Translate

புதினா துவையல்


Sudagarkrishnanchannel
Pudina chutney 

புதினா கீரை/Mentha Spicata:


    புதினா கீரை அதிக ஊட்டசத்துக்கள் கொண்ட மருத்துவ மூலிகையாகும். சின்னசின்ன நோய்களுக்கெல்லாம், மருத்துவமனைகளை தேடி அலையாமல், சுலபமாக கிடைக்கும் இத்தகைய மூலிகைசெடிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். புதினா கீரை பல்வேறு விதமான வயிற்று உப்பிசம், வாய்வு கோளாறுகளுக்கு மருந்தாகிறது. புதினாக் கீரை வைட்டமின்-ஏ, பாஸ்பரஸ் சத்து, கால்ஷியம் சத்து, இரும்பு சத்து, நிக்கோட்டினிக் ஆசிட்,  ரிபோமினேவின், தயாமின், ஆகிய சத்துக்களை நிறைவாக கொண்டுள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் புதினாக் கீரையை  தொடர்ந்து சாப்பிட்டு வர, மூச்சு விடுவதில் இருக்கும் சிரமம் நீங்கி நன்றாக மூச்சு விடலாம். புதினாக்கீரை பசியைத் தூண்டக்கூடிய  கீரையாகும். இதிலிருக்கும் வேதிப்பொருட்கள் வயிற்றில் ஜீரணம் ஆக வேண்டிய அமிலங்களை சுரக்கச் செய்து, உணவு செரிமானத்தை எளிதாக நடைபெற உதவுகிறது. புதினாவை பயன்படுத்தி பல்வேறு வகையான உணவுகள் சமைக்கலாம். புதினா சாதம், புதினா பிரியாணி, புதினா சட்னி, புதினா துவையல்.. இப்படி சுவைமிகுந்த பல்வேறு உணவுகளை தயாரிக்கலாம்.  புதினாவை மாடிதோட்டத்தில் சுலபமாக வளர்க்கலாம். கடையிலிருந்து வாங்கிவந்த புதினா இலைகளை ஆய்ந்து எடுத்த பின்னர்,  மீதமிருக்கும் தண்டுகளை ஊன்றி வைத்தாலே போதும். பெரிய பரமாரிப்பு இல்லாமல் சுலபமாக வளர்க்கலாம். முடிந்தவரை வீட்டிலேயே விளைவித்து பயன்படுத்தவும். கடைகளில் கிடைக்கும் புதினாகீரை பெரும்பாலூம் பூச்சிமருந்துகள் தெளிக்கப்பட்டதாகவே இருக்கும். இதனால் புதினாக்கீரை தரும் நன்மைகளை விட, தீமைகள் அதிகமாகிவிடும்.

புதினா துவையல்:

தேவையான பொருட்கள்:

 1. புதினா கீரை  - 1 கட்டு 
 2. வரமிளகாய்- 3
 3. பூண்டு பல்- 3
 4. இஞ்சி- சிறிய துண்டு
 5. மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
 6. புளி- ஒரு கோலி குண்டு அளவு
 7. நல்லெண்ணெய்- ஒரு குழி கரண்டி
 8. உப்பு - போதுமான அளவு.

தாளிக்க:

கடுகு-1/2 ஸ்பூன்
சீரகம்- 1/2ஸ்பூன்
உளுந்தம் பருப்பு- 1ஸ்பூன்

Sudagarkrishnanchannel
Pudina chutney  

செய்முறை:

புதினா இலைகளை ஆய்ந்து, சுத்தம் செய்து கொள்ளவும்.   ஆய்ந்த புதினா கீரையை உப்பு மற்றும் மஞ்சள் தூள்  கலந்த மிதமான சூடான தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளவும்.(கடையில்வாங்கி இருந்தால்) இவ்வாறு உப்பும் மஞ்சளும் கலந்த தண்ணீரில் கழுவினால் பூச்சி மருந்துக்களின் தாக்கம் குறையும். மஞ்சள் கிருமிநாசினி  அனைவரும் அறிந்த ஒன்று தான். அடிகனமான வாணெலியில்   1-ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிய துண்டு இஞ்சி, பூண்டு மூன்று அல்லது நான்கு பற்கள், வர மிளகாய், புளி இதனை வதக்கி கொள்ளவும். ஒரளவு வதங்கியதும், புதினா, மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கிகொள்ளவும். தண்ணீர் வேண்டுமென்றால் தெளித்து கொள்ளவும். புதினாவை அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தினால் ஊட்டசத்துக்கள் குறைந்துவிடும். எனவே ஓரளவு வதக்கி கொள்ளுங்கள். நீங்கள் புதினா இலைகளுடன் கொத்தமல்லி தழைகள், கறிவேப்பிலையும் சேர்த்துகொள்ளலாம். புதினா ஒரளவு வதங்கினால் போதும். வதங்கிய பிறகு ஆறவிடவும். நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரிலோ, அல்லது அம்மியிலோ நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்த புதினாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும். ஒரு சின்ன கடாய் அல்லது கரண்டியில் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்தவற்றை கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு (கொஞ்சம் அதிகமாக சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும்) தாளித்து, சேர்த்து கொள்ளவும். இந்த புதினா துவையல் இட்லி, தோசைக்கு சரியானதொரு பக்க உணவு. சாப்பாட்டிலூம் போட்டு பிசைந்து சாப்பிடலாம். மிகச்சுவையானதாக இருக்கும்.  இந்த புதினா துவையல் எனக்கு கிராமத்தில் பாட்டி சொல்லி கொடுத்தார்கள். இப்பொழுது இதை எழுதும் போது, அவர்கள் ஞாபகம் தான் வருகிறது.

புதினா சட்னி:

தேவையான பொருட்கள்:

 1. புதினாகீரை  - 1 கைப்பிடி 
 2. பொட்டுகடலை- 1கப்
 3. பச்சைமிளகாய்- 3
 4. பூண்டு பல்- 1
 5. இஞ்சி- சிறிய துண்டு
 6. முந்திரிபருப்பு- 4
 7. தேங்காய்- 4 பத்தை
 8. உப்பு - போதுமான அளவு.

தாளிக்க:

நல்லெண்ணெய்- ஒரு குழி கரண்டி

கடுகு-1/2 ஸ்பூன்

சீரகம்- 1/2ஸ்பூன்

உளுந்தம் பருப்பு- 1ஸ்பூன்

கறிவேப்பிலை-1கொத்து

செய்முறை:

தேங்காய் பத்தைகளை பொடி, பொடியாக நறுக்கி கொள்ளவும். புதினாகீரையை ஆய்ந்து சுத்தம் செய்து ஒரு கைப்பிடி அளவில் எடுத்து கொள்ளவும். தேங்காய் பத்தைகளுடன், பொடியாக நறுக்கிய மூன்று பச்சைமிளகாய் சேர்க்கவும். உங்களுடைய காரத்திற்கு ஏற்றாற் போல பச்சை மிளகாயை கூட்டியோ, குறைத்தோ சேர்த்து கொள்ளலாம். பச்சைமிளகாய், தேங்காய், முந்திரி பருப்புகள், பூண்டு பற்கள், கைப்பிடி புதினா இலைகள் சிறிய துண்டு இஞ்சி, தேவைக்கேற்ப தண்ணீர் உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் மழமழவென்று அரைத்து கொள்ளவும். அரைத்த பின்னர் பொட்டுகடலையும் சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும். நீங்கள் தண்ணீர் குறைவாக சேர்த்து, துவையலாக கஞ்சி சாதத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். அல்லது தண்ணீர் அதிகமாக சேர்த்து இட்லி தோசைக்கு சட்னியாக பயன்படுத்தி கொள்ளலாம். சட்னியாக வேண்டுமென்றால் தாளித்து பயன்படுத்தலாம். சிறிய கரண்டியோ அல்லது சிறிய வாணெலியோ அடுப்பில் வைத்து, கடலை எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடாகியதும், அதில்  கறிவேப்பிலை, கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை சட்னியோடு சேர்த்து கலந்துவிடவும். சுவையான ஹோட்டல் முறையில் புதினா சட்னி தயாராகிவிட்டது. புதினா இலைகளை போன்றே, கொத்தமல்லி தழைகளையும் பயன்படுத்தி சட்னி செய்யலாம். இந்த புதினா சட்னி இட்லி தோசைக்கு தொட்டுகொள்ள நன்றாக இருக்கும். 

Post a Comment

0 Comments