கருப்பு கவுனி அரிசியின் சிறப்பம்சங்கள்
Kavuni arisi Benefits |
இப்பொழுதெல்லாம் மக்களின் கவனம் இயற்கை உணவுகளின் மீது அதிகம் திரும்பி இருக்கிறது. சிறுதானியங்களும், பாரம்பரிய அரிசி ரகங்களும் மக்களின் உணவுப் பட்டியலில் தவறாமல் இடம்பெற்று வருகிறது. அதைப் பற்றிய தேடுதலும் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஏனெனில் பாரம்பரிய அரிசி வகைகளில் ஏராளமான நன்மைகளும் சத்துக்களும் கொட்டிக் கிடக்கின்றது.
இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகள் பயிரிடப்பட்டு வந்தன. அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமான நெல் வகைகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
பாரம்பரிய நெல் வகைகள் வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களை தாண்டி நின்று செழித்து பசுமையாக வளரக்கூடியது. அதுமட்டுமில்லாமல் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியதாக இருந்து வந்தது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் வரவாலும், குறைந்த காலத்திலே அதிக மகசூல் எடுக்க, ஆசைப்பட்டதன் விளைவாலும், இன்று எண்ணற்ற தானியங்கள் அழிவின் விளிம்பில் சென்றுகொண்டிருக்கின்றது.
நாம் இப்பொழுது பெற்று கொள்ளும் விழிப்புணர்வு நம்முடைய தலைமுறைக்கும் ஆரோக்கிய வழிவகுக்கும்.
சத்துக்கள் நிறைந்த பாரம்பரிய நெல் வகைகளில் மாப்பிள்ளை சம்பா, சீரகச்சம்பா, கவுனி அரிசி, சிகப்பரிசி, மட்ட அரிசி போன்றவை பெரும்பாலும் இப்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவற்றின் சரியான பயன்களை தெரிந்து கொண்டு பயன்படுத்தும் போது, இன்னும் சிறப்பாக அமையும்.
கருப்பு கவுணி அரிசி:
கவுனி அரிசி "கிங் ஆப் ரைஸ்" என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் அரச பரம்பரையினை சார்ந்தவர்கள் மட்டுமே உண்ண வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்ததாம். ஏனெனில் கவுணி அரிசியில் அத்தனை நன்மைகள், ஊட்டசத்துக்கள் ஒளிந்துள்ளது. இதை கார் அரிசி, கவுனி அரிசி, கருப்பரிசி என்றும் அழைப்பதுண்டு. இதில் கருப்பு கவுணி, சிவப்பு கவுணி என்று இரு வகைகள் உள்ளது. இவற்றில் கருப்புகவுனி மிகவும் சிறப்பு தன்மைகள் பெற்றது.
இன்றும் தமிழகத்தில் சில இடங்களில் காப்பரிசி என்று இந்த கவுனி அரிசியினை பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, நாட்டுக்கோட்டை செட்டியார் வீடுகளில் இந்த அரிசியை தவறாது பயன்படுத்துவது உண்டு.
கவுனி அரிசியின் தனிச்சிறப்பே அதன் கருப்பு நிறம் தான். கருப்பு நிறத்துக்கு காரணமாக இருப்பது ஆன்தோசயனின் எனும் நிறமி. திராட்சை வகைகள், கத்தரிக்காய், முட்டைக்கோஸ், மாதுளை, கருப்பு பீன்ஸ் போன்று இந்த அரிசியும் ஆன்தோசயனின் நிறமியை கொண்டுள்ளது. இந்த நிறமிகள் இதயம், மூளை மற்றும் ரத்த குழாய்களின் செயல்பாடுகளையும், ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்துகின்றன. வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசி இவற்றோடு ஒப்பிடுகையில், கவுனி அரிசி கொஞ்சம் குறைவான மாவு சத்தையும், அதிகமான புரதம் இரும்புச் சத்தையும் கொண்டுள்ளது. கவுனி அரிசியில் வைட்டமின் ஏ உள்ளதால், கண் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது, தவிர நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. எலும்புகளுக்கும் தசைகளுக்கும் நல்ல வலிமையும் கொடுக்கிறது.
கவுணி அரிசியின் வரலாறு |
---|
கருப்பு கவுனி அரிசி பண்டைய சீனாவை பூர்வீகமாக கொண்டது. பண்டைய சீன மன்னர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் மந்திரிகள், பெரு வியாபாரிகள் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பண்டைய தமிழ் மன்னர்கள் - சீன மன்னர்களிடையே இருந்த கப்பல் போக்குவரத்து மூலமாக நடைபெற்ற வியாபாரம் காரணமாக கருப்பு கவனி தமிழகம் வந்தடைந்தது. சீன அரசர்கள் தங்கள் நாட்டிற்கு வருகை புரியும், பிற நாட்டின் அரசர்கள் மற்றும் கப்பல் மூலமாக வரும் பெரும் வியாபாரிகளை கௌரவிக்க கருப்பரிசியில் செய்யப்பட்ட விருந்தினை அளித்துவந்தனர். |
சீனாவில் தடைசெய்யபட்ட கருப்பரிசி:
என்ன நண்பர்களே!, ஆச்சரியமாக உள்ளதா? கண்டுபிடிக்கப்பட்ட நாட்டில் தடை செய்யப்பட காரணம் என்ன? அந்த கதையை தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள். மிகவும் சுவாரஸ்யமான உண்மைக் கதை அது.
