செட்டிநாடு முட்டைக்குழம்பு
Muttai kuzhambu |
தேவையான பொருட்கள்:
- முட்டை- நான்கு
- வெங்காயம்-2 நடுத்தரமானது
- தக்காளி-3
- பச்சை மிளகாய்-1
- கறிவேப்பிலை-1கொத்து
- தேங்காய்-2 பத்தை
- குழம்பு மிளகாய் தூள்-1ஸ்பூன்
- உப்பு-தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு-1/2 ஸ்பூன்
- சீரகம்-1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு-1/2 ஸ்பூன்
- கடலை எண்ணெய்- 1குழி கரண்டி
செய்முறை:
கடாயில் குழிகரண்டியளவு நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், தாளிக்க கொடுத்துள்ளவற்றை கடுகு அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை ஸ்பூன், சீரகம் அரைஸ்பூன் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். மிக்ஸி ஜாரில் எலுமிச்சை அளவுள்ள சிறிய வெங்காயம், தக்காளிப்பழம் மூன்று, தேங்காய் இரண்டு பத்தைகள் இவற்றை ஐந்தாறு துண்டுகளாக நறுக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். வேண்டுமென்றால் இஞ்சி சிறிய துண்டு சேர்த்து அரைத்து கொள்ளலாம். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அரைத்து வைத்த தேங்காய் தக்காளிபழ விழுதை சேர்க்கவும். போதுமான அளவு உப்புத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து கலந்துவிடவும். மிளகாய் தூள் அளவினை உங்கள் காரத்திற்கு ஏற்றாற் போல, கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். குழம்பினை மூடி போட்டு கொதிக்கவிடவும். குழம்பில் தக்காளி விழுது, மிளகாய்பொடிகளின் பச்சை வாசனை போய், எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்து, வாசம் வரும் வேளையில், பாத்திரம் ஒன்றில் எடுத்து வைத்திருக்கும் முட்டைகளை உடைத்து ஊற்றி கொள்ளவும். முட்டையை கலக்கி விட கூடாது. உப்புத்தூள் சேர்க்க தேவையில்லை. முட்டையின் மஞ்சள் கரு உடையமால் வைக்கவும். நான் மூன்று பேருக்கு தயாரிக்க நான்கு முட்டைகளை எடுத்து கொண்டேன். நீங்கள் எத்தனை பேருக்கு தயாரிக்கிறீர்களோ, அதற்கேற்ப முட்டைகளின் எண்ணிக்கையை சேர்த்து கொள்ளவும். குழம்பு நன்றாக கொதிக்கின்ற நேரத்தில், முட்டைகளை குழம்பில் ஊற்றிவிடவும். அடுப்பின் தணலை சிம்மில் வைக்க வேண்டாம். முட்டையை ஊற்றிய பிறகு கிளறி விட வேண்டாம். ஐந்து நிமிடங்கள் அதிக தணலில் குழம்பு கொதிக்க வேண்டும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு, குழம்பை மெதுவாக கலந்து விடவும். மேலும் ஒரு இரண்டு நிமிடங்கள் சிறிய தீயில், குழம்பு கொதிக்கவிட்டு, அடுப்பை நிறுத்தி விடுங்கள். இப்பொழுது ஒரு நல்ல மணம் வரும். கொத்தமல்லி தழை தூவிக் கொள்ளவும். இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, சாப்பாட்டிற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். சிறந்த இணை உணவாக அமையும். முட்டைக்கு பதிலாக வேக வைத்த காலிபிளவர் கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
தக்காளி முட்டைக்குழம்பு/Egg Gravy :
தேவையான பொருட்கள்:
- முட்டை- நான்கு
- வெங்காயம்- இரண்டு பெரியது
- கறிவேப்பிலை- 1 கொத்து
- தனி மிளகாய் தூள்- 1ஸ்பூன்
- தக்காளிபழம்- நான்கு
- தனியாத்தூள்- 2 ஸ்பூன்
- மிளகு தூள்- 1/2 ஸ்பூன்
- சீரகத்தூள்- 1/2 ஸ்பூன்
- கறிமசலாத்தூள்-1/2 ஸ்பூன்
தாளிக்க:
- கடுகு-1/2 ஸ்பூன்
- சீரகம்-1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு-1/2 ஸ்பூன்
- கடலை எண்ணெய்- 1குழி கரண்டி
செய்முறை:
அடி கனமான பாத்திரம் அல்லது வாணலியை அடுப்பில் வைத்து குழி கரண்டி அளவு கடலை எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை கடுகு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன், போட்டு தாளித்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயங்களை போட்டு வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின்னர், பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி பழங்களை போட்டு வதக்கிக் கொள்ளவும். வெங்காயமும் தக்காளியும் தொக்கு பதத்திற்கு வரும் அளவிற்கு வதக்கிக்கொள்ளவும். தக்காளி பழம் வதங்கிய பின்னர் கொடுத்துள்ள மசாலா பொடிகளை சேர்த்து வதக்கிக்கொள்ளவும். தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், தனியா தூள் இரண்டு டீஸ்பூன், சீரகத்தூள் அரை ஸ்பூன், மிளகுத் தூள் அரை ஸ்பூன், கறி மசாலாத் தூள் அரை ஸ்பூன், உப்புத்தூள் சுவைக்கேற்ப, சேர்த்து வதக்கிக் கொள்ளவும். மசாலாக்களின் பச்சை வாசனை நீங்கி, தொக்கு பதத்திற்கு வரும் வரை அடுப்பை குறைந்த தணலில் வைத்து மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வதக்கி கொள்ளவும். இப்பொழுது உடைத்து வைத்திருக்கும் நான்கு முட்டைகளை ஊற்றி சுருள வதக்கிக் கொள்ளவும். முட்டையில் உப்பு சேர்க்க தேவையில்லை. அடுப்பை குறைந்த தீயில் வைத்து இரண்டு நிமிடங்கள் முட்டை வேகும் அளவிற்கு வதக்கினால் போதும். இப்பொழுது முட்டை மசாலா தயாராகிவிட்டது. முட்டை மசாலாவின் மீது கருவேப்பிலையை பொடி செய்து தூவிக் கொள்ளவும். சப்பாத்தி பூரி பரோட்டா சாதத்திற்கும் ஏற்ற துணை உணவு, முட்டை தக்காளி கிரேவி. சுலபமாக செய்யலாம். சுவையும் அலாதியாக இருக்கும். குழம்பிற்கு இரண்டு முட்டைகளை மட்டும் சேர்த்துக்கொண்டு, மூன்று முட்டைகளை வேகவைத்து, தோலூரித்து நான்காக கீறி சேர்த்து கொள்ளலாம்.
