உட்புற தாவரங்கள் வளர்ப்பு
Indoor Plants |
வீட்டை அழகாக வைத்துக்கொள்ள எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதில் ஆர்வம் அதிகம். 30 வருடங்களுக்கு முன்பெல்லாம், மரப்பொருட்கள், கண்ணாடி பொருட்கள், சுவர் கடிகாரங்கள், பொம்மைகள், பூ ஜாடிகள் , அழகான இயற்கை காட்சிகள், போட்டோக்கள் இவற்றை கொண்டு வீட்டை அலங்கரிப்பார்கள். அந்த பொருட்களெல்லாம் விலையும் அதிகம். நாளடைவில் தூசு படிந்து, நிறம் மங்கலாகி குப்பைக்கு போகும் நிலைக்கு வந்துவிடும். சிலநேரங்களில் அதிக விலை கொடுத்து வாங்கிய விலைஉயர்ந்த பொருட்கள் அடுத்தநாளே உடைந்து போய், நம் மனசையும் சேர்த்து ஒரு வாரத்திற்கு உடைத்துவிடும்.
வீட்டை அலங்கரிப்பது என்பது ஒரு கலை. அந்த கலைக்கே மணிமகுடம் போல் திகழ்வது அழகான உட்புற தாவரங்கள். ஒரு பசுமையான செடி தரும் ரம்மியத்தையும், நேர்மறை ஆற்றலையும் Positive Vibration} விலைஉயர்ந்த உயிரற்ற பொருட்கள் கொடுத்துவிட முடியாது. இப்பொழுதெல்லாம் மக்களிடையே, உட்புற தாவரங்களை வளர்ப்பதில் ஆர்வமும் விருப்பமும் அதிகரித்து வருகிறது. உட்புற தாவரங்கள் வீட்டின் சமையலறை, வரவேற்பறை, படுக்கை அறை, கழிவறை வரை அனைத்து இடங்களிலும் இடம்பெற்று உள்ளது.
அதிர்ஷ்டம், அழகு, பணவரவு, தெய்வநம்பிக்கை, ராசிக்குரிய தாவரங்கள், தூய்மைகாற்று என பல்வேறு காரணங்களுக்கென்றே தனிதனியே உட்புற தாவரங்கள் கிடைக்கின்றன. நோக்கம் எதுவாயினும் செடி வளர்ப்பது சிறந்தது தானே!!..
இன்றைய பதிவில்,
- இன்டோர் பிளாண்ட்ஸ் வளர்ப்பது சிறந்ததா?..
- ஏன் உட்புற தாவரங்களை வளர்க்க வேண்டும்?
- இன்டோர் பிளாண்ட்ஸ் எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்?
- எந்த தொட்டியில், எந்த இடத்தில் வைக்க வேண்டும்.
- தண்ணீர், சூரிய ஒளி எவ்வளவு கொடுக்க வேண்டும்?
- மண்கலவை தயாரிப்பது எப்படி?
- உரங்கள், பூச்சிமருந்துகள் அவசியமா?
இது போன்ற உட்புற தாவரங்கள் பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தெளிவான விடைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
உட்புற தாவரங்கள் - ஓர் அறிமுகம்:
அக்காலங்களில் வீட்டின் பின்புறம் மூலிகை செடிகளும் வாழைமரங்களும், வீட்டை சுற்றிலும் புங்கை மரங்களும் வேப்பம் மரங்களும், வீட்டின் முன்புறம் அழகான பூச்செடிகளும் வளர்த்து வந்தார்கள். பண்ணை வீடுகளும் விவசாய நிலங்களும் என எங்கும் பசுமையும் வளமையும் காணப்பட்டது.
ஆனால் பெருகிவரும் மக்கள் தொகையும், வேகமான வாழ்கை முறையும், இடப்பற்றாகுறையும் அப்பார்ட்மெண்ட்ஸ் வாழ்கையும் தாவரங்கள் வளர்ப்பதையே மறக்க வைத்துவிட்டது. இந்த சூழலில் தான், மறுத்து போன உணர்வுகளை மலரச் செய்ய, உட்புற தாவரங்கள் வளர்ப்பு தோன்றியது. சமீபகாலங்களில் செடி வளர்ப்பதில் 41.7 சதவிகிதமாக, மக்களின் ஆர்வம் அதிகரித்திருப்பதாக, சுற்றுசூழல் அமைப்பு கருத்துகணிப்பு கூறுகிறது.
