Translate

Tomato Cultivation

 தக்காளி செடி வளர்ப்பு


Sudagarkrishnanchannel
Tomato Cultivation 


Solanum lycopersicum/Tomato:

   
         தக்காளி தாவரத்தின் தாயகம் பெரு நாடாகும். தக்காளி வெப்பமண்டலப் பயிராகும். 1-லிருந்து மூன்று மீட்டர் உயரம் வரையிலும் வளரக் கூடிய  ஓராண்டு தாவரமாகும். தக்காளி உற்பத்தியில் "சீனா" முதலிடம் வகிக்கிறது. சீனாவை தொடர்ந்து அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாம் இடத்தை வகிக்கிறது. தக்காளி இல்லாமல் உணவு சமைப்பதென்பது இன்றைய சூழலில் நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் ஆரம்ப காலங்களில் தக்காளியை நச்சுக்கனி என்று பல நூற்றாண்டுகள் ஒதுக்கி வைத்தே நம் மூதாதையர்கள் வாழ்ந்திருந்தனர்.. தக்காளியில் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் வைட்டமின் ஏ மற்றும் கே, பொட்டசியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டசத்துக்களும் உள்ளது. தினமும் உணவில் தக்காளி சேர்த்து கொள்ளும் போது, உடல் எடை சீராக இருக்க உதவுகிறது. ஆனால் மரபணு மாற்றபட்ட ஹைபிரட் தக்காளி வகைகளை பயன்படுத்தாமல், நாட்டுவிதைகளை பயன்படுத்துவது சிறந்தது. 

இன்றைய கட்டுரையில்,,

தக்காளி செடி விதை, விதைத்தது முதல், அதன் வளர்ச்சி, தாக்கும் நோய்கள், பூச்சிகள் கட்டுப்பாடு, கொடுக்க வேண்டிய உரங்கள், அதிக தக்காளி பழங்களை பெறுவதற்கு சில டிப்ஸ்கள், அறுவடை வரை மிக தெளிவாக  நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்தக்கட்டுரை தக்காளி செடி வளர்ப்பில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.


தக்காளியின் வகைகள்:


     நாட்டுரக தக்காளியில்  பல வகைகள் உள்ளது. அனைத்து வகையான தக்காளி செடிகளுக்கும் வளர்ப்பு முறை, உரங்கள், பூச்சிக் கட்டுப்பாடு, நோய்த்தாக்குதல், அனைத்தும் ஒன்று தான். நாட்டு ரக தக்காளியின் சில வகைகள்..

  • சிகப்பு செர்ரி தக்காளி, 
  • புஷ் தக்காளி, 
  • மஞ்சள் செர்ரி தக்காளி, 
  • மஞ்சள் தக்காளி, 
  • உருட்டு தக்காளி, 
  • காசி தக்காளி, 
  • பெரிய புஷ் தக்காளி, 


தக்காளி நாற்றுகளை தயார் செய்தல்:


  தக்காளி செடியானது, நாற்று விட்டு எடுத்து நட கூடிய செடியாகும். தேங்காய் நாரும் மண்புழு உரமும் சம அளவு எடுத்துக்கொண்டு உயிர் உரங்களான சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, கலந்து குழிதட்டில்  மண் கலவையை பரப்பி தக்காளி விதைகளை விதைக்க ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு குழிக்கும் இரண்டு விதைகள் முறையே விதைப்பது நல்லது. தக்காளி விதைகள் சிறிய விதைகள் என்பதனால் மண் கலவையிலேயே உயிர் உரங்களை சேர்த்து கொள்வது நல்லது. விதைகள் விதைத்து ஐந்திலிருந்து ஏழு நாட்களுக்குள் முளைக்க ஆரம்பிக்கும். நாற்றுகள் நன்றாக வளர்ந்து 25 நாளில் இருந்து 30 நாட்களுக்குள் எடுத்து வேறு தொட்டிகளுக்கு மாற்றி வைக்கலாம். தக்காளி நாற்றுக்களை நடுவதற்கு முன் பஞ்சகாவியம், அல்லது அமிர்தகரைசல், உயிர் உரங்களான டிரைகோடெர்மாவிரிடி, சூடோமோனஸ் இவற்றில் ஏதேனும் ஒன்றில் வேர்களை நனைத்து நடுவதினால் வேர் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கலாம்.


