சங்கு பூ செடியின் பயன்கள்
Clitoria Ternatea Health Benefits |
Field bindweed ,Butterfly Pea Flower, Blue pea Plant, Aparajitha, Blue Ternate
அழகு எப்பொழுதுமே ஆபத்து என்று கூற கேட்டிருப்போம்; ஆனால் இயற்கையின் அழகு அப்படியல்ல; அது நமக்கு மன அமைதியையும், ஆரோக்கியத்தை தருகிறது!! அழகான இந்த சங்கு பூக்களை பாருங்கள். அதன் அழகில் ஒரு நிமிடம் மயங்கி போய்விடுவோம்; ஆனால் அதன் பயன்களை தெரிந்து கொண்டால் வியந்து போய்விடுவோம்!! சங்கு பூக்கள் தானாகவே காடுகளிலும், வேலிகளிலும் வளர்ந்து காணப்படும். நாம் அனைவருமே அறிந்த மார்னிங் குளோரி குடும்பத்தை சார்ந்தது தான் சங்குப் பூ செடியும். சங்கு பூ செடியில் பல வண்ணங்கள் உள்ளது.
- வெள்ளை நிற பூக்கள்
- நீல நிறப்பூக்கள்
- ரோஸ் நிறப்பூக்கள்
- அடுக்கு நீல நிற பூக்கள்
- ஊதா நிறப் பூக்கள்
மருத்துவ பயன்பாட்டில் நீல நிறப்பூக்களே மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. வெள்ளை நிறப் பூக்கள் மற்றும் நீல நிறப்பூக்களை தவிர்த்து, பிற வண்ணங்களில் காணப்படும் பூக்கள் கலப்பின வகையை சார்ந்தது என்ற கூற்றும் நிலவுகிறது.
வீட்டின் முன்புறம் சங்குப்பூ கொடியினை வளர்க்கும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிப்பதோடு, கோடை காலங்களிலும வீட்டை குளிர்ச்சியாக வைக்கும். சங்குப் பூ கொடிக்கு வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் உள்ளது. கோவில்களிலும் வீடுகளிலும் பூஜைகளில் சங்குப்பூக்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக சிவபெருமானுக்கு பிடித்த மலராக கருதப்படுகிறது.
சங்குப்பூச் செடி வளர்ப்பு:
சங்குப் பூ செடியின் விதைகள் நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் கருப்பு உளுந்தை போல காணப்படும். இதனை விதைகள் மூலமாகவும், கிளைகளை கத்தரித்து பதியம் போடுவதின் மூலமாகவும் வளர்க்கலாம்.
மண் கலவை:
சங்குப் பூ செடி வளர்ப்பதற்கு மண் கலவை தனியாக தயார் செய்ய வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. எல்லா விதமான நிலங்களிலும் சாதாரணமாகவே வளரக்கூடிய தாவரம் பொதுவாக, நாம் வேலியோரங்களில் இந்த சங்கு பூச்செடியை பார்க்கலாம். தானாகவே விதைகள் விழுந்து தானாகவே முளைத்து பூக்கள் பூத்து காணப்படும். வீட்டுத்தோட்டத்தில் பெரிய முன்னேற்பாடுகள் ஏதுமின்றி, சாதாரணமாகவே விதைகளைப் போட்டு வளர்க்கலாம். மாடி தோட்டத்தில் வளர்க்கும் போது வளர்ப்பு பைகளில் மண் கலவை தயார் செய்து விதைக்க ஆரம்பிக்கலாம். மண் கலவை என்று எடுத்துக்கொண்டோமானால்,
- இரண்டு பங்கு தோட்டத்து மண் அல்லது செம்மண் அல்லது மரத்தின் கீழே இருக்கும் மண்,
- ஒரு பங்கு மணல் அல்லது தேங்காய் நார்,
- ஒரு கைப்பிடி வேப்பம் புண்ணாக்கு
- உயிர் உரங்கள் அனைத்திலும் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம்.
- தொழு உரம் அல்லது மண்புழு உரம் ஒரு பங்கு எடுத்துக் கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் மண்கலவை தயாரித்து விதைக்கும் போது, விதைகள் வேகமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்து நல்ல பலனைத் தரும்.
