கோவில் புளியோதரை செய்வது எப்படி?
![]() |
Kovil Puliyodharai |
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை வகிப்பது புளியோதரை. உலகளவிலும் மக்களால் மிகவும் விரும்பி ருசிக்கப்படும், புளியோதரை உணவுவகைகளில் தவிர்க்க முடியாத ஒர்இடத்தையே வகிக்கிறது. கோவில் புளியோதரைக்கென்றே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். நானெல்லாம் கல்லூரி காலத்தில் புளியோதரைக்கென்றே திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு தினமுமே சென்றுவிடுவேன். என் நண்பர்களெல்லாம், எதோ எனக்கு பக்தி முத்திவிட்டது என்று, என்னை கேலியும் கிண்டலும் செய்வார்கள்..
அறுசுவைகளில் ஒன்றான புளி உடலுக்கு நல்லதா?
நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் புளியில் கால்சியம், மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. மேலும் பாஸ்பரஸ், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களும் புளியில் உள்ளது. புளிய மரத்தின் இலைகள், பட்டை, பழம், பூக்கள் போன்ற அனைத்துமே மருத்துவத்தில் பயன்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் புளிய மரத்தின் இலைகளை கொண்டு டீ தயாரித்து பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் மருந்துகள் தயாரிக்க வருடத்திற்கு 90,000 கிலோ புளியை இறக்குமதி செய்கிறார்கள். இன்றளவும் புளியம் பூக்களை கொண்டு கிராமங்களில் துவையல் செய்யப்படுகின்றது. அந்த துவையல் மயக்கம், வாந்தி போன்ற நோய்களுக்கு மருந்தாகிறது. உடல் பலவீனமானவர்கள் புளியம் கொழுந்துகளை பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிடும்பொழுது நல்ல உடல்பலம் பெறுவார்கள். புளிய மரப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் டானிக் குஷ்டரோகத்திற்கு, மருந்தாக பயன்படுகிறது. வைட்டமின் சி சத்து நிறைந்த புளியானது, உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் பொழுது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. புளியம் பழத்துடன் தனியா பொடி பனங்கற்கண்டு, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து தயார் செய்யப்படும் கஷாயமானது அதிக பயன்களை தரக்கூடியது. இந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளும் பொழுது பித்தத்தை குறைத்து, உடல் நிலையை சமநிலைப்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்குகிறது. உடல் உப்புசம், வாயு கோளாறுகள் போன்றவற்றை குணமாக்குகிறது. கல்லீரல் தொடர்பான நோய்களையும் குணமாக்கி, கல்லீரை பாதுகாக்கிறது. கொழுப்பை குறைப்பதற்கு உதவுகிறது. புளியம் இலைகளும் மருத்துவத்தில் மிக முக்கிய பயன்பாட்டில் உள்ளது. புளியம் இலைகளை விளக்கெண்ணெயுடன் வதக்கி, கடுமையான மூட்டு வலி, வீக்கம் இவற்றின் மீது, கட்டுப்போட வலிகள் உடனடியாக குறையும்.. அதனால் அதனை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பயனை அளிக்கும். எனவே நீங்கள் தாரளமாக புளியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கோவில் புளியோதரை:
கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும் சுவையான புளியோதரையை , அதே சுவையுடனும், மணத்துடனும் இனி நீங்களும் வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
- புளி- 100 கிராம்
- கறிவேப்பிலை- இரண்டு கொத்து
