Translate

பச்சை சுண்டைக்காய் காரக்குழம்பு செய்வது எப்படி?

சுண்டைக்காய்/Turkey berry/Solanum Torvum 

Sudagar krishnan channels
Sundakkai karakuzhambu 

  காரக்குழம்பு வகைகளில் மிகவும் சுவைகொண்டது சுண்டைக்காய் காரக்குழம்பு. கல்யாணவீடுகளிலும், உணவகங்களிலும் தயாரிக்கப்படுகின்ற சுண்டைக்காய் வற்றல் வத்தக்குழம்புக்கென்றெ பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிக ஊட்டசத்துக்கள் கொண்ட சுண்டைக்காயை எதாவது ஒருவகையில் வாரமிருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. வயிற்றிலுள்ள புழுபூச்சிகளை அழிக்கும். சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.  சுண்டை, மலைச்சுண்டை, பேயத்தி, கடுகி, அமரக்காய் என்றபெயர்களிலும் குறிப்பிடப்படுகிறது. சுண்டைக்காயில் இரண்டுவகைகள் உள்ளது. 
  1. மலைச்சுண்டை/காட்டுச்சுண்டை
  2. நாட்டுச்சுண்டை
காட்டுச்சுண்டை அடர்பச்சை நிறத்தில், அளவில் சாதாரண சுண்டையை விட சற்றே பெரியதாகவும் அதிக கசப்பு சுவையுடனும் காணப்படும். அதிகமாக காடுகள், மலைகளில் காணப்படும். காட்டுச்சுண்டையை வத்தல் செய்ய அதிகம் பயன்படுத்துவார்கள்.
நாட்டுச்சுண்டை நாம் பொதுவாக வீடுகளில் வளர்ப்பது. கசப்பு சற்று குறைவாக இருக்கும். ஆனால் இரண்டு சுண்டைக்காய் வகைகளும் ஒரே மருத்துவபயன்களே கொண்டது. பச்சை சுண்டைக்காய் கிடைக்கும் காலங்களில் குழம்பு, மற்றும் பொரியல் பிற உணவுவகைகளில் சேர்த்து கொள்வது அதிக பயன்களைத்தரும். கிடைக்காத காலங்களில் சுண்டைக்காய் வற்றல் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்றைய கட்டுரையில் பச்சை சுண்டைக்காயை பயன்படுத்தி காரக்குழம்பு எப்படி செய்வது என்பதை விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.


ச்சை சுண்டைக்காய் காரகுழம்பு:


Sudagar krishnan channels
Sundakkai karakuzhambu 

 தேவையான பொருட்கள்:

  • கத்திரிக்காய்-100 கிராம்
  • சுண்டைக்காய்- 100 கிராம்
  • வெங்காயம்-1 பெரியது
  • தக்காளி-4
  • பூண்டு-10 பல்
  • புளி- 50 கிராம்
  • குழம்பு மிளகாய் தூள்-3ஸ்பூன்
  • உப்பு- தேவைக்கேற்ப

தாளிக்க:

  • நல்லெண்ணெய்-ஒரு குழி கரண்டி
  • கடுகு-1/2ஸ்பூன்
  • சீரகம்-1/2ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு-1/2 ஸ்பூன்
  • வெந்தயம்-1/2-ஸ்பூன்
  • கறிவேப்பிலை-1கொத்து

செய்முறை:

