Translate

தேமோர் கரைசல் தயாரிப்பது எப்படி?

 How to make Fermented butter milk  & coconut Milk solution?  How to apply it to plants?

  இயற்கை விவசாயம் Organic என்ற சொல் இப்பொழுது பரவலாக அனைவராலூம் பேசப்படுகிறது. ஆர்கானிக்காக விளைவிக்கப்படும் பொருட்கள் என்று!! அதற்கென்றே, தனியாக பேரங்காடிகளும் அங்காங்கே முளைத்திருக்கின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால், மிகவும் குக்கிரமங்களிலும் கூட இத்தகைய கடைகள் காணப்படுகின்றது. ஏனெனில் இயற்கை விவசாயம் என்பது இப்பொழுது எங்குமே, குக்கிராமங்களிலும் கூட நடைபெறுவதில்லை. அதனால் கிராமங்களிலும் ஆர்கானிக் கடைகள் பெரிய ஜொலிஜொலிப்புடன் 20ரூபாய் கத்திரிக்காயை, ஆர்கானிக் என்ற பெயரில் 200-ரூபாய்க்கு விற்கிறார்கள். இயற்கை விவசாயம் என்றால் என்ன? முதலில் தெளிவாக இதனை நீங்கள் புரிந்து கொள்ளும்போது தான் இந்த கட்டுரையின் இன்றியமையாமை உங்களுக்குப் புரியும். ஆர்கானிக் விவசாயம் என்பது,

➝ மண்ணிற்கு பழக்கப்பட்ட பாரம்பரிய நாட்டுவிதைகளை பயன்படுத்துவது.

➝ பருவம் பார்த்து பயிர் செய்வது

➝பூச்சிகளை கட்டுபடுத்தும் பூச்சிகொல்லிகளையும், பயிர்வளர்ச்சிக்கு பயன்படுத்தும் உரங்களையும்  இயற்கை பொருட்களிலிருந்தே தயாரித்து பயன்படுத்துவது.

➝ முடிந்தளவு Recycle முறைகளை பயன்படுத்துவது.


வயல்களில் காணப்படும் தேவையற்ற புல், தாவரங்கள்

           ஆடு மாடுகளின் உணவு 

ஆடு மாடுகளின் சாணம், கோமியம் கழிவு

மட்கிய எரு, தாவரங்களுக்கு உரம்


  அதாவது நாம் பயன்படுத்திய காய்கறிகழிவுகள், தேவையற்ற பொருட்களை உரமாக்கி பயன்படுத்துதல், தாவரங்களை உணவாக கொள்ளும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை மறுசுழற்சி முறையில் உரமாக, பூச்சிகொல்லியாக பயன்படுத்துதல். 

 இப்பொழுது மண்ணையே மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் மண்கரைசல் முறையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியை சேர்ந்த வேளாண்விஞ்ஞானி ஸ்ரீலஷ்மி என்பவர் மண்கரைசலை இலைவழியாக கொடுத்து, அதிக மகசூல் பெற முடியும் என்றும், பெரிய விவசாய நிலங்களுக்கு அதிக பலனை தரக்கூடிய எளிய வழிமுறை என கண்டுபிடித்துள்ளார். பிபிடி நெல் ரகத்திற்கு இத்தகைய மண்கரைசலை பயன்படுத்தியதால் ஹெக்டருக்கு 4300 கிலோ விளைச்சல் கிடைத்துள்ளது. மண்கரைசலை உரமாக பயன்படுத்துவது குறித்து மற்றுமொரு பதிவில் பதிவிடுகிறேன். 

பெரியபெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் இரசாயண உரங்களும், பூச்சிகொல்லி மருந்துகளும் மண்ணின் தரத்தை பழாக்குவதோடு, மனிதர்களுக்கு பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தி, மண்ணையும், மனிதர்களையும் மலடாக்கிவிடுகிறது. அதனால் இயற்கை அழிக்கப்படுவதோடு, உயிரினங்கள் வாழ தடைசெய்யபட்ட பகுதியாக உலகம் மாறிகொண்டே வருகிறது. இயற்கையை மீட்டெடுத்து, நன்மை செய்யும் பூச்சிகளை அதிகம் உருவாக்கி, ஆரோக்கியமான இயற்கை விவசாயத்தையும், வாழ்வியலையும் கைகொள்ள பூச்சிகளை கட்டுபடுத்தும் பூச்சிமருந்துகளையும், உரங்களையும் இயற்கை முறையில் தயாரிக்க அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் பல்வேறு இயற்கை உரங்கள் தயாரிப்பு பற்றி நிறைய வீடியோக்களை பதிவிட்டிருக்கிறேன்.  இயற்கை விவசாயத்தில் இன்றிமையாத இடத்தை வகிக்கும் தேமோர் கரைசலை பற்றி இக்கட்டுரை உங்களுக்கு தெளிவான விளக்கம் தருகிறது. தேமோர் கரைசலை தயாரிப்பது எப்படி? பயன்படுத்துவது எப்படி? தேமோர் கரைசலின் பயன்கள் என்ன? சற்றே விரிவாக அலசலாம்.


Sudagar krishnan channels
Fermented butter milk for Plants 


தேமோர் கரைசல் என்றால் என்ன?

 தேங்காய் பாலும், புளித்த மோரும் கலந்த கலவையே தேமோர் கரைசல். இயற்கை விவசாயத்தில் தேமோர் கரைசலின் பங்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தேமோர் கரைசல் சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சிவிரட்டியாகவும், வைரஸ்நோயை கட்டுப்படுத்தக்கூடிய கரைசலாகவும் செயல்படுகிறது. செடி கொடிகள் ஏதோ சில காரணங்களால் பூக்கள் பூக்காமல் திணருகின்ற போது, பூக்களை வெளியே தள்ளுகின்ற உந்துசக்தியாக தேமோர் கரைசல் செயல்படுகிறது. பொதுவாகவே செடிகளுக்கு பூக்கும் தருணத்தில் அமிலத்தன்மை அதிகமாக தேவைப்படும். தேமோர் கரைசலில் அமிலத்தன்மை இயல்பாகவே இருக்கிறது.

தேமோர் கரைசல் தயாரிப்பது எப்படி?

  தேமோர் கரைசலை சுலபமாக நமது வீட்டிலேயே தயாரிக்கலாம். தேமோர் கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்.

  • புளித்த மோர்
  • தேங்காய் பால்
  • மண் பானை, அல்லது 
  • பிளாஸ்டிக் பாட்டில். 

  கெட்டியான தயிரை சம அளவு தண்ணீர் கலந்து மோராக கடைந்து கொள்ளவும். கடைந்த மோரை மூன்று முதல் ஐந்து  நாட்கள் புளிக்க விடவும். புளித்த மோருடன் சம அளவு தேங்காய் பாலும் எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக முற்றிய தேங்காயை துருவி, தண்ணீர் சேர்த்து அரைத்து கெட்டியான முதல் பாலூம், இரண்டாம் முறை அரைத்தும், இரண்டுமுறை தேங்காய்பால் எடுத்து சேர்த்து கொள்ளவும். புளித்த மோர் இரண்டு லிட்டர் என்றால், முதல் தேங்காய்பால் ஒருலிட்டர்+ இரண்டாம் தேங்காய் பால் லிட்டர், இத்தகைய விகிதத்தில் எடுத்துகொள்ள வேண்டும். புளித்த மோரையும் தேங்காய் பாலையும் நன்றாக கலந்து மண்பானையில் ஊற்றி, மண்பானையின் வாய்புறத்தை மெல்லிய பருத்தி துணியினால் கட்டி, எருகுவியலுக்குள்(Compost)  அல்லது மரத்தின் கீழுள்ள மண்ணில் புதைத்துவிடவும். ஏழு நாட்களுக்குப் பிறகு கரைசலை எடுத்து பயன்படுத்தலாம்.
 பிளாஸ்டிக் பாட்டில் என்று எடுத்துக்கொண்டால், தேமோர் கரைசலை, அதில் ஊற்றி மூடி நிழற்பாங்கான இடத்தில் ஏழு நாட்கள் வைத்திருக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை கரைசலை நன்றாக கலக்கி விட வேண்டும். தேமோர் கரைசல் தயாரிக்கும் போது புழுக்கள் வராமல் இருப்பது அவசியம். அதனால் கரைசலை நன்றாக  மூடி வைக்க வேண்டும். 
ஏழு நாட்கள் கழித்து தேமோர் கரைசல் நன்றாக தயாராகியிருக்கும். தேமோர் கரைசலை முகர்ந்து பார்க்கும் போது நுரைத்து, புளித்த வாடை வருகிறது என்றால் நீங்கள் தயாரித்த கரைசல்,  சரியாக தயாராகி இருக்கிறது என்று கொள்ளலாம். இப்பொழுது செடிகளுக்கு பயன்படுத்த தேவையான தேமோர் கரைசல் தயாராகி விட்டது. 