தக்காளி செடிக்கு மண் கலவை தயார் செய்தல்:


   தக்காளி செடி வடிகால் வசதியுடைய மணல் கலந்த வண்டல் மண்ணில் நன்றாக வளரும். மண்ணின் கார தன்மையானது 6 லிருந்து 7 வரை இருக்க வேண்டும். மாடித்தோட்டத்தில் மண் கலவை தயார் செய்யும் போது இரண்டு மடங்கு தோட்டத்து மண், ஒரு மடங்கு மணல், ஒரு மடங்கு தொழு உரம், அல்லது மண்புழு உரம், ஒரு மடங்கு மட்கிய காய்கறி கழிவு உரம், ஒரு கைப்பிடி வேப்பம் புண்ணாக்கு, உயிர் உரங்களான சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா விரிடி, பொட்டாஷ் பாக்டீரியா, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ஒவ்வொன்றிலும் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து நன்றாக மண் கலவையில் கலந்து, ஐந்திலிருந்து  ஏழு நாட்கள் ஈரப்பதத்தோடு வைத்திருக்க வேண்டும். ஏழு நாட்கள் கழித்து நுண்ணுயிரிகள் அனைத்தும் மண்கலவையில் பெருகி, நடவு செய்வதற்கு உண்டான மண் கலவை தயார் நிலையில் இருக்கும். தக்காளி செடியை நடுவதற்கு 12 க்கு 15 வளர்ப்பு பைகள் போதுமானதாக இருக்கும். தக்காளி செடி நன்றாக அடர்ந்து வளரக்கூடிய செடியாகும். ஒரு வளர்ப்பு பைக்கு ஒரு தக்காளி செடி வைத்தாலே போதுமானதாக இருக்கும்.


தக்காளி செடிக்கு உரமிடுதல்:


  • தக்காளி விதைகளை நாற்று விட்டு நாற்றுக்கள் நன்றாக வளர்ந்து 25 நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பிடிங்கி வேறு தொட்டியில் மாற்றி நட வேண்டும். 
  • நாற்றுக்களை நடும் போது இரண்டு, இரண்டு செடிகளாக சேர்த்து வைக்க வேண்டும். மாலை வேளையில் நாற்றுக்களை பிடுங்கி நடுவது நல்லது.
  •  நடவு செய்து 35ஆவது நாளில் மண்புழு உரம், அல்லது தொழு உரம், அல்லது காய்கறி கழிவு உரம், இவற்றில் ஏதேனும் ஒரு உரத்தை வேர் பகுதியில் போட்டு நன்றாக கிளறி விட வேண்டும்.
  • தக்காளி செடி நடவு செய்து 40லிருந்து 45 நாட்களுக்குள் பூக்கள் வர ஆரம்பிக்கும்.
  • பூக்கள் வருவதற்கு முன்னரே சாம்பலோடு "ராக் பாஸ்பேட்" என்ற இயற்கை உரத்தை கலந்து செடிகளின் வேருக்கு கொடுக்க வேண்டும். இப்படி கொடுப்பதினால் தக்காளி செடியில் இருந்து அதிக காய்கறிகள் வரும். காய்கறிகள் பெரியதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
  • தக்காளி செடியில் இருந்து வரும் பூக்கள் முதலில் உதிர ஆரம்பிக்கும்.
  • பொதுவாகவே ஒரு செடியில் அமிலத்தன்மை குறைவாக இருக்கும்போது பூக்கள் உதிர்தல் பிரச்சனைகள் இருக்கும். இப் பிரச்சனைகளை சரிசெய்ய மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரை புளிக்க வைத்த மோருடன் ஒன்பது மடங்கு தண்ணீர் கலந்து இலை வழியாக தெளித்து விடலாம். 
  • பூக்கள் உதிராமல், வரும் தக்காளி பழங்கள் மிகவும் சுவையானதாக இருப்பதற்கு, மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரை புளித்த மோருடன் சம அளவு தேங்காய் பால் சேர்த்து ஏழு நாட்கள் வைத்திருந்து அதிலிருந்து கிடைக்கும் கரைசலோடு ஒரு லிட்டர் அளவுக்கு 9 லிட்டர் தண்ணீர் கலந்து இலை வழியாக தெளித்து விடலாம்.

