Translate

உருளைகிழங்கு பொரியல்

ஹோட்டல் சுவையில் உருளைகிழங்கு பொரியல்

Sudagarkrishnanchannel
Potato fry 
உலகளவில் நான்காவதாக அதிகம் பயிரிடப்படும் தாவரம் உருளைகிழங்காகும். நெற்பயிர், கோதுமை, மக்காசோளப்பயிர் அதற்கடுத்தபடியாக உலகளவில் நான்காவது இடத்தில் அதிகளவில் பயிடப்படுகிறது. உருளைகிழங்கு அதிகளவில் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. உணவு வகைகளில் உருளைகிழங்கு பொரியல் தான் உலகளவில் அதிகம் விருப்பப்படும் உணவுவகை. சிறுபிள்ளைகள் விரும்பி உண்ணும் உருளைகிழங்கு உணவுகள். கல்யாண வீடுகளில் தவிர்க்கவே முடியாத பொரியல் வகை. எத்தனையோ முறைகளில் உருளைகிழங்கை பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படுகிறது. உருளைகிழங்கு பஜ்ஜி முதல் உருளை கிழங்கு கட்லட் வரை. இந்த பதிவில் ஒரு சில உருளைகிழங்கு பொரியல் முறைகளை இங்கு பகிர்ந்து கொள்ளபட்டுள்ளது. எளிமையான செய்முறை தான். புதியதாக சமைப்பவர்களுக்கும், பேச்சிலர்களுக்கும் நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

உருளைகிழங்கு பொரியல்:

Method -1

தேவையான பொருட்கள்:

  1. உருளைகிழங்கு- 1/4 கிலோ
  2. வெங்காயம்- 2(பெரியது)
  3. பூண்டுபல்-7
  4. கறிவேப்பிலை- ஒரு கொத்து
  5. குழம்பு மிளகாய் தூள்- 2 ஸ்பூன்

தாளிக்க:

  •  நல்லெண்ணெய்- ஒரு குழி கரண்டி
  • கடுகு-1/2 ஸ்பூன்
  • சீரகம்-1/4-ஸ்பூன்
  • உளுந்து-1/2 ஸ்பூன்
உப்பு- போதுமான அளவு

செய்முறை:

முதலில் நான்கு உருளைகிழங்கை (அல்லது 1/4கிலோ உருளைகிழங்கு) தோலூடன்,  சிறிது உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து கொள்ளவும். மூன்று முதல் நான்கு விசில் வரை போதுமானது. ப்ரஷர் நீங்கியபிறகு, குக்கரை திறந்து, வேக வைத்த உருளைகிழங்கை, தோலுரித்து நன்றாக மசித்து வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு குழிகரண்டி கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவற்றை கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு இவற்றை தாளித்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், கறிவேப்பிலையும் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வெங்காயத்தினை பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். பூண்டு பற்களை தட்டி போட்டு கொள்ளவும்.  பூண்டு வாசனை பிடிக்காதவர்கள், பூண்டு பற்கள் வேண்டாம் என்றால் சேர்க்க தேவையில்லை. வெங்காயத்தினை எவ்வளவு அதிகமாக சேர்க்கிறீர்களோ, அந்தளவுக்கு பொரியல் சுவையாக இருக்கும். அதனால் இரண்டு அல்லது மூன்று பெரியவெங்காயத்தினை சேர்த்துக் கொள்ளலாம். வெங்காயத்தினை நல்ல பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயங்கள் வதங்கிய பிறகு, அதனுடன் உப்பு, 2-ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் போட்டு வதக்கி கொள்ளுங்கள். குழம்புமிளகாய் தூள் இல்லை என்றால் தனிமிளகாய் தூள் சேர்த்து கொள்ளலாம். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிடவும், எண்ணெய் பிரிந்து வருமளவிற்கு கொதிக்க வேண்டும். குழம்பு மாதிரி இல்லாமல் தொக்கு பதத்திற்கு கிரேவி இருக்க வேண்டும். அடுப்பை நிறுத்தி விடுங்கள். இப்பொழுது மசித்து வைத்த உருளை கிழங்கை சேர்த்து கிளறிவிடவும். இப்பொழுது சுவையான உருளைகிழங்கு பொரியல் தயார். கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை தூவி பறிமாறுங்கள். சப்பாத்தி, தோசை , பூரிக்கு கூட இந்த சைட் டிஷ் சூப்பராக இருக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதம் - கேட்கவே வேண்டாம்!. சிறந்த இணைஉணவு. ஹோட்டல் உருளைகிழங்கு பொரியல் வீட்டிலேயே செய்து சுவைத்து மகிழுங்கள். 