தேமோர் கரைசல் செடிகளுக்கு எப்படி பயன்படுத்துவது?

  • தேமோர் கரைசல் எப்பொழுது கொடுக்க வேண்டும்?
  • எந்த விகிதத்தில் கொடுக்க வேண்டும்?

எப்பொழுது கொடுக்க வேண்டும்:

    செடி கொடிகள் நடவு செய்த 40-லிருந்து 45 ஆவது நாளில் (மண்ணின் தரத்தை பொருத்து) பூக்கள் பூக்க துவங்கும். பூக்கும் தருணத்தில் தேமோர் கரைசல் கொடுக்க வேண்டும். பொதுவாகவே செடிகொடிகள் பூக்கும் தருணத்தில் அதிக சத்துகள் தேவைப்படும். வேரிலிருந்து தண்டுகள் இலைகள் வழியாக பூக்களுக்கு சத்துக்களை எடுத்துக்கொள்ள செடி கொடிகள் மிகவும் சிரமப்படுகின்றன. இந்த தருணத்தில் இலை வழியாக தேமோர் கரைசலை கொடுக்கும்போது சுலபமாகவே சத்துக்களை செடிகொடிகள் எடுத்துக்கொண்டு அதிக காய்கறிகளையும் பழங்களையும் நமக்கு கொடுக்கின்றன

எந்த அளவில் கொடுப்பது?

 தேமோர் கரைசல் ஒரு லிட்டர் எடுத்துக் கொண்டோமானால் 9 லிட்டர் தண்ணீர் கலந்து செடி கொடிகளின் இலைகள் மேல் நன்றாக நனையும்படி தெளித்து விடலாம். பூக்கும் தருணத்தில் வாரம் ஒரு முறை தேமோர் கரைசல் கொடுப்பதினால் அதிக பூக்கள் பூக்கும். பூக்கள் கொட்டாமல் காய்கறிகள் பெரியதாக மிகவும் சுவையானதாக காய்க்க ஆரம்பிக்கும். தேமோர் கரைசல் செடிகளுக்கு தெளிக்கும் போது மிகவும் கவனம் தேவை தண்ணீரின் அளவை சரியாக கலக்காமல் கொடுத்தால் செடி கொடிகளின் இலைகள் கருகி போவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஏனெனில் தேமோர் கரைசலில் அமிலத்தன்மை இருப்பதினால் இலைகள் கருதுவதற்கு இதுவும் ஒரு காரணம். பொதுவாக மாலைநேரத்தில் தெளிப்பது சிறந்தது.

Sudagar krishnan channels
Fermented butter milk for Plants 


தேமோர் கரைசலின் பயன்கள்:

  தேமோர் கரைசலில் உள்ள சைட்டோகைனின் என்ற வளர்ச்சி ஊக்கி செடிகளின் வளர்ச்சிக்கும் பூக்கள் அதிகம் பூக்கவும் காய்கறிகள் அதிகம் காய்ப்பதற்கும் உதவுகிறது.

