புதினா கீரை/Mentha Spicata
 |
Pudina valarpu |
இன்றைய பதிவில் அதிக ஊட்டசத்துக்கள் வாய்ந்த புதினா கீரையின் வளர்ப்பு பற்றியும், மருத்துவ குணங்களைப் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம். புதினா எளிதாக வளரும் தாவரம். இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. கிரேக்கர்கள் புதினாக்கீரையை பல்வேறு விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம், முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இஸ்லாமிய நாடுகளில் புதினா கீரையை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். தமிழ்நாட்டு சமையலில் புதினாவுக்கு தனியொரு இடம் உள்ளது. காலை உணவிற்க்கு
புதினா சட்னி செய்வதில் துவங்கி, பிரியாணி, ஜூஸ் இப்படி பல வகையான உணவுகள் புதினாவை பயன்படுத்தி சமைக்கப்படுகிறது. ஒருமுறை நாம் புதினாச் செடியை நடவு செய்து விட்டால் நான்கு ஆண்டுகள் வரையிலும் பலன் தந்து கொண்டே இருக்கும். பொதுவாக புதினா கீரையில் அதிக பூச்சித் தாக்குதல் இல்லை அதனால், எல்லா விவசாயிகளும் புதினாக்கீரையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். புதினாக்கீரையை வளர்ப்பதினால் அதிக லாபமும் விவசாயிகள் ஈட்டுகின்றனர். புதினாக் கீரையை வீட்டுத் தோட்டம், அல்லது மாடி தோட்டத்தில் மிகமிக சுலபமாக வளர்க்கலாம். பராமரிப்பு மிகவும் குறைவுதான். கடைகளில் இருந்து வாங்கி வரும் புதினாக் கீரையை சமையலுக்கு உபயோகப்படுத்திய பின்னர் தண்டுகளை மண்ணில் பதியம் போட்டு வைத்தால் வெகு விரைவாக துளிர்விட்டு வளர ஆரம்பித்துவிடும்.
புதினா வளர்ப்பு:
புதினாக் கீரையை நமது தோட்டத்தில் சுலபமாக வளர்க்க எளிய குறிப்புகள்,
- கடைகளில் புதினா கட்டுகள் வாங்கும் போது அதனுடைய தண்டுகள் பெரியதாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.
- புதினாசெடி செம்மண், களிமண், வண்டல் மண், ஆற்றுப்படுகை மண் இந்த மண் கலவையில் நன்றாக வளரும்.
- செம்மண் இல்லை என்றாலும் பரவாயில்லை, தோட்டத்து மண்ணை கூட எடுத்துக் கொள்ளலாம்.
- தோட்டத்து மண் என்பது மரங்களுக்கு வேருக்கு அடியில் இருக்கும் மண்ணை குறிக்கும். மரங்களின் அடியில் இருக்கும் மண்ணானது இலைகள் விழுந்து மட்கி நல்ல உரமாக மாறி இருக்கும். எல்லா செடிகளுக்கும் மரத்திற்கு அடியில் இருக்கும் மண்ணை உபயோகப்படுத்தலாம். அதிக மகசூல் எடுக்கலாம். மரத்திற்கு அடியில் இருக்கும் மண்ணில் நைட்ரஜன் பாஸ்பரஸ், பொட்டாசியம் இதர நுண்ணூட்டசத்துக்கள் அடங்கி இருக்கும்.