சீனாவில் இந்த அரிசியை "தடை செய்யப்பட்ட அரிசி" என்றே அழைக்கிறார்கள். அதற்கு ஒரு வரலாற்று காரணம் உண்டு. மிகுந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த அரசியை பண்டைய சீனாவில் அரசர்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதி உள்ளது.
ஆனால் ஒரு காலகட்டத்தில் இதன் மகத்துவத்தை அறிந்த மக்களும் பயன்படுத்த தொடங்க, அரசுக்கு மிக கடுமையான அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் இந்த அரிசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மீறி பயன்படுத்துபவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதனால் இன்றுவரை சீனாவில் "தடைசெய்யப்பட்ட அரிசி" என்று இதை அழைக்கிறார்கள்.
கவுணி அரிசி சாப்பிடுவதால் விளையும் நன்மைகள்:
கவுனி அரிசி இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுக்களை அதிக அளவில் போக்கும் தன்மை கொண்ட, ஒரு சிறந்த உணவுப் பொருளாகும். இந்த அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கழிவுகளை அகற்ற உதவுகிறது. அதனால் தலை முதல் கால் வரை பல நோய்களை ஆரம்பத்திலேயே ஏற்படாமலும் நோய் எதிர்ப்பாற்றலும் உடலுக்கு அளிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த நண்பன்:
கருப்பு கவுனி அரிசியில் அதிகமான நார்ச்சத்து உள்ளதால், குளுக்கோஸ் நீண்ட நேரம் உடலில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. கருப்பு அரிசி போன்ற முழு தானியங்களை நாம் சாப்பிடும் பொழுது, டைப் டூ நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது. உடல் எடை அதிகரிக்காமல் சீராக வைக்க உதவுகிறது. மேலும், உடலின் ஆற்றல் அதிகரிப்பதாக, ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால் வெள்ளை அரிசி உண்பதற்கு பதிலாக கருப்பு கவுனி அரிசியை தினமும் உணவில் எடுத்துக்கொள்வதால் நீரிழிவு சமநிலையில் வைக்கவும், எதிர்த்து போராடும் ஆற்றலும் கிடைக்கிறது.
உடல் பருமனை குறைக்க உதவுகிறது:
நீங்கள் உடல் எடையைக் குறைக்க பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கும் நபராக இருந்தால் கவனி அரிசியில் செய்த உணவுகளை சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் எடையை மிக சுலபமாக குறைக்கலாம்.
கவுனி அரிசியில் வைட்டமின் பி மற்றும் விட்டமின் ஈ அதிக அளவில் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் தோல் பாதுகாப்புக்கு நல்லது. தசைப்பிடிப்புக்கும் நரம்புகளுக்கும் சிறந்தது.
இதயநோய்களுக்கு எதிரானது:
கருப்பு கவனி இதயத்தை பாதுகாக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால், இதயத்தின் ரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது, இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.
புற்றுநோய்க்கு எதிரானது
கருப்பு கவனி அரிசி புற்றுநோய்க்கு எதிரானது. என்பதை Third மிலிட்டரி யுனிவர்சிட்டி என்கின்ற, சீனாவில் உள்ள பல்கலைகழகத்தில் - எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில் கேன்சர் செல்களை குறைப்பதோடு, மார்பகப் புற்றுநோயும் குறைத்தது என நிருபிக்கப்பட்டது.
நீர்க்கட்டிகள்:
கொரியாவின் ajo யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள், கருப்பரிசியின் சாறு நீர்க்கட்டிகளை குறைக்க உதவுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். மேலும் ஒவ்வாமை தொடர்பான தோல் அழற்சி கணிசமாக குறைந்தது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள்பட்ட அழற்ச்சியுடன் chronic inflammatory diseases தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கருப்பரிசி ஆற்றல் சிறந்ததாக உள்ளது.
மன அழுத்தம்:
மன அழுத்தம் காரணமாக உடலும் மூளையும் பாதிப்படைகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஆன்தோசயனின் ஆக்சைடு ஸ்டிரஸ் எனப்படும் மூலக்கூறு, மன அழுத்தம் மற்றும் மூளையில் ஏற்படும் அழுத்தம் குறைக்க உதவுகிறது.