தேமோர் கரைசலில் கலந்துள்ள புளித்த மோரில் ஜிப்ராலிக் ஆசிட் பூக்கள் உதிராமல் பிஞ்சுகள் கருகாமல் பாதுகாத்து காய்கள் பெரியதாகவும் அதிக சுவையுடையதாக காய்ப்பதற்கு உதவுகிறது.

தேமோர் கரைசலில் உள்ள தேங்காய்ப்பாலில் mono laurin என்ற பொருள் செடி கொடிகளில் வரும் வைரஸ், பூஞ்சைகள் இவற்றை எதிர்க்கும் ஆற்றலை கொடுத்து நோயிலிருந்து செடிகொடிகளை பாதுகாக்கிறது.

தேமோர் கரைசலில் உள்ள தேங்காய் பாலில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, தாது பொருட்கள், பொட்டாசியம், சோடியம், மக்னீஷியம், துத்தநாகம் விட்டமின் பி3, வைட்டமின் பி6, விட்டமின் பி1, விட்டமின் சி, போலிக் ஆசிட், இவ்வளவு சத்துக்கள் செடிகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவி செய்து நல்ல விளைச்சல் எடுக்க காரணமாக அமைகின்றன.

தேமோர் கரைசலில் உள்ள புளித்த மோர் செடி கொடிகளில் வரும் வைரஸ் நோயை கட்டுப்படுத்தி செடிகள் ஆரோக்கியமாக வளர உதவி செய்கிறது.

தேமோர் கரைசலில் உள்ள அமிலத்தன்மை பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. இக்கரைசலை செடிகள் மேல் தெளிப்பதினால் பூச்சி தொல்லைகள் நீங்கி செடிகள் ஆரோக்கியமாக வளர்கின்றது.

செடி கொடிகளில் வரும் இலை சுருட்டு நோயை தேமோர் கரைசல் தெளிப்பதால் சுலபமாக கட்டுப்படுத்தலாம்.

தேமோர் கரைசல் பற்றி சுருக்கமாக  கூறவேண்டுமானால் ஒரு செடி ஏதோ ஒரு காரணத்தால் பூக்கள் பூக்காமல், காய்கள் காய்க்காமல் திணறிக் கொண்டு இருக்கும்போது தேமோர் கரைசல் தெளிக்கும்போது செடிகளில் உள்ள எல்லா பிரச்சினைகளையும் சரி செய்து பூக்களை வெளியே தள்ளுகின்ற உந்து சக்தியை கொடுக்கிறது என்று கூறலாம்.

தேமோர் கரைசலில் வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வேறெதெனும் தலைப்புகளை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் கீழே கமெண்டில் பதிவிடுங்கள். நன்றி!!





 ALSO READ 



Post a Comment

4 Comments

  1. தெளிவா தெரிந்து கொண்டேன் அண்ணா.... நன்றி

    ReplyDelete
  2. மிகவும் அற்புதமான தெளிவான விளக்கவுரை. நீங்கள் சிறந்த பேச்சாளர் என்பது உங்கள் வீடியோக்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சிறந்த எழுத்தாளர். என் நண்பர்கள் பலருக்கும் இந்த கட்டுரையை பகிர்ந்திருக்கிறேன். தோட்டம் தொடர்பான சிறந்தொரு வலைதளமாக உங்கள் வலைதளத்தை காண்கிறேன். உங்களுடைய முயற்சிக்கும் திறமைக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அற்புதம் தெளிவாக எங்களுக்கு புரியும்படி இருக்கிறது நன்றி அண்ணா

    ReplyDelete
  4. தேமோர் கரைசல் மல்லிகை பூ செடிக்கு பயன்படுத்தலமா தயாரிப்பு முறைகள் குறைவும்

    ReplyDelete