- கடலைபருப்பு- 1ஸ்பூன்
- வேர்கடலை- ஒரு ஸ்பூன்
- நல்லெண்ணெய்- ஒரு குழி கரண்டி
- மஞ்சள் பொடி-1ஸ்பூன்
- பெருங்காயப்பொடி-1ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- வரமிளகாய்-5
- காஷ்மீரி மிளகாய்த்தூள் -அரை ஸ்பூன்
- வெல்லம்- சிறிய கட்டி
வறுத்து அரைக்க:
- மிளகு- இரண்டு ஸ்பூன்
- கடுகு- இரண்டு ஸ்பூன்
- கருப்பு எள் அல்லது வெள்ளை எள்- 2ஸ்பூன்
- வெந்தயம்- 1/2ஸ்பூன்
செய்முறை:
- முதலில் 100-கிராம் புளியை போதுமான அளவு தண்ணீர் சேர்த்து ஊறவைத்து, திக்கான புளி தண்ணீர் இரண்டு டம்பளர் எடுத்துக்கொள்ளவும். (முழுமையான புளிச்சாறு உடனடியாக பெறுவதற்கு சூடான தண்ணீரில் புளியை ஊறவைக்கலாம்)
- வறுத்து அரைக்க கொடுத்துள்ள மிளகு, கடுகு, கருப்பு எள், வெந்தயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக மிதமான தீயில் வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும். ஆறின பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
கடாய் ஒன்றில் ஒரு குழி கரண்டி அளவிற்கு நல்லெண்ணெய் சேர்த்து, கடுகு அரை ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன் சேர்த்து தாளிக்கவும். கடுகு பொறிந்ததும் கடலைபருப்பு, வேர்கடலை, கறிவேப்பிலை, இரண்டாக கிள்ளிய வரமிளகாய் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். பருப்புகள் சிவந்து வரும் வேளையில் புளிச்சாறு சேர்க்கவும். புளிச்சாறுடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், இவை அனைத்தையும் சேர்க்கவும். காஷ்மிரி மிளகாய்தாதூள் இல்லை என்றால் தனிமிளகாய் தூள் அல்லது நம்முடைய வீட்டில் இருக்கும் குழம்பு மிளகாய்த்தூள் கூட சேர்க்கலாம். காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்க்கும் போது, புளியோதரைக்கு அழகான ஒரு நிறம் கிடைக்கும். அதனால் தான் குறிப்பாக காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்க்கிறோம். புளியின் பச்சை வாசம் நீங்கும் வரையிலும் கொதிக்கவிடவும். புளி கரைசல் தொக்கு பதத்திற்கு வரும் வரை கொதிக்கவிடவேண்டும். அல்லது எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க விடவும். இந்த சமயத்தில் விருப்பப்பட்டால் சிறிது வெல்லதுண்டு சேர்க்கவும்.
புளி கரைசல் தொக்குபதத்திற்கு வந்தததும், அடுப்பை நிறுத்திவிடவும். இப்பொழுது நாம் அரைத்து வைத்திருக்கும் மிளகு, வெந்தயப் பொடியை இரண்டு ஸ்பூன் சேர்த்து குழம்பை நன்றாக கலந்துவிடவும். மிளகு வெந்தயப் பொடிகளை கலந்துவிட்டதும் வீடே மணமணக்கும் ஒரு வாசனை வரும். இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய், பச்சை கறிவேப்பிலை சேர்த்து புளிகரைசலை மூடியிட்டு 10-நிமிடங்கள் மூடி வைத்து விடவும். அனைத்து மசாலாப்பொடிகளும் நன்றாக கலந்து, ஊறி புளிக்காய்ச்சல் சரியான பதத்திற்கு தயாராகி இருக்கும். இப்பொழுது உதிரிஉதிரியாக வடித்த சாதத்துடன் சேர்த்து கிளறி விட்டால், புளியோதரை சும்மா தாறுமாறாக தயாராகி இருக்கும். ஒருமுறை செய்து சாப்பிட்டால், சுவையும், மணமும் எதோ கோவிலில் இருப்பதை போன்றே ஒரு உணர்வைத்தரும். சமைத்து ரசித்து சுவைத்து சாப்பிட்டு பாருங்கள். இவ்வாறு தயார் செய்யப்படும் புளிகாய்ச்சலை மூன்று மாதங்கள் வரை, மூடியிட்ட பாட்டிலில் சேமித்து பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். நன்றி!
0 Comments