 முதலில் பச்சை சுண்டைக்காயை, ஒரு மத்து அல்லது தட்டையான கரண்டியை கொண்டு இரண்டாக உடைத்து கொள்ளவும். பின்னர் இரண்டு முறை தண்ணீரில் அலசி எடுத்துக்கொள்ளவும். தண்ணீரில் அலசும்பொழுது கைகளால் நன்றாக பிசைந்து, விதைகளை முடிந்தளவு அகற்றி கொள்ளவும். அலசி சுத்தம் செய்த பச்சை சுண்டைக்காய்களை தனியாக பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். 
   அடி கனமான பாத்திரம் அல்லது மண்சட்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் அல்லது கடலைஎண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ளவற்றை கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு  சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். வெங்காயம் வதங்கிய பின்னர், பொடியாக நறுக்கிய தக்காளி பழத்தை போட்டு தொக்கு பதத்திற்கு வதக்கி கொள்ளவும். தக்காளி வதங்கிட சிறிது உப்பு தூளை தூவி நன்றாக வதக்கி கொள்ளவும். பாத்திரத்தை மூடி இட்டு, பச்சை வாசனை போகும் வரை வதங்கிட விடவும். தக்காளி நன்றாக வதங்கிய பிறகு, கத்திரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய்களை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வதக்கவும். புளியை ஊற வைத்த புளிதண்ணீர் ஒன்றரை டம்பளர் அளவு சேர்க்கவும்.  (புளிதண்ணீர் திக்காக இருக்க வேண்டும், புளி பழைய புளியாக இருப்பது மிகச்சிறந்தது) உப்பு, மிளகாய் தூள் சேர்க்கவும். உப்பின் அளவினையும் காரத்தின் அளவினையும் சுவைத்து பார்த்து கொள்ளவும். கத்தரிக்காய் வேகவும், புளி தண்ணீர் நன்றாக கொதிக்கவும் பத்து நிமிடங்கள் நல்ல தணலில் குழம்பை கொதிக்க விட வேண்டும். கத்திரிக்காய்கள் பாதியளவு வெந்தபின்னர், சுண்டைக்காயை சேர்த்து மூடியிட்டு கொதிக்கவிடவும். தக்காளி, புளி, மிளகாய்தூள் இவற்றின் வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். அதன்பிறகு ஐந்து நிமிடங்கள் சிம்மில் வைத்து, குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வேளையில் அடுப்பை நிறுத்தி விடவும். இப்பொழுது கறிவேப்பிலை, இலைகளை உருவாமல், கொத்தாகவே குழம்பில் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி இட்டு வைத்து விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து, குழம்பின் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பறிமாறவும். நல்ல வாசனையுடன், சுவையாக இருக்கும். இந்த குழம்பு விரைவில் கெட்டு போகாது. மண் பாத்திரத்தில் செய்கின்றபோது மிகுந்த சுவையுடையதாய் இருக்கும். பச்சைசுண்டைக்காய் காரக்குழம்புடன் சுட்ட அப்பளம் சிறந்த காமினேஷனாக அமையும். இட்லி, தோசைக்கும், சாதத்திற்கும் ஏற்றதானதொரு சுவையான காரக்குழம்பு.


பச்சை சுண்டைக்காயில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:

  • சுண்டைக்காய் செடியின் அனைத்து பாகங்களுமே இலைகள், சுண்டைக்காய்கள், பூக்கள் மருத்துவகுணங்கள் கொண்டது. சுண்டைச்செடியின் இலைகள் இரத்தம் உற்பத்திசெய்வதற்கும், காய்கறிகள் கல்லீரல், கணையம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது. உடல் உறுப்புகளின் சீரான வளர்ச்சிக்கு தேவையான ஊட்டசத்துக்கள் நிறைவாய் அமைந்துள்ளது.
  • சுண்டைக்காயில் வைட்டமின்கள் பி மற்றும் சி அதிகமாக உள்ளது. வாரமிருமுறை உணவாக எடுத்து வருவதன் மூலம் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற நோய்களை குணமாக்குகிறது சுண்டைக்காயை மிளகுடன் சேர்த்து கஷாயமாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் உள்ள கிருமிகள் மலத்துவாரத்தில் ஏற்படும் அரிப்பு காயங்கள் போன்றவற்றை குணமாக்குகிறது. 
  • நீரிழிவு நோயாளிகள் சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கைகால் நடுக்கம், மயக்கம், சோர்வு, வயிற்று பிரச்சனைகள் கட்டுபாட்டிற்குள் இருக்கும். மூலநோயினால் பாதிக்கப்பட்டு, மிகவும் அவதிபடுபவர்களுக்கு சுண்டைக்காய் வரப்பிரசாதம். மூலநோய் தொடர்பான பிரச்சனைகள் அனைத்துமே குணமாக்குகிறது. மூலநோய் உள்ளவர்கள் பச்சை சுண்டைக்காயை மேற்கூறிய முறைப்படி காரக்குழம்பு செய்தோ அல்லது மிளகு, சீரகம், பூண்டு வெங்காயம் சுண்டைக்காய் எல்லாம் சேர்த்து சூப் போல செய்து சாப்பிட்டு வரலாம். இதனால் இருமலும் கட்டுப்படும்.
  • சிறுநீர் கோளாறுகளை குணபடுத்தி, சுலபமாக சிறுநீர் பிரியவும், சிறுநீர் பெருகவும் உதவுகிறது. தலைசுற்றல், மயக்கமடைதல், வாந்தி,பேதி இவற்றையும் குணமாக்குகிறது. சுண்டைக்காயின் ஒருவித கசப்பு சுவையினால் குழந்தைகள் மட்டுமில்லாது பெரியவர்களும் தவிர்த்து விடுகிறார்கள். அதனால் சிறுகுழந்தையிலிருந்தே சுண்டைக்காயை உண்பதை குழந்தைகளுக்கு பழக்கமாக்கிடவேண்டும். அதற்கு முதலில் சுண்டைக்காயில் உள்ள ஊட்டசத்துக்களை நாமறிந்து வைத்திருப்பது அவசியம். இவ்வளவு நன்மைகள் உள்ளதென்று எடுத்துக் கூறினால் குழந்தைகள் நிச்சயமாக உண்ண ஆரம்பித்துவிடுவார்கள்.

Post a Comment

0 Comments