இயற்கை விவசாயத்தில் சூடோமோனஸூன் பங்கு என்ன?
Bio-fertilizers Psudomonos |
சூடோமோனஸ் அறிமுகம்:
இயற்கை விவசாயத்தில் பெரிதும் பங்கு வகிக்கும் உயிர் உரங்களில், மிகமுக்கியமாக பேசப்படுகின்ற உயிர்உரம் தான் சூடோமோனாஸ் உயிர் உரம்.
உயிர் உரங்களில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை தனியாக பிரித்து எடுத்து அடைத்து வைத்திருப்பார்கள். இத்தகைய உரங்களில் அடங்கியுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செடி கொடிகளின் வேர் பகுதிகளில் வேர்களை சேதப்படுத்தும், தீமை செய்யும் பாக்டீரியாக்களையும், தீமை செய்யும் பூஞ்சான்களையும், அழித்து தாவரங்களின் வேர்களுக்கு பாதுகாப்பு வளையமாக செயல்படுகிறது. சாதாரணமாகவே மண்ணில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் நம்முடைய முன்னோர்கள், இயற்கை விவசாயம் செய்த காலங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருந்தன. காலப்போக்கில் இயற்கை விவசாயம் அழிந்து செயற்கை விவசாயம் என்ற பெயரில் நச்சுப்பொருட்களை மண்ணில் கலந்து விவசாயம் செய்ததனால் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விட்டன. இனிவரும் காலகட்டங்களில் நம்மாழ்வார் போன்ற வேளாண் விஞ்ஞானிகளால் இயற்கை விவசாயம் தழைத்து வந்து கொண்டிருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம் தான். சூடோமோனஸ் போன்ற உயிர் உரங்களை தொடர்ந்து நமது விவசாய நிலங்களில் பயன்படுத்தி வருவதால் சூடோமோனஸில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பலமடங்கு பெருகும். செடி கொடிகளின் வளர்ச்சியும் அபரிமிதமாகவும் இருக்கும்.
சூடோமோனஸ் உயிர் உரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
- சூடோமோனாஸ் உயிர் உரங்களை பயன்படுத்துவதால் செடி, கொடிகளில் வரும் இலைப்புள்ளி நோய், குலை நோய், துரு நோய், வாடல் நோய் இவற்றை உண்டுபண்ணும் பூஞ்சான்களை கட்டுப்படுத்துகிறது.
- சூடோமோனாஸ் உயிர் உரத்தைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைப்பதினால், விதைகள் மூலம் உண்டாகும் நோய்களை கட்டுப்படுத்தும்.
- சூடோமோனாஸ் உயிர் உரத்தில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வேரைச் சுற்றி அதி விரைவாக பெருகி தாவரத்தில் ஊடுருவி நோய்க் காரணிகளை கொடுக்கும் தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
- வேர் அழுகல் நோய்களை கட்டுப்படுத்துகிறது. நெல்லில் வரும் குலை நோயை கட்டுப்படுத்துகிறது. இலைகருகல் மற்றும் வாழையில் வரும் பனாமா வாடல் நோயை கட்டுப்படுத்துகிறது.
- சூடோமோனஸில் உள்ள பாக்டீரியாக்கள் வேரைச் சுற்றி நோய் எதிர்ப்பு திரவங்களை உற்பத்தி செய்து அதிக வேர்களை தளிர் வர உதவுகிறது.
- பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வேர்ப்பகுதியில் அதிக தொல்லைகள் கொடுக்கும் நூற்புழு தாக்குதல்களை சூடோமோனஸில் உள்ள பாக்டீரியாக்கள் கட்டுப்படுத்துகிறது.
- செடி கொடிகளின் வேர் பகுதிகளில் அதிக தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தி செடிகொடிகளை பாதுகாக்கிறது.
சூடோமோனஸ் உயிர் உரத்தை பயன்படுத்துவது எப்படி?
விதை நேர்த்தி
சூடோமோனஸ் உயிர் உரங்களில் விதை நேர்த்தி செய்து விதைப்பதினால், விதைகள் தரமான விதைகளாகவும், அதில் இருந்து முளைத்து வரும் செடிகள் ஆரோக்கியமாகவும், நோய் தாக்குதல் இல்லாமலும் வரும். மேலும் முளைப்புத் திறனும் அதிகரிக்கும். விதைகளில் பரவும் தீமை செய்யும் பூச்சிகளை அழித்து விதைகள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகிறது.