மீன் அமிலம்: மீன் கழிவுகளோடு சம அளவு நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் கலக்காமல் பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு காற்று போகாமல் மூடி 20 நாட்கள் வைத்தால் மீன் அமிலம் கிடைக்கும். இப்படி கிடைக்கும் மீன் அமிலத்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி லிட்டர் கலந்து இலை வழியாக தெளித்து விடலாம். வேருக்கும் ஊற்றி விடலாம். இப்படி செய்வதினால் தக்காளி செடியில் எந்தவித நோய் தாக்குதலும் இல்லாமல், நன்றாக வளர்ந்து பூக்கள் உதிராமல், அதிக காய்கள் பெரிய, பெரிய காய்கள் காய்க்கும்.


தக்காளி செடியை தாக்கும் பூச்சிகள்:


இலைப்பேன்கள்:


  தக்காளி செடியில் ஆரம்பத்திலேயே தாக்கக்கூடிய பூச்சிகளில் ஒன்றுதான் இந்த இலைப்பேன்கள். கோடை காலத்தில் இலைப்பேன்களின் தாக்குதல்கள் அதிகமாகவே இருக்கும். இலைகளின் பின்புறத்தில் கூட்டம் கூட்டமாக இருந்து கொண்டு சாறுகளை உறிஞ்ச ஆரம்பிக்கும். இதனால் தக்காளி செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும். செடிகளின் வளர்ச்சி குறைந்து இலை, பூ, காய்கள் பிடிக்காமல் இலை சுருட்டு நோயை பரப்பி மொட்டுக்களை கருக செய்யும். இலைப்பேன்கள் புள்ளி வாடல் நோயை தக்காளி செடியில் உருவாக்குகின்றன. இது மற்ற செடிகளுக்கும் பரவி பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இலைப்பேன்களை கட்டுப்படுத்துவதற்கு தண்ணீரை செடிகளின் மேல் பீய்ச்சி அடித்தால் இலைப்பேன்கள் கீழே விழுந்துவிடும். இலைப்பேன்கள் தாக்கப்பட்ட தக்காளி செடிகளில், கைப்பிடியளவு வேப்பம் புண்ணாக்கு வேரைச் சுற்றி போட்டு தண்ணீர் ஊற்றி வந்தாலே வேப்பம் புண்ணாக்கு கசப்புத் தன்மைக்கு அனைத்து இலைப்பேன்களும்  கீழே விழுந்துவிடும்.

அசுவினி பூச்சிகள்:


    தக்காளி செடிகளின் இலைகள், மொட்டுகள், தண்டுகளில் அசுவினி பூச்சிகள் அதிக சேதத்தை ஏற்படுத்தும். சாறுகளை உறிஞ்சி, செடிகளின் வளர்ச்சியை பாதிப்படைய செய்யும். அஸ்வினி பூச்சிகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் செடியின் ஒளிச்சேர்க்கையை தடைசெய்யும். குளிர்காலங்களில் அசுவினி பூச்சிகளின் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்த காலை நேரத்தில் சாம்பலை தூவிவிட்டால் கட்டுப்படும். இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

மாவுப்பூச்சிகள்:


  தக்காளி செடியை தாக்கும் பூச்சிகளில் மாவு பூச்சியும் ஒன்று. கோடைகாலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். தக்காளி செடியின் தண்டுகள், பூக்கள், இவற்றில் கூட்டம் கூட்டமாக சாறுகளை உறிஞ்சி சேதத்தை ஏற்படுத்தும், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு குளிர்ந்த நீரை அதிக அழுத்தத்தில்  பீய்ச்சி அடித்தாலே கீழே விழுந்தது விடும். மாவுப்பூச்சிகளை வெர்டீசிலியம் லெகார்னி என்ற நன்மை செய்யும் பூஞ்சைகளை மாலை வேளையில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.