இடமில்லாதவர்கள் கூட ஆர்வமிருந்தால் சமையலறையிலோ, ஜன்னல் ஓரங்கள், சிறிய பால்கனியில் கூட ஒரு சிறிய தாவரத்தை வளர்க்கலாம்.
இதற்கென மூட்டை மூட்டையாய் உரங்களும், பலவகை பூச்சிகொல்லி மருந்துகளும் அவசியமில்லை. குறைந்த பராமரிப்பு போதும்.
இன்டோர் பிளாண்ட்ஸ்கள் பலவகைப்படும்.
- சக்யுலண்ட்ஸ்,
- கள்ளிச்செடிகள்,
- பூக்கும் தாவரங்கள்,
- மூலிகை தாவரங்கள்,
- தண்ணீரில் வளர்க்கும் தாவரங்கள்
- தொங்கும்தாவரங்கள் { hanging Plants}
- கொடிதாவரங்கள் { trailing and climbing Plants }
- ஃபெர்ன் fern வகை தாவரங்கள்.
- கல்வகைதாவரங்கள்{ living stone type}
- மரவகையை சார்ந்த பெரிய தாவரங்கள் large Plants. இந்த வகை தாவரங்கள் பொதுவாக ரெசார்ட், பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் வைத்திருப்பார்கள்.
- மூங்கில் தாவரங்கள்.
- பல்பு வகை தாவரங்கள் bulbous type தாவரங்கள்
- போன்சாய் தாவரங்கள்
- கிறிஸ்மஸ் தாவரங்கள் - இவை குளிர்காலத்தில் பூக்கும் தாவரங்கள் மற்றும் அதன் தனித்துவமான தன்மைகள், இதனை அடையாளபடுத்தி காட்டுகிறது. .
ஏன் உட்புற தாவரங்களை வளர்க்க வேண்டும்?
Benefits of Indoor Plants :
நாலு காய்கறி செடி வச்சா ஒரு வேளை சமையலுக்காவது காய்கறி கிடைக்கும்!! . "இதெல்லாம் பூக்குதா , காய்க்குதா காசு தான் வேஸ்ட்" என்பது தான் பலரின் எண்ணம். ஆனால், இன்டோர் பிளாண்ட்சின் நன்மைகளை தெரிந்து கொண்டால் இப்படி கூறமாட்டீர்கள். அவ்வளவு நன்மைகளையும் ஆரோக்கியத்தையும் வழங்க கூடியது உட்புற தாவரங்கள்.
தூய்மையான காற்றை கொடுக்கிறது:
- வீட்டிற்கு வெளியே தான் காற்று மாசுபட்டுகொண்டிருப்பதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால் வீட்டிற்குள் இருக்கும் காற்று தான் எலக்ட்ரானிக் பொருட்களின் அலைக்கற்றைகள், வீட்டு சுவரின் வண்ணப்பூச்சுகள் போன்ற பல காரணிகளால் அளவுக்கு அதிகமாக மாசு பட்டு கொண்டிருக்கிறது. இதன் காரணமாக டஸ்ட் அலர்ஜி, வீசிங் போன்ற பல சுவாச பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிலும் குழந்தைகளும் வயதான பெரியவர்களும் அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இதனை சரிசெய்ய வீட்டில் சுத்தமான காற்றினை செலவில்லாமல் பெற, காற்றை சுத்தபடுத்துவதற்கென்றே பல உட்புற தாவரங்கள் உள்ளது.
உதாரணமாக, ஸ்பைடர் பிளாண்ட், அரேக்கா பாம், ஸ்நேக் பிளாண்ட், பீஸ்லில்லி போன்றவற்றை கூறலாம். இந்த செடிகள் வீட்டினுள் வைத்து வளர்க்கும் போது, அசுத்த காற்றை, சுத்தமான காற்றாக மாற்றி நமக்கு கொடுக்கிறது.
