Translate

அம்மான் பச்சரிசி

 அம்மான் பச்சரிசி/Euphorbia Hirta/Asthma Plant 

Sudagarkrishnanchannels

Amman Pacharisi 

 நம்முடைய வாழ்கையில் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலுமே பணத்தையும், புகழையும் குறிக்கோளாய் கொண்டே அமைவதில்லை. ஒருசில காரியங்கள் மன அமைதிக்காகவும், ஆத்ம திருப்திக்காவும் செய்கின்றோம். உதாரணத்திற்கு பிறருக்கு செய்கின்ற சின்னசின்ன உதவிகள், சிறிய பொருளதவி, பண உதவி செய்வது இப்படி பலதரபட்ட செயல்களைக் கூறலாம். மாடிதோட்டத்தை பற்றி எழுதவேண்டுமென்று முடிவு செய்துதான் இந்த வலைதளத்தை ஆரம்பித்தேன். ஆனால் மூலிகைகளை பற்றி எழுதும் போது எனக்கு மிகுந்த ஆத்மதிருப்தி, பேரானந்தம். அதிலும் அம்மான் பச்சரிசி போன்ற மூலிகைகளை பற்றி எழுதுவதற்கெல்லாம் நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டது. வேர்கள் முதல் பூக்கள், இலைகள் காய்கள் வரை, அனைத்து பகுதிகளுமே, பயனுள்ள தாவரம். எந்தபக்கம் திரும்பினாலும் இயற்கைக்கு திரும்புங்கள் என்று ஒருகுரலொலி. எல்லாம் செவிவழி செய்தியாகவே காற்றோடு கலந்துவிடுகிறது. பாதை யாரும் அமைத்துதருவதில்லை; பயணிக்க யாருமே விரும்புவதில்லை. ஒருவர் மட்டுமே நடக்கும்போது அது ஒருவழிச்சாலை. நாலுபேர் எட்டுபேராகி, நானூறு, நாலாயிரமாகி நடக்க ஆரம்பிக்கும்போது பொதுவழிச்சாலை. நாளடைவில் அரசாங்கமே தலையிட்டு எட்டுவழிச்சாலையாக அமைத்து தருவார்கள் என்பது ஆச்சரியப்படுவதற்க்கில்லை.  என்னதான்டா, இவன் சொல்லவருகிறான் என்று குழம்பி போய்விடாதீர்கள்! நான் சொல்ல விழைவது பாதையை யாரும் அமைத்துத்தர வேண்டாம். நாமே வகுத்து கொள்ளுவோம். இயற்கை வாழ்வியலையும், பாரம்பரிய வாழ்வியலையும் வாழ்கைமுறையாக கைகொள்ள  இயற்கை விவசாயத்தையும், மூலிகைகளை பாதுகாப்பதிலும், பயன்படுத்துவதிலும் நாம் நாட்டம் கொள்ள வேண்டும். பொருளியலில் ஒரு கோட்பாடு உள்ளது. 1776-ஆல் ஆடம்ஸ்மித் என்பவர்  The wealth of nations என்கிற நூலில் எழுதியுள்ளார். உற்பத்தி-பகிர்வு-நுகர்வு. இவை மூன்றும் ஒரு வளையம், Cycle . ஒரு பொருளுக்கான நுகர்வு அதிகரிக்கும் போது, உற்பத்தி அதிகரிக்கும். (இப்பொழுது கொரனா என்பதால் கடைகளில் மாஸ்க், சேனிடைசர் அதிகம் விற்கப்படுகிறது. ஏனெனில் முககவசத்தின் தேவை இப்பொழுது மக்களிடையே அதிகரித்திருக்கிறது) இயற்கை விவசாயத்தையும், மூலிகைகளையும், சிறுதானியங்களையும் நாம் பயன்படுத்திட ஆரம்பிக்கும்போது, அதன் தேவை அதிகரிக்கும்போது, உற்பத்தியும் அதிகரிக்கும்.  அதிகளவில் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது, Automatic-க்காக  உற்பத்தியும் அதிகரிக்கும், அதனால்ஆரோக்கியம் கூடவே அதிகரிக்கும். அம்மான் பச்சரிசி செடியை பற்றி நீங்கள் அறிந்து கொள்வதோடல்லாமல் பயன்படுத்த வேண்டும். அதுவே என் எழுத்துக்களின் தாழ்மையான வேண்டுகோள். கட்டுரைக்குள் இப்பொழுது செல்லலாம்.

