செடி முருங்கை/Moringa Oleifera/Drumstick
Chedi murungai valarpu |
வணக்கம்! இந்தப்பதிவில் மாடித் தோட்டத்திலேயே செடி முருங்கையை எப்படி வளர்க்கலாம், ஆரம்பத்தில் இருந்து அறுவடை வரை என்னென்ன செய்ய வேண்டும், மண் கலவை தயாரித்தல், உரங்கள் எப்பொழுது கொடுக்க வேண்டும், பூச்சிகள் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு, அதிக அறுவடை எடுக்க என்ன செய்யலாம், என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம். முருங்கை மரத்தின் இலை, தண்டு, காய்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் வாய்ந்தது. இதில் அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்துக்கள், சுண்ணாம்பு சத்துக்கள், பொட்டாசியம், புரோட்டீன் போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன. வீட்டில் இடவசதி இல்லாதவர்கள் மாடி தோட்டத்திலேயே செடிமுருங்கை வளர்க்கலாம்.
செடிமுருங்கை வளர்ப்பது எப்படி?
மண்கலவை:
மாடித் தோட்டத்திற்கு செடி முருங்கை வளர்க்க மண் கலவை தயார் செய்தல்.
மாடி தோட்டத்தில் செடி முருங்கை வளர்க்க 50 லிட்டர் கேன் மிகவும் வசதியாக இருக்கும். வளர்ப்பு பைகளில் வளர்க்க வேண்டுமானால் இரண்டடி அகலம் இரண்டடி ஆழம் இருக்குமாறு வளர்ப்பு பையை தேர்வு செய்து தேர்வு செய்வது நல்லது. மண் கலவை என்று எடுத்துக் கொண்டோமானால், செடிமுருங்கை மணல் கலந்த, செம்மண்ணில் நன்றாக வளரும். உங்களிடம் செம்மண் இல்லை என்றால் பரவாயில்லை, தோட்டத்து மண் கூட எடுத்துக் கொள்ளலாம். இரண்டு மடங்கு மண், ஒரு மடங்கு தொழு உரம் அல்லது மண்புழு உரம், ஒரு மடங்கு வேப்பம் புண்ணாக்கு, 100 கிராம் உயிர் உரங்கள்-சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, டிரைக்கோடெர்மா விரிடி, பொட்டாஷ் பாக்டீரியா இவை அனைத்தும் ஒவ்வொன்றும் இருபது கிராம் அளவு எடுத்துக்கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்றாக கலந்து ஏழு நாட்கள் ஈரப்பதத்தோடு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் நுண்ணுயிர்கள் அனைத்தும் பெருகி செடி வளர்வதற்கு உண்டான சூழலை ஏற்படுத்தும். ஏழு நாட்கள் கழித்து விதைக்க ஆரம்பிக்கலாம்.
செடி முருங்கை வளர்ப்பு:
செடிமுருங்கை விதைத்து 9-ல் இருந்து 12 நாட்களுக்குள் முளைத்து வர ஆரம்பிக்கும். செடிமுருங்கை விதைத்து முப்பது நாட்களில் ஒரு அடிக்கு மேல் வளர்ந்து இருக்கும். அப்போது தொழுஉரம் அல்லது மண்புழு உரம் வேப்பம்புண்ணாக்கு உயிர் உரங்கள் மண் கலவையில் சேர்க்க வேண்டும். செடி முருங்கை விதை விதைத்து நாற்பதில் இருந்து ஐம்பது நாட்களில் செடி மூன்று அடி அளவு வளர்ந்திருக்கும். அப்போது கண்டிப்பாக நுனியை கிள்ளி விட வேண்டும் இப்படி செய்வதால் பக்கக் கிளைகள் நிறைய வந்து, கீரைகளும் நமக்கு அதிகம் கிடைக்கும்.இந்த நேரத்தில் செடி முருங்கையின் வேருக்கு பக்கத்தில் பெருங்காயத்தை புதைத்து வைக்க வேண்டும். இதனால், பெருங்காயத்தின் சாறு செடிகளின் தண்டுகள் முழுவதும் பரவுவதால், கம்பளி பூச்சிகளின் தாய்ப் பூச்சிகள் வந்து முட்டையிடாமல் போகும். கம்பளி பூச்சி தொல்லையிலிருந்து செடி முருங்கையை சுலபமாக காப்பாற்றலாம். செடி முருங்கை விதை விதைத்ததில் இருந்து 180 நாட்களில், பூக்கள் வந்து காய்கள் காய்க்க ஆரம்பிக்கும். தொடர்ந்து ஆறு மாதங்கள் காய்த்துக் கொண்டே இருக்கும். செடி முருங்கையில் பூச்சிகளை கட்டுப்படுத்த இரண்டு இலையிலிருந்து வேப்பெண்ணெயுடன் காதி சோப்பு கலந்து பூச்சிகள் வந்தாலும், வராவிட்டாலும், வாரம் ஒருமுறை தெளித்துக் கொண்டே வர வேண்டும்.