Gluten இல்லாத கருப்புகவுனி:
கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே குளூட்டன் எனப்படும் ஒட்டும் தன்மையுள்ள வேதிப்பொருள் கிடையாது. குளூட்டன் - வெள்ளை அரிசி வகைகளிலும் சில தானிய வகைகளிலும் காணப்படுகிறது. சிலருக்கு இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு பல பின் விளைவுகள் ஏற்படுகிறது. இதனால் கருப்பு கவுனி அரிசியை தினசரி பயன்படுத்த குளுட்டன் அலர்ஜியில் இருந்து விடுபடலாம்.
ஆஸ்துமா:
கொரியாவில் எலிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டது என்னவெனில், கருப்பு கவுணி அரிசி தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், மூச்சுக் குழாய்களில் உள்ள நீர்க்கோவை அல்லது சளியால் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறது என்ற முடிவுகள். எனவே கருப்பு கவுனி அரிசி பயன்படுத்தி வந்தால் ஆஸ்துமா குறைகிறது.
கருப்பு அரிசியில் என்னென்ன உணவுகளை சமைக்கலாம்?
- பொங்கல் , இனிப்பு பொங்கல்
- பாயாசம்
- சாதம்
- கஞ்சி
- இட்லி மற்றும் தோசை
- அரிசிபுட்டு
கவுனி அரிசி சமைக்க அதிக நேரம் எடுக்கும். ஒரு மணி நேரம் ஊற வைத்து சமைத்தால், எளிதாக சமைக்கலாம். கருப்பு கவுனி அரிசி சமைத்த பிறகு ஊதா நிறத்தில் இருக்கும். {அரிசியின் இந்த நிறத்திற்கு காரணம் அந்தோசயனின் என்ற மூலக்கூறு தான்}. குக்கரில் சமைக்கும்போது 4 விசில் வைத்தால் சரியாக இருக்கும். உணவும் மென்மையாக இருக்கும். இன்று ஏராளமான மளிகை கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கவுனி அரிசி விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த அரிசியின் முழு பயன்களும் அதன் மேல் பகுதியில் ஒட்டியிருக்கும் தவிட்டில் தான் உள்ளது. அதனால் வாங்கும்போது முழு அரிசியா என்று பார்த்து வாங்க வேண்டும்.
ஆர்கானிக் கருப்பு கவனி அரிசியை பாதுகாக்க, காற்று புகாத வகையில் முடியிட்டு, அதனுள் லவங்கம் கிராம்பு அல்லது மிளகாய் வற்றல் போட்டு வைக்கலாம். இதனால் பூச்சிகள் மற்றும் புழுக்கள் வராமல் தடுக்கலாம்
கருப்பு கவுணி அரிசியில் உள்ள ஊட்டசத்துக்கள் விவரம்:
Nutritional status:
கருப்பு கவுனி அரிசியில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. 100 கிராம் அளவில் 30 கிராம் நார்ச்சத்து உள்ளது.
ஒரு கப் அளவு சமைத்த கவுனி அரிசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் விவரம்:
- கலோரீஸ் - 160 கிராம்
- மொத்த கொழுப்பு - இரண்டு கிராம்
- சோடியம் - 4 மில்லி கிராம்
- பொட்டாசியம் - 268 கிராம்
- மொத்த கார்பன் - 34 கிராம்
- புரதம் - 5 கிராம்
- இரும்பு - 6%
- நார்சத்து - 30 கிராம்
இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை; வெள்ளை அரிசிக்கு மாற்றாக கருப்பு கவனி மற்றும் unpolished brown Rice பயன்படுத்த வேண்டும் என்பதே.
கவுணி அரிசி பாயாசம்:
தேவையான பொருட்கள்:
- கவணி அரிசி - 4 மேஜைக்கரண்டி
- பால் - ஒரு லிட்டர்
- பேரிச்சம்பழம் கொட்டையை நீக்கி - 20
- கண்டன்ஸ்டு மில்க் - 4 மேஜைக் கரண்டி
- துருவிய பாதாம் பருப்பு - 10
- ரோஸ்வாட்டர் - 4 சொட்டுக்கள்.
செய்முறை:
கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற விடவும். பேரிச்சம் பழத்தின் கொட்டையை நீக்கிய பின்னர், தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த அரிசியில், தண்ணீரை வடித்து விட்டு, பின்பு லேசான ஈரப்பதத்தோடு இருக்கும் அரசியை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து, பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும், ஊற வைத்த அரிசியை சேர்த்து மூடி போட்டு 4 விசில் வரும் வரை வேகவிடவும். {அல்லது அரிசியை வேக வைத்து பிறகும் பாலயை சேர்க்கலாம்.}
அரிசி வெந்தவுடன், அதனுடன் அரைத்த பேரீச்சம் பழ விழுது, கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். கலவை எல்லாம் நன்கு சேர்ந்து பாயாச பதத்திற்கு வந்ததும், துருவிய பாதாம் ரோஸ் வாட்டர் நான்கைந்து சொட்டுகள் சேர்த்து பரிமாறலாம். வறுத்த முந்திரியை மேலே தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
0 Comments