இந்தசெடிகள் வீட்டில் வளர்க்க சிறந்த செடிகள் என்று நாசாவால், பரிந்துரைக்கப்படுகிறது.
காற்றை சுத்தபடுத்தும் பலவகையான செடிகளை பற்றி மேலும் விளக்கங்களை தெரிந்து கொள்ள இந்த காணொளியைபாருங்கள்.!! 👇
வீட்டை தூசு படியவிடாமல் பாதுகாக்கிறது:
உட்புற தாவரங்களை வளர்ப்பதால், நீங்கள் வீட்டை அடிக்கடி சுத்தபடுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இத்தகைய செடிகள், வீட்டில் தூசு படியவிடாமல், தம்மிடம் கவர்ந்து இழுத்துக்கொள்கின்றன. அதனால் வீடு பளபளப்பாய், எப்பொழுதுமே அழகாக புதியவீடு போல இருக்கும்.
நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது:
உட்புற தாவரங்கள் மனதிற்கு நல்ல புத்துணர்ச்சியையும், அமைதியையும் கொடுக்கின்றன. மணிபிளாண்ட், அதிர்ஷ்ட மூங்கில், மூங்கில் வகை தாவரங்களை வளர்ப்பதன் மூலம், வீட்டிற்குள் எப்பொழுதுமே நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கின்றது. இது சீன பல்கலைகழக ஆய்வில் நிருபிக்கப்பட்ட உண்மையும் கூட.
வாஸ்து பிரச்சனைகள் தீர,
வாஸ்து ஜோதிடத்தின் அடிப்படையிலும், விருட்ச சாஸ்திரப்படியும் வீட்டில் சில குறிப்பிட்ட தாவரங்களை வளர்ப்பது, வாஸ்து பிரச்சனைகளை சரி செய்வதோடு , அதிர்ஷ்டத்தையும் கொடுப்பதாக வாஸ்து நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனடிப்படையில் பல தாவரங்களும், செடிவகைகளும் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் வளர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. உட்புற தாவரங்களில், பீஸ் லில்லி, மணிபிளாண்ட், ஆர்ச்சிட் வகை தாவரங்கள், கற்றாழை, மூங்கில் தாவரங்கள் , ஸ்நேக் பிளாண்ட்ஸ் இவற்றை வாஸ்து பிரச்சனைகள் தீர, வீடுகளில் வைத்து வளர்க்கலாம்.
பராமரிப்பு குறைவு:
வீட்டில் மாடி தோட்டம் அமைத்து தாவரங்களை வளர்க்க வேண்டும் மெனில், குறைந்தது 40, 50 தொட்டிகள், அவற்றிற்கு மண், உரங்கள் தொடர் பராமரிப்பு என அதிக {வேலைகள்} கவனம் வேண்டும். இரண்டு நாள் தண்ணீர் ஊற்ற வில்லை எனில், அவ்வளவு தான். செடிகள் வாடி இறந்து போய்விடும். செடிகளுக்காகவே நாம் இரண்டு நாட்களுக்கு மேல் வெளியூர், சுற்றுலா செல்ல தயங்குவோம்.
வீட்டு தோட்டம் என்றால், முதலில் அதற்கு பெரிய இடம் வேண்டும். அங்கும் மேலே குறிபிட்டதை போல, மண்ணை தயார் செய்து உரங்கள், பூச்சிமருந்துகள் etc.. எல்லாமே வேண்டும்.
ஆனால் இன்டோர் பிளாண்ட்ஸ்க்கு பெரிய இடமோ, அதிக கவனிப்போ தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் கொடுத்தாலே போதும். உரங்களோ, பூச்சி மருந்துகளோ அதிகம் தேவைபடாது. பராமரிப்பும் வேலையும் குறைவு தான். அதுவும் இந்த Zz பிளாண்ட்ஸ்க்கெல்லாம் நீங்கள் 20 நாள் வரை கூட தண்ணீர் கொடுக்காமல் இருக்கலாம். ஒன்றுமே ஆகாது. பொதுவாக, இத்தகைய செடிகளின் வேர்கள் கிழங்குகளை போல இருக்கும். அந்த கிழங்குகளில் இந்த செடிகள் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளும். அதனால் தான் அவ்வளவு எளிதில் வாடி போவதில்லை.