Bio Fertilizer Psudomonos |
சூடோமோனாஸை பயன்படுத்தி, நாற்றுகளின் வேர்களை நனைத்து நடவு செய்யும் முறை:
200 கிராம் சூடோமோனஸை எடுத்துக்கொண்டு ஒரு லிட்டர் ஆறிய வடித்த கஞ்சியில் 100 கிராம் வெல்லக் கரைசலை சேர்த்து நாற்றுக்களின் வேர்களை நன்றாக படும்படி நனைத்து நடவு செய்ய ஆரம்பித்தால், வேர்களில் வரும் தீமை செய்யும் பூஞ்சான்களை அழித்து நாற்றுகள் ஆரோக்கியமாகவும், நோய் தாக்குதல் இல்லாமலும், அபரிமிதமான வளர்ச்சியோடு, வேரழுகல் நோய் இல்லாமல் வளர ஆரம்பிக்கும்.
சூடோமோனஸை அடிஉரமாக கொடுக்கலாமா?
சூடோமோனாஸ் உயிர் உரம் 2 கிலோ அளவு எடுத்துக்கொண்டு 50 கிலோ நன்றாக மட்கிய தொழு உரத்தோடு கலந்து அடி உரமாக, மண்ணில் கலந்து விதைக்க ஆரம்பிக்கலாம்; அல்லது நடவு செய்யலாம்.
சூடோமோனாஸ் உயிர் உரத்தை இலைகள் மேல் தெளிப்பது எப்படி?
சூடோமோனாஸை எவ்வளவு கால இடைவெளியில் பயன்படுத்தலாம்?
- சூடோமோனஸ் உயிர் உரங்களை, மாதத்தில் இரண்டு முறை வேர்ப்பகுதியில் கொடுக்கலாம்
- இலைகள் மேலும் தெளித்து விடலாம்.
- முக்கியமாக பழ மரங்களுக்கு கண்டிப்பாக தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
- பூச்செடிகளுக்கு எல்லா காலங்களிலும் கொடுப்பது சிறந்தது.
சூடோமோனஸ் உயிர் உரங்கள் பவுடர் வடிவிலும் கிடைக்கின்றன. நீர்ம வடிவிலும் கிடைக்கின்றன. பவுடர் வடிவில் கிடைக்கும் உயிர் உரம் வெகு விரைவாக காலாவதியாகும். ஆனால் நீர்ம வடிவில் கிடைக்கும் உயிர் உரம் நீண்ட நாட்கள் இருக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் பவுடர் வடிவில் கிடைக்கும் உயிர் உரங்களை பற்றி கூறியது. நீர்ம வடிவில் கிடைக்கும் உயிர் உரங்களை ஒரு லிட்டருக்கு 5மில்லி லிட்டர் கலந்து உபயோகிக்கலாம். இந்த அளவு சிறிய செடிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மாதமான செடிகளுக்கு. ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் செடிகொடிகளுக்கு ஒரு லிட்டருக்கு 10 மில்லி லிட்டர் சூடோமோனஸ் நீர்ம வடிவ உயிர் உரத்தை கலந்து உபயோகிக்கலாம். அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கும் செடி கொடிகளில் உபயோகப்படுத்தும் போது தொடர்ந்து வாரத்திற்கு மூன்று முறையாவது உபயோகப்படுத்தினால் தான் அந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
Bio-fertilizers Psudomonos |
சூடோமோனஸ் உயிர் உரங்கள் கிடைக்கும் இடம்?
சூடோமோனஸ் உயிர் உரங்கள் அனைத்தும் கிராமங்களில் இருக்கும் ஒன்றிய அலுவலகங்களில் கிடைக்கும். மேலும் வேளாண் துறை அலுவலர் அலுவலகங்களில் கிடைக்கும். அனைத்து உர கடைகளிலும் கிடைக்கும். இப்போது ஆன்லைன் கடைகளிலும் கிடைக்கிறது.
சூடோமோனஸ் உயிர் உரங்களை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை:
சூடோமோனஸ் உயிர் உரங்களை கண்டிப்பாக ரசாயனம் கலந்த உரங்களோடு கலந்து உபயோகிக்க கூடாது. சூடோமோனாஸ் உயிர் உரங்களை வாங்கும்போது காலாவதியாகும் தேதியை பார்த்து தான் வாங்க வேண்டும். காலாவதி ஆகி விட்டால் அந்த உயிர் உரங்களை பயன்படுத்தினாலும் பலன் தராது. உயிர் உரங்களை வாங்கி கண்டிப்பாக நிழலில் வைத்துதான் சேமிக்கவேண்டும். வெயிலில் வைத்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அனைத்தும் இறந்து விடும்.
நன்றி!!
இயற்கை விவசாயி!!
திரு.சுதாகர் கிருஷ்ணன்.
ALSO READ |
---|
👉 செம்பருத்தி பூவின் மருத்துவ பயன்கள் |
👉 தலப்பாக்கட்டி சீரக சம்பா மட்டன் பிரியாணி-இப்படி செய்து பாருங்க!! வீடே மணமணக்கும்!!
0 Comments