மண்கலவை:
செம்மண் அல்லது தோட்டத்து மண் இரண்டு பங்கு, மணல் ஒருபங்கு, தொழுஉரம், அல்லது மண்புழு உரம் ஒரு பங்கு, உயிர்உரங்கள் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், டிரைக்கோ டெர்மா விரிடி, பொட்டாஷ் பாக்டீரியா, ஒவ்வொன்றும் தேக்கரண்டியளவு எடுத்து, மண்ணில் கலந்து, வேப்பம் புண்ணாக்கு கைப்பிடியளவு, எல்லாவற்றையும் கலந்து ஏழு நாட்கள் ஈரப்பதத்தோடு வைத்திருக்க வேண்டும். ஏழு நாட்களில் உயிர்உரங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் பலமடங்கு பெருகி மண்ணில் உள்ள ஊட்டசத்துக்களை கரைத்து செடிகள் சுலபமாக எடுத்துக் கொள்வதற்கு தகுந்தாரற்போல் தயாராக இருக்கும். டிரைக்கோடெர்மா விரிடி சூடோமோனஸ் இரண்டு உயிர்உரங்களில் உள்ள நன்மை செய்யும் பூஞ்சைகள் மண்ணிலுள்ள தீமை செய்யும் பூஞ்சைகளை அழித்து செடிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளும். இத்தகைய மண் கலவையானது ஒரு தொட்டிக்கு போதுமான கலவையாகும்.
புதினா தண்டுகளை நடவு செய்தல், பராமரித்தல்:
 |
Pudina valarpu |
கடைகளிலிருந்து வாங்கிவந்த புதினா கட்டுகளை எடுத்து, அதில் நுனி இலைகளில் இரண்டு இலைகள் மட்டும் விட்டுவிட்டு, மீதியிருக்கும் இலைகளை நீக்கி விட்டு தயார் செய்து வைத்திருக்கும் மண் கலவையில் நேரடியாகவும் நடலாம். அல்லது தண்ணீரில் தண்டுகளை வைத்து வேர் வந்தபிறகும் நடலாம். சாதாரணமாக மழைக் காலங்களில் நேரடியாக நடவு செய்யலாம். வெயில் காலங்களில் நடவு செய்ய விரும்பினால் தண்ணீரில் வைத்து வேர் வளர்ச்சி ஏற்பட்ட பின்னரே நடவு செய்ய வேண்டும். புதினா தண்டுகளை மண் கலவையில் நேரடியாக நடுவதற்கு மூன்று மூன்று தண்டுகளாக தொட்டியில் நடவு செய்ய வேண்டும். குவளையில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, புதினா தண்டுகளை தண்ணீரில் போட்டு நிழலில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதால் இரண்டு மூன்று நாட்களில் சுலபமாக அதில் வேர்கள் வரும்.
புதினா தண்டுகளை நடவு செய்யும்போது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு சில வழிமுறைகள்; கண்டிப்பாக நன்கு முற்றிய புதினா தண்டுகளை மட்டுமே நடவு செய்வதற்கு தேர்ந்தெடுக்க வேண்டும். மிகவும் சிறிய தண்டுகளை நடவு செய்வதற்கு தேர்வு செய்தால், அந்த தண்டுகள் வெகு விரைவாகவே அழுகி துளிர் வராமல் போவதற்கு வாய்ப்புகள் உண்டு. தண்டுகளை மண் கலவையில் நடவு செய்த பிறகு அதிக ஈரப்பதம் இல்லாதவாறு பார்த்துக் கொள்வது நல்லது. அதிக ஈரப்பதம் இருந்தால் அனைத்தும் அழுகி துளிர் வராமலேயே போய் விடும்.
வெயில் காலங்களில் நடவு செய்யும்போது, நடவு செய்த பிறகு நிழலில் வைப்பது மிகவும் அவசியமானதாகும். அப்போதுதான் தண்டுகள் அனைத்தும் துளிர் வருவதற்கு ஏதுவாக இருக்கும்.
