Translate

சேமியா உப்புமா

     காலை உணவில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது சேமியா உப்புமா. ஒரு நாளில் துவக்க நேரமான காலை பொழுதில் எடுத்துக்கொள்ளும் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு அன்றைய நாளுக்கு உரிய ஊட்டச்சத்துக்களை கொண்டு, ஆற்றலை அளிப்பதாக, ஆரோக்கியமான உணவாக அமைய வேண்டும். அந்த வகையில் தமிழர்களின் உணவுகள் பெரும்பாலும் ஆரோக்கியமானதாகவே உள்ளது. காலையில் எடுத்துக்கொள்ளப்படும் உளுந்தும் அரிசியும் கலந்த இட்லியும், பச்சரிசியும் சிறு பருப்பும் கலந்த பொங்கலும், உலக அளவில் காலையில் எடுத்துக் கொள்ளப்படும் ஆரோக்கிய உணவுகளில் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. வேலை நிமித்தமாக காலை உணவை தவிர்ப்பது மிகவும் தவறான ஒரு செயலாகும். காலை உணவை தவிர்ப்பதன் மூலம் வயிற்றில் தேவையில்லாத அமிலங்கள் சுரப்பதால் வயிற்று வலி, அல்சர், அஜீரணம் போன்ற பல நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. முடிந்தளவு காலை உணவை ஊட்டச்சத்துக்கள் கொண்டதாக குழந்தைகளுக்கு அளிப்பது நமது கடமை. சேமியா உப்புமாக்களில் நிறைய காய்கறிகளை சேர்த்து சமைப்பதால், அழகான வண்ணங்களில் சுவையோடு, குழந்தைகளை கவர்கிறது. குழந்தைகளும் விரும்பி உண்ணுவார்கள் காலைப்பொழுதில் தயாரிக்கக் கூடிய எளிமையான ஆரோக்கியமான உணவு. பேச்சுலர்ஸ்க்கு சேமியா உப்புமா ஒரு வரப்பிரசாதம்.  சேமியாகளில் தற்பொழுது ராகி சேமியா, சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட சேமியா இப்படி பலவகை ஆரோக்கிய சேமியாக்கள் வந்துவிட்டது. இரண்டு நிமிட மேகி நூடுல்ஸ் வருவதற்கு முன் நமக்கெல்லாம் நூடுல்ஸ் இது தான்.😍😍


சேமியா உப்புமா  சுவையாக செய்வது எப்படி?


Sudagarkrishnanchannel
Semiya upma 


தேவையான பொருட்கள்:

  1. சேமியா- 2 பாக்கெட்
  2. வெங்காயம்- 1 பெரியது
  3. பச்சை மிளகாய்- 3
  4. கேரட்- 100 கிராம்
  5. பீன்ஸ்- 100கிராம்
  6. பச்சைபட்டாணி- 100கிராம்

தாளிக்க:

  1. கடுகு- 1/2ஸ்பூன்
  2. உளுந்தம் பருப்பு-1/2ஸ்பூன்
  3. சீரகம்-1/2ஸ்பூன்
  4. கறிவேப்பிலை- 1கொத்து
  5. கடலை எண்ணெய்- ஒரு குழி கரண்டி
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

     வாணெலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன்  கடலை எண்ணெய் ஊற்றவும். வறுக்காத சேமியா என்றால் இரண்டு நிமிடங்கள் வறுத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துகொள்ளவும். வறுத்த சேமியா என்றால் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றவும். கடலை எண்ணெய் சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயங்கள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய  மூன்று பச்சைமிளகாய்கள் மூன்றையும்  சேர்த்து, பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். வெங்காயம் சற்று அதிகமாக சேர்த்துக் கொண்டால் சுவையும் அதிகமாக இருக்கும். வெங்காயம் வதங்கியதும், பொடியாக  நறுக்கிய கேரட், பீன்ஸ் காய்கறிகளையும், பச்சை பட்டாணியையும் சேர்த்து கொள்ளவும். உங்கள் விருப்பம் போல்  உங்களுக்கு பிடித்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். காலிபிளவர்  இருந்தால் அதனையும் கூட சேர்த்து கொள்ளலாம். காய்கறிகளை குறைந்த தணலில் ஐந்து நிமிடங்கள் வதக்கி கொள்ளவும். காய்கறிகள் சீக்கிரமாக வதங்கிட கொஞ்சம் உப்புத்தூள் சேர்த்து கொள்ளவும். காய்கறிகளை ஓரளவு வதக்கிவிட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்புத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இவ்வாறு  வதக்கிய பின்னர் கொதிக்க விட்டால், காய்கறிகளோடு வெங்காயம், கடலைஎண்ணெய் வாசம் சேர்ந்து உணவு சுவையாக இருக்கும். நீங்கள் பயன்படுத்தும் சேமியா பாக்கெட்டுகளில் கொடுத்துள்ள தண்ணீரின் அளவு சரியாக இருக்கும். அந்தளவுக்கே தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். காய்கறிகள் சேர்ப்பதால், சிறிது தண்ணிர் அதிகமாக (காய்கறிகள் வேகும் அளவிற்கு) சேர்த்து கொள்ளவும். காய்கறிகள் 3/4-பாகம் வேகவிட்டால் போதுமானது. தண்ணீர் நன்றாக கொதிக்கும் நேரத்தில் சேமியாக்களை சேர்த்து, கிளறி கொள்ளவும். அடுப்பின் தணலை குறைந்த தீயில் வைக்க தேவையில்லை. சேமியா வேக மூன்று நிமிடங்கள் போதும். கிளறிவிட்டு கொண்டே இருந்தால் போதும். இப்பொழுது சுவையான சத்துள்ள காய்கறிகள் அடங்கிய சேமியா உப்புமா தயார். தேங்காய் சட்னி, தக்காளி தொக்குடன் பறிமாறுங்கள் .

சேமியா கிச்சடி/Semiya Kichadi

தேவையான பொருட்கள்:

  1. சேமியா- 2 பாக்கெட்
  2. வெங்காயம்- 1 பெரியது
  3. தக்காளிப்பழம்- 1
  4. பச்சை மிளகாய்- 3
  5. கேரட்- 100 கிராம்
  6. பீன்ஸ்- 100கிராம்
  7. பச்சைபட்டாணி- 100கிராம்
  8. மஞ்சள் பொடி-சிட்டிகை
  9. இஞ்சி- சிறிய துண்டு
  10. பூண்டு பல்-3

தாளிக்க:

  1. கடுகு- 1/2ஸ்பூன்
  2. உளுந்தம் பருப்பு-1/2ஸ்பூன்
  3. சீரகம்-1/2ஸ்பூன்
  4. கறிவேப்பிலை- 1கொத்து
  5. கடலை எண்ணெய்- ஒரு குழி கரண்டி
  6. முந்திரிபருப்புக்கள்- 10
  7. நெய்-1/2 ஸ்பூன்
  8. கடலை பருப்பு-1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
 

செய்முறை:


அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.  எண்ணெய் சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை கடுகு உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை கடலைப்பருப்பு இவற்றை போட்டு தாளித்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு பற்களை சேர்த்து கொள்ளவும். இரண்டு கிளறுகிளறி விட்டு கொள்ளுங்கள். பின்னர், தக்காளியை போட்டு வதக்கி கொள்ளவும். தக்காளியுடன் மஞ்சள் பொடி அரை ஸ்பூன், உப்பு அரை ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். குறைந்த தீயில் காய்கறிகளை ஐந்து நிமிடம் வதக்கி கொள்ளவும். ஒரு கப் சேமியாவிற்கு இரண்டு கப் வீதம் தண்ணீர் சேர்த்து காய்கறிகளை வேக விடவும். காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு, வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து,  கிளறிக் கொள்ளவும். சேமியா வேக மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் போதுமானது. இப்பொழுது அடுப்பை நிறுத்தி விடவும். சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி பருப்புகளை வறுத்து, சேமியா கிச்சடியின் மீது நெய்யோடு சேர்த்துக் கொள்ளுங்கள். சுவையான சேமியா கிச்சடி தயார் ஆகிவிட்டது. வெங்காய பச்சடி மற்றும் பொட்டுக்கடலை சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி!

Post a Comment

0 Comments