அம்மான் பச்சரிசி :

   அம்மான் பச்சரிசியின் விதைகள் சிறிய பச்சரிசியை போல இருக்கும். இதனுடைய மலர்களை, குழந்தை பெற்ற பெண்களுக்கு  தாய்ப்பால் பெருகுவதற்கு பயன்படுவதால் 'அம்மா' என்ற வார்த்தையும் சேர்ந்து  அம்மான் பச்சரிசி என்று பெயர்வரக் காரணம். இலைகள் கூர்மையுடையதாய், சிறிய செடியாக படர்ந்து வளரும் தன்மையுடையது. செடியின் தண்டுகளை உடைத்தால் பால் வடியும். அந்தபாலில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.  அம்மான் பச்சரிசி செடியில் பலவகை உள்ளது. அவை நிறத்திலும், அடர்த்தியிலும் பல்வேறு வேறுபாடுகளை கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.  சித்திரப்பாலாடை, சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி என்றபெயர்களிலும் அழைக்கப்படுகிறது.  அம்மான் பச்சரிசி பூண்டு குடும்பத்தை சேர்ந்தது. சில இடங்களில் பெரிய அம்மான் பச்சரிசி, சிறிய அம்மான் பச்சரிசி  என்று இரண்டு தனிவேறு தாவர வகைகள் காணப்படுகிறது. இவை வெள்ளை சிகப்பு நிறத்தில் காணப்படுகிறது.  அழகிய சின்னசிறிய பூக்கள் தண்டுகளின் கணுக்களில் கொத்தாக காணப்படும். அம்மன் பச்சரிசி ஒருவித இனிப்பு கலந்த துவர்ப்புச் சுவையுடையது.


வளர்ப்புமுறை: 

    அம்மான் பச்சரிசி செடியினை மாடி தோட்டம் அல்லது வீட்டுதோட்டத்தில் வளர்ப்பது மிகவும் சுலபமானது.  வரப்பு, வாய்கால், கிணறுகள், சாலையோரங்கள் இத்தகைய இடங்களில் சாதரணமாக வளர்ந்து கிடக்கும். செடியினை பிடிங்கி வந்து, நட்டு வளர்க்கலாம். விதைகளிலும் வளர்க்கலாம். தண்டுகளை ஊன்றி வைத்தும் வளர்க்கலாம். ஈரப்பதமான இடங்களில் சுலபமாக வளரும். இப்பொழுது மழைகாலமாதலால் சுலபமாக சாலையோரங்களில் அம்மான் பச்சரிசி செடியினை காண முடியும். அதை பிடிங்கி வந்து தோட்டத்தில் வளருங்கள். குடும்பத்திற்கே பயன்தரக்கூடியது. அதிகம் பூச்சி தாக்குதலோ, நிறைய உரங்கள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. சாதாரண தோட்டத்துமண்ணிலே வளர்க்கலாம். கிளைகளை கத்தரித்துவிடுவதன் மூலம் அடர்ந்து படர்ந்து வளரும்.


மருத்துவ பயன்கள்:

 • அம்மான் பச்சரிசி ஆங்கிலத்தில் ஆஸ்துமா ப்ளாண்ட் என்றழைப்படுகிறது. இந்த பெயரிலிருந்தே உங்களுக்கு தெரியும் ஆஸ்துமா தொடர்பான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மூச்சுவிடுவதில் சிரமம், சளி, இருமல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சைனஸ், தும்மல், மூக்கடைப்பு மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகளையும் குணமாக்க வல்லது பிறகு அம்மன் பச்சரிசி இலைகளையும் சேர்த்து சமைத்து சாப்பிட ஆஸ்துமா தொடர்பான பிரச்சினைகள் குணமடையும். இரத்தத்திலுள்ள கெட்ட அழுக்குகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. வேப்பிலை இலைகளுடன் மிளகு அம்மன் பச்சரிசி இலைகள் மூன்றையும் அரைத்து  சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. பலவீன உடலுக்கு உடல் வலிமையை தருகிறது. நீண்டநாளாக ஆறாத காயங்களை குணமாக்கவல்லது. கை கால்களில் வீக்கம் உள்ள இடங்களில் இலைகளை அரைத்து பற்றுப் போட்டு வந்தால்  ஐந்து நாளில் வீக்கங்களும் வலியும் குறைந்து குணமடையலாம். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்க கூடியது. 
 • அம்மான் பச்சரிசி தண்டுகளை உடைக்கும் பொழுது வருகின்ற பாலில், அதிகளவு கால்சியம், அஸ்ட்ரிஜண்ட், டோனிக் போன்றவை காணப்படுகிறது. வயிற்றுபுண், வாய்புண், தோல் நோய்களுக்கு மருத்தாகிறது. அம்மான் பச்சரிசியின் பாலை முகத்தில் கருமையான இடங்களில் தடவி, காய்ந்ததும் குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவி  வந்தால், இழந்த பொலிவை திரும்பவும் பெற முடியும்.
 • குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்க, அம்மான் பச்சரிசி பூக்களை சேகரித்து சுத்தம் செய்து பசும்பால் சேர்த்து அம்மியில் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வரும்பொழுது தாய்ப்பால் அதிகரிக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாக அம்மான் பச்சரிசியின் இலைகளை சேகரித்து  மோருடன் சேர்த்து அம்மியில் அரைத்து காலையில் ஏழு நாட்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.
 • குடல் புழுக்களை அழிக்கும் உடலின் உள்ளுறுப்புகளில் உள்ள காயங்களை ஆற்றும். காசநோயை கூட குணப்படுத்தும் என்று மருத்துவ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வயிறு பொருமல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளால் தொடர்ந்து அவதிபடுபவர்களுக்கு அம்மான் பச்சரிசி வரப்பிரசாதமாகும். வெங்காயம் பூண்டு இவற்றோடு அம்மான் பச்சரிசி இலைகளை சேர்த்து சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து குணமடையலாம்
 • அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் பாசிப்பருப்புடன் அம்மான் பச்சரிசி கீரையை சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் அல்சரில் இருந்து முழுமையான குணம் அடையலாம்.
 • தாய்மை அடையாத பெண்களுக்கு அம்மான் பச்சரிசி இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் கர்ப்பப்பையும் பலப்பட்டு விரைவில் தாய்மை அடைவார்கள். ஆரோக்கியம் மேம்படும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவல்லது. ஆண்மை குறைவை குணமாக்கிடவும், விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ஆண்மலட்டுதன்மையை குணமாக்கும்  மருந்தாக பயன்படுகின்றது. சிவப்பு நிற அம்மான் பச்சரிசி பொடியை தினமும் எடுத்து வந்தால் விந்தணுக்களை அதிகரிக்கும். அம்மான் பச்சரிசி இலைகளுடன் கீழாநெல்லி இலைகளை சம அளவு எடுத்து  பசும்பாலில் அரைத்து தொடர்ந்து மூன்றுவாரங்கள் எடுத்துக் கொண்டால் தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனை குணமடையும்.
 • காலில் ஏற்படும் ஆணி, பாத எரிச்சல் பாத வெடிப்பு போன்றவற்றிற்க்கு அம்மான் பச்சரிசி தண்டுகளை உடைத்தால் கிடைக்கும் பாலினை, பாதத்தில் தடவி வந்தால் குணம் அடையலாம்.

Sudagarkrishnanchannels
Amman Pacharisi 

அம்மான் பச்சரிசி அழகு குறிப்புக்கள்:

   மருக்களை அகற்ற அழகு நிலையங்களிலும், மருத்துவ மனைகளிலும் அதிகம் செலவு செய்ய தேவையில்லை. அம்மான் பச்சரிசி தண்டுகளை உடைத்தால் கிடைக்கும் பாலினை மருக்கள் உள்ள இடங்களின் மீது வைத்தால் நாளடைவில் மருக்கள் உதிர்ந்துவிடும். எவ்வளவு பெரிய மருக்களாக இருந்தாலும் இதனை முயற்சி செய்யலாம். மருக்கள் இருந்த இடமும் தெரியாது தழும்புகளும் எதுவும் தெரியாது, மருக்களை முழுவதுமாக அகற்றிவிடும்.

பேஸ்பேக்:

 அம்மான் பச்சரிசி இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவும். இலைகளை தண்ணீரில் சுத்தம் செய்து இரண்டு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். முகத்தை தண்ணீரால் கழுவிய பின்னர் தண்ணீரை  துண்டினால் ஒற்றி எடுத்துவிட்டு, அரைத்த பேஸ்ட்டை முகத்தில் பூசி உலர விட வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், எண்ணை பசை சருமம் இவையெல்லாம் மாறி, முகம் நல்லநிறம் பெறும். சிலருக்கு கை கால்கள் நல்ல நிறமாகவும் முகம் மட்டும் கருப்பாகவும் காணப்படும். இந்த கருமையை நீக்குவதற்கும் பயன்படுகிறது. வெயிலால் ஏற்படும் கருமை நீக்குகிறது. இதனை ஒரு சன்ஸ்கிரீன் லோஷன் என்றுகூட குறிப்பிடலாம். முகத்தில் எந்த மாசும் மருவும் இல்லாமல் முகம் நல்ல ஷைனிங்காக பளபளப்பாக மழமழவென்று இருக்கும். வாரமிருமுறை அம்மான் பச்சரிசி பேஸ்பேக்கை பயன்படுத்தலாம்.

அம்மான் பச்சரிசி துவையல்:

மேற்குறிப்பிட்டுள்ள அத்தனை மருத்துவ பயன்களையும் நீங்கள் பெற வேண்டுமென்றால் வாரமிருமுறை அம்மான் பச்சரிசியை துவையலாகவோ, சட்னி, கூட்டு என்று எதாவது ஒன்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மதுரை பக்கம் சோகைப்பச்சிலை என்றுதான் அம்மான் பச்சரிசியை அழைப்பார்கள். ஏனெனில் சிலவாரங்கள் பயன்பாட்டிலே இரத்தசோகையை குணமாக்கி, இமோகுளோபினை அதிகரிக்கச்செய்யும்.