வளர்ப்பு முறை:
சங்குப்பூ செடியை மாடி தோட்டத்தில் வளர்க்கும் போது, ஒரு அடி ஆழம், ஒன்றேகால் அடி அகலம், உள்ள வளர்ப்பு பை போதுமானது. சங்கு பூ செடியின் வேர்கள் அதிக அளவு பரவுவதில்லை. ஒரு வளர்ப்பு பையிலேயே மூன்று, அல்லது நான்கு விதைகளை விதைத்து வளர்க்கலாம். சங்கு பூச்செடிக்கு சிறிய பந்தல் அமைத்து வளர்க்கலாம். அல்லது கயிறு கட்டி விட்டு, அந்த கயிற்றில் ஏற விட்டும் வளர்க்கலாம். இப்பூச்செடியை எந்த வடிவத்திலும் வடிவமைத்து ஏற்றி விட்டாலும், சுலபமாக படர்ந்து விடுவதால், அழகாக குச்சிகளை வடிவமைத்து அந்த குச்சிகளில் ஏற்றிவிட்டு வளர்த்தால் பூக்கள் பூக்கும் போது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
உரமேலான்மை:
சங்கு பூச்செடிக்கு பெரியதாக உரங்கள் எதுவும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே கிடைக்கக் கூடிய தேவையில்லாத கழிவுகளை உரங்களாக கொடுக்கலாம். உதாரணமாக அரிசி கழுவிய தண்ணீர், காய்கறி கழுவிய தண்ணீர், சாதம் வடித்த கஞ்சி,
இவைகளை தினமும் சங்கு பூச்செடிக்கு ஊற்றி வந்தாலே அதிக பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். பூக்கள் அதிகமாக பூக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் 3 நாட்கள் புளித்த மோரை ஒரு லிட்டர் எடுத்துக்கொண்டு, அதனோடு 9 லிட்டர் தண்ணீர் கலந்து, இலைகள், தண்டுகள் முழுவதும் நனையும்படி வாரத்திற்கு இரண்டு முறை தெளித்து வந்தால், அதிக மொட்டுக்கள் வைத்து பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.
பூச்சிகள் மேலாண்மை:
சங்கு பூச்செடியில் பெரிதும் பூச்சிகள் பாதிப்பு வருவது இல்லை. அப்படியே வந்தாலும் அஸ்வினி பூச்சிகள், மாவுப்பூச்சிகள் மட்டுமே வருவதுண்டு. இவைகளை கட்டுப்படுத்துவதற்கு காலையில் பனிஈரத்தில் சாம்பலை தூவி விடலாம். அல்லது வேப்ப எண்ணெய் 2 மில்லி லிட்டர் எடுத்துக்கொண்டு 0.5 மில்லி லிட்டர் காதி சோப் கரைசலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து விடலாம். அல்லது இஞ்சி, பூண்டு மிளகாய் கரைசல், தெளித்து விடலாம். பூச்சிகள் வந்தாலும், வராவிட்டாலும் வாரம் ஒருமறை பூச்சி விரட்டியை தெளித்து வருவதினால், பூச்சிகள் தொல்லையிலிருந்து பாதுகாக்கலாம்.
விதைகள் சேகரித்தல்:
சங்குப்பூ செடியை ஒரு முறை வைத்து விட்டாலே போதும். அதில் இருந்து விதைகளை எடுத்து அதிக பூச்செடிகளை உருவாக்கலாம். பூக்களை பறிக்காமல் பூச்செடியில் விட்டுவிட்டால், அதிலிருந்து காய்கள் வந்து, காய்ந்த பிறகு விதைகள் வர ஆரம்பிக்கும்.
ஆனால், பூச்செடியில் பூக்களை பறித்து விடுவது நல்லது. இதனால் செடியில் இன்னும் அதிக பூக்கள் பூத்துக்குலுங்கும். தேவையெனில் மட்டுமே பூக்களை பறிக்காமல் விட்டு விட்டு அதில் இருந்து விதைகளை சேகரிக்க ஆரம்பிக்கலாம்.
சங்கு பூச்செடியின் மருத்துவ பயன்கள்:
சங்குப் பூ செடியின் இலைகள், விதைகள், வேர்கள், பூக்கள் என அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படுகிறது. சங்குப் பூவின் விதைகள் சிறிது புளிப்பு சுவையுடன், நல்ல நறுமணம் கொண்டதாகவும் உள்ளது. உடலுக்கு நல்ல வலிமை தரும் ஊட்டசத்து பானங்களிலும், சர்பத்களிலும் சேர்க்கப்படுகிறது. மேலும் சங்குப்பூக்கள் இயற்கை நிறமூட்டியாகவும் பயன்படுகிறது. சங்குப்பூவின் இலைகள் துவர்ப்பு சுவை கொண்டது. உடலுக்கு வெப்பத்தை தரக்கூடியது.