வாடகை வீட்டில் இருப்பவர்களும், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களும் உட்புற தாவரங்களை சுலபமாக, விரும்பிய வண்ணம் வளர்க்கலாம்.
அன்று ஒரு சகோதரி இன்ஸ்டாவில் என்னிடம் கேட்டார்கள், அண்ணா உங்கள் சேனலை விரும்பி பார்த்து வருகிறேன். எனக்கும் செடி வளர்க்க ஆசையாக உள்ளது. ஆனால் எங்கள் ஊரில் தண்ணீர் கஷ்டம். நான் என்ன செய்வது? எதாவது ஆலோசனை தாருங்கள்,. என்று.
இப்படி, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக உட்புற தாவரங்கள் உள்ளது.
உட்புறதாவரங்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும்?
உட்புற தாவரங்களின் நன்மைகளை அறிந்து கொண்ட உடனே, ஆவலிலும் அதிக ஆர்வத்திலும் ஒருகடைக்கு சென்று ஏராளமான தாவரங்களை வாங்கி வந்துவிடக்கூடாது.
- முதலில் என்ன நோக்கத்திற்காக தாவரங்களை வாங்க போகிறோம்? அதிர்ஷ்ட செடிகளா? வாஸ்து பிரச்சனைகளுக்காகவா, அலுவலகத்திற்காகவா, வீட்டிற்காகவா இப்படி ஒவ்வொரு தேவைக்கும் ஏற்ப தனிதனி செடிகள் உள்ளது. அதனை முடிவு செய்து செடிகளை தேர்வு செய்ய வேண்டும்.
- உங்கள் வீட்டில் குழந்தைகளும், செல்லபிராணிகளும் இருந்தால் சில செடிகளின் இலைகள் விஷதன்மை வாய்ந்ததாக இருக்கும். அதனை தெரிந்துகொண்டு செடிகளை தேர்வுசெய்ய வேண்டும்.
- எந்த இடத்தில் வைக்கபோகிறோம் என முடிவு செய்து, அதாவது வரேவேற்பறை, படுக்கை அறை, குளியல் அறை, மாணவர்கள் படிக்கும் அறை என, அவற்றிற்கேற்ப செடிகளை தேர்வு செய்யலாம்.
- உட்புற தாவரங்களில் 70 சதவிகித தாவரங்களை, இலைகள், தண்டுகள் இவற்றை பதியம் போடுவதின் மூலமே வளர்க்கலாம். உங்கள் நண்பர்கள் வீட்டில் உங்களுக்கு பிடித்த செடிகள் இருந்தால், அதன் கிளைகளை கத்தரித்து கொண்டு வந்து வளர்க்கலாம். நீங்கள் beginnerஆக இருக்கும் போது, அதிக பணத்தை விரயம் செய்யாமல், முதலில் இவ்வாறு ஒண்றிரண்டு செடிகளை வளர்க்கலாம். ஓரளவேனும் அனுபவம் பெற்ற பிறகு, அதிக செடிகளை வளர்க்க ஆரம்பிக்கலாம். ஏனெனில் உட்புற தாவரங்கள் கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதனால் இது சிறந்த வழி.
- உட்புற தாவரங்களை வாங்க கடைக்கு சென்றால், விலை குறைவான சிறிய செடிகளையே முதலில் தேர்ந்தெடுங்கள்.