Also Read




பச்சைக் காய்ப் புழு:


    இந்த வகையான புழுக்கள் ஆரம்பத்தில் இலைகளை ஓட்டை போட்டு சாப்பிடும். தக்காளி செடி நன்றாக வளர்ந்த பிறகு தக்காளி செடியில் வரும் காய்கள், தக்காளி பழங்களை துளையிட்டு சேதப்படுத்தும். பச்சைக் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்த தக்காளி செடிக்கு பக்கத்திலேயே சாமந்திப்பூ செடி எனும் செண்டு மல்லியை வைக்கவேண்டும். செண்டுமல்லி வைப்பதினால் தாய்ப் பூச்சிகள் செடிகளின் இலைகளில் முட்டையிடும். முட்டை குவியல்களை கண்ணால் பார்த்து சுலபமாக அழித்து விடலாம். ஆரம்ப நிலையிலேயே இனக்கவர்ச்சிப் பொறி, விளக்குப் பொறி, வைத்து கூட பச்சைக் காய்ப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.


புரோட்டினியா புழு:


  இந்தப் புழுக்கள் பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் இருக்கும். தக்காளிச் செடியின் இலைகளை சாப்பிட்டு சேதப்படுத்தும். வளர்ந்ததும் தக்காளி செடியின் காய்கறிகள், பழங்களை சேதப்படுத்தும். இவ்வகையான புழுக்களைக் கட்டுப்படுத்த வரப்பு ஓரத்தில் ஆமணக்குச் செடியை வைத்து முட்டை குவியல்களை பார்த்து அழிக்கலாம். அல்லது இனக்கவர்ச்சிப் பொறி, விளக்குப் பொறி வைத்து கூட புழுக்களை கட்டுப்படுத்தலாம்.


நூற்புழு தாக்குதல்:


  நூற்புழு தாக்கப்பட்ட செடிகள் வளர்ச்சி குன்றி இலைகள், பச்சை நிறத்தை இழந்து பழுப்பு நிறத்தில் காணப்படும். காலை பதினோரு மணி வரை செடிகள் நன்றாக இருக்கும். பதினோரு மணிக்கு மேல் செடிகள் வாட ஆரம்பிக்கும். இரவு நேரங்களில் சரியாகி மறுநாள் 11 மணிக்கு மேல் திரும்பவும் வாட ஆரம்பிக்கும். இப்படி இருந்தால் நூற்புழு தாக்குதல் இருக்கிறது என்று அர்த்தம். நூற்புழு தாக்கப்பட்ட செடிகளுக்கு சத்துக்கள் சரியாக போகாமல் நாளடைவில் செடிகள் இறந்துவிடும். நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை தண்ணீரில் கரைத்து வேரில் ஊற்றி விடலாம். செண்டுமல்லி எனும் சாமந்திப்பூ செடியை தக்காளி செடிக்கு பக்கத்தில் நடவு செய்வதினால், செண்டு மல்லி பூ செடியின் வேர்களில் இருந்து வரும் ஒரு வித திரவமானது நூற்புழுக்களை கொல்லும் சக்தி வாய்ந்தது. இப்படி கூட நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.


Sudagarkrishnanchannels
Tomato Cultivation 


தக்காளிச் செடியைத் தாக்கும் நோய்கள்:


பிகோமோ வைரஸ் நோய்:


   இந்த வைரஸ் நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வைரஸ் நோய் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் மேல் நோக்கி சுருண்டு காணப்படும். செடிகள் வளர்ச்சி குன்றி இலைகள் பூக்கள் கருகி பிறகு செடிகள் இறந்துவிடும். இவ்வகையான வைரஸ் நோயை பெவிசியாடபாசி என்ற ஒரு விதமான வெள்ளை ஈக்கள் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பி விடுகின்றன. இந்த வெள்ளை ஈக்கள் தண்டு பகுதியில் சாறுகளை உறிஞ்சி அதிக சேதத்தை ஏற்படுத்தும். உறிஞ்சிய தண்டுகள் கருப்பு நிறமாக மாறி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து செடிகள் இறந்துவிடும்.வெள்ளை ஈக்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் இலைகள் மேல் படுவதால் இலைகள் கரும்பூசாண படலமாக மாறி செடிகள் ஒளிச்சேர்க்கை நடைபெறாமல் தடுக்கும். நாளடைவில் செடிகளின் வளர்ச்சி குன்றி செடிகள் இறந்துவிடும்.
வைரஸ் நோயை கட்டுப்படுத்த தாக்கப்பட்ட செடிகளை அகற்றி தீயிட்டு கொளுத்த வேண்டும். வைரஸ் நோயை ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பரப்பும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த ஆங்காங்கே மஞ்சள் அட்டையை வைக்க வேண்டும். முதிர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்கள் மஞ்சள் அட்டையில் ஒட்டி இறந்து விடும். வைரஸ் நோய் வராமல் தடுக்க தரமான விதைகளை தேர்வு செய்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.