காவாத்து:
செடி முருங்கை காய்த்து முடித்தவுடன் கவாத்து செய்வது அவசியம். அப்போது பக்கக் கிளைகள் அதிகம் வந்து, ஒவ்வொரு கிளையிலும் காய்கள் காய்க்க ஆரம்பிக்கும். கவாத்து செய்தவுடன் கண்டிப்பாக உயிர் உரங்கள், தொழு உரம், அல்லது மண்புழு உரம், வேப்பம்புண்ணாக்கு கொடுப்பது அவசியம். இதனால் திரும்பவும் அதிக காய்கள் காய்ப்பதற்கு உதவும். முருங்கை வளர்ப்பதில் ஒரு பழமொழி உண்டு. அடித்து வளர்க்காத பிள்ளையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது என்று. எனவே, முருங்கை என்று எடுத்துக்கொண்டாலே, கவாத்து என்பது மிகவும் அவசியமானது. இதை முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
Chedi Murungai valarpu |
செடி முருங்கையில் பூச்சிகள் கட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு:
செடி முருங்கையில் ஆரம்பத்தில் வருவது இலைப்பேன் இவற்றை தண்ணீர் பீச்சி அடிப்பதால் கீழே கொட்டி விடும்.அல்லது ஒரு கைப்பிடி வேப்பம் புண்ணாக்கு வேர்பகுதியில் போட்டு தண்ணீர் ஊற்றி வந்தால் இலை பேன் தொல்லை கட்டுப்படும். செடி முருங்கையில் அடுத்ததாக வருவது இலை பிணைப்பு புழு உங்கள் முருங்கை மரத்தில் பார்த்தால் இலைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு இலைகள் வெளிர் தன்மையாக காணப்படும் அந்த இலைகளுக்கு இடுக்கில் பார்த்தால் புழுக்கள் இருக்கும். இதுதான் இலை பிணைப்பு புழு. இதற்கு வேப்ப எண்ணெய் அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தெளித்தாலே போதும்.அடுத்தது மொட்டுக்களை சேதப்படுத்தும் மொட்டுப் புழு தாக்குதல் இருக்கும் இது மொட்டுக்கள் வரும்போதே மொட்டை துளைத்து அதில் உள்ள சத்துக்களை எடுத்துக் கொண்டு உயிர்வாழும். இதனால் காய்களே வராமல் போய்விடும். இவற்றிற்கு பெருங்காயத்தை காதி சோப்புடன் கலந்து தெளிக்கலாம்.அடுத்தது முருங்கைமரம் என்றாலே கம்பளிப் பூச்சிகள் தான் ஞாபகம் வரும் கம்பளி பூச்சிகளை கட்டுப்படுத்த வேர் பகுதியில் பெருங்காயத்தை புதைத்து வைக்கலாம். அல்லது வேப்ப எண்ணெய், இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் இவற்றை தெளிப்பதால், தாய்ப் பூச்சிகள் முட்டை இடாமல் போய்விடும். இலைகளில் கம்பளிப் பூச்சிகள் அடை போல் இருக்கும். அதை மட்டும் எடுத்து தீயிலிட்டு கொளுத்தி விடலாம்.
செடி முருங்கை மரத்தில் பூக்கள் உதிர்தல் பிரச்சனை இருந்தால் மோர் பெருங்காயத்தூள் கரைசல் தெளிப்பதால் பூக்கள் உதிர்வது கட்டுப்படும் அல்லது தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம் இவற்றை கூட நாம் தெளித்து பூக்கள் உதிர்வை சரிசெய்யலாம். மீன் அமினோ அமிலத்தை தண்ணீரில் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்றி விடலாம். செடி முருங்கை மரத்தை மாடித்தோட்டத்தில் எப்படி சுலபமாக வளர்க்கலாம் என்று ஆரம்பத்தில் இருந்து அறுவடை வரை பூச்சிகள் கட்டுப்பாடு என்ன உரங்கள் கொடுக்கலாம் என்பதைப் பற்றி விரிவாக இந்த பதிவில் பார்த்தோம். இதில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பாருங்கள். உங்களுக்கு பயனுடையதாக அமையும்.
இறுதியாக ஒன்றை மட்டும் கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன். முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போக மாட்டான் என்றொரு பழமொழி உண்டு. இதன் விளக்கம் என்னவென்றால் முருங்கையை நட்டவன் வயதான பிறகும் கோலூன்றி நடக்கத் தேவையில்லை. ஏனென்றால் அவ்வளவு சத்துக்கள் இந்த முருங்கையில் இருக்கிறது. என்பதைத் தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழி மூலம் சொல்லி இருக்கிறார்கள். இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் நன்றி!
2 Comments
Very useful and informative. Thank you sir
ReplyDeleteVery well explained
ReplyDelete