தேவையான பொருட்கள்:

 1. கருப்பு உளுந்து- 1/2 கப்
 2. அம்மான் பச்சரிசி இலைகள்- 1கப்
 3. வரமிளகாய்- 2
 4. தேங்காய் பத்தைகள்- 2
 5. இஞ்சி- சிறிய துண்டு
 6. பூண்டு- 2 பல்
 7. புளி-  சிறிய நெல்லிக்காய் அளவு
 8. உப்பு- தேவையானளவு

தாளிக்க:

 • கடலை எண்ணெய்- ஒரு குழிகரண்டி
 • கடுகு- 1/2 ஸ்பூன்
 • சீரகம்-1/2 ஸ்பூன்
 • உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
 • கறிவேப்பிலை- ஒரு கொத்து

செய்முறை:

அம்மான் பச்சரிசி கீரை இலைகளை ஆய்ந்து, சுத்தம் செய்து கொள்ளவும்.   ஆய்ந்த  கீரையை உப்பு மற்றும் மஞ்சள் தூள்  கலந்த மிதமான சூடான தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளவும். கடாயில்   1-ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிய துண்டு இஞ்சி, பூண்டு இரண்டு அல்லது மூன்று பற்கள், வர மிளகாய், புளி இதனை வதக்கி கொள்ளவும். ஒரளவு வதங்கியதும், தேங்காய் பத்தைகளை சிறிய துண்டுகளாக அல்லது தேங்காயை துருவி சேர்த்து வதக்கி கொள்ளவும். எல்லாம் வதங்கியதும், அம்மான் பச்சரிசி கீரையின் இலைகள் மற்றும், உப்பு சேர்த்து வதக்கிகொள்ளவும். தண்ணீர் வேண்டுமென்றால் தெளித்து கொள்ளவும். கீரைகளை அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தினால் ஊட்டசத்துக்கள் குறைந்துவிடும். எனவே ஓரளவு வதக்கி கொள்ளுங்கள். அம்மான் பச்சரிசி வதங்கிய பிறகு ஆறவிடவும். நன்றாக ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரிலோ, அல்லது அம்மியிலோ நன்றாக அரைத்து கொள்ளவும். அரைத்த துவையலை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளவும். சின்ன கடாய் அல்லது கரண்டியில் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்தவற்றை கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு (கொஞ்சம் அதிகமாக சேர்த்து கொண்டால் சுவையாக இருக்கும்) தாளித்து, சேர்த்து கொள்ளவும். இந்த அம்மான் பச்சரிசி துவையல் இட்லி, தோசைக்கு சரியானதொரு பக்க உணவு. சாப்பாட்டிலூம் போட்டு பிசைந்து சாப்பிடலாம். மிகச்சுவையானதாக இருக்கும்.
காந்தல் விரணமலக்கட்டுமே, கந்தடிப்பு சேர்ந்த தின விவைகள் தேகம் விட்டு போர்ந்தொன்றாய் ஓடுமம்மான் பச்சரிக் குன்மை இனத்துடனே கூடுமம்மா ணொத்த கண்ணாய் கூறு, 

அகத்திய அடிகளாரின்  குணவாகடப்பாடல். இதன்மூலம் அம்மான் பச்சரிசியின் பயன்பாட்டை அறிந்து கொள்ளலாம். அனைத்து நோய்களுக்குமே தமிழ் பாரம்பரிய மருத்துவத்தில் மருந்துகள் உள்ளது. கொரனா நோய்க்கு சீனர்கள் தங்களுடைய பாரம்பரிய மருத்துவத்தை தான் பயன்படுத்தி நோயின் தாக்கத்திலிருந்து மீண்டுவருவதாக கூறுகிறார்கள். நாமும் நம்முடைய பாரம்பரிய மருத்துவத்தையும், மூலிகைகளையும் மறந்து போய்விடக் கூடாது. போற்றி பாதுகாப்பது நம்முடைய கடமை. நன்றி!Post a Comment

1 Comments

 1. Excellent Article. You are a great genius. தமிழ் வார்த்தைகளை அழகாக கையாளுகிறீர்கள். இது கட்டுரை போல் இல்லை.கவிதையை போல இருக்கிறது. அம்மான் பச்சரிசி மூலிகையை பற்றி இவ்வளவு விளக்கமாக இதுவரை நான் எங்குமே படித்ததில்லை. உங்கள் மொழிநடை மிகவும் ரசிக்க வைக்கிறது.உங்கள் வெப்சைட்டை சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்.நன்றி.

  ReplyDelete