வாடல் நோய்:

   வாடல் நோய் தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் வாடி கருக ஆரம்பிக்கும். தண்டுகள் மஞ்சள் நிறமாக மாறி இலைகளுக்கும் பரவி வளர்ச்சி குன்றி நாளடைவில் செடிகள் இறந்து விடும். வாடல் நோய் வராமல் தடுக்க சூடோமோனஸ் உயிர் உரத்தில் விதை நேர்த்தி செய்து விதைப்பது நல்லது. மண் கலவையில் சூடோமோனாஸ் உயிர் உரத்தை கலந்து தக்காளிச் செடியை நடுவதால் வாடல் நோயை தடுக்கலாம். சூடோமோனாஸ் உயிர் உரத்தை இலைகள் மேல் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.


இலைக் கருகல் நோய்:


  பொதுவாகவே இலைக்கருகல் நோய் மழைக்காலம் பனிக்காலங்களில் அதிகமாக வரும். இலைகளின் ஓரத்தில் சுற்றி வெளிர் மஞ்சள் நிறமாக காணப்படும். இலைகளில் அங்கங்கே புள்ளிகள் தோன்றும். நாளடைவில் இலைகள் உதிர்ந்து செடிகளும் இறந்துவிடும். நோயை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் உயிர் உரத்தை வேர்ப்பகுதியில் போட்டு தண்ணீர் ஊற்றி வருவது நல்லது. இலைகள் மேல் கூட தெளித்து விடலாம். புளித்த மோரை கூட இலைகள் மேல் தெளித்து இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்தலாம்.

தக்காளி காய் அழுகல்:


 தக்காளி செடியில் இருந்து வரும் காய்களின் அடியில் (அடிப்பகுதியில்) அழுகியவாறு இருப்பதை காணலாம். இதை end root blossom என்று ஆங்கிலத்தில் கூறுவர். தக்காளி செடியில் இருந்து வரும் காய்களில் சரியான திசுக்கள் வளர்ச்சி அடையாமல் இருப்பதினால் இது போல காணப்படும். இது கால்சியம் சத்துக்குறைபாட்டால் வருவது. கால்சியம் சத்து குறைபாட்டை சரிசெய்ய தக்காளி செடிகளில் பூக்கள் பூப்பதற்கு முன்னரே சுண்ணாம்பை தண்ணீரில் கரைத்து, வேர்ப்பகுதியில் ஊற்றி வரலாம். அல்லது முட்டை ஓட்டை நன்றாக தூளாக்கி அந்தப் பொடியினை வேர்ப்பகுதியில் போட்டுவிடலாம். முட்டை ஓட்டுப் பொடியின் சத்துக்கள் செடிகளுக்கு கிடைப்பதற்கு நாட்கள் அதிகமாகும், என்பதினால் சுண்ணாம்பு கரைசல் மிகவும் சிறந்தது.
  தக்காளியில் மிக அதிகளவில் "லைகோபீன்" என்ற வேதி பொருள் புற்றுநோய் செல்களை அழிக்கும் பேராற்றல் கொண்டது. தளதள தக்காளி போல மினுமினுப்பை சருமத்திற்கு கொடுப்பதற்காக தக்காளிபழம் பல்வேறு அழகியல் தயாரிப்புகளிலூம் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தக்காளியை உணவுகளில் அதிகமாக பயன்படுத்துவதால் உடலும், முக அழகும், சருமமும் மேம்படுகிறது. மீண்டும் அடுத்ததொரு கட்டுரையில் சந்திக்கிறேன். 


நன்றி!!🙏🙏🙏
அன்புடன் சுதாகர்கிருஷ்ணன்.





தக்காளி செடி வளர்ப்பில் மேலும் சந்தேகங்கள் இருந்தால் இந்த வீடியோவை கிளிக் செய்யுங்கள் 👇






Post a Comment

1 Comments