காய்ச்சல் குணமாக:
அரைலிட்டர் தண்ணீரில் 40-முதல் 50- கிராம் அளவு வேர்களை போட்டு, நன்றாக கொதிக்க விட வேண்டும். கால் லிட்டராக தண்ணீர் வற்றிய பிறகு, மூன்று தேக்கரண்டி வீதம் இரண்டு மணிநேர இடைவெளியில் ஆறு வேளைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து , தீவிரம் குறைந்து விரைவில் குணமடையலாம்.
வெள்ளைப்படுதல், சிறுநீர்பாதை தொற்றுகள்:
- சங்குப் பூவின் வேர்- ஒருகைப்பிடியளவு
- யானை நெருஞ்சில் இலை-ஒரு கைப்பிடியளவு
- கீழாநெல்லி - கைப்பிடியளவு
- அருகம்புல் - கைப்பிடியளவு
- மிளகு - 5
இந்த மூலிகைபொருட்களை அரைத்து, அரை தேக்கரண்டி அளவிற்கு, தயிரில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர்பாதை தொற்றுகள் அனைத்தும் குணமாகும்.
வலி, வீக்கங்கள் குறைய:
சங்குப் பூ தாவரத்தின் இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, வீக்கம் வலி, இரத்தக்கட்டு உள்ள இடத்தில் கட்டி வர வீக்கங்கள் குறையும். நெறிகட்டிகள் குணமாக சங்கு பூக்கள், இலைகள் அதனுடன் சிறிது உப்பு சேர்த்து மைய அரைத்ணு, பற்று போட நெறிகட்டிகள் குணமாகி, வலியும் குறையும்.
இரத்தக் குழாய் அடைப்பு நீங்க:
சங்கு பூக்கள் இரத்தக் குழாய் அடைப்புகளை சரி செய்கிறது. இரத்தக் குழாய் அடைப்புகளை சரி செய்ய, ஒரு டம்பளர் தண்ணீரில் சங்கு பூக்களை போட்டு, இரவு முழுவதும் ஊற விட வேண்டும். காலையில் வடிகட்டி குடித்து வர இரத்தக் குழாய் அடைப்புகள் குணமாகிறது. படபடப்பு, மயக்கம், இரத்தகொதிப்பையும் கட்டுபடுத்துகிறது. கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, இதயத்திற்கு பலத்தை கொடுக்கிறது.
இரைப்பைநோய்கள்:
சங்குப்பூ விதைகளை வாணெலியில் சிறிது நெய் சேர்த்து, வறுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வறுத்து அரைத்த விதைப்பொடியை வெந்நீரில் கலந்து எடுத்துக் கொள்ளும் பொழுது, இரைப்பை தொடர்பான நோய்கள் கட்டுப்படும்.
பால்வினைநோய்கள்:
சங்குப் பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த கொதிநீரால் அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்யும் பொழுது, பால்வினை நோய், வெள்ளைப்படுதல் காலங்களில் ஏற்படுகின்ற வலியும், துர்நாற்றமும் கட்டுப்படும். மேலும் யோனி பகுதியில் ஏற்படும் புண்களும் விரைவில் குணமடையும்.
குறிப்பு: தண்ணீர் ஓரளவு பொறுக்கும் சூட்டில் இருப்பது சிறப்பு.
சங்குப் பூக்களின் சாறு கல்லீரைப் பலப்படுத்தும். உடலில் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் தேமலை குணமாக்குகிறது. கண்நோய்கள், தலை நோய்கள் மந்தம் போன்ற நோய்களையும் குணமாக்குகிறது.
சங்குப் பூக்கள் சிறந்த சிறுநீர்பெருக்கியாகும். குடல் புழுக்களை கொல்லூம்.
மூட்டுவலி, முடக்குவாதம், தலைவலி, தலைபாரம் மலச்சிக்கல் அஜூரண கோளாறுகளையும் குணமாக்குகிறது.
நினைவாற்றல், மூளை பலத்திற்கும் உதவுகிறது. ஆராய்ச்சிகள் மூலம் இந்த உண்மை நிருபிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தை குறைக்கிறது.
