிவிடுகிறேன்.

      Delete
  2. Sir neenga seeda anupuvathaga soneergal ithuvarai varavilai
    Thanks

    ReplyDelete
  3. Pls share your number anna or pls arrange wats up group.

    ReplyDelete