உருளைகிழங்கு பொரியல்:

Method -2

தேவையான பொருட்கள்:

  1. உருளைகிழங்கு- 1/4 கிலோ
  2. வெங்காயம்- 1(பெரியது)
  3. பூண்டுபல்-7
  4. பச்சைமிளகாய்-2
  5. கறிவேப்பிலை- ஒரு கொத்து
  6. குழம்பு மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
  7. உப்பு- போதுமான அளவு

தாளிக்க:

  •  நல்லெண்ணெய்- ஒரு குழி கரண்டி
  • கடுகு-1/2 ஸ்பூன்
  • சீரகம்-1/4-ஸ்பூன்
  • உளுந்து-1/2 ஸ்பூன்.

செய்முறை:

உருளைகிழங்கை தண்ணீரில் ஊறவைத்து, மண் நீங்க நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். தோல்பகுதியினை நீக்கும் கருவியான Peeler  கொண்டு உருளைக் கிழங்கின் மேல் தோலை மெல்லியதாகச் சீவி எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை பொடிப்பொடியாக சின்ன சின்ன சதுரங்களாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து, இரும்பு வாணலி ஆக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி கரண்டி அளவு ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடான பிறகு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை, கடுகு சீரகம் உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, பூண்டு பற்கள் இவற்றை தாளித்துக் கொள்ளவும். பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் இரண்டு பச்சை மிளகாய் வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து,  2 நிமிடம் குறைந்த தீயில் கிளறி விடவும்.  அதன் பின்னர் உருளைக்கிழங்குடன்  தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.  மிளகாய்த்தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளவும். இப்பொழுது வாணலியை ஒரு மூடியிட்டு ஏழிலிருந்து பத்து நிமிடங்கள் வரை வேகவிடவும். உருளைக்கிழங்கு விரைவாக வெந்து விடும். தண்ணீர் வற்றியவுடன் உருளைக்கிழங்கை கிளறி அடுப்பை அணைத்து விடவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை பொரியல் மீது சேர்த்து பரிமாறவும்.

உருளைகிழங்கில் உள்ள ஊட்டசத்துக்கள்/Nutrients in potatoes:

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. உருளைக்கிழங்கை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். வறுத்தோ, பொரித்தோ சாப்பிடுவதால் முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.  வயிறு, குடல் தொடர்பான பிரச்சனைகள், வயிற்றுப்புன், இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு உருளைகிழங்கு சிறந்த பலனை தருகிறது. இருதயப் பிரச்சனைகள், இரத்த கொதிப்பு உள்ளவர்கள் உருளைகிழங்கை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. ஏனெனில் உருளைகிழங்கில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உருளைகிழங்கில்  புரதம் குறைவாகவும் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. ஒல்லியாக இருக்கும் குழந்தைகள் புஷ்டியாக வாரம் இருமுறை உருளைக்கிழங்கு கொடுத்து வரலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஆறாவது மாதத்தின் இறுதியிலோ அல்லது ஏழாம் மாதத்தின் துவக்கத்திலும் உருளைக்கிழங்கு உணவாக கொடுக்கலாம். நன்றாக வேக வைத்து மசித்து, சிறிதளவு தண்ணீர் அல்லது தாய்ப் பாலுடன் கலந்து ஊட்டி விடலாம்.  உருளைக்கிழங்கில் தாது உப்புகளும் வைட்டமின்களும் அதிகமாக உள்ளது. வாழை பழத்தில் இருப்பதை போன்று பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. அதிகளவில் கலோரிகளையும், நார்சத்தையும் கொண்டது. இதனால் ஜீரணத்திற்கு உதவுகிறது. உருளைக்கிழங்கு சூரிய ஒளியில் அதிக நேரம் வைக்கக் கூடாது. உருளைக்கிழங்கின் மீது அதிக நேரம் சூரிய ஒளி படுவதால் உருளைக்கிழங்கு பச்சை நிறத்தில் மாறக்கூடும். இவ்வாறு பச்சை நிறத்தில் காணப்படும் உருளைக்கிழங்குகளை தவிர்ப்பது நல்லது. இத்தகைய உருளைக் கிழங்குகளில் கிளைக்கோகலாய்ட் என்ற வேதிப்பொருள் உருவாகிறது. இந்த உருளைக்கிழங்குகளை சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அவர்கள் சாப்பிடும் உணவில் உள்ள, காய்கறிகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்று எடுத்துச் சொன்னால் அவர்கள் விரும்பி உண்ணுவார்கள். காய்கறிகளை வீணாக்காமல், உணவில் காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து கொள்வார்கள். நன்றி!


Post a Comment

0 Comments