மன நிம்மதி, மன மகிழ்ச்சி:
பொதுவாகவே மலர்களை காண்பது மன மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் நமக்கு அளிக்கும். சங்குப்பூச்செடி கொடி வகையைச்சார்ந்தது. வீட்டின் முன்புறம் சங்குப்பூ செடியை வளர்க்க வேண்டும். ஒரு செடி வைத்தாலே போதும்., அடர்ந்து படர்ந்து அழகான பூக்களை பூக்கும். காலை வேளையில் சங்குப் பூக்களை ஒரு இரண்டு நிமிடங்கள் பார்த்தாலே மனதிற்கு அமைதியும், அந்த நாளுக்குரிய புதிய உற்சாகமும் பிறந்துவிடும். வெளிர் நீலநிறத்திற்கு மன அமைதியை கொடுக்கும் மகத்துவம் உள்ளது. இயல்பாகவே உங்கள் கோபம், வெறுப்புகள், விரக்தியெல்லாம் குறைந்து மனம் சாந்தி பெறும். அதனை நீங்களே ஒரு வாரத்திலே உணர முடியும்.
நீலத் தேநீர் Blue Tea:
சங்கு பூக்களை கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் தான் அதிக ஆரோக்கியத்தையும், மிகவும் பிரபலமாகிக் கொண்டு வரும் blue tea என்பதாகும்.
இந்த தேநீரானது பெண்களின் கர்ப்பப்பைக்கு வலுவூட்டுகிறது. கருப்பை நோய்களை குணமாக்க வல்லது. நீல தேநீரை பெண்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கென்றே, இறைவன் படைத்த அற்புத மலர் சங்கு பூக்கள். இந்த டீயை பருகும்போது உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்கள் கிடைக்கிறது.
நீலத்தேநீர் தயாரிக்கும் முறை:
நபர் ஒருவருக்கு நீலத்தேநீர் தயாரிக்க ஒரு டம்பளர் அளவு தண்ணீரில் நான்கைந்து சங்குமலர்களை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இவ்வாறு கொதிக்கும்போது, அடர்த்தியான பச்சை நிறத்திற்கு தேநீர் மாறிவிடும்.
இந்த தேநீரில் {ஒரு டம்பளர் அளவிற்கு} ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சை பழ சாறினை சேர்க்கும் பொழுது, ஒரு அற்புதம் நிகழும். அழகான நீல நிறத்திற்கு தேநீர் மாறிவிடும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சங்கு டீயுடன் வினைபுரிவதால், அழகான பர்பிள் நிற டீ நமக்கு கிடைக்கிறது.. பார்பதற்கு அழகாகவும், ஆரோக்கியமும் கொண்ட Blue tea தயாராகிவிட்டது. சுவைக்காக சிறிது தேன் சேர்த்து தேநீரை பருகலாம். நாளென்றிற்கு இரண்டு முறை இந்த டீ யை எடுத்துக்கொள்ளலாம்.
மலேஷியா, பர்மா, தாய்லாந்து நாடுகளில் ஊதா நிற சங்குப் பூக்களை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். Blue Rice என்கிற நீலநிற சாதத்தினை அவர்கள் சாப்பிடுவதை ஆரோக்கிய வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
சங்குப் பூ உணவுகள் முகத்திற்கு பொலிவையும், கருகருவென முடி வளர்ச்சியையும் கொடுக்கிறது. இளமையாகவும் உற்சாகமாகவும் இருக்க உதவுகிறதென்று ஆய்வுகளால் நிருபிக்கப்பட்டுள்ளது.
சங்கு பூக்களை விநாயகருக்கும், சிவ பெருமானுக்கும் வைத்து வழிபாடுகள் செய்து வந்தால் தீராத கடன் பிரச்சனைகளும், துன்ப துயரங்களும் தீரும் என்கிறது சாஸ்திரங்கள்.
நன்றி!!🙏🙏🙏
அன்புடன்,
இயற்கை விவசாயி!!
திரு.சுதாகர் கிருஷ்ணன்.
ALSO READ |
---|
👉 பிரண்டையின் பயன்கள் |
👉 குப்பைமேனியின் பயன்கள் |
👉 அம்மான்பச்சரிசியின் பயன்கள் |
👉 சப்ஜாவிதைகள் |
👉 கல்யாண முருங்கை இலைகளில் இவ்வளவு மகத்துவமா? |
0 Comments