- அதிக கிளைகள் வைத்து அடர்த்தியாக இருக்கும் செடிகளை தவிர்த்து விடுங்கள். ஏனெனில், பெரும்பாலும் அவை வயதான பழைய செடிகளாகவே இருக்கும். மேலும் அதிக இரசாயண உரங்கள் கொடுத்து வளர்க்கப்பட்டிருக்கும். அது ஏற்கனவே தன் சக்திகள் எல்லாம் கொடுத்து நன்றாக வளர்ந்து முடிந்து விட்டிருக்கும்.,
- ரோஜா செடிகள் வாங்கும் போது, பலரும் செய்யும் தவறு இதுதான். நிறைய பூக்கள் பூத்து, பஞ்சாக இருக்கும் செடிகளை வாங்குவார்கள். அது வீட்டிற்கு வந்த சில நாட்களிலே மீதம் இருக்கும் மொட்டுகளை பூத்து இறந்துவிடும். சிறியதாக இருக்கும் புதிய செடிகளை வாங்க வேண்டும்.
- இது மிகவும் முக்கியமான டிப்ஸ்: எந்த செடியை வாங்கினாலும், அதில் புதிய துளிர்கள் இருக்கிறதா, என்று பார்த்து வாங்குங்கள்.
- பூச்சிதாக்குதல், நோய்தாக்குதல் இருந்தாலும், வாடிபோன செடிகளாக இருந்தாலும் வாங்க வேண்டாம்.
உட்புற தாவரங்களுக்கு சிறந்த தொட்டியை தேர்வு செய்வது எப்படி?
பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு இங்குதான் - உட்புற தாவரங்களுக்கு தொட்டியை தேர்ந்தெடுப்பது தான். வீட்டிற்குள் அழகான அலங்காரபொருளாக இருக்க வேண்டுமென, எதேதோ தொட்டிகளில் தாவரங்களை வைத்து சாகடித்து விடுகின்றனர். பிளாஸ்டிக் தொட்டிகள், பீங்கான் தொட்டிகள், மரத்திலான தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள், கண்ணாடி தொட்டிகள், மூங்கில் தொட்டிகள் என பல வகையான தொட்டிகள் கடைகளில் கிடைக்கிறது. பல்வேறு வடிவங்களிலும், நிறங்களிலும் அழகழகாக உட்புற தாவரங்களுக்கு தொட்டிகள் கிடைக்கின்றன.
உட்புற தாவரங்கள் ஈரப்பதத்துடன் ஒருவித குளிர்ச்சியான சூழ்நிலையை விரும்புபவை. அதனால் உட்புறம் சின்னசின்ன நுண்துளைகள் கொண்ட தொட்டியில் வளர்த்தால் தான், அவற்றால் சுலபமாக சுவாசிக்க முடியும். அதற்கு என்னுடைய முதல் பரிந்துரை, மண்தொட்டிகள் தான். உட்புற தாவரங்கள் என்றில்லை; மண்தொட்டிகளில் நீங்கள் எந்த செடியை வளர்த்தாலும், செழிப்பாக வளரும். ரோஜா செடிகளை மண் தொட்டிகளில் வளர்த்து பாருங்கள். அது சூப்பராக வளர்ந்து அதிக பூக்கள் பூக்கும்.
அடுத்ததாக பீங்கான் செராமிக் தொட்டிகள். இந்த தொட்டிகள் விலை அதிகம், என்றாலும் பார்பதற்கு அழகாக இருக்கும். நீண்டகாலம் உழைக்கும்.
இந்த தொட்டிகளில் செடிகளை வளர்க்கும் போது, உட்புற தாவரங்கள் நன்றாக வேர் பிடித்து செழித்து வளரும். என் வீட்டில் உள்ள உட்புற தாவரங்கள் அனைத்துமே செராமிக் தொட்டியில் தான் நான் வைத்திருக்கிறேன்.
பிளாஸ்டிக் தொட்டிகளை தவிர்ப்பது நல்லது. அதற்கடுத்ததாக வளர்ப்புபைகள், மற்றும் சிமெண்ட் தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம்.
செடிகளின் அளவிற்கேற்ப தொட்டிகளை தேர்வு செய்து கொள்ளலாம். சிறிய செடிகள் என்றால், 12*12 தொட்டிகளே போதுமானதாக இருக்கும். பீஸ் லில்லி, Zz பிளாண்ட்ஸ், Anthurium, Dieffenbachia, syngonium plant, Poinsettia போன்ற செடிகளுக்கு இந்த அளவு தொட்டி போதுமானதாக இருக்கும்.