முட்டையில் உள்ள ஊட்டசத்துக்கள்:
- முட்டையில் ஆறுகிராம் அளவிற்கு புரதச்சத்து உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை தரக்கூடியது. வாரத்திற்கு வேகவைத்த நான்கு முட்டைகள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். முட்டையை காலை உணவாக எடுத்துக்கொள்வது மிகவும் சிறப்பு. முட்டையிலிருக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட் கண்புரை, மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளை குணமாக்குகிறது.
- மனிதனுக்கு ஒருநாளைக்கு 300 கிராம் அளவுக்கு கொழுப்புச் சத்து தேவை. வேக வைத்த ஒரு முட்டையில் 63 கிராம் அளவிற்கு கொழுப்புச்சத்து உள்ளது. அதனால் முட்டையை தினமும் எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. முட்டையை தினமும் எடுத்துக்கொள்வதால் இதய கோளாறுகள், வாயுக் கோளாறுகள் ஏற்படும் என்பது தவறு என்று AHA-American heart Association அறிவித்துள்ளது. கெட்ட கொழுப்புகள் தான் உடலுக்கு பிரச்சனை. முட்டையில் உள்ளது நல்ல கொழுப்பு. அதனால் முட்டையை எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை.
- இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவினை கட்டுபடுத்துகிறது. வேறெந்த உணவுகளிலிலும் காணப்படாத கோலைன் என்ற சிறப்பான பொருள் முட்டையில் மட்டுமே அடங்கியுள்ளது. உடல் எடை அதிகரிப்பதை தடுத்து உடல் எடையை சீராக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது. வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் உறுப்புகளின் வளர்ச்சிக்கும் சுறுசுறுப்பான செயல்பாடு இருக்கும் தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்வது அவசியமாகும். லூடின் மற்றும் சியாஷாந்தின் என்ற ஆண்டிஆக்ஸிடண்ட்கள் உள்ளதால் கண்கருவிழிக்கு பாதுகாப்பு அளிக்கிறது. கண்பார்வை குறைபாட்டை சரிசெய்து கண்களை பாதுகாக்கிறது. மூளை சுறுசுறுப்புடன் இயங்கவும் பாதுகாக்கவும் முட்டையின் மஞ்சள் கரு உதவுகிறது. முட்டையை தினமும் எடுத்துக் கொள்வதால் பாலூணர்ச்சி அதிகரிக்கும்.
- ஆரோக்கியமான குழந்தையை நீங்கள் பெற்றெடுக்க விரும்பினால் கர்ப்பிணிப் பெண்கள் தினமும் வேக வைத்த ஒரு முட்டையை சாப்பிடுவது உங்களுக்கும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது. புற்றுநோய் என்னும் கொடிய நோயை கட்டுபடுத்தும் ஆற்றல் முட்டையில் உள்ளது. ஆரோக்கியமான கருமையான அடர்த்தியான கூந்தலை நீங்கள் பெற விரும்பினால் முட்டையை உங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். பக்கவாதம், இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மூன்று நாட்களுக்கு மேல் முட்டையை வெளியே வைக்கக்கூடாது குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம். தினமும் வேக வைத்த ஒரு முழு முட்டையை உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயை குணமாக்க இயலாது. ஆனால் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்.
- முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி விட்டமின் டி, உள்ளது. இது உடலின் அனைத்து உறுப்புகளின் ஆரோக்கிய செயல்பாட்டிற்கு உதவுகிறது. அதனால் முட்டையின் மஞ்சள் கருவினை தவிர்க்கக்கூடாது. முட்டை மஞ்சள் கரு முட்டையின் மஞ்சள் கருவுடன் சேர்த்து எடுக்கும் பொழுது தான் உடலுக்கு முழுமையான சத்துக்கள் கிடைக்கும். முட்டையை சில ஒவ்வாமை பொருட்களோடு சேர்த்து எடுத்துக் கொள்ளக்கூடாது. உதாரணத்திற்கு பால். பாலுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது செரிமான பிரச்சனைகள் வயிற்றுக் கோளாறுகள், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் பாலுடன் சேர்த்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வருடத்திற்கு பிறகு முட்டையில் மஞ்சள் கருவை முதன்முதலில் கொடுக்க ஆரம்பிக்கலாம். முட்டையை பச்சையாக சாப்பிடுவது பலருக்கு மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். அதனால் முட்டையை வேகவைத்தோ, பொரித்தோ, ஆம்லெட் செய்தோ சாப்பிடலாம். முட்டையை பச்சையாக சாப்பிடுவதை தவிர்ப்பது நலமானது.
நன்றி!!
கோ.இந்திரா பிரியதர்ஷினி.Msc .MEd .MBA
அதிக இரும்புசத்து கொண்ட முருங்கைகீரை பொரியல் மற்றும் முருங்கைகீரையின் பயன்கள்.
0 Comments