புதினா கீரையை தாக்கும் பூச்சிகள், புழுக்கள்:
புழு பூச்சிகள் வருவதை தடுக்க வாரம் ஒருமுறை வேப்பெண்ணெய், சோப்பு கரைசலுடன் கலந்து தெளிக்கலாம். புதினாக்கீரையை தாக்கும் பூச்சிகள் என்ன என்ன என்பதை பார்த்தோமானால் முதலில் புதினாக்கீரையை இலைப்பேன்கள் தாக்கும். தாக்கப்பட்ட புதினாக்கீரை வெளிர் தன்மையாக இருக்கும். கீரைகளுக்கு பின்னால் இலைப்பேன்கள் இருப்பதை பார்க்கலாம். பொதுவாக இலைப்பேன்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து விட்டாலே போய்விடும். அல்லது வேப்பம் புண்ணாக்கை மண் கலவையில் போட்டு தண்ணீர் ஊற்றி வந்தாலே இலைப்பேன்கள் அனைத்தும் கீழே உதிர்ந்துவிடும். அஸ்வினி பூச்சிகள் தொல்லை புதினாக் கீரையில் இருக்கும் அஸ்வினி பூச்சித் தொல்லைக்கு இஞ்சி, பூண்டு மிளகாய் கரைசல் தெளித்து சுலபமாக கட்டுப்படுத்தலாம். புரோடீனியா புழு, கருப்பு புழு தாக்குதல் இருக்கும். புரோடீனியா புழுக்கள் பொதுவாக பகலில் உறங்கும், இரவு நேரத்தில் மட்டுமே வேட்டையாடும். இரவு நேரத்தில் சென்று பார்த்தால், புழுக்கள் இலைகளை சாப்பிட்டு கொண்டிருக்கும். கண்ணால் பார்த்து சுலபமாக எடுத்து விடலாம். புழுக்களைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறி அல்லது இனக்கவர்ச்சிப் பொறி அல்லது கருவாட்டுப் பொறி வைத்து தாய் பூச்சிகளை கவர்ந்து இழுத்து சுலபமாக கட்டுப்படுத்தலாம். பூச்சிகளை கட்டுப்படுத்தி விட்டாலே தாறுமாறான அறுவடையை சுலபமாக எடுக்கலாம்.
புதினாக்கீரைகளுக்கு உரங்கள் என்ன கொடுக்கலாம் என்று பார்த்தால் மண் கலவையில் கொடுத்த உரங்கள் போதுமானதாக இருக்கும். நீரில் கலந்த உரங்களை கொடுப்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும். புதினா கீரை அடர்த்தியாக, இலைகள் பெரியதாக, செழிப்பாக வளர்வதற்கு கொடுக்கவேண்டிய சுலபமான உரங்கள் அரிசி கழுவிய தண்ணீர், சாதம் வடித்த கஞ்சி, காய்கறி கழுவிய தண்ணீர், பருப்பு கழுவிய தண்ணீர், இதை நன்றாக தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தாலே இலைகள் எல்லாம் பெரிய பெரிய இலைகளாக வரும். புதினா செடி செழிப்பாக வளரும். புதினாக் கீரைகளுக்கு வெங்காயக் கரைசல் கொடுத்தால் நன்றாக வளரும். வெங்காயத்தோல் கரைசல் தயாரிப்பது மிகவும் சுலபம். சமையலறையில் தூக்கி வீசும் வெங்காயத்தோல்களை மூடியுள்ள பிளாஸ்டிக் பாத்திரத்தில் சேகரித்து தண்ணீர் ஊற்றி இரண்டு நாட்கள் தினமும் குலுக்கிக்கொண்டே வரவேண்டும். இரண்டாம் நாள் வெங்காய தோல் கரைசல் தயாராகிவிடும். கரைசலை வடிகட்டி இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து புதினா செடிகளுக்கு வாரத்தில் இரண்டு முறை ஊற்றி வரலாம். இக்கரைசல் புதினாகீரை இலைகள் பெரியதாகவும், செடிகள் ஆரோக்கியமானதாகவும் வளர்வதற்கு உதவுகிறது. புதினா செடிகளுக்கு பீட்ரூட் தண்ணீரை கொடுத்தால் ஆரோக்கியமாக வளரும். பீட்ரூட் கரைசல் தயாரிக்க, பீட்ரூட் தோல்களை தண்ணீரில் ஊறவைத்து இரண்டு நாட்கள் கழித்து, வடிகட்டியில் வடிகட்டி அக்கரைசலோடு இரண்டு மடங்கு தண்ணீர் கலந்து செடிகளுக்கு ஊற்றி வரலாம். மழை நீரைப் பிடித்து மழை நீரை புதினா செடிகளுக்கு ஊற்றி வந்தால் புதினா செடி ஆரோக்கியமாக வளரும். ஏனென்றால் மழை நீரில் அதிக நுண்ணூட்டச் சத்துக்கள் இருக்கின்றன. முடிந்தவரை உச்சி வெயில் படாதவாறு பார்த்துக் கொண்டால், செழிப்பாக வளர்ந்து கொண்டே இருக்கும்.