சிலர் உட்புற தாவரங்களை வளர்க்கும் தொட்டிகளில் கற்களை அழகிற்காக போட்டு வைப்பார்கள். இது எல்லா செடிகளுக்கும் பொருந்தாது. அதிகமான இன்டோர் பிளாண்ட் வேர்கள் கிழங்குகளாகவே இருக்கும்..அத்தகைய செடியின் கிளைகள், வேரிலிருந்தே வரும். இதனால் கிளைகள், மற்றும் வேர் வளர்ச்சியும் பாதிக்கும்.
தண்ணீர், சூரிய ஒளி எவ்வளவு கொடுக்க வேண்டும்?
உட்புற தாவரங்கள் என்றதுமே, பலரும் நினைப்பது வெயிலும் தேவையில்லை. தண்ணீரும் எப்பொழுதாவது கொடுத்தால் போதும் என்று. இது முற்றிலும் தவறாகும். உட்புற தாவரங்களுக்கு நேரடி சூரியனின் வெப்பம் ஆகாது. ஆனால் அடர்த்தியான நல்ல ஒரு வெளிச்சம் நிச்சயமாக வேண்டும். இருட்டறையில் கொண்டு போய் செடிகளை வைத்து விடக் கூடாது. ஒளிச்சேர்க்கையே நடைபெற முடியாமல் தாவரங்கள் இறந்து விடும்.
காலை வெயில், அல்லது மாலை வெயில் கிடைக்கும் இடங்களை தேர்வு செய்து செடிகளை வைக்க வேண்டும். ஷோகேஸ், உணவருந்தும் மேஜை போன்ற இடங்களில் செடிகளை வைப்பதாய் இருந்தாலூம், அந்த இடங்களில் வெளிச்சம் வரும் திசைகளை நோக்கி செடிகளை இடம் அமர்த்த வேண்டும்.
அல்லது இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது, தாவரங்களை காலைவெயில் அல்லது மாலை வெயில் கிடைக்கும் இடங்களில் வைத்து, பின்னர் விரும்பிய இடங்களில் வைத்து கொள்ளலாம்.
உட்புற தாவரங்களில் கவனிக்க வேண்டிய முக்கியமான குறிப்பு இது..
வீட்டிற்குள் இருப்பதால், தாவரங்கள் மீதும், இலைகளின் மீதும் அதிக தூசு படிய வாய்ப்புக்கள் அதிகம். அதனால் நேரம் கிடைக்கும் போது, ஒரு மெல்லிய ஈர பருத்தி துணியால் இலைகளை துடைத்து விடலாம். அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செடிகளை நன்றாக அலசி, இரண்டு மணிநேரம் மிதமான வெயிலில் வைத்து, பின்னர் வீட்டிற்குள் வைத்து விடலாம்.
தண்ணீர்:
வாரம் ஒருமுறை, மாதம் ஒரு முறை என்றெல்லாம் கணக்கு வைத்து தண்ணீர் கொடுக்க வேண்டியதில்லை. செடி வைத்திருக்கும் தொட்டி மண்ணில், உங்கள் ஆள்காட்டி விரலை இரண்டு இன்ச் ஆழத்திற்கு வைத்து பாருங்கள். தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருந்தால் தண்ணீர் கொடுங்கள். அவ்வளவு தான்.
தண்ணீர் தேங்காமலும், ஈரப்பதம் அதிகம் இல்லாமலும் பார்த்து கொள்வது நல்லது.
கிழங்கு செடிகள், Rhizome, bulbs, Tubers, Corms அல்லது பல்பு செடிகள்,
அடினியம் போன்ற செடிகள் வேர் முடிச்சுகளில் உள்ள பல்புகளில் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளும். இதுபோன்ற செடிகள் ஒரு மாதம் வரை கூட தண்ணீர் இல்லாமல் வாழும். மேலும் இவ்வாறு நன்றாக மண் காயும் போது, அதன் வேர்கள் தண்ணீர் இருக்கும் பகுதிகளை தேட ஆரம்பிக்கும். இதனால் வேர் வளர்ச்சி அதிகரிக்கும்.
மண்ணிற்கு மேலே உள்ள கோடக் போன்ற பகுதி - பெரியதாக ஆரம்பிக்கும். இதனால் பார்பதற்கு அடினியம் போன்சாய் தாவரங்களை போல அழகாக இருக்கும். இது ஒரு சிறந்த டிப்ஸ் . நீங்கள் அடினியத்தை போன்சாய் போல வளர்க்க நினைத்தால் முயற்சி செய்து பாருங்கள்.
உட்புற தாவரங்களுக்கு சிறந்த மண்கலவை:
உட்புற தாவரங்கள் மிகவும் மிருதுவானவை. குழந்தைகளை போன்றது. அவற்றிற்கு மண்கலவை தயாரிப்பதில் அதிக கவனம் தேவை. மண்கலவை சரியாக நீங்கள் தயாரித்து வைத்துவிட்டாலே, இன்டோர்பிளாண்ட்ஸ் வளர்ப்பில் வெற்றி பெற்று விடலாம்.
மண்கலவை
தேவையான பொருட்கள் |
அளவுகள் |
---|---|
தோட்டத்துமண் | இரண்டு பங்கு |
மணல் | ஒரு பங்கு |
தேங்காய்நார் கழிவு | ஒரு பங்கு |
விறகு எரித்த கரி [உடைத்தபொடியாக] | ஒருகைப்பிடி அளவு |
வேப்பம் புண்ணாக்கு | இரண்டு ஸ்பூன் |
உயிர் உரங்கள்- அசோஸ்பெயரில்லம், சூடோமோனஸ், ட்ரைக்கோட்ரமாவிரிடி | அனைத்தும் ஒரு ஸ்பூன் |
மண்புழு உரம்/ காய்கறிகழிவு உரம் | ஒரு ஸ்பூன் |
இந்த அளவுகள், ஒரு தொட்டிக்கான அளவுகள். இவ்வாறு நீங்கள் மண்கலவை தயார் செய்து, ஒரு வாரம் நிழற்பாங்கான இடத்தில் வைத்திருந்து, பின்னர் இந்த மண்கலவையில் செடிகளை நீங்கள் நடவு செய்யலாம்.
செடிகளை நடவு செய்யும் போது, ஒரு ஸ்பூன் எப்சம் சால்ட் கலந்த தண்ணீரை , முதல் தண்ணீராக கொடுக்கும் போது, 100% வேர் பிடித்து வளரும். இது நான் பின்பற்றும் ஒரு ட்ரிக்ஸ். அல்லது தெளிந்த மழைநீரை கூட பயன்படுத்தலாம்.
உரங்கள், பூச்சி கட்டுப்பாடு:
உட்புற தாவரங்களுக்கு உரங்கள் பெரிதாக தேவைப்படாது. இரண்டு மாதங்கள் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு கைப்பிடி அளவு மண்புழு உரத்தை வேர் பகுதியில் கலந்துவிடலாம். பூ பூக்கும் தாவரங்கள் என்றால் ஒரு ஸ்பூன் எப்சம் சால்ட் கொடுக்கலாம். உட்புற தாவரங்களுக்கு திட உரங்கள் கொடுப்பதை, விட திரவ உரங்கள் கொடுப்பது, மிகச் சிறந்தது. உட்புற தாவரங்கள் அதிகமாக இலைத் தாவரங்கள் என்பதால், நைட்ரஜன் மிகுந்த உரங்களைக் கொடுக்க வேண்டும். அதற்கு கீழ்வரும் இந்த ஐந்து உரங்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
- மழைதண்ணீர்
- கம்போஸ்ட் டி
- மீல் மேக்கர் ஊறவைத்த தண்ணீர்
- வாழைபழதோல் ஊறவைத்த தண்ணீர்.
- கற்றாழை தோல் ஊற வைத்த தண்ணீர்.
கம்போஸ்ட் டீ:
கம்போஸ்ட் டீ என்பது, மண்புழு உரம் அல்லது காய்கறிகழிவு உரம் அல்லது தொழு உரம் இந்த உரங்களில் ஏதேனும் ஒன்றை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, இரண்டு நாட்கள் ஊறவைத்து கொள்ளவும். மேலே தேங்கி இருக்கும் தண்ணீரை மட்டும் வடித்து எடுத்து கொள்ள வேண்டும். இது தான் கம்போஸ்ட் டீ. அதனுடன் இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து உட்புற தாவரங்களுக்கு கொடுக்கலாம்.
பூச்சிகட்டுப்பாடு:
உட்புற தாவரங்களில் பொதுவாக நோய் தாக்குதல், பூச்சி தாக்குதலும் அந்த அளவிற்கு பெரியதாக ஒன்றும் வராது. மண் கலவை தயாரிக்கும் போது வேப்பம் புண்ணாக்கு, டிரைகோடெர்மா விரிடி கலந்து தயாரிப்பதால் செடிகள் நோய்கள், பூஞ்சைகள் பாதிப்பு, பூச்சித் தாக்குதல் அதிகம் ஏற்படாது. அவ்வாறு பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் அரை லிட்டருக்கு மூன்று சொட்டு என்ற அளவிற்கு வேப்ப எண்ணெயை, காதி சோப்புடன் கலந்து, இலைகளின் மீது ஸ்ப்ரே செய்து விடலாம். அல்லது காது குடையும் பட்ஸ் எடுத்து, அதில் வேப்ப எண்ணை கலந்த தண்ணீரை தொட்டு, இலைகளின் மீது தடவி விடலாம். வேப்ப எண்ணெய் கரைசல் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் போதும்; நோய் தாக்குதலும் பூச்சித் தாக்குதலும் இருக்காது.
அவ்வளவுதாங்க உட்புற தாவரங்கள் வளர்ப்பு.
உட்புற தாவரங்கள் வளர்ப்பது குறித்து, இப்பொழுது உங்களுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும். நீங்களும் உங்கள் வீடுகளை உட்புற தாவரங்களை கொண்டு பசுமையாக அலங்கரித்து மகிழுங்கள்.
என் மகள் கிருத்திகா இன்டோர் பிளாண்ட்ஸ் லவ்வர். அவளுக்காக கிழக்கு கடற்கரை சாலை [ ECR ] சென்று அவள் விரும்பிய இன்டோர் பிளாண்ட்ஸ் எல்லாம் வாங்கிகொடுப்போம். அவள் ஆசையாக வாங்கிய தாவரங்கள், சரியாக வளராத பொழுது என்னிடம் கேட்பாள், அப்பா இந்த செடியை எதாவது செய்து நன்றாக வளரச் செய்யுங்கள் என்று. அவளுக்காக நான் கற்று கொண்டதே இண்டோர் பிளாண்ட்ஸ் வளர்ப்பு. இவை அனைத்துமே என் அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டதே. தற்சமயம் எங்கள் வீட்டில் 60-ற்க்கும் மேற்பட்ட உட்புற தாவரங்கள் உள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். இதோடு கட்டுரையிலிருந்து நான் விடை பெறுகிறேன். நன்றி!! ஆனால் நீங்கள் இடம் கொடுங்கள் தாவரங்களுக்கு!!.. நாய், பூனை என விலங்குகளை தான் பெட்ஸாக வளர்க்க வேண்டும் என்பதில்லை. நம்மைபோல தாவர பிரியர்கள், செடிகளையும் பெட்ஸாக வளர்க்கலாம். அவற்றோடும் பேசலாம், பழகலாம், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம். தாவரங்களோடு பேசுவது இறைவனோடு டெலிபோனில் பேசுவதை போல என நான் ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.!!
உட்புற தாவரங்கள் வளர்க்க நீங்கள் விரும்பினால், எந்த மாதிரியான செடிகளை தேர்வு செய்து வளர்க்கலாம் என இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் வளர்க்க சிறந்த உட்புற தாவரங்கள் எவை? 👇
நன்றி!!
அன்புடன்,
இயற்கை விவசாயி,.
திரு.சுதாகர்கிருஷ்ணன்.
0 Comments