புதினா செடியின் மருத்துவ குணங்கள்:
புதினாகீரை வைட்டமின் ஏ பாஸ்பரஸ், கால்ஷியம், இரும்பு சத்து, நிக்கோட்டினிக் ஆசிட், தயாமின், ரிபோமினேவின் ஆகிய ஊட்டசத்துக்களை நிறைவாக கொண்டுள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் புதினா கீரையை சாப்பிட்டு வர, மூச்சு விடுவதில் இருக்கும் சிரமம் நீங்கி நன்றாக மூச்சு விடலாம். புதினாக்கீரை பசியைத் தூண்டக்கூடிய ஒரு கீரையாகும். இதிலிருக்கும் வேதிப்பொருட்கள் வயிற்றில் ஜீரணம் ஆக வேண்டிய அமிலங்களை சுரக்கச் செய்து, உணவு செரிமானத்தை எளிதாக நடைபெற உதவுகிறது. புதினா கீரை வாயில் வரும் துர்நாற்றத்தை போக்க வல்லது. புதினா கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால், வாய் துர்நாற்றம் போகும். பற்களில் உள்ள ஈறுகளில் தங்கி இருக்கும் கிருமிகள் அழியும். மது, புகையிலை, சிகரெட் போன்ற போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் உடலில் ரத்தத்திலும், உள் உறுப்புகளிலிலும் படிந்திருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. மஞ்சள் காமாலை, இரத்தசோகை, நரம்பு தளர்ச்சி, வறட்டு இருமல், வாதம் இவற்றையும் தீர்க்கும் மருந்தாக அமைகிறது. சிலருக்கு பயணத்தின் போது குமட்டல் வாந்தி வருவது போல் தோன்றும். அந்த வாந்தியை புதினாக்கீரை நிறுத்துகிறது. வாந்தி வரும் நேரத்தில், புதினாக்கீரையை நுகர்ந்து பார்த்தால் வாந்தி வருவது நின்றுவிடும். பெண்களுக்கு மாதவிடாய் தாமதமாக வரும் போது, இந்தக் கீரையை பொடி செய்து ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து மூன்றிலிருந்து நான்கு நாட்கள் உட்கொண்டு வந்தால், மாதவிடாய் தாமதமாக வருவது சரியாகி, சரியான நேரத்தில் வரும். தசைவலி, மூட்டுவலி, தலைவலி, நரம்பு வலி உள்ள இடங்களில் புதினாவை அரைத்து பற்று போட, வலிகள் மறைந்துவிடும். புதினாக் கீரையின் வளர்ப்புப் பற்றி வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், கீழே இருக்கு காணொளியை நீங்கள் பார்த்து மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம். நன்றி!
1 Comments
ரொம்ப நாள் முயற்ச்சி செய்தும் ஏன் புதினா வளராமல் கைந்தோ அல்லது அழுகியைப்போகுதுண்ணு தெரியாமலே இருந்தது...இப்போ தெளிவு கிடைச்சது...